• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 20

STN-116

Member
MTN 20

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காஞ்சனா, இருபத்து நான்கு மணிநேரம் கூட சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கவில்லை. அவளது குடும்பம் தென்மாகாணத்தில் செல்வாக்கு மிக்க ஓர் பேரின அரசியல்வாதியின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவளது குற்றங்கள் அனைத்தையும் மறைத்து, அவளைச் சட்டத்தின் பிடியிலிருந்து லாவகமாக வெளியில் எடுத்துவிட்டனர்.

சமூகத்தின் பேச்சிலிருந்து தப்பிக்க, அவளை உடனடியாக லண்டனுக்கு மேற்படிப்பிற்காக அனுப்பி வைத்தனர். இரண்டு வருடங்கள் கழித்து, அன்றுதான் அவள் தனது விடுமுறைக்காக மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கால் பதிக்கும்போதே, அவளுள் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த பழைய கசப்பான ஞாபகங்கள் மெல்லத் தலைதூக்க ஆரம்பித்தன.

விமானப் பணிப்பெண்ணாக அங்கே மேகலாவைக் கண்டதும், காஞ்சனாவின் உள்ளுக்குள் அணைந்து போயிருந்த வஞ்சகத் தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதற்கு மேலாக, அதே விமானத்தின் மற்றொரு இருக்கையில் தற்செயலாகத் தரிந்துவும் பயணிப்பதைக் கண்டவள், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றாள்.

சுற்றி நடக்கும் களேபரங்கள் எதுவும் தெரியாமல், வான்வெளியில் மிதக்கும் மேகக் கூட்டங்களுக்கு நடுவே, வெளியுலகிற்குத் தெரியாத ஒரு தனி உலகத்தில் அவர்களது காதல் மிக அழகாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த தரிந்துவிற்கு, ஒரு மாம்பழக் குளிர்பானத்தை இன்முகத்துடன் நீட்டிக் கொண்டிருந்தாள் மேகலா. அவன் ஏதோ குறும்புடன் அவளிடம் சொல்ல, மேகலா அந்த இடத்திலேயே ஒரு கவிதை போல அழகாக வெட்கப்பட்டாள். இதைக் கவனித்த காஞ்சனா, பொறாமையிலும் கோபத்திலும் வெகுண்டெழுந்தாள்.

விமானத்தில் ஆரம்பித்த அவர்களது இந்த மென்மையான காதல் மொழி, தரை இறங்கிய பின்பும் தொடர்ந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது, தரிந்து அவளுக்காகக் காத்திருந்து, இருவரும் கைகோர்த்தபடி நடந்து சென்றனர்.

விமானத்தில் அவர்கள் பகிர்ந்துகொண்ட அந்தப் புன்னகையில் ஆரம்பித்து, இருவரும் ஒரே காரில் ஏறிச் சென்றது வரை அனைத்தும், அமைதியாக காஞ்சனாவின் கைபேசியில் படமாகிக் கொண்டே இருந்தது.

அந்தப் பதிவுகளைப் பார்க்கப் பார்க்க, அவளது வஞ்சகக் கண்களில் ஒரு குரூரமான மின்னல் வெட்டியது. மேகலாவின் வாழ்க்கையை அடியோடு சிதைத்துச் சூறையாடப் போகும் ஒரு விபரீதத் திட்டம், அந்த நொடியே அவள் மனதில் மிகத் தந்திரமாக உருவானது.

தன் திட்டத்தைச் செயல்படுத்த அவசரப்படாமல், ஒரு வாரம் முழுவதும் அமைதியாகக் காத்திருந்து, பொறுமையாக தனது நகர்வுகளைத் தொடங்கினாள் காஞ்சனா.

முதலில் நிம்மியை அலைபேசியில் தொடர்பு கொண்டவள், பழைய கசப்பான சம்பவங்களுக்கு மேகலாவிடம் மன்னிப்பு கேட்கப் போவதாக நயமாகப் பேசி அவளது நம்பிக்கையைச் சம்பாதித்தாள்.

அவளது வஞ்சகத்தை அறியாத நிம்மியும், மேகலாவின் யாழ்ப்பாண வீட்டு முகவரியையும், அவளது அடுத்த விமானப் பணி விவரங்களையும் தயக்கமின்றி பகிர்ந்துகொண்டாள்.

“இதை மேகலாகிட்ட இப்ப சொல்லிடாத… நான் அவளை நேரில் சந்திச்சு சேர்ப்ரைஸ் பண்ண விரும்புறன்…” என்று காஞ்சனா சொன்ன அந்தப் பொய்யையும், நிம்மி அப்படியே உண்மையென நம்பினாள்.

அதன்படி, மேகலா பணி நிமித்தமாக வீட்டில் இல்லாத ஒரு வார இறுதி நாளில், யாழ்ப்பாணம் உடுவிலில் இருக்கும் அவளது வீட்டின் வாசலில் வந்து நின்றாள் காஞ்சனா.

அவளது மனதில் மன்னிப்பு கேட்கும் எண்ணம் துளியும் இருக்கவில்லை. மாறாக, மேகலாவின் நிம்மதியைச் சிதைக்கப்போகும் ஒரு பெரும் சூறாவளியையே அவள் சுமந்து வந்திருந்தாள்.

மேகலாவின் நெருங்கிய தோழி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட காஞ்சனா, அவளைச் சந்திக்க முடியாமல் போனதற்காக போலியான வருத்தத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தினாள்.

மேகலாவின் துரதிர்ஷ்டம், அந்த நேரத்தில் முரளியும் வீட்டிலேயே இருந்தான். அதுமட்டுமன்றி, நல்லூர் கோவில் திருவிழாவைப் பற்றிப் பேச வந்திருந்த அயலவர்கள் சிலரும் அங்கிருக்க, காஞ்சனாவிற்கு இன்னும் வசதியாகிப் போனது. அவளது குரலில் கலந்திருந்த அந்த நயமான மென்மை, அவள் வந்த நோக்கத்தை எவரும் எளிதில் ஊகிக்க முடியாதபடி கவசமாய் மறைத்தது.

பேச்சின் சுவாரஸ்யத்தில் இயல்பாகத் தொடங்குவது போலத் தரிந்து - மேகலாவின் காதல் கதையை மெல்ல அவிழ்த்துவிட்டு, அங்கிருந்தவர்களின் முகபாவங்களை நோட்டம் விட்டாள். அவளது ஒவ்வொரு சொல்லும் ஒரு வெடிகுண்டாக விழ, அனைவரது முகங்களும் அதிர்ச்சியில் இறுகிப் போயின.

முரளியின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

"என்ன சொன்னனீங்க... மேகி ஒரு சிங்களவனை லவ் பண்ணுறாளா..." என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன், நடுங்கும் குரலில் கேட்டான்.

அதை எதிர்பார்த்திருந்தவளாய், காஞ்சனா எதையும் அறியாதவள் போலப் போலியாக ஆச்சர்யப்பட்டு,

"என்ன அண்ணா... தெரியாத மாதிரி கேட்குறீங்க... அவ இன்டர்வியூ போன முதல் நாளிலிருந்தே ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களே... அதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்..."
என்று மெதுவாகத் தொடங்கினாள்.

சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் விஷத்தில் தோய்த்து எடைபோட்டவள்,

"அவங்க ரெண்டு பேரும் ஒண்டா போகாத இடமேயில்ல… உங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு தானே சொன்னாள்..."

என, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் தனது நயவஞ்சகத்தை மெல்ல ஊற்றினாள்.

"இல்ல... எங்களுக்கு ஒண்டும் தெரியாது... " என்ற தந்தை அரவிந்தனின் குரல் வேதனையில் கம்மியது. முகம் துயரத்தில் இறுகியது.

அதை விடாமல் பற்றிக்கொண்ட காஞ்சனா,

“ஓஹ்... சொறி... உங்களுக்கு கால் போனது... உங்க மகனை அரெஸ்ட் பண்ணி கொடுமை படுத்தி அடிச்சது எல்லாம் அவள் சொன்னாள்..."
என்று அவர்களின் பழைய காயங்களைக் கிளறியவள், அடுத்த அடியை இன்னும் பலமாக வைத்தாள்.

"ஆனா பாருங்க, நீங்க எந்த இராணுவத்தை வெறுக்கிறீங்களோ, அந்த மிலிட்டரி மேனைத்தான் அவ தீவிரமா காதலிக்கிறாள். அதுவும் வான்படை... நானும் அவன் வசதியானவன் எண்டு நீங்க மற்றதை எல்லாம் பெருசா எடுக்காம ஓகே சொல்லிட்டீங்க போல எண்டு நினைச்சன்..."
என்று அவர்களின் தன்மானத்தில் குத்தினாள்.

சிறிது இடைவெளி விட்டு, குரலைத் தாழ்த்தி, இரக்கப்படுவது போல ஒரு நாடகமாடினாள்.

“அவன் நல்லவனா கெட்டவனா எண்டு எனக்கு தெரியாது… ஆனா இப்ப இருக்கிறவங்க பலரும் பெண்களை யூஸ் அண்ட் த்ரோ பண்ணுற மாதிரி தானே பார்க்கிறாங்க… ஹ்ம்ம், அவள் இடத்தில் நான் இருந்திருந்தா எண்ட அப்பாவையும், அண்ணாவையும், எண்ட இனத்தையும் காலால போட்டு நசுக்கிக் கொன்று குவித்த ஒரு இனத்தில் இருக்கிறவனை, அதுவும் ஆர்மியில் இருக்கிற ஒருத்தனிட்ட எண்ட மனசைப் பறிகொடுக்கவே மாட்டன்...”

அவள் அடுத்து கூறிய வார்த்தைகள், அனைத்தும் நேராக மனதைத் துளைக்கும் வகையில் இருந்தன.

