• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 2

STN-116

Member
MTN 2

சிங்கப்பூர் 'மெரீனா பே' அருகிலுள்ள மிகப்பெரிய மாநாட்டு மண்டபத்தில் ஆசியா பசுபிக் வான்வழி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல நாடுகளின் கொடிகள், பல நிலை பதவிகளில் உள்ள அதிகாரிகள், நீல, சாம்பல், பச்சை வண்ண சீருடைகள், மார்பில் பதக்கங்கள், தோள்களில் பதவியின் பாரம் என அந்த இடமே ஒழுங்கும் அதிகாரமும் நிறைந்த சூழலாக இருந்தது. இலங்கை பிரதிநிதிக்குழு அமர்ந்திருந்த பகுதியில் விங் கொமாண்டர் தரிந்து சேனநாயக்கவும் அமர்ந்திருந்தான். அவன் பெயர் அறிவிக்கப்பட எழுந்து மேடையை நோக்கிச் சென்றான்.

“டிஸ்டிங்கியூஷ்ட் சீப்ஸ், கொமாண்டர்ஸ் அண்ட் டெலிகேட்ஸ்.. (மாண்புமிகு தளபதிகளே, கமாண்டர்களே, மற்றும் மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே…)

என்று ஆரம்பித்து வான்பாதுகாப்பு பற்றி தன்னுரையை அழகாக ஆரம்பித்தான் .

உள்ளுக்குள் உருண்ட எதையோ மறைத்து ஒருநொடி அனைவரையும் பார்வையால் சுற்றினான், “மிஸ்கொம்யுனிகேஷன் இஸ் த மோஸ்ட் அண்டர் எஸ்டிமேடட் த்ரெட். பிகோஸ், சம் மிஷன்ஸ் டோன்ட் கெட் அ செகண்ட் சான்ஸ்." (தவறான தொடர்பாடல் என்பது மிக அதிகமாக அலட்சியப்படுத்தப்படும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் சில பணிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது.)

ஒருகணம் இடைவெளி விட்டு,
“வன்ஸ் அ மிஷன் பெயில்ஸ், தெயார் இஸ் நோ ரிவைண்ட்." (ஒருமுறை பணி தோல்வியுற்றால், அதை மீளத் தொடங்கும் வாய்ப்பு கிடையாது.)

“நன்றி”

என்று பேச்சை கம்பீரமாக முடித்துவிட்டு அரங்கம் அதிர கைத்தட்டலின் மத்தியில் மேடையிலிருந்து இறங்கினான். அவன் குரல் சீராக தோன்றியிருந்தாலும், நடையில் உறுதி இருந்த பொழுதிலும் அவன் கூறிய ஒவ்வொரு வரியும் அவனைஉள்ளுக்குள் சுட்டுப்பொசுக்கியது.

‘மிஸ்கொம்யுனிகேஷன்.’

‘சம் மிஷன்ஸ் டோன்ட் கெட் அ செகண்ட் சான்ஸ்’

‘நோ ரிவைண்ட்’

அவனது இதயத்தின் போர்க்களத்தையும் சேர்த்து அல்லவா குறிப்பிட்டது. மண்டபத்தில் இருந்தவர்களுக்கு அது பாதுகாப்பு குறித்து நிகழ்த்தப்பட்ட தொழில்முறை உரையாகவே இருந்தாலும் அவன் மனதுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று பேசப்படாத உண்மையும் மீண்டும் தொடங்க முடியாத அவனது காதலும்.

அவன் மீண்டும் இருக்கையில் அமர அனுஷ்கா அவனை பெருமையாக பார்த்து, (சிங்கள உரையாடல் தமிழில்) “ அருமையாக இருந்தது அண்ணா, வெரி பவர்புல்.”

அவனிடம் கண்ணுக்கு எட்டாத சிறு புன்னகை மட்டும்.

உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டதும், அவள் சற்றே நெருங்கி தன் குரலை மெதுவாக்கினாள்.

“இன்று கொஞ்சமாய் வேற மாதிரி இருந்தீங்க.”

“வேற மாதிரி ?” என்று புருவத்தை உயர்த்தினான்.

“ஓம்.. முக்கியமா அந்த ‘நோ ரிவைண்ட்’ சொல்லும்போது.. உங்கட குரலில் ஒரு வித்தியாசம் இருந்தது.”

இலேசாக இதழ்கள் விரிய,” அதிகமா எனாலிசிஸ் பண்ணுறீங்க மேடம்.” என்றான்.

இடவலமாகத் தலையசைத்து,

“மூன்று வருடங்களா நான் உங்களுக்கு கீழ வேலை செய்றன். இப்படி நிறுத்தி நிறுத்தி கதைக்க மாட்டீங்க நீங்க. ஐ நோ வட்ஸ் ஈட்டிங் யுவர் மைண்ட்."

