• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 24

STN-116

Active member
MTN 24

பலாலி விமானப்படை தளம்.
வட இலங்கையின் வான் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பாதுகாப்புத் தளம் அது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண வானிலையால், வட இலங்கை முழுவதும் புயலின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாகி இருந்தது. மக்கள் பலர் தங்கள் வீடுகள், வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் நிலைகுலைந்து போயிருந்த அந்த இக்கட்டான வேளையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. வட இலங்கை முழுவதையும் தங்கள் சிறகுகளால் ஆக்கிரமித்திருந்த உலங்குவானூர்திகள் (Helicopters), விடாது வலம்வந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பலாலி விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

விங் கொமாண்டர் தரிந்துவும் அவனது குழுவினரும், ஒரு உயிரைக் கூட இழந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் இரவு பகல் பாராமல் களத்தில் நின்றிருந்தனர். மக்களின் துயர் துடைக்கும் அந்தப் பெரும் பணியில், தனது தனிப்பட்ட வலிகளைத் தற்காலிகமாக மறந்து தரிந்து ஒரு மெய்யான போராளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஒரு போர்க்களத்தைப் போலவே காட்சியளித்தது. எங்கும் இதயத்தைப் பிளக்கும் கதறல்களும், காயமடைந்தவர்களின் வேதனை நிறைந்த முனகல்களும் காற்றில் கலந்திருந்தன.

தரிந்துவும், அனுஷ்காவும் அங்குள்ள மக்களைக் காப்பாற்றவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் ஒரு இயந்திரத்தைப் போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்க, அந்தப் பரபரப்பிற்குள்ளே ஒரு மருத்துவராகத் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான் முரளி.

தரிந்துவின் ஒவ்வொரு செயலையும் முரளி தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் தான் வெறுத்து ஒதுக்கிய அந்தச் சிங்கள இளைஞன், இன்று அதே மண்ணில் இன, மத பேதமின்றித் தன் உயிரைத் துச்சமாக மதித்து, மனிதாபிமானத்துடன் சேவை செய்வதைப் பார்த்தபோது முரளியின் மனதிற்குள் ஏதோ ஒன்று மெல்ல உடையத் தொடங்கியது.

அதேசமயம், அனுஷ்காவின் கண்கள் தற்செயலாக முரளியின் மீது நிலைத்தன. நோயாளி ஒருவருக்குச் சிகிச்சையளிக்கும்போது, நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி அவன் காட்டிய அந்தத் தீவிரம் அவளை ஏதோ செய்தது. குறிப்பாக, அவன் பேசும்போது எட்டிப்பார்த்த அந்தத் தெற்றுப்பல்லும், அவனது வசீகரமான தோற்றமும் அனுஷ்காவின் மனதில் ஒரு மெல்லிய சலனத்தீயைப் பற்றவைத்தது. அவன் மேகலாவின் அண்ணன் என்பது தெரியாமலேயே, அந்தத் தெரியாத முகத்தின் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு உண்டானது.

அடுத்தடுத்த நாட்களில் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது. தரிந்துவின் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதிலும், மருந்துப் பொருட்களைச் சீராகக் கொண்டு சேர்ப்பதிலும் அயராது உழைத்தனர். நான்கு நாட்களாக அந்த மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்து, ஒவ்வொரு நொடியையும் சேவையிலேயே கழித்தனர்.

புயல் மெல்லக் கரையைக் கடந்து தன் சீற்றத்தைக் குறைத்துக் கொண்டிருந்த வேளையில், அங்குள்ளவர்களின் இதயங்களுக்குள் புதிய மாற்றங்களுக்கான விதைகள் தூவப்பட்டிருந்தன.

அன்றும் வழக்கம்போல நோயாளிகளைத் தரிசித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துவிட்டு தரிந்துவும் அனுஷ்காவும் ஒன்றாக வெளியேறினார்கள். அந்த நான்கு நாள் சேவையின் களைப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தாலும், அடுத்த கடமைக்குத் தயாராகவே இருந்தனர்.

அப்போது, ஒரு ஸ்ட்ரெச்சரைச் சுற்றிப் பதற்றத்துடன் ஓடி வந்த ஒரு கும்பல் தரிந்துவின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சிறு கூட்டத்தின் நடுவே ஒரு பெண் ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்தாள். அவளது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த துணியையும் மீறி, ரத்தம் தாரை தாரையாக வழிந்தோடி ஸ்ட்ரெச்சரையே நனைத்துக் கொண்டிருந்தது.

அவளைச் சுற்றி மகேஸ்வரியும் முரளியும் உலகமே இடிந்து விழுந்தது போலக் கதறியபடி ஓடி வந்துகொண்டிருந்தனர். அந்தத் துயரக் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் தரிந்துவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. அவனது ஆன்மா அவனுக்கே தெரியாமல் அலறியது.

"சுது வலாகுழு..."

அவனது உதடுகள் தன்னிச்சையாக அந்தப் பெயரை உச்சரிக்க, அவனது கண்கள் அந்த ஸ்ட்ரெச்சரில் அசைவற்று இருந்த மேகலாவையே நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருந்தன. மென்மையே உருவான அவனது வெண்மேகம், இன்று ரத்தக் கறைகளோடும் மரணத்தின் கோரப் பிடியோடும் தன் கண் முன்னால் போராடிக் கொண்டிருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவனை விட்டுப் பிரிந்த அவனது உயிர், இன்று உலகை விட்டேப் பிரியத் துடித்துக் கொண்டிருந்தது.

உயிரைத் துச்சமாக மதித்து ஊருக்கே உதவிய அந்த வீரன், தன் உயிரானவள் மரணத்தின் விளிம்பில் இருப்பதைப் பார்த்துச் செயலற்றுப் போய் நின்றான். அவளைச் சுற்றி நின்றிருந்த அரவிந்தனும் முரளியும், தரிந்து அங்கிருப்பதை கவனிக்கவில்லை. முரளி மிகுந்த பதற்றத்துடன், மேகலாவின் கைகளைத் தூக்கிப் பிடித்தபடி அவளோடு ஓடி வந்தான். தன் தங்கை எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் என்ற தீராத அச்சம் அவன் முகத்தில் அப்பியிருந்தது.

அரவிந்தன் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, எழுந்து நிற்கக் கூட முடியாத தன் உடல் இயலாமையையும் மீறி, தன் ஒரே மகளுக்காக நெஞ்சுருகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். மரணத்தின் நிழல் மேகலாவைச் சூழ்ந்திருக்க, அந்த இடமே ஒரு பெரும் சோகத்தின் பிடியில் சிக்கியிருந்தது.

அப்போது, யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவனான முரளியைக் கண்டதும், ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்த ஊழியர்கள் சத்திர சிகிச்சைப் பிரிவின் கனத்த கதவுகளை வேகமாய்த் திறந்தனர்.

"சேர்ஜன்... உள்ளே வாங்கோ..." என்று செவிலியர்கள் அவசரமாக அழைக்க, முரளி மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான்.

அதுவரை ஒரு சாதாரண அண்ணனாகத் தன் தங்கையின் நிலையைப் பார்த்துப் பதறிக்கொண்டிருந்த முரளியின் முகம், அடுத்த நொடியே ஒரு தேர்ந்த மருத்துவரின் தீவிரத்தைப் பூசிக்கொண்டது. உணர்ச்சிகளைத் தள்ளிவைத்துவிட்டு, உயிரைக் காக்கும் கடமையில் ஈடுபடத் தயாரானான்.

வெளியே அரவிந்தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஏக்கத்துடனும் தவிப்புடனும் பார்க்க, அந்த இரும்புக் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டன.

உள்ளே ஒரு உயிர்ப் போராட்டமும், வெளியே ஒரு உணர்ச்சிப் போராட்டமும் அரங்கேறத் தொடங்கியது. அரவிந்தனின் குடும்பமும் தரிந்துவும் மீண்டும் மேகலா என்ற ஒரு புள்ளியில் சந்தித்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்காவிற்கு உடல் சிலிர்த்துப் போனது. ஒரு நிமிடம் அவளது உலகமே சுழல்வது போலிருந்தது. தன் மனதின் நாயகன் என்று அவள் கடந்த ஒரு வாரமாக போற்றி வந்தவன், தன் அண்ணனின் காதலைத் துரத்தியடித்த அதே மனிதன்தானா...?? அவள் மனதில் வடித்திருந்த மேகலாவின் அண்ணனுக்கும், கடந்த ஒரு வாரமாக அவள் ரசித்துக் கொண்டிருக்கும் டொக்டர் முரளிக்கும் இடையில் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன. அங்கே தெரிந்த பிடிவாதம் இங்கே ஒரு கைதேர்ந்த மருத்துவனின் அர்ப்பணிப்பாகத் தெரிந்தது.

முரளியின் மேல் ஒருபுறம் கோபம் கனன்றாலும், காதலிக்கும் அவளது கன்னி மனதிற்குள் ஒரு பெரும் சஞ்சலம் எழுந்தது.
'தன் சொந்தத் தங்கையின் காதலுக்கே சமாதி கட்டியவன், அதே இனத்தைச் சேர்ந்த தன்னையா காதலிக்கப் போகிறான்...?'
என்ற கேள்வி அவளைத் துளைத்தது.

ஆனால், அனுஷ்கா அவ்வளவு எளிதில் எதையும் விட்டுவிடுபவள் இல்லையே... அவளது மன உறுதி அவளைத் தட்டி எழுப்பியது. முரளியைப் பார்த்து நான்கு வார்த்தைகளை நறுக்கென்று கேட்டுவிட்டு, அதன் பிறகே தன் காதலைச் சொல்ல வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

அவன் முன் ஒரு பலவீனமான பெண்ணாக நிற்காமல், தன் அண்ணனுக்காகப் பேசும் ஒரு அதிகாரியாகவும், தன் காதலுக்காகப் போராடும் பெண்ணாகவும் அவன் முன் நிற்க அவள் தயாரானாள்.

சிறிது நேரம் கழித்து, அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகள் அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருந்தன. செவிலியர்கள் பதற்றத்துடன் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்க, அங்கு நிலவிய அமைதி மரண பயத்தைக் கூட்டியது.

சற்று நேரத்தில் வெளியே வந்த முரளி, எதற்கும் கலங்காத அந்த அறுவை சிகிச்சை நிபுணன், இன்று நிலைகுலைந்து போய் நின்றான்.

"என்ன தம்பி... என்ர மகள் இப்ப எப்படி இருக்கிறா...?"

என்று கதறியபடி அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு மகேஸ்வரி கேட்க, முரளி பதில் சொல்ல முடியாமல் மௌனமாக உறைந்து நின்றான்.

அவன் பேச முடியாமல் தவிப்பதைப் பார்த்த அருகில் நின்ற மற்றொரு மருத்துவர்,

"இரத்த இழப்பு அதிகமாகிட்டுது... உடனடியா இரத்தம் ஏத்தோணும்.... ஆனால், அந்த இரத்த வகை இப்ப இஞ்ச இருப்பில இல்லை..." என்று கவலையுடன் கூறினார்.

"நான் தாறன்... என்ர ரத்தத்தை குடுத்து அவாவை எப்படியாவது உயிரோட திருப்பித் தாங்கோ..."
என்று மகேஸ்வரி துடித்தார்.

இடையிட்ட முரளி,
"இல்லையம்மா... உங்கட அவாவுக்குச் சரிவராது... அவளின்ர குரூப்..."

என்று சொல்லி முடிப்பதற்குள், அங்கிருந்த சூழலையே மாற்றும் வகையில் ஒரு கணீர் குரல் ஒலித்தது.


"ஓ நெகடிவ்.... நான் தாறன்..."

அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். அங்கே, விங் கொமாண்டர் தரிந்து சேனநாயக்க உறுதியான பார்வையுடன் நின்றிருந்தான்.

அந்தக் குரலைக் கேட்டதும் மேகலாவின் பெற்றோர் மெல்லத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தனர். முரளியும் திகைப்புடன் அவனை நோக்கினான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால், தங்கள் வீட்டிலிருந்து அவமானப்படுத்தி விரட்டப்பட்ட அந்தச் சிங்கள இளைஞன், இன்று தங்கள் மகளின் உயிரைக் காக்கத் தன் இரத்தத்தையே கொடுக்க முன்வந்திருப்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

முரளியின் கண்களில் பழைய கோபத்திற்குப் பதிலாக, ஒருவிதக் குற்றவுணர்ச்சியும் கையறு நிலையும் கலந்திருந்தன. அரவிந்தன் தழுதழுத்த கண்களுடன் தரிந்துவைப் பார்க்க, தரிந்துவோ அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. அவனது முழு கவனமும் அந்த மற்றொரு மருத்துவரின் மேல்தான் இருந்தது.

அவனது கம்பீரமான வான்படைச் சீருடையைப் பார்த்ததும், அங்கிருந்த கூட்டமும் ஊழியர்களும் தன்னிச்சையாக வழிவிட்டனர். அந்த அதிகார மிடுக்கிற்குப் பின்னால் ஒளிந்திருந்த துயரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. தரிந்து மெல்ல அந்தச் சத்திரசிகிச்சை அறையை நோக்கி நடந்தான்.

உள்ளே சென்றவன், கட்டிலில் உணர்விழந்து அசைவற்றுக் கிடந்த மேகலாவைக் கண்டான். ஒரு காலத்தில் வானில் மென்மையாய் மிதந்த அவனது வெண்மேகம், இன்று சிதைந்து, ஒளியிழந்து, கலைந்து போயிருந்தது.

அவன் நடுங்கும் கரங்களால் அவளது மணிக்கட்டைத் தொட்டுப் பார்த்தான். நாடித்துடிப்பு மிக மெல்லியதாக, எந்தக் கணமும் நின்றுவிடலாம் என்பது போன்ற ஒரு இறுதிப் போராட்டத்தில் துடித்துக்கொண்டிருந்தது. தரிந்துவின் கண்கள் கலங்கின. அந்த நீர்ப் படலத்தின் வழியே அவன் முரளியைப் பார்த்தான். ஐந்து வருட நிராகரிப்பும், கசப்பும், வன்மமும் அந்த ஒரு பார்வையில் மௌனமாக உறைந்து போயின.

மேகலாவின் மணிக்கட்டுப் பகுதியில், பெருவிரல் பக்கமாகச் செல்லும் முக்கியமான இரத்த நாடியான, ஆரைத் தமனியில் (Radial Artery) ஏற்பட்டிருந்த ஆழமான வெட்டினால், இரத்தம் பீறிட்டு வெளியேறி அவளது உயிர்ச்சக்தி முழுவதையும் உறிஞ்சியிருந்தது.

ஒருபுறம் தரிந்துவின் உடலிலிருந்து இரத்தம் மேகலாவிற்கு ஏறிக்கொண்டிருக்க, மறுபுறம் அந்தத் தமனியைத் தையல் போட்டு (Vascular Repair) இரத்தக் கசிவை நிறுத்தும் போராட்டத்தை முரளி தொடங்கினான்.

இரத்தம் கொடுத்துக்கொண்டே இந்தச் சிகிச்சையைச் செய்தால்தான் மேகலாவை மரணத்தின் பிடியில் இருந்து மீட்க முடியும் என்ற இக்கட்டான சூழலில், மருத்துவ நடைமுறைகள் வேகமெடுத்தன.

தரிந்துவின் காதல் அவளது நாடிகளில் இரத்தமாய் ஓட, முரளி ஒரு மருத்துவனாகத் தன் முழுத் திறமையையும் திரட்டி அவளைக் காக்கப் போராடிக்கொண்டிருந்தான்.

அறுவை சிகிச்சை அறையின் வாசலில் எரிந்து கொண்டிருந்த அந்தச் சிவப்பு விளக்கு அணையும் வரை, வெளியே காத்திருந்த அரவிந்தனுக்கும் மகேஸ்வரிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது. மகளின் உயிர் அந்தச் சிவப்பு விளக்கின் ஒளியில் ஊசலாடிக் கொண்டிருக்க, அவர்கள் சொல்லொணாத் துயரத்தில் உறைந்து போயிருந்தனர்.

அவர்களுக்கு இக்கட்டான அந்த நேரத்தில் ஒரு மகளைப் போல அரணாக நின்றிருந்தாள் அனுஷ்கா. பதற்றத்தில் நா வறண்டு போயிருந்த அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவள், அவர்களுக்கு எனத் தனியாக ஒரு அறையையும் ஏற்பாடு செய்தாள். அவளது இராணுவச் சீருடையும், அதிகாரமிக்க பதவியும் அந்தச் சில உதவிகளை விரைவாகச் செய்ய அவளுக்குத் துணையாக இருந்தன.

அரவிந்தனும் மகேஸ்வரியும் அங்கேயே தவம் கிடப்பதைப் பார்த்த அனுஷ்கா, மெல்ல அவர்கள் அருகில் சென்றாள்.

"இஞ்சப் பாருங்கோ... ஒபரேஷன் முடிய இன்னும் மூண்டு நாலு மணித்தியாலங்கள் இருக்கு.. அதுவரைக்கும் இஞ்சயே இப்படி இருக்கப் போறீங்களா... முதல்ல அந்த ரூமுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ......"
என்று அன்பும் அதிகாரமும் கலந்த குரலில் அதட்டி உருட்டி அவர்களை ஓய்வறைக்கு அனுப்பி வைத்தாள்.

அவளது சீருடையைக் கண்டு ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினாலும், அவளது பேச்சில் இருந்த அக்கறையும் உண்மையும் அவர்களைக் கட்டுப்பட வைத்தன. ஒரு இயந்திரத்தைப் போல அவர்கள் அறைக்குச் சென்றனர்.

தனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் மேகலாவின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், தரிந்து பெரும் சோர்வையும் மீறி அந்தக் கட்டிலில் அசைவற்றுப் படுத்திருந்தான்.

சத்திரசிகிச்சை அறையின் ஒரு பக்கம் முரளி தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்க, மறுபக்கம் தன் உயிரைச் செந்நீராக மேகலாவிற்குத் தந்து கொண்டிருந்தான். சிகிச்சைக்கு நடுவே முரளியின் கண்கள் அவ்வப்போது தரிந்துவின் முகத்தைச் சந்தித்தன. அங்கே எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத ஒரு உன்னதமான அர்ப்பணிப்பு தெரிந்தது. அடுத்த வந்த மூன்று மணிநேரமும், தரிந்து அங்கேயே ஒரு உயிர் காக்கும் காவலனாகக் கிடந்தான்.

அனைவரையும் தவிக்கவிட்டு, ஒருவழியாக மேகலாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆழமான காயம் காரணமாக அவள் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டாள். அங்கே யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்றாலும், மேகலாவின் இதயம் இப்போது சீராகத் துடிப்பதை அறிந்த பின்பே மருத்துவமனை வளாகத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு நிலவியது.

இரத்தம் கொடுத்ததன் காரணமாகக் கடுமையான தலைச்சுற்றல் மற்றும் உடல் பலவீனம் ஏற்படலாம் என்பதால், மருத்துவர்கள் தரிந்துவை ஓய்வெடுக்குமாறு எச்சரித்தனர். ஆனால், அவன் அந்த இடத்தை விட்டு அணுவளவும் அசைய மறுத்துவிட்டான். அவனது பிடிவாதத்தை அறிந்த அனுஷ்கா, அவனுக்கான மாற்று உடைகளை வருவித்து, அவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள்.

மறுபுறம், அரவிந்தனும் முரளியும் தரிந்துவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அவனிடம் சென்று பேச வேண்டும், நன்றி சொல்ல வேண்டும் என்று அவர்கள் மனம் தவித்தாலும், கண்ணுக்குத் தெரியாத சுவரொன்று அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

இருபத்து நான்கு மணிநேரத் தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்குப் பின்னர், மேகலாவின் உடல்நிலை தேறியது. மரணத்தின் வாசலில் இருந்து மீண்டு வந்தவள், சுயநினைவு முழுமையாகத் திரும்பிய பிறகே சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாள். சொர்க்கத்தின் கதவுகள் திறந்தது போன்ற ஒரு நிம்மதியுடன், அனைவரும் மேகலா இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

அங்கே, வேரோடு அறுத்து வீசப்பட்ட ஒரு பூங்கொடியைப் போல, வெளிறிய முகத்துடன் கட்டிலில் அசைவற்றுப் படுத்திருந்தாள் மேகலா. தன் முன்னே நின்றிருந்தவர்களைக் கண்டதும் அவளது கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. அதிலும் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்றிருந்த தரிந்துவைக் கண்ட அந்த நொடி, அவளது கண்களில் ஒரு மின்னலைப் போன்ற அதிர்வு மின்னியது. மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவளுக்கு, அவன் அங்கே நிற்பது ஒரு அதிசயத்தைப் போலத் தெரிந்தது.

அவளது வாழ்வின் திசைகளைத் தீர்மானித்தவர்களும், அவளது ஒவ்வொரு மூச்சுக் காற்றையும் தன் இரத்தத்தால் மீட்டெடுத்தவனுமாய்... அவளது வாழ்வின் இன்றியமையாத அந்த இருசாராரும், வார்த்தைகளற்று மௌனமாக அவளைக் கண்ணீரோடு பார்த்தபடி நின்றிருந்தனர்.

"த...ரி...ந்..து.."

சொல்லும் வார்த்தைக்கும் வலிக்குமோ என்பது போல, தன் உயிரின் பெயரை மிக மெல்லிய குரலில் திக்கித் திணறி அழைத்தாள் மேகலா.

அந்தக் குரல் அவனது செவிகளில் விழுந்த அடுத்த நொடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் அவளருகில் ஓடிச் சென்றான் தரிந்து. அவளது வாடிய முகம் ஏந்தி, தலையை வருடி, அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். மரணத்தின் வாசலில் இருந்து மீண்டு வந்தவளின் கண்ணீரும், அவளை மீட்டெடுத்தவனின் கண்ணீரும் அங்கே ஒன்றோடொன்று சங்கமித்தன.

"ஏனடி இப்படி செஞ்சாய்...??? எதுக்கு இந்த மாதிரி ஒரு விபரீத முடிவு எடுத்தனீ...??? இந்த உலகத்தை விட்டுப் போகோணும் எண்டால் என்னையும் உன்னோடவே கூட்டிட்டுப் போய் இருக்கேலும் தானே..."
என்று இத்தனை காலம் நெஞ்சிற்குள் அடக்கி வைத்திருந்த பாரத்தையெல்லாம் அழுகையாகக் கொட்டித் தீர்த்தான்.

நாட்டையே காக்கும் பணியில் இருக்கும், இரும்புக்கு ஒப்பான மன உறுதி கொண்ட ஒரு போர் வீரன், ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போலத் தன் காதலியின் மடியில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

மேகலாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தைச் செவிமடுத்த நொடி, அனுஷ்கா ருத்ரதாண்டவமே ஆடித் தீர்த்துவிட்டாள்.

எதற்கும் அஞ்சாத, எவரையும் பணிய வைக்கத் தெரிந்த ஆனானப்பட்ட முரளியே வாயடைத்துப் போய் ஊமையாகி நின்றான்.




 

Gowri Karthikeyan

Well-known member
ஓ கல்யாண ஏற்பாடு தான் காரணமா....
மேகி ஏண்டா இப்படி செய்திட்ட🥺🥺🥺🥺
தரு காப்பாத்திடான் 🥰🥰🥰🥰
அனு ஓட performance பார்க்க waiting
 

STN-116

Active member
ஓ கல்யாண ஏற்பாடு தான் காரணமா....
மேகி ஏண்டா இப்படி செய்திட்ட🥺🥺🥺🥺
தரு காப்பாத்திடான் 🥰🥰🥰🥰
அனு ஓட performance பார்க்க waiting
மேகிக்கு வேற வழி தெரியவில்லையாம்.
அனுவின் ஆட்டம் பயங்கரமா இருக்கும்
 
Top Bottom