ஹ்ம்ம்... மனசை மட்டும்தான் பறிகொடுத்தாளோ... இல்ல… இரவிரவா ஒண்டா வேற சுத்துறாங்க..."
என்று சந்தேகத்தை விதைத்தாள்.

"அண்டைக்கு கூட, ஒண்டாவே துபாய் போயிட்டு வந்தாங்களாம் எண்டு கேள்விப்பட்டன்... போட்டோஸ் கூட பார்த்தன்..."
என்று வாய் கூசாமல் பொய் சொல்லி, தான் எடுத்த புகைப்படங்களை யாரோ தனக்கு அனுப்பியது போல அவர்களிடம் நீட்டினாள்.

அவர்கள் யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை. அயலவர்கள் முன்னிலையில் நேர்ந்த இந்தத் தலைகுனிவு, அவர்களை நிலைகுலையச் செய்தது. அயலவர்கள் பரிமாறிக் கொண்ட பார்வைகள், அவர்களை அற்பமாக மதிப்பீடு செய்தது போலத் தோன்ற, அரவிந்தனுக்கும் முரளிக்கும் அது தாங்க முடியாத அவமானமாக மாறியது.

தன் மன வக்கிரங்களையும், வஞ்சகத்தையும் அங்கே கொழுந்துவிட்டெரியச் செய்துவிட்டு, ஒரு குரூரமான திருப்தியுடன் அவ்வீட்டை விட்டு வெளியேறினாள் காஞ்சனா.

அவள் சென்ற பின் அந்த வீடு, தனக்கேயுரிய அமைதியை முற்றாக இழந்திருந்தது. ஒரு கோரமான புயல் கடந்து சென்ற இடிபாடுகளைப் போல, அங்கே ஒரு கனத்த மௌனம் உறைந்து நின்றது.

அயலவர்கள் ஒருவித ஏளனமும் நக்கலும் பொதிந்த பார்வையுடன் அங்கிருந்து கலைந்து செல்ல, மேகலாவின் குடும்பத்தினர் அவமானத்தில் குறுகிப் போயினர்.

நிமிர்ந்த நன்னடைக்குச் சொந்தக்காரரான அரவிந்தன், இத்தனை பேர் முன்னிலையில் தன் மகளைப் பற்றி விழுந்த அந்தப் பழிச்சொற்களைத் தாங்க முடியாமல், அப்படியே கதிரையில் சாய்ந்தபடி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தார்.

"அப்பா!"

அவரை தன் கைகளில் தாங்கிக் கொண்ட முரளி பதற்றத்தில் துடித்தான். அருகில் இருந்த மகேஸ்வரி தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

ஒரு மருத்துவனாக அரவிந்தனின் நிலை முரளிக்கு உடனே புரிந்தது. பதற்றத்தை அடக்கிக்கொண்டு முதலுதவிகள் செய்தவன், சற்றும் தாமதிக்காமல் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

பரிசோதித்த மருத்துவர்கள், அதீத மன அழுத்தத்தினால் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, உடனடியாக அவரைத் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

வெளியே முரளிக்குத் தன் தந்தையின் நிலையை நினைத்துக் கலங்குவதா, அல்லது அழுது ஓய்ந்து போயிருக்கும் தாயைத் தேற்றுவதா என்று புரியாமல் திணறினான். அவனது அத்தனை ஆத்திரமும் இப்போது மேகலாவின் மீது திரும்பியது.

பற்களைக் கடித்தபடி சரவணனை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"சொல்லுடா மச்சான்..." என்று சரவணன் மறுமுனையில் கேட்க,

"அப்... அப்பாவுக்கு ஹார்ட் எட்டக் டா..." என்று அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் முரளி.

"என்னடா சொல்லுறாய்...? அங்கிளுக்கு என்ன நடந்தது...? ரெக்யூலர் செக்அப், ஈசீஜி எல்லாம் நோர்மலாத்தானே டா இருந்தது..." என்று ஒரு மருத்துவனாக சந்தேகத்துடன் கேட்டான்.

"எல்லாம் எங்களின்ர வீட்டில இருக்கிற அந்த கேடு கெட்டவளால வந்ததடா..." என்று சினந்தான் முரளி.

"என்னடா சொல்லுறாய்... ஆரை சொல்லுற... மேகியா... அவ என்னடா செய்தவள்...??" என்று சரவணன் குழப்பத்துடன் கேட்க, நடந்த அனைத்தையும் ஆத்திரம் கொப்பளிக்கக் கூறினான் முரளி.

"சுபாக்கும் சிவாக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கும்... எல்லாரும் மறைச்சுப் போட்டவே..." என்று கத்தியவன், குரலை கடினப்படுத்தி,

"முதல்ல... அந்த ஒழுக்கம் கெட்டவளை இஞ்ச கூட்டிக்கொண்டு வா... நான் இருக்கிற கோவத்திற்கு அவளை அடிச்சே கொண்டு போட்டுடுவன்…" என்று கட்டளையிட்டுவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தான்.




 
Top Bottom