அவன் சற்றே அமைதியாகி,
“பேசா மௌனங்களை விட எதிரியின் தாக்குதல்கள் சமாளிக்கக்கூடியதாக இருக்கும். நான் போராடுவது ரேடாரில் தெரியாத ஒன்றுடன்” என்று முணுமுணுத்தான்.

அனுஷ்கா கண்களில் கவலையுடன், “ ஆர் யூ ஓகே?” என்று கேட்டாள்.

அவன் உடனே பார்வையை திருப்பிக்கொண்டு,
“என்னை எமோஷனல் ஆக்காதே அனு. நாம் இங்கே வந்திருப்பது தொழில்ரீதியாக. லெட்ஸ் கோ போர் லன்ச்"

அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் அவனை பின்தொடர்ந்தாள்.

அவளிடம் மட்டும் தான் அவன் முகமூடியின்றி பேசுவான். அவள், அவன் வாழ்க்கையில் வந்த பிறகுதான், அவன் வறண்ட நாள்களில் கொஞ்சம் மழை பெய்யத் தொடங்கியது.

ஒற்றை பிள்ளையாய் பிறந்த அவனுக்கு கிடைத்த குட்டித் தங்கை அவள். ஆனால் அவள் தனக்கு என்ன உறவு என்று புரியாமல் அவளைப் பொறாமையாக பார்த்த மேகலாவின் பார்வை நினைவுக்கு வர இதழ்களில் விரக்தியுடன் கூடிய சிறுமுறுவல் மலர்ந்தது.

அவளை விமானத்தில் பார்த்த அந்த ஒரு நிமிடம் அவன் கண்களில் காதல், கனிவு, விரக்தி என்று எல்லா பாவங்களும் மின்னின. அடுத்த நொடியே, அது பொய்யோ என்பதை போல அவன் முகம் ஆழ்கடல் அமைதியாக மாறியது. மேகலாவுக்குத்தான் அதில் ஏமாற்றம் கலந்த குழப்பம்.

‘அவன் என்னை முழுதாக மறந்துவிட்டானா?’ என்று அவள் மனம் துடித்தது. அதற்கு மேலாக அனுஷ்கா அவனருகே நெருங்கி பேசும் விதம், அந்த சிரிப்பு, அந்த நெருக்கம் எல்லாம் அவளின் உள்ளத்தில் ஒரு சிறிய பூகம்பத்தை கிளப்பியது. அவளைக் கண்டதும் அவன் கண்களில்தோன்றும் உணர்ச்சி இப்போது வேறு ஒருவருக்காக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்தது. ‘எப்படி இவ்வளவு அமைதியா இருக்க முடியும்? என்னால் முடியவில்லையே’ என்று மனதுக்குள் குமைந்தாள், தான் தான் அவனை விட்டுச் சென்றோம் என்பதை வசதியாக மறந்தவளாக.

“எனிதிங் இஸ் பைன்" என்ற அனுஷ்காவின் குரலில் சுயநினைவுக்கு வந்து தன் எண்ணப்போக்கை எண்ணி முகம் கருத்தாள்.

பின் ஒட்ட வைத்த தொழில்முறை புன்னகையுடன் உணவுகளை எடுத்து வைக்க, அவன் கரம் இலேசாக நீண்டு அவள் விரல்களை தழுவிச் சென்றது. அவள் பதறி நிமிர்ந்து அவனை பார்க்க, எதுவுமே நடக்காதது போல உணவு ஒன்றே குறி என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் விரல்கள் தழுவிய அந்த ஒரு நொடி, அவள் உள்ளத்தில் மின்னல் போல எதுவோ ஒன்று, இன்னும் அதிர்ந்துகொண்டே இருந்தது. இது திட்டமிட்டதா இல்லை தவறுதலா என்று அவளுக்கே புரியவில்லை. சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்டு அடுத்த சீட்டை நோக்கி நகர்ந்தாள்.

அவன் தன் மனதை மறைத்தது போல பாவம் அவளால் மறைக்க முடியவில்லை. அவர்கள் பார்த்துக்கொண்டது முதல் அவளின் முகமாற்றங்களை துல்லியமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தான், உள்ளதைக் காட்டும் கண்ணாடி முகம் அவளது. அவளது அந்த தவிர்த்த பார்வை அவனுக்குப் புதிதல்ல, ஆனால் இன்று அதில் ஒரு புதுமை இருந்தது.

அனுஷ்கா இருவரையும் மெல்ல கவனித்தாள். அவளுக்கு தரிந்துவின் கடந்தகாலம் தெரியும் என்றாலும் அதற்கு சொந்தக்காரியை இன்று தான் முதல் முறையாகவே பார்க்கிறாள். அவள் கண்கள் ஒரு நொடி மேகலாவை ஆராய்ந்தன. எதையோ புரிந்துகொள்ள முயலும் பார்வை.

