மேகம் 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 26

அனுஷ்காவின் அந்த உணர்ச்சிப்பூர்வமான மன்றாடலுக்குப் பிறகு, அந்த மருத்துவமனை அறையே ஒரு கனத்த நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.

அங்கிருந்தவர்களின் மௌனத்தை முதலில் கலைத்தது மகேஸ்வரிதான். இத்தனை காலம் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றவர், இன்று தன் மகளின் உயிருக்காக அந்த மௌனத்தை உடைத்தார். அரவிந்தனின் அருகே சென்று அவரது கைகளைப் பற்றிக்கொண்ட மகேஸ்வரி,

"என்ர பிள்ளை எங்க இருந்தாலும் உசுரோட, சந்தோசமா இருக்கோணும்... அவா ஆசைப்பட்ட அவருக்கே கல்யாணம் கட்டி குடுத்துடுவோம்.."
என்று கண்கள் குளமாக இறைஞ்சினார்.

அரவிந்தன் தன் மனைவியின் கைகளை மென்மையாக அழுத்திவிட்டு, மெதுவான எட்டுகளுடன் மேகலாவின் அருகில் வந்தார். அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தவர், கட்டுப்போடப்பட்டிருந்த அவளது கரத்தை மெல்லத் தன் கைகளுக்குள் ஏந்திக் கொண்டார்.

"அப்பா உங்கள நிறைய கஷ்டப்படுத்திப் போட்டன் என்னம்மா...?"
என்று அவர் உடைந்த குரலில் கேட்க, மேகலாவின் அணை உடைந்தது.

"இல்லப்பா... இல்லவே இல்ல..." என்று தந்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

அந்த அழுகையில் ஐந்து வருடக் காத்திருப்பின் வலியும், தந்தையின் மீதான தீராத அன்பும் ஒருசேர வெளிப்பட்டது. மகளின் கண்ணீரைத் துடைத்தவர், மெல்லத் திரும்பித் தரிந்துவின் அருகே வந்தார். அவனது தோள்களைத் தட்டிக்கொடுத்த அரவிந்தன்,

"அண்டைக்கு நீங்க கொண்டுவந்த பரிசுப் பொருட்களை நான் பிரிச்சுக்கூட பார்க்கேல்ல... அதேநேரம் குப்பையிலயும் போடேல்ல... இல்லாதவைக்கு கொடுத்துவிட்டனான்... இப்ப, உங்களின்ர பெத்தவேயளோட மறுக்காவும் பரிசுக் கொண்டு வாங்கோ... அதை வாங்க நான் முழு மனசோட தயாரா இருக்கிறன்..."
என்று தன் சம்மதத்தைப் பூடகமாகவும், கண்ணியமாகவும் தெரிவித்தார்.

தரிந்துவின் இதயம் நன்றியால் நிறைய, அடுத்த நொடி அரவிந்தனின் பாதம் தொட்டு வணங்கினான். அவனைத் தூக்கி நிறுத்திய அரவிந்தன், ஒரு மகனைப் போல அவனை இறுக அணைத்துக் கொண்டார்.

தன் வாழ்வின் இரு துருவங்களாக இருந்த தந்தையும் காதலனும் இணைந்த அந்த உன்னதக் காட்சியைக் கண்ட மேகலாவிற்கு, ஆனந்தக் கண்ணீர் கன்னங்களை நனைத்தது.

மேகலாவிடம் பேசிவிட்டு அரவிந்தனும் மகேஸ்வரியும் வெளியேற, அங்கே முரளி மட்டும் நின்றிருந்தான். இத்தனை காலம் தரிந்துவை ஒரு எதிரியாகப் பார்த்த அவனது பிடிவாதம் இன்று தளர்ந்திருந்தது. எனினும், ஒரு ஆண்மகனாக அவனது ஈகோவும், இத்தனை கால கசப்பும் ஒரு மெல்லிய தயக்கத்தை அவன் முகத்தில் தேக்கி வைத்திருந்தது.

தரிந்துவை நேருக்கு நேர் பார்த்த முரளி, எதையும் பேசவில்லை. ஆனால், அவனது இதழோரத்தில் ஒரு மிக மெல்லிய புன்னகை அரும்பியது. அது முழுமையான மன்னிப்பா அல்லது சமாதானமா என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு இணக்கத்திற்கான அறிகுறியாக இருந்தது.

