• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 15

STN-116

Active member
MTN 15

விமானப்படைத் தளத்தில் அன்று, செய்முறை மீட்பு பயிற்சி மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அவசர காலங்களில் விமானத்திலிருந்து வெளியேறுவது, பராசூட்டை கையாளுதல் மற்றும் தீ விபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வது போன்ற உயிர் காக்கும் உத்திகள் பயிற்சியாளர்களுக்கு மும்முரமாக பயிற்றுவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அன்றைய மாலைப் பொழுதில், பயிற்சிகள் ஒரு வழியாக நிறைவடைந்தன. பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை இரண்டாம் மாடியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் முறையாக ஒப்படைக்குமாறு மேகலாவும் காஞ்சனாவும் பணிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் மேலே சென்று, பொருட்களை உரிய இடங்களில் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தனர்.

சிறுவயது முதலே தான் கேட்டதெல்லாம் தடையின்றித் தாராளமாகக் கொட்டிக் கொடுக்கும் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் காஞ்சனா. எதையும் எளிதில் அடையும் பிடிவாத குணத்தைக் கொண்டிருந்த அவளுக்கு, தரிந்துவின் அந்த நேரடி நிராகரிப்பு ஒரு வெறியைத் தூண்டியது. அந்த அவமானத்தை மேகலாவைப் பழிவாங்குவதன் மூலம் தீர்த்துக்கொள்ளத் துணிந்தாள்.

அங்கு நிலவிய அமைதியான சூழலையும், தங்களுக்குள் இருந்த அந்தத் தனிமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டாள்.

சுற்றிலும் யாரும் இல்லையென்று உறுதி செய்தவள், சத்தமில்லாமல் கதவை வெளிப்புறமாகப் பூட்டினாள். பின்னர், அங்கிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய சில பொருட்களில் தீயைப் பற்றவைத்துவிட்டு, எதற்கும் சம்பந்தமில்லாதவள் போல மிகுந்த அமைதியுடன் அங்கிருந்து நழுவிச் சென்றாள்.

சில நிமிடங்களிலேயே தீ திகுதிகுவெனப் பற்றிப் படர, அடர்ந்த புகை மூட்டம் அந்தச் சேமிப்புக் கிடங்கு முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

கரும்புகை நுரையீரலை அடைக்க, மூச்சுத் திணறிய மேகலா பதற்றத்துடன் கதவைத் திறக்க முயன்றாள். ஆனால், கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்த நொடி அவளது ரத்தம் உறைந்தது.

"ஆராவது காப்பாத்துங்க... கதவைத் திறவுங்க... ப்ளீஸ் ஆராவது ஹெல்ப் பண்ணுங்க..."
என்று மரண பயத்தில் அலறினாள்.

அவளது குரல் அந்தப் புகை மண்டலத்திற்குள் எதிரொலித்து அடங்கியது.

மேகலாவுடன் சென்ற காஞ்சனா, தனியே திரும்பி வருவதை அவதானித்த தரிந்துவுக்கு, எதுவோ தவறாகப் பட்டது. ஏதோ விபரீதம் என அவன் உள்ளுணர்வு உந்தித் தள்ள, வினாடியும் தாமதிக்காமல் இரண்டாவது மாடியை நோக்கிப் படிகளில் தடதடவென ஓடினான்.

அங்கே, சேமிப்புக் கிடங்கின் கதவு வெளிப்புறமிருந்து மூடப்பட்டிருக்க, இடுக்குகளின் வழியே கரும்புகை சீறிக்கொண்டு வெளியேறுவதைக் கண்டு உள்ளம் பதறினான். அடர்ந்த புகையையும் மீறி, உள்ளே இருந்து மேகலாவின் அலறல் சத்தம் மிகத் தீனமாக அவனுக்குக் கேட்டது.

அவள் உள்ளே சிக்கியிருப்பதை உணர்ந்த அந்த நொடி அவனது நிதானம் மறைந்தது. தன் உயிரைப் பற்றிய அச்சமின்றி, மேகலாவை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே வெறியுடன் அருகில் இருந்த தீயணைப்பு உபகரணங்களை எடுத்துக்கொண்டு, கதவைத் திறந்து புகைக்குள் பாய்ந்தான். அனல் காற்றும் புகையும் அவனது சுவாசத்தை அடைக்க, ஒருவாறு மேகலாவைச் சென்றடைந்தான்.

இதற்குள் தீ அபாய ஒலிப்பான் பேரிரைச்சலுடன் ஒலிக்கத் தொடங்க, அந்த ஒலியைக் கேட்டு தளத்திலிருந்த அனைவரும் பதற்றத்துடன் அங்கே திரண்டனர்.

பாதுகாப்பு கருதி விமானப்படை வீரர்கள் சிலர் மட்டும் துரிதமாக மேலே ஓடிச் செல்ல, மற்றவர்கள் எரியும் கட்டிடத்தைப் பார்த்தபடி அச்சத்துடன் கீழே உறைந்து நின்றனர்.

அதேசமயம், புகையினால் மூச்சுத் திணறி மயக்க நிலைக்குச் சென்றிருந்த மேகலாவைத் தேற்றி, மீட்பு உத்திகளைப் பயன்படுத்தி, ஒரு வலுவான கயிற்றின் உதவியுடன் அவளைப் பாதுகாப்பாக ஜன்னல் வழியாகக் கீழே இறக்கினான் தரிந்து. மேகலா கீழே இருந்தவர்களின் கைகளில் பாதுகாப்பாகச் சேர, தரிந்து தானும் வெளியேற முற்பட்டான்.

ஆனால், அந்த மூடிய அறைக்குள் அதுவரை தகித்துக் கொண்டிருந்த வெப்பம், ஜன்னல் திறக்கப்பட்டதும் உள்ளே நுழைந்த புதிய காற்றினால் தூண்டப்பட்டு, திடீரென ஒரு பிரம்மாண்டத் தீப்பிழம்பாக வெடித்தது. அந்தத் தீக்கோளம் தரிந்துவை ஆவேசமாகத் தாக்க, அதன் வேகத்தில் அவன் தூக்கி எறியப்பட்டான். அவனது உடல் முழுவதும் ஆங்காங்கே கொப்புளங்களாகத் தீக்காயங்கள் உருவாகின.

புகையின் நச்சுத்தன்மையும், உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் வலியும் அவனது உணர்வுகளைச் சரிக்க, மெல்லச் சுயநினைவை இழந்து அங்கேயே சரிந்தான் தரிந்து.

இதற்கிடையில் மீட்கப்பட்டுச் சுயநினைவுக்கு வந்த மேகலா, தரிந்து உள்ளே சிக்கியிருப்பதை அறிந்து அலறினாள்.

சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் தரிந்துவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், அசைவற்று ஸ்ட்ரெச்சரில் கிடந்த அவனைப் பார்த்ததும், மேகலாவின் இதயம் நொறுங்கியது. அவள் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடிப்போய் அவன் மேல் விழுந்து கதறினாள்.

"தரிந்து... எழும்புங்கோ... தயவு செய்து கண்ணைத் திறந்து என்னைப் பாருங்கோ... ஐயோ... என்னால தான எல்லாம்... என்னை காப்பாத்த வந்ததுனால தானே உங்களுக்கு இந்த நிலமை…" அவளது குரல் உடைந்து சிதறியது.

அவன் கன்னங்களை மென்மையாகத் தட்டி, தன் கண்ணீரால் அவன் காயங்களை நனைத்தபடி அவள் அழுது தீர்த்த அந்தக் காட்சி, அங்கிருந்த இரும்பு நெஞ்சையும் இளகச் செய்தது. மேகலாவின் ஒவ்வொரு சொல்லிலும் குற்றவுணர்வும், அளவற்ற காதலும் இழையோடியது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காஞ்சனா அங்கிருந்து தப்பிக்க முயன்றாள். ஆனால், அவளது வஞ்சகம் அம்பலமான அந்த நொடியில் அந்த முயற்சி பலனின்றிப் போனது. மேகலா ஏற்கனவே அளித்திருந்த வாக்குமூலமே அவளுக்குப் பெரும் வினையாக அமைந்தது.

'பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது, காஞ்சனா திட்டமிட்டே கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுச் சென்றாள்' என்று மேகலா கண்ணீர் மல்கக் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் காஞ்சனாவைச் சூழ்ந்து கைது செய்தனர்.

தான் நினைத்தபடி மேகலாவை வீழ்த்த முடியாமல் போன ஆத்திரத்திலும், தரிந்து அவளைக் காத்து நின்ற வன்மத்திலும் காஞ்சனாவின் கண்கள் சிவந்திருந்தன. அவர்கள் இருவரையும் தீராத வெறுப்போடு பார்த்தபடியே, அவள் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டாள்.

நிசப்தமான அந்த இரவில், மேகலாவின் அழுகுரல் மட்டும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. அறையில் அவளைச் சூழ்ந்திருந்த தோழிகள், அவளது துயரத்தைப் பகிர்ந்து கொண்டு அவளுக்குத் ஆறுதல் கூற முயன்றனர்.

"அந்தக் காஞ்சனா இவ்வளவு மோசமான பொம்பளையா இருப்பா எண்டு நான் நினைச்சுக்கூட பார்க்கேல்ல மேகி...” என்று சுபா அங்கலாய்த்தாள்.

“அவ செஞ்சதுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைச்சே தீரும். நீ முதல்ல அழுறதை நிப்பாட்டு..." என்று பாத்திமா அவளைத் தேற்றினாள்.

ஆனால், மேகலாவின் செவிகளில் அந்த வார்த்தைகள் எதுவும் பதியவில்லை. அவளது எண்ணங்கள் அனைத்தும் தரிந்துவைச் சுற்றியே சுழன்றன.

“தரிந்து… அவர்… இப்ப எப்படி இருக்கிறார் எண்டு தெரியேல்லையே…? என்னைப் பார்க்க விடுவினமா…?”
என்று ஏக்கத்துடன் கேட்டாள்.

அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர், தரிந்துவின் மீதான அவளது ஆழமான காதலையும் குற்றவுணர்வையும் ஒருசேரப் பறைசாற்றியது.

"மனசுல இவ்வளவு காதலை வெச்சுக்கொண்டு தான் நீ லவ் பண்ணேல்ல எண்டு சொன்னியா..." என்று சிரிப்புடன் கேட்டாள் நிம்மி.

அதற்கு பதில் சொல்லாமல்,
"எனக்கு ஒருக்கா அவரப் பார்க்கோணும்... ப்ளீஸ்... என்னை கூட்டிக் கொண்டு போங்கோவன்..."
என்று கெஞ்சினாள் மேகலா.

தன் உயிரைப் பொருட்படுத்தாமல் தன்னைக் காக்கத் தீயிற்குள் குதித்து அவளைக் காப்பாற்றத் துணிந்தவனை, ஒருமுறை நேரில் காணத் துடித்த அவளது உள்ளத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

"இப்போதைக்கு ஆரையும் அனுமதிக்க மாட்டினம் மேகி... உன்ர உடல்நிலையும் இன்னும் சரியாக இல்லை... இன்னும் ரெண்டு நாட்களில் நிலைமை சரியானதும் நாங்களே உன்னக் கூட்டிக்கொண்டு போறம்..."

என்று தோழிகள் அவளை அணைத்துக்கொண்டு பக்குவமாகச் சமாதானப்படுத்தினர்.

மேகலாவிற்குப் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் மற்றும் சிறு காயங்களுக்காக முதலுதவி அளிக்கப்பட்டு, அவளை மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைத்துவிட்டு தான் அவளையும் அனுப்பியிருந்தனர்.

அங்கே, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், மரணத்துடன் போராடிக்கொண்டிருந்தான் தரிந்து. நச்சுப் புகையினால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் பாதிப்பும், உடல் முழுவதும் படர்ந்திருந்த பலத்த தீக்காயங்களும் அவனது நிலையை மிகவும் கவலைக்கிடமாக்கி இருந்தன.

அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவனது உடல்நிலை குறித்து உறுதியாக ஏதேனும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். அதுவரை எவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவுகள் மேகலாவின் கண்ணீருக்கும் ஏக்கத்திற்கும் எட்டாத தூரத்தில் மௌனமாக மூடிக்கிடந்தன.

அந்த இரண்டு நாட்கள் மேகலாவிற்கு இரண்டு யுகங்களாகத் தோன்றி அவளை வதைத்தன. ஊன் உறக்கமின்றி, சதா அவன் நினைவிலேயே உறைந்து போயிருந்தாள்.

தரிந்துவின் உடல்நிலை குறித்து ஏதேனும் ஒரு நற்செய்தி வந்துவிடாதா என்று தவம் கிடந்த அவளது காதல் மனம், அங்கிருந்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலப் புரிந்தது.

இதற்கிடையே, சிவா மூலம் விபரமறிந்த முரளியும் சரவணனும் பதற்றத்துடன் ஓடி வந்து மேகலாவைப் பார்த்தனர்.

முரளியின் கோபத்திற்கு அஞ்சிய தோழிகள், காஞ்சனாவின் கயமையை முழுதாக விவரிக்காமல், ஒரு விபத்து என்பது போல மேலோட்டமாக மட்டுமே சொல்லி வைத்திருந்தனர். முரளியின் முன்னிலையில் தரிந்துவின் பெயரை உச்சரிக்கக் கூட அச்சப்பட்ட மேகலாவும் சுபாவும், அவன் பற்றிய கவலையைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு மௌனம் காத்தனர்.

நிச்சயமற்ற அந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு,
‘தரிந்துவிற்கு நினைவு திரும்பிவிட்டது… அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்…’ என்ற நற்செய்தி மேகலாவை எட்டியது.

அதுவரை உறைந்து போயிருந்த அவளது ஜீவன் மீண்டும் துளிர்விட்டது. இருள் சூழ்ந்த மனதிற்குள் ஒரே சமயம் ஒளி புகுந்தது போலிருந்தது. ஒரு நொடியும் தாமதிக்காமல், வில்லில் இருந்து பாய்ந்த அம்பைப் போல மருத்துவமனையை நோக்கி அவள் விரைந்தாள்.

தரிந்துவை சாதாரண அறைக்கு மாற்றியிருந்தனர். அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே பாய்ந்தவள், சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்பதைச் சற்றும் கவனிக்கவில்லை. அவளது ஒட்டுமொத்த உலகமும் அந்த நொடியில் மார்பு, கழுத்து மற்றும் கை கால்களில் தீக்காயங்களின் வடுக்களுடன் மெத்தையில் சாய்ந்திருந்த அவனிடம் மட்டுமே சுருங்கியிருந்தது.

மேகலாவைக் கண்டதும், தரிந்துவின் கண்களில் மெதுவான ஒளி பரவியது. அவளை மீண்டும் பார்க்க முடிந்த மகிழ்ச்சி, அவனது முகத்தில் அமைதியான புன்னகையாக மலர்ந்தது.

பதற்றத்துடன் அவனருகே சென்றவள், தீக்காயங்களின் தழும்புகளால் மங்கியிருந்த அவனது கரங்களை, தன் நடுங்கும் கரங்களால் மென்மையாக வருடினாள்.

அவளது விரல்கள் அவன் காயங்களைத் தீண்டியபோது, அதுவரை தேக்கி வைத்திருந்த மொத்தத் தவிப்பும் கண்ணீராகத் திரண்டது.

“தரிந்து…”

தழுதழுத்த குரலில் அவள் அழைத்த அந்த ஒற்றைச் சொல்லில், கடந்த இரண்டு நாட்களின் பயமும், தவிப்பும், கண்ணீரும்… சொல்ல முடியாத காதலும் அனைத்தும் கரைந்திருந்தன.

ஒரு விம்மலுடன் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், அவன் முகத்தில் முகம் புதைத்து, அழுகையில் குலுங்கினாள். கடந்த இரண்டு நாட்களாகத் தன் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த பாரத்தையெல்லாம் அந்த ஒரு நொடியில் இறக்கி வைத்தாள். அவளது விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர், அவனது முகத்தையும் நனைத்தது.

அவள் எந்தளவுக்குப் பயந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த தரிந்து, தன் நெற்றியால் அவளது நெற்றியை மென்மையாக முட்டி ஆசுவாசப்படுத்தினான்.

"மேகலா... மகே சுது வலாகுழு... அன்டன்னெபா... நெகிடின்ன..." (என்னுடைய வெண்மேகமே... அழவேண்டாம்... எழுந்திரு..) என்று மெல்லிய குரலில் அவளைத் தேற்றினான்.

ஆனால், குழந்தையென அடம் பிடித்தவளோ 'மாட்டேன்' என்பது போலத் தலையசைத்து, அவன் பிடியை விட மறுத்தாள்.

தரிந்துவிற்கு இப்போது ஒருபுறம் நெகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் கூச்சம் மேலிட்டது. தன் கண்களைச் சற்றே உருட்டி, அந்த அறையில் தங்களைத் தவிர வேறு யாரோ இருப்பதை அவளுக்குச் சைகை காட்டினான்.

அவன் காட்டிய திசையை நோக்கி மேகலா மெல்லத் திரும்பியபோதுதான், அவளுக்குச் சுயநினைவு திரும்பியது.

அங்கே... தரிந்துவின் பெற்றோர் நின்றிருந்தனர்.




 

Gowri Karthikeyan

Well-known member
அட wrong time லா தான் உனக்கு காதல் பொங்கி வருமா மேடம்....
பட் தரு முகத்தில் பயம் இல்ல...கூச்சம் தான் உண்டு.....அப்பா அம்மாவை பார்த்து
 

STN-116

Active member
அட wrong time லா தான் உனக்கு காதல் பொங்கி வருமா மேடம்....
பட் தரு முகத்தில் பயம் இல்ல...கூச்சம் தான் உண்டு.....அப்பா அம்மாவை பார்த்து
நல்ல பையனுக்கு நல்ல அப்பா அம்மா
 
Top Bottom