உள்ளே வந்த மேகலாவோ, ‘அஞ்சு வருசங்களா எப்படி கடந்தியோ அப்படியே மீதிக் காலத்தையும் ஓட்டு, அது தான் உன் தலைவிதி.’ என்று தன்னையே நொந்து கொண்டாள். இந்த சந்திப்பு மட்டும் தன் வீட்டினருக்கு தெரிய வந்தால்.. கண்முன் சிலபல காட்சிகள் தோன்ற மூச்சடைப்பதை போல இருந்தது அவளுக்கு.

‘வேண்டாம்… என்னால் யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம்’ என்று திடப்படுத்திக்கொண்டு மீண்டும் அவர்களிடம் வந்து,

“வுட் யூ லைக் எனிதிங்க் எல்ஸ், சேர் அண்ட் மெடம்?"
என்றாள் அதிகாரபூர்வமான உணர்ச்சியற்ற குரலில்.

“நத்திங்க் எல்ஸ், மிஸ்…” என்று நிறுத்தி,

“மிஸ் நேத?” (மிஸ் தானே) என்று கேட்டான். முதல் நேரடி உரையாடல் அவனிடமிருந்து.

அது சாதாரண கேள்வி இல்லை, ‘நீ இன்னும் என் நினைவில்தான் இருக்கிறாயா?’ என்ற சோதனை.

ஒரு நொடி அவள் கண்களில் திடீர் அதிர்ச்சி. எதிர்பாராத கேள்வியில் திகைத்து பின் உறுதியான குரலில், "சூன் டு பீ மிஸ்ஸஸ்” என்று தன்னெஞ்சறிய பொய் கூறினாள்.

அந்த மூன்று வார்த்தைகள் போதுமாக இருந்தது அவனை அசைக்க. அது ஒரு பதில் இல்லை, அவனை குறிவைத்த தாக்குதல்.

அவன் முகம் இறுக குரலை தாழ்த்தி மெதுவாக கேட்டான்,
“எத்தத சுது வலாகுழு…?” (உண்மையா, வெள்ளை மேகமே?)

அவள் மூச்சு ஒரு நொடி தவறியது. அந்த பழைய அழைப்பு, அவள் பல வருடங்களாக மறைக்க முயன்ற பலவீனம்.

கண்களில் நீர்த்திரையிட, ‘உடஞ்சிடாதடி மேகலா’ என்று உருப்போட்டுக்கொண்டு,

"வேறு ஏதாவது வேணுமா சேர் ? என்று அழுத்திக் கேட்டாள் பேசேன்ஜர்- க்ரூ எல்லையில் நின்று கொள் என்று கோடிட்ட குரலில்.

அவன் பதில் சொல்லாமல் அழுத்தமாக அவளைப் பார்த்தான். அந்த பார்வை ஏதோ செய்ய, அவள் ஒரு நொடி தயங்கி, பிறகு மெதுவாக ஆனால் ஸ்திரமாக,

"சம் பிளைட்ஸ் டோன்ட் ரிடேர்ன் டு த சேம் எயார்போர்ட்"(சில விமானங்கள் அதே விமான நிலையத்துக்கு திரும்புவதில்லை) என்றுவிட்டு திரும்பி நடந்தாள்.

உள்ளே நுழைந்தவளது மூச்சு சீராக இல்லை. அவனைத் துன்பப்படுத்த அவள் சொன்ன பொய் அவளையே நசுக்கிக் கொண்டிருந்தது. கண்களை இறுக்கமாக மூடியவள் கன்னங்களில் ஒரு துளி நீர் வழிந்தது. உடனே துடைத்து, 'கொண்ட்ரோல் மேகலா கொண்ட்ரோல்’ என்று விரல்கள் நடுங்க மேசையில் கை வைத்தபடி நின்றாள். அவனைப் பார்க்காமல் திரும்பிவந்தாலும், அவனது இறுகிய முகத்தை அவள் உணர்ந்தே இருந்தாள்.

அசையாமல் அவள் போன திசையையே பார்த்தப்படி இருந்த அவன் கண்கள் செவ்வரியோடியிருந்தன. அவனது விரல்கள் இருக்கைக் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்திருந்தன.

‘எத்தத சுது வலாகுழு…’ அவன் பழைய அழைப்பு இப்போது அவனுக்கே அவமானமாகத் தோன்றியது. அவள் கூறியது பொய்யென்று அவனுக்குத் தெரியும். அவள் அதரங்கள் பொய் சொல்லலாம். ஆனால், அவள் நயனங்களில் மெய் இருந்தது.

அவன் மெதுவாக கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான். அந்த அமைதியின் கீழ் அவன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கோபமும், கசந்த காதலும் ஒன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தன.

அதன்பிறகு விமானம் தரையிறங்கும்வரை அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

மனம் வலிக்க இரண்டு உயிர்கள் மௌனமாய் தரையிறங்கின அவர்களின் காதலை வானில் மீண்டும் அந்தரத்தில் பறக்கவிட்டு.
 
Last edited:
Top Bottom