இலேசாகத் தலையசைத்துத் தன் ஒப்புதலைத் தெரிவித்தவன், மேகலாவைப் பார்த்து,

"வாறன்..."
என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவனது அந்தத் தயக்கம் கலந்த நகர்வு, அவர்களின் உறவில் இன்னும் சில தூரங்களைக் கடக்க வேண்டியிருப்பதை உணர்த்தினாலும், கசப்புகள் மறையத் தொடங்கிவிட்டன என்பதையே பறைசாற்றியது.

வெளியே செல்லும் முரளியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்கா, அவன் மறைந்ததும் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.

"ஆள் வடிவா இருந்தாலும் ஈகோ மட்டும் ஈஸ்டர்ன் வரைக்கும் நீளமா இருக்கு... பரவாயில்ல நான் எட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுறன்..."
என்று ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி மேகலாவைப் பார்த்துச் சிரித்தாள்.

'என்ன...!'

என்று மேகலாவும் தரிந்துவும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டனர்.

"ஏன்... அப்படிப் பார்க்குறனீங்க...? நீங்க என்ர நேநா (அண்ணி) ஆகும் போது, நான் உங்கட அண்ணி ஆகக் கூடாதா...?"
என்று விகடமாகக் கேட்டு அவர்களை அதிர வைத்தாள்.

"ஆகலாம்... தாராளமா ஆகலாம்... ஆனா எப்பயிருந்து இது...? கொஞ்ச நேரத்துக்கு முன்னுக்கு அண்ணாவை அடிக்காத குறையா அந்தப் போடு போட்டனீங்க..."
என்று மேகலா சிரித்துக்கொண்டே அவளைச் சீண்டினாள்.

"அதெல்லாம் என்ர அய்யே மாதிரிதான்... லவ் எட் ஃபெஸ்ட் சைட்... அப்ப அவர் உங்கட அண்ணா எண்டே எனக்கு தெரியாது... பிறகு தெரியேக்க... அடியேய் அனு... நல்ல ஆளைப் பார்த்த நீ... ஒரு ட்ரான்ஸ்போமரில கையை வெச்சிருக்கிறியேடி எண்டு நினைச்சனான்... என்ன செய்யிறது... எனக்கு அந்த ஸ்பின்னர் முரளியைத் தானே பிடிக்குது..."
என்று தன் மனதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்தினாள் அனுஷ்கா.

"என்ர அண்ணா ஒண்டும் ட்ரான்ஸ்போமர் இல்ல..." என்று மேகலா குறும்புடன் முகத்தைச் சுருக்கினாள்.

"ஆஹ்... இப்ப எல்லாம் நல்லா கதைப்பீங்க... உங்களுக்குத்தான் கிரீன் சிக்னல் கிடைச்சிட்டுதே..."
என்று அனுஷ்கா பதிலுக்குக் கலாய்த்தாள்.

அவர்களின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்த தரிந்து,
"முரளியும் நல்லவர் தானம்மா..." என்று தன் வருங்கால மச்சானுக்கு மனதாரச் சான்றிதழ் கொடுத்தான்.

"நீங்க எல்லாம் சான்ஸ்சே இல்ல அய்யே... கிரீன் ஃபொரெஸ்ட் நீங்க..."
என்று தரிந்துவின் பரந்த மனதை பாராட்டினாள் அனுஷ்கா.

இப்படியாக உணர்ச்சிகளும் கேலிகளும் கலந்து அந்த நேரம் இனிமையாகக் கரைய, அன்றைய மாலைப் பொழுது மேகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள்.

அன்றிரவே தரிந்துவும் மேகலாவின் நினைவுகளையும், விரைவில் இணையப்போகும் கனவுகளையும் சுமந்துகொண்டு கண்டியை நோக்கிப் புறப்பட்டான்.

அடுத்த நாள், பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்வையிட அனுஷ்கா மட்டும் தனியாக மருத்துவமனைக்கு வந்தாள். அவளது கண்கள் முரளியையே சுற்றிச் சுழல, அவனோ அவளை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்துத் தன் பணிகளில் மும்முரமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டான்.

முன்னைய நாள் அவள் பேசிய வார்த்தைகளில் இருந்த நியாயம் அவனைச் சிந்திக்க வைத்திருந்தாலும், அவனது ஈகோ அவளிடம் இயல்பாகப் பேசத் தடையாக இருந்தது.

பகலுணவு இடைவேளையில், முரளி தனது அறையில் தீவிரமாக ஒரு மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்போது, கதவைத் தட்டாமலேயே ஒரு புயலென உள்ளே நுழைந்தாள் அனுஷ்கா. சீருடையின் மிடுக்கோடும், கண்களில் மின்னும் குறும்புடனும் நேராக அவனது மேசைக்கு முன் வந்து நின்றாள்.

அவன் 'என்ன?' என்பது போலப் புருவத்தை உயர்த்தி அவளை ஏறெடுக்க, ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

"டொக்டர்... ஒரு ஸ்பெஷலிஸ்ட் குடுத்த ரிப்போர்ட் இது... இதைப் படிச்சிப் பார்த்துட்டு அதுக்கு ஒரு சொல்யூஷன் மட்டும் நீங்க குடுத்தா காணும்..." என்றாள் அழுத்தமான குரலில்.

யோசனையுடன் அவளைப் பார்த்தபடி, அந்தக் காகிதத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினான் முரளி. அது ஒரு விசித்திரமான மருத்துவப் பரிந்துரை அறிக்கை.

நோயாளி பெயர்: அனுஷ்கா பல்லியகுரு (பிளைட் லெப்டினன்ட்)

பாதிக்கப்பட்ட உறுப்பு: இதயம்

காரணம்: ஒரு முரட்டுத்தனமான டொக்டர்

அறிகுறிகள்:
சம்பந்தப்பட்ட டொக்டர் முறைக்கும்போது நோயாளிக்குச் சிரிப்பு வருவது. அவரது தெற்றிப்பல் அழகில் மயங்குவது. அவரைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பு தாளம் தப்புவது.

சிகிச்சை முறை:
சம்பந்தப்பட்ட டொக்டர், தனது ஈகோவைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, நோயாளிக்குத் தினசரி மூன்று வேளை தன் புன்னகையை மருந்தாக, வாழ்நாள் முழுதும் வழங்க வேண்டும். இல்லையெனில், நோயாளிக்குக் காதல் முற்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

அறுவை சிகிச்சை பரிந்துரை:
டொக்டர் முரளி அவர்களே, நோயாளியின் இதயம் ஏற்கனவே உங்களால் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே திருடப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து உங்கள் பிடிவாதம் எனும் அறுவைச் சிகிச்சைக் கத்தியைக் கொண்டு அவளது உணர்வுகளைக் கூறுபோடாமல், அன்பெனும் மருந்தால் தையல் போடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

விசேட எச்சரிக்கை:

இந்த நோயாளி ஒரு 'எயார் டிபென்ஸ் ஒபிஸர்' என்பதால், நீங்கள் சம்மதக் கடிதத்தில் கையெழுத்துப் போடாவிட்டாலும், உங்களைக் கைது செய்தாவது சிகிச்சைக்கு உட்படுத்தும் வல்லமை பெற்றவர்.

முரளி வாசித்து முடிக்கும்போது அவனது முகம் தர்மசங்கடத்தில் சிவந்திருந்தது. கோபப்படுவதா சிரிப்பதா என்று புரியாமல் அவளைக் கூர்ந்து பார்த்தான்.

அனு சிரித்துக்கொண்டே, தன் தொப்பியைச் சரிசெய்தபடி,

"அவசரப்பட்டு அந்தப் பிரிஸ்கிரிப்ஷனை கிழிச்சுப் போட்டுடாதீங்கோ டொக்டர்... அதில இருக்கிற மருந்து உங்கட்ட மட்டும்தான் இருக்கு. நேரமெடுத்து நல்லா யோசிச்சுப் பாருங்கோ..."
என்று சொல்லி, ஒரு ஸ்டைலான சல்யூட் அடித்துவிட்டு வெளியேறப் போனவள், திடீரென நின்றாள்.

"அப்படியே பீபியையும் ