• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 21

STN-116

Active member
MTN 21

சரவணனின் மகிழுந்து யாழ்ப்பாணத்தை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. உள்ளே ஒரு கனத்த அமைதி நிலவியது. காரின் வேகத்திற்கு இணையாக மேகலாவின் இதயத்துடிப்பும் எகிறிக் கொண்டிருந்தது. அழுது அழுது சிவந்திருந்த அவளது கண்கள், ஏதோ ஒரு பெரும் விபரீதத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதைப் போலத் தெரிந்தன. சுபாவின் முகமோ கவலையில் கறுத்துப்போயிருந்தது. விமான நிலையத்திலிருந்து ஏறியது முதல், சரவணன் கொடுத்த மண்டகப்படி அத்தகையது.

நான்கு நாட்களுக்குப் பிறகு பணி முடிந்து இலங்கை திரும்பிய மேகலாவையும் சுபாவையும், விமான நிலையத்திலேயே இடைமறித்து அழைத்து வந்தான் சரவணன். அவசர அவசரமாகத் தங்களை இழுத்து வந்ததன் காரணம் கேட்டவர்களுக்கு, நடந்த விவரங்களைக் கூறவும் அவர்கள் பேயறைந்தது போல உறைந்து போயினர்.

தன் தந்தையின் நிலையைச் சரவணன் மூலம் அறிந்த மேகலா, நிலைகுலைந்து துடிதுடித்துப் போனாள். பதற்றத்தில் தன் தாய் மகேஸ்வரிக்கும், அண்ணன் முரளிக்கும் அவள் மாற்றி மாற்றி அழைத்தபோதும், அவை ஏற்கப்படவே இல்லை. அந்தத் துண்டிக்கப்பட்ட அழைப்புகளே அவர்களின் ஆத்திரத்தின் அளவை அவளுக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்தின.

மூன்று நாட்களுக்கு முன்னர்தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அரவிந்தனைச் சாதாரண வார்டிற்கு மாற்றியிருந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, பல அறிவுரைகளைக் கூறி முன்தினம்தான் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், வீட்டுக்கு வந்த பின்பும் அரவிந்தனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு பிடி உணவைக் கூடச் சரியாக உட்கொள்ளவில்லை. சுவரையே பார்த்தபடி மௌனமாகச் சாய்ந்திருந்தார்.

மகேஸ்வரியோ அழுது அழுது ஓய்ந்து போயிருந்தார். அவருக்கு இருந்த ஒரே உலகம் அரவிந்தன்தான். அவரில்லாத ஒரு வாழ்க்கையை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

"இராணுவத்தின்ர கண்ணிவெடியில சிக்கி ஒரு காலை இழந்த பிறகும், திடமாய் ஒழும்பி (எழும்பி) நிண்டு எங்களை வாழ வெச்சவரடா என்ர மனுசன்... இந்த வீட்டின்ர ஆலமரமா இருந்தவர் இண்டைக்கு வேரறுந்த மரமா சாய்ஞ்சு போயிட்டாரே..."
என்று முரளியிடம் கதறிப் புலம்பினார். முரளி சொன்ன எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவரிடம் எடுபடவில்லை.

'நாங்கள் ஊரை நெருங்கிவிட்டோம்' என்ற சரவணனின் குறுஞ்செய்தி வந்தபோது, அடக்கி வைக்கப்பட்டிருந்த முரளியின் கோபம் எரிமலையாய்ப் பொங்கியது.

அந்தச் செய்திக்குப் பதில் ஏதும் அனுப்பாமல், ஆத்திரத்துடன் அலைபேசியைத் தூக்கி எறிந்தான்.

வீட்டின் வாசலை மேகலா மிதித்தாளோ இல்லையோ, அதுவரை ஒரு சிலையாக அங்கே நின்றிருந்த மகேஸ்வரி பாய்ந்து வந்து, மேகலாவின் கன்னத்தில் 'பளார்' என்று ஓர் அறை விட்டார். அந்தச் சத்தமும், அதன் வீச்சும் அங்கிருந்த அனைவரையும் ஒரு நிமிடம் உரையச் செய்தது.

"ஏனடி இப்படி செஞ்ச...? உன்னால அந்த மனுசன் அங்கே மரணத்தோட போராடி களைச்சுப் போய் கிடக்குற நிலையை பாரடி... உன்ன முழுசா நம்பி தானே கண்காணாத இடத்துக்கு அனுப்பி வெச்சனாங்க... இப்படி ஒரு காரியத்தை செய்ய எப்படியடி உனக்கு மனசு வந்தது..."

என்று கேட்டவர், ஆத்திரம் அடங்காமல் அவளது தோள்களைப் பிடித்து உலுக்கி, பின் ஆறுதல் தேடும் குழந்தைப் போல அவளது நெஞ்சிலேயே சாய்ந்து கதறி அழுதார். அந்த அழுகையில் ஏமாற்றமும் வேதனையும் சரிபாதியாகக் கலந்திருந்தது.

மேகலா கண்ணீர் விட்டு விம்மிக் கொண்டே,
"அம்மா... சொறியம்மா... நான்... அவர்... நல்லவரம்மா..." என்று திக்கித் திணறி முடிக்க முயன்றாள்.

ஆனால், அவள் பேசி முடிக்கும் முன்னே,

"ஆக... உனக்கு ஜே புர யுனி கிடைச்சும், நீ திட்டம் போட்டு தான் அங்க அவனிட்ட போய் இருக்கிறனீ என... பேஸ்புக் பிரெண்டாமே..." என்று உருத்திரமூர்த்தியாய் அவள் முன்னே வந்து நின்றான் முரளி.

அதுவரை இருந்த தைரியம் போய், வெட வெடவென நடுங்கினாள் மேகலா. அவனது குரலில் இருந்த அந்த உக்கிரம், அதுவரை அவளுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் தின்று தீர்த்தது. மேகலா வெடவெடவென நடுங்கினாள்.

"அண்... அண்ணா..."

என்று அவள் திணற, அவன் அவளது முகத்தைக் கூடப் பார்க்க அருவருப்பவன் போலத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

பின், அவளுக்கு முன்னால் அதிகாரத்தோடு தன் கையை நீட்டினான். அவள் புரியாமல் கேள்வியாகப் பார்க்க, "போன்!" என்று ஒற்றை வார்த்தையில் இடி முழக்கமாய் ஆணையிட்டான்.

அவள் தயங்கி நிற்க, அவனது பார்வை இன்னும் உக்கிரமானது. நடுங்கும் கைகளுடன் மெதுவாகத் தனது அலைபேசியை அவனிடம் நீட்டினாள்.

அதைப் பிடுங்கியவன், அருகில் நின்றிருந்த சுபாவின் பக்கம் திரும்பினான். அவனது பார்வையில் தெரிந்த ஏமாற்றம் சுபாவைச் சுட்டெரித்தது.

"நீயுமா சுபா...? உன்னை என்ர சொந்தத் தங்கையா நினைச்சுத் தானே மேகியை உன்னோட அனுப்பி வச்சனாங்க...? என்னோட பிறந்தவளுக்குத்தான் புத்தியில்லை எண்டால், உன்ர அறிவு எங்க போனது...? இந்த அசிங்கத்துக்கெல்லாம் நீயும் உடந்தையா இருந்திருக்கிறாய் எண்டு நினைக்கிற நேரம், உன்னைத் தங்கச்சி எண்டு சொல்லவே எனக்குக் கேவலமா இருக்கு..." என்று அவன் சீற, சுபா தலைகுனிந்து மௌனமாக அழுதாள்.

“அந்தப் பெட்டை இஞ்ச வந்து என்னவெல்லாம் சொன்னவள் தெரியுமா...? இரவிரவா அவனோட சேர்ந்து இவள் கூத்தடிச்சு இருக்கிறாளாம்... மனசை மட்டுமா பறிகொடுத்தாள், இல்லை வேற எதையுமா எண்டு அயலட்டை சனம் முன்னுக்க வெச்சு அசிங்க அசிங்கமா கேட்டவள்... இதைவிட ஒரு பெரிய அவமானம் இந்தச் சமூகத்துல எங்களுக்குக் கிடைக்குமா...? எங்களுக்குத் தெரியும்... அவள் அந்தளவு எல்லாம் போக மாட்டாள் எண்டு... ஆனால், அதை ஊர் ஊராப் போய் எல்லார் முன்னுக்கும்

எங்கள்ல பிழையில்ல எண்டு எங்களால நிரூபிக்க ஏலுமா..?” என்று ஆத்திரம் மேலிடக் கத்தினான் முரளி.

அவனது கண்கள் சிவந்து தகித்தன. “இனிமே நீ எங்கேயும் போறேல்ல... இண்டையோட உன்ர வானத்தை மறந்துடு...” என்று மேகலாவைப் பார்த்து எச்சரித்த முரளி, அவளது அலைபேசியை ஆத்திரத்துடன் தரையில் அடித்துச் சிதறடித்தான்.

அந்த அலைபேசி சுக்குநூறாக உடைந்த அந்த நொடி, மேகலாவின் சுதந்திரமும் சிறகுகளும் ஒடிக்கப்பட்டதை அவளுக்கு மௌனமாகச் சொல்லியது.

காஞ்சனா அள்ளி வீசிவிட்டுச் சென்ற அந்த அசிங்கமான வார்த்தைகளை முரளி தன் வாயால் சொல்லக் கேட்டபோது, மேகலாவிற்குத் தன் காலடியில் இருந்த பூமி பிளப்பது போல இருந்தது. அவளது நடத்தையைக் குறித்து அத்தனை கீழ்த்தரமான கேலிகள் ஊர் சனம் முன்னிலையில் வைக்கப்பட்டன என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அந்த அதிர்ச்சியில் அவளது உடல் ஒருகணம் மரத்துப்போனது. எவ்விதப் பாவமும் அறியாத தன் காதலை, இந்தச் சமூகம் இவ்வளவு வக்கிரமாகப் பார்க்கிறதா என்ற எண்ணம் அவளை அடியோடு நிலைகுலைத்தது. ஒரு பக்கம் தந்தையின் உடல்நிலை, மறுபக்கம் தன் ஒழுக்கத்தின் மீது விழுந்த கறை... மேகலாவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

சத்தமிட்டு அழக்கூடத் தெம்பில்லாமல், தன் கைகளால் வாயை இறுகப் பொத்திக்கொண்டு, அந்த இடத்திலேயே அப்படியே தரையில் மடிந்து விழுந்து கதறினாள்.

அவளது கண்ணீரும் விம்மலும் அந்த வீட்டின் சுவர்களில் மோதி எதிரொலித்தன. தன் கௌரவமே தன் உலகம் என்று வாழ்ந்த ஒரு குடும்பத்திற்கு, தான் அறியாமலேயே இவ்வளவு பெரிய தலைகுனிவைத் தேடித்தந்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி அவளைச் சுட்டெரித்தது.

முரளியின் ஆத்திரமும், மகேஸ்வரியின் விம்மலும், மேகலாவின் அந்த மௌனமான அழுகையும் சேர்ந்து அந்த இடத்தையே ஒரு நரகமாக மாற்றியிருந்தது.

சரவணனும் அரவிந்தனைப் பார்த்துவிட்டு, கனத்த இதயத்துடன் சுபாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அந்த வீட்டின் விறாந்தையில், உணர்வுகளற்று எத்தனை நேரமாக மேகலா தரையில் அமர்ந்திருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை.

"அந்தி சாஞ்சிட்டுது... இன்னும் விளக்கு போடாம இப்படியே இருந்தா என்ன அர்த்தம்...? இன்னும் எங்களை என்ன செய்ய பிளேன் பண்ணுறனீ.." என்ற மகேஸ்வரியின் கசப்பான குரலில்தான் மேகலா மெல்ல சுயநினைவுக்கு வந்தாள்.

மெதுவாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,
"அப்பாவை... ஒருக்கா... பார்க்கோணும்..." என்று தழுதழுத்த குரலில் வேண்டினாள்.

"ஏன்... அவரைப் பார்த்து மறுக்காவும் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் நாங்க சேர்க்கவா...?" என்று மகேஸ்வரி சூடாகக் கேட்டார்.

"அம்மா ப்ளீஸ்... வார்த்தைகளாலேயே என்னைக் கொல்லாதீங்கோ..."

