மேகம் 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 25

தந்தை திருமணத்தைப் பற்றிப் பேசிய அந்தத் துரதிர்ஷ்டவசமான தினத்திலிருந்து மேகலா தனக்குள் ஒடுங்கிப் போயிருந்தாள். வீட்டின் கலகலப்பு அவளுக்கு அந்நியமாகத் தோன்றியது. யாருடனும் பேச விருப்பமில்லாமல் ஒருவித இறுக்கமான மௌனத்தையே தனக்குத் துணையாக்கிக் கொண்டாள். அவளது மௌனம் ஒரு பெரும் புயலுக்கு முந்தைய அமைதி என்பதை அந்த வீட்டில் எவரும் உணரவில்லை.

அடுத்த வாரம் அவளைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்ற செய்தி, அவளது இதயத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. மற்றவர்களின் விருப்பத்திற்காக, தனக்குப் பிடிக்காத ஒருவன் முன்னிலையில் அலங்காரப் பொம்மையாக நிற்க அவளது மனம் மறுத்தது. தனது இல்லம் ஒரு பெண் பார்க்கும் படலத்திற்குத் தயாராவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை, தட்டிக்கழிக்கவும் வழியிருக்கவில்லை.

தரிந்துவை மறந்து, அவனது நினைவுகளின்றி இன்னொரு வாழ்க்கைக்குள் தடம் பதிப்பது என்பது மேகலாவிற்குச் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. இந்த ஐந்து வருட இடைவெளி, அவனது காதலை அவள் இதயத்தின் ஆழத்தில் இன்னும் ஆழமாகப் பதிய வைத்திருந்தது. தனக்குச் சொந்தமில்லாத ஒரு வாழ்வை வாழ்வதை விட, தன் காதலுக்காக உயிரையே தியாகம் செய்வது மேலானது என்ற விபரீத முடிவை அவள் எட்டினாள். யாருமே எதிர்பார்க்காத அந்த ஒரு நொடியில், தன் காதலின் புனிதத்தைக் காக்கத் தன் மூச்சையே நிறுத்தத் துணிந்தாள் அந்த மேகப்பெண்.

காலை நேரப் பரபரப்பில் இருந்த வீட்டினரின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, தன் தாய் வாங்கி வைத்திருந்த அந்தப் புதிய கத்தியை கையில் எடுத்தாள். சப்தமில்லாமல் தனது அறைக்குள் புகுந்து கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள். அவளது இதயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடித்துக் கொண்டது.

அறைக்குள் நுழைந்ததுமே மேகலா விம்மித் தீர்த்தாள். அவளது அழுகை காதலுக்காக மட்டும் எழுந்தது அல்ல. தன் இனத்திற்கும் தன் குடும்பத்திற்கும் இடையே சிக்கித் தவித்த இன்னொரு ஆன்மாவிற்குமானது.

இறுதியாக ஒரு உறுதியான முடிவுக்கு வந்தவள், கண்களை இறுக மூடினாள். நடுங்கும் கரங்களால் தன் மணிக்கட்டை ஆழமாக அறுத்துக் கொண்டாள். இரத்தம் பீறிட்டுப் பாய, உயிர்ச் சக்தி மெல்ல வெளியேறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில், மேகலா நிலைகுலைந்து தரையில் சரிந்தாள்.

சிறிது நேரம் கழித்து, மேகலாவைக் காணாத மகேஸ்வரி அவளது அறைக்கதவைத் தட்டினார். உள்ளே எந்தப் பதிலும் வராததால், அவள் ஒருவேளை குளிக்கச் சென்றிருப்பாளோ என்று எண்ணித் திரும்பிய சமயம், அவரது கண்கள் தரையை நோக்கின. மூடியிருந்த கதவின் கீழ் இடுக்கிலிருந்து கசிந்து வந்த செந்நிற இரத்தம், மகேஸ்வரியின் உலகத்தையே ஒரு கணம் நிறுத்தியது.

"ஐயோ... மேகலா..."

அவரது அந்த ஓலக் குரல் கேட்டு ஓடி வந்த முரளி, நிலவரத்தைப் புரிந்துகொண்ட அடுத்த நொடி கதவை எட்டி உதைத்தான்.

கதவு திறந்ததும் அங்கே தெரிந்த காட்சி அவனது மருத்துவ அறிவையும் மீறி அவனைப் பதறச் செய்தது. அங்கே, குற்றுயிரும் குலையுயிருமாக மேகலா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள்.

மகளின் விபரீத முடிவைக் கண்டு அரவிந்தன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, ஒரு மருத்துவனாகத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு விரைவாக செயல்பட்டான் முரளி.

அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகளுக்குப் பின்னால் அவள் மறைந்த அந்த நொடியிலிருந்து, இன்று அவளை மீண்டும் உயிருடன் பார்க்கும் வரை, அவர்களது உயிர் அவர்கள் வசம் இருக்கவில்லை.

"என்னால... என்னால... பெயருக்கு கூட இன்னொருத்தன் முன்னுக்கு மணப்பெண்ணா நிக்க ஏலாது தரிந்து... அது தான்... நான்.. நான்..."

என்று மேகலா விம்மித் தீர்க்க, அந்த அறை முழுவதும் அவளது அழுகைச் சத்தம் பாரமாய் அப்பிக் கொண்டது.

தன் மகளின் வாழ்க்கையைத் தான் நினைத்தபடி அமைத்துவிடலாம் என்று எண்ணியிருந்த அரவிந்தனுக்கு, அவளது ஒவ்வொரு வார்த்தையும் முகத்தில் விழும் சவுக்கடியாய் அமைந்தது. இத்தனை காலம் அவர் கட்டிக்காத்த கௌரவம், தன் மகளின் கண்ணீருக்கு முன்னால் அர்த்தமற்றுக் கிடந்தது.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தரிந்துவின் முகம் இறுகிக் கிடக்க, அனுஷ்காவோ ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள். அங்கு நிலவிய அந்தப் பாரமான மௌனத்தை அனுஷ்காவின் ஆவேசம் சுக்குநூறாகக் கிழித்தது. அதிகாரமிக்க இராணுவ அதிகாரியாக அவள் முரளியை நோக்கித் திரும்பினாள்.

அவனது மிக அருகில் வந்து நின்றவள், கனல் தெறிக்கும் கண்களுடன் கத்தினாள்.
"நீங்க எல்லாம் ஒரு மனுசனா...?"

"ஏய்... என்ன கதைக்கிறனீ..?" என்று முரளி அவளை அதட்ட முயல, அவனைத் தன் சொல்லால் அடக்கினாள் அனுஷ்கா.

"நீர் வாயை மூடும்... நீரெல்லாம் ஒரு அண்ணன்... இப்படி அவாவை சாகவிட்டு என்னத்த காணப் போறீர்..."
என்று அவள் பொழிய, நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தரிந்து அவளைத் தடுத்தான்.

"அனு... நிகங் இன்ன... (சும்மா இரு)"

"ஒயா நிகங் இன்ன அய்யே... (நீங்க சும்மா இருங்க அண்ணா) நீங்க இப்படி பொறுமையா இருந்து இருந்து தான் இவங்க இப்படி உங்களை இவ்வளவு மட்டமா நடத்துறாங்க..."
என்று தரிந்துவை அதட்டிவிட்டு மீண்டும் முரளியின் பக்கம் திரும்பினாள்.

"உங்கட தங்கச்சியை என்ர அண்ணன், தன்ர உயிரையே குடுத்து காப்பாத்துறது இது ரெண்டாவது தடவை... தெரியுமோ உங்களுக்கு... இப்ப போக வேண்டிய உயிர், ஏழு வருசத்துக்கு முன்னுக்கயே போயிருக்கும்..."
என்று அவள் ஆதங்கத்துடன் பேசினாள்.

'என்ன...!!'

என்பது போல் திகைப்பில் உறைந்தனர் மேகலாவின் குடும்பத்தினர்.

அவர்களின் அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல், அன்று நடந்த அந்தத் தீ விபத்தைப் பற்றித் தோலுரித்துக் காட்டினாள்.

"அண்டைக்கு உங்கட்ட வந்து போட்டுக் குடுத்தாளே அந்த மகராசி... அவா தான் உங்கட மகளை கொல்லப் பார்த்ததே... அதிலயிருந்து அண்ணியைக் காப்பாத்தின என்ர அண்ணனுக்கு கிடைச்ச பரிசு என்ன தெரியுமோ...?"
என்று கூறிவிட்டு, தரிந்துவின் சட்டையைச் சற்றே விலக்கிக் காட்டினாள்.

அங்கே தரிந்துவின் நெஞ்சிலும் கழுத்திலும் தீக்காயங்களின் வடுக்கள் ஆழமாகப் பதிந்திருந்தன.

"நல்லாப் பாருங்கோ..."

என்று அவள் கண்ணீர் சிந்த, எதற்கும் வாயைத் திறக்க முடியாமல் முரளி சொல்லற்றுப் போய் நின்றான்.

மேகலா அவனது உடம்பில் இருந்த அந்தத் தழும்புகளைக் கண்ணீருடன் தன் கைகளால் வருடினாள்.

"நான் உங்கட வாழ்க்கையில வந்ததால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்..."
என்று அவள் விம்ம, தரிந்து அவளைத் தேற்றினான்.

"ஏய்... நீ என்ர தேவதை டி... நீ இல்லாம நான் இல்ல..."
என்ற அவனது வார்த்தைகள் அங்கிருந்த பகைமையைத் தற்காலிகமாக மறைத்தன.

ஒருபக்கம் அந்த உன்னதக் காதல் அரங்கேற, மறுபக்கம் தன் உடன்பிறவா அண்ணனுக்காகப் பெண் சிங்கமாய் நிமிர்ந்து நின்றாள் அனுஷ்கா.

"இன மத மொழி கடந்து, நாங்க எல்லாரும் இலங்கையர்கள் எண்ட ஒரே குடையின் கீழே நாங்க எப்ப வருவம் தெரியுமா... இந்த மாதிரி பேரழிவுகள் நிகழும் சமயத்தில மட்டும்தான்... ஆனால், வாழ்க்கை முழுக்கவுமே நாங்க அப்படிச் சகோதரர்களா வாழ வேணும் எண்டுறது தான் என்ர அய்யேவின்ர நீண்ட நாள் ஆசை..."

சற்று நிறுத்திவிட்டு அவள் தொடர்ந்தாள்.

"இப்ப இஞ்ச... வட இலங்கையில இருக்கிற பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் நீங்க வெறுக்குற அந்தப் பலாலி படைத்தளத்திலதான் தங்கியிருக்கிறாங்க... நீங்க பயப்படுற அந்த வான்படையின்ர பாதுகாப்புதான் அவங்களுக்கு இப்ப அரண்... வீட்டில ஏசி ரூமில சுகமாக இருக்க வேண்டிய அண்ணனும் ஏன் களத்தில இறங்கி வேலை செய்யுறார் தெரியுமா...? நாங்க எல்லாம் ஒரே ரத்தம்... ஒரே மக்கள் எண்டு நினைக்கிறதால மட்டும் தான்... இப்ப உங்கட மகளின்ர உடம்பில ஓடுறதும் அதே அண்ணனின் ரத்தம்தான்... நான் இதெல்லாம் உங்கள காயப்படுத்த சொல்லேல்ல...”

அனுஷ்காவின் பார்வை மேகலாவிலிருந்து நகர்ந்து அரவிந்தனின் கால்களையும், முரளியின் முகத்தையும் துளைத்தது.

"நான் அந்த கசப்பான உண்மைகள மறுக்கேல்ல... கடந்த காலங்களில சிங்கள இராணுவம் தமிழ் மக்கள மிக மிக மோசமா நடத்தி, கொடுமை படுத்தினது மறுக்கவோ மன்னிக்கவோ ஏலாத உண்மைதான்... ஆனால், அதே சீருடை போட்டு இருக்கிற என்ர அண்ணன் தான் தமிழாக்களுக்கு ஒண்டு எண்டால் எப்பவுமே முதல் ஆளா ஓடி வாறவர்..."

அனுஷ்கா மூச்சை இழுத்துவிட்டுத் தொடர்ந்தாள். அரவிந்தனும் முரளியும் அவளது வார்த்தைகளைக் கேட்டு சிலையென நின்றிருந்தனர்.

"உங்களுக்குத் தெரியுமா..? அத்தனை உயிர்களையும் அழிச்சுப் போட்டு, ஒவ்வொரு வருசமும் மே மாசம், தென்னிலங்கையில போர் வெற்றி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுற அந்த வேளையில, இவர் இஞ்ச முள்ளிவாய்க்காலில, கடைசிப் போரில அநியாயமா உயிரை விட்ட ஆத்மாக்களுக்காக மௌனமா நினைவஞ்சலி செலுத்துவார்... இது அண்ணிய காதலிச்ச பிறகு தொடங்கிய பழக்கம் இல்ல... அவர் யுனி ல படிச்சுக் கொண்டிருந்த காலத்திலயிருந்தே செஞ்சிட்டு வர்றார்..."

மேகலாவுக்கு இது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், தன் காதலனின் அந்த உயரிய குணத்தை இன்று தன் உற்றார் அறியச் செய்த அனுஷ்காவை ஒருவித பெருமிதத்துடன் பார்த்தாள்.

அரவிந்தனும் முரளியும் திகைப்பில் உறைந்தனர். சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவன், தங்கள் இனத்தின் வலியைத் தன் வலியாக உணர்ந்து இத்தனை வருடங்களாக அஞ்சலி செலுத்தி வருகிறான் என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

முரளியின் கண்களில் இதுவரை இருந்த அந்த அகங்காரம் மெல்ல மறைந்து, ஒருவிதத் திகைப்பு குடிகொண்டது. ஒரு மனிதாபிமானச் செயலை, தான் வெறுத்த அந்த இராணுவ வீரன் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்தபோது அவனது தலை தானாகக் கவிழ்ந்தது.

இத்தனை காலம் தன் அதிகாரத்தாலும், பிடிவாதத்தாலும் அனைவரையும் ஆட்டிப்படைத்த அந்தப் பெரும் மருத்துவன் முரளி, இன்று ஒரு சிறு சொல்லுக்குக் கூட வழியின்றிப் பேச்சு மூச்சற்றுச் சிலையென உறைந்து நின்றான். யதார்த்தத்தின் முன்னால், அவன் தன் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டுச் சலனமற்று நின்றான்.

"தயவு செஞ்சு பழைய காயங்களைக் காரணம் காட்டி, அவரோட அந்தத் தூய்மையான மனசை நோகடிச்சுப் போடாதீங்கோ மாமா... ஆயிரம் குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக்கூடாது எண்டு சொல்லுவாங்க. அதே சீருடையைப் போட்டுட்டுத் தப்பு செஞ்ச குற்றவாளிகளுக்காக, எந்தத் தப்பும் செய்யாத இந்த நிரபராதியைத் தண்டிச்சிப்போடாதீங்கோ... அவங்களைச் சேர்த்து வைங்கோ மாமா..." என்று கரம் கூப்பிக் கெஞ்சினாள் அனுஷ்கா.

அந்த அறையில் எஞ்சியிருந்தது மேகலாவின் விம்மலும், அனுஷ்காவின் வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்வுகளும் மட்டுமே.

மறுவாரம்... மேகலாவின் வீட்டிற்கு, பூக்களும் கனிகளும் நிறைந்த தட்டுகளுடன், புன்னகையுடன் வந்திறங்கினர் தரிந்துவும் அவனது பெற்றோரும். கூடவே ஒட்டுப்புள்ளாக அனுஷ்காவும்...




 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.