வாடி வதங்கிப் போயிருந்த தன் மகளின் முகத்தைப் பார்த்து அந்தத் தாயுள்ளம் ஏனோ ஒரு கணம் தடுமாறியது.

"முதல்ல போய் கை கால் அலம்பிப் போட்டு வந்து ஏதாவது சாப்பிடு... பிறகு பார்க்கலாம் அவரை..."
என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றார்.

அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, மேகலா இயந்திரத்தனமாகத் தன் அறைக்குச் சென்றாள். உடை மாற்றிவிட்டு வந்தவளுக்குத் தொண்டையை எதுவோ அடைப்பது போல இருக்க, அவளால் ஒரு பருக்கை கூட உண்ண முடியவில்லை. மெதுவான அடிகளுடன் தன் தந்தையின் அறை வாசலில் வந்து நின்றாள்.

அங்கே, கட்டிலில் சாய்ந்திருந்த தந்தையின் அருகில் தாயும் தமயனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரது முகத்திலும் படர்ந்திருந்த அந்த இருளைப் பார்க்கும்போது, தான் இழைத்த தவறு எவ்வளவு பெரியது என்பது மேகலாவிற்குப் புரிந்தது.

மெல்லச் சென்று அரவிந்தனின் கால்களைப் பற்றிக்கொண்டவள், அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை பாரத்தையும் இறக்கி வைப்பது போல, அவரது காலடியிலேயே மடிந்து வெடித்து அழுதாள். அவளது கதறலில் அந்த அறையே ஒரு நிமிடம் அதிர்ந்தது. தன் தந்தை ஒருமுறையாவது தன் பக்கம் திரும்புவாரா அல்லது தன் தலை மீது கை வைத்துத் தேற்றுவாரா என்ற ஏக்கம் அவளது ஒவ்வொரு விம்மலிலும் வெளிப்பட்டது.

மகளின் அந்த நெஞ்சைப் பிழியும் கதறலை அரவிந்தனால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. ஒரு தந்தையாக அவளது கண்ணீர் அவரது இதயத்தை மெல்லக் கரைத்தது. தள்ளாடும் கைகளால் அவளை மெல்லத் தூக்கித் தன் மடியில் சாய்த்துக்கொண்டார். தன் தந்தையின் மடியில் தஞ்சமடைந்த மேகலா, அவரது இடுப்பை இறுகக் கட்டிக்கொண்டு ஒரு குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதாள்.

அரவிந்தன் எதுவும் பேசவில்லை. ஆனால், அவரது நடுக்கமான கரங்கள் மென்மையாக அவளது கூந்தலை வருடிவிட்டன. அந்த மௌனமான வருடல், 'அப்பா உன்னை மன்னித்துவிட்டேன்' என்று சொல்லாமல் சொல்லியது. அந்தக் காட்சி, அங்கிருந்த முரளி மற்றும் மகேஸ்வரியின் மனப் பாரத்தையும் சற்றே குறைத்தது.

அதன்பிறகு, அந்த வீடு மெல்ல மெல்லத் தன் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. காலத்தின் ஓட்டத்தில் காயங்கள் ஆறத் தொடங்கின. தரிந்து அந்த வீட்டின் வாசற்படியில் முதன்முதலாகத் தன் காலைப் பதிக்கும் வரை...




 

thanga then mozhi

Active member
எல்லா குடும்பங்களிலும் முக்கியமாக கருதப்படும் விடயம் கௌரவம்
 

STN-116

Active member
எல்லா குடும்பங்களிலும் முக்கியமாக கருதப்படும் விடயம் கௌரவம்
இது கெளரவம் இல்லை... அவங்களோட ரணம்
 

Gowri Karthikeyan

Well-known member
Aww ரொம்ப எமோஷனல் epi🤧🤧🤧🤧🤧
இவங்க ரணமும் பெரியது, இவ காதலும் சின்னது இல்ல.....
என்ன செய்ய போறான் தரு வந்து...
 

STN-116

Active member
Aww ரொம்ப எமோஷனல் epi🤧🤧🤧🤧🤧
இவங்க ரணமும் பெரியது, இவ காதலும் சின்னது இல்ல.....
என்ன செய்ய போறான் தரு வந்து...
பொண்ணு கேட்க போறான்
 
Top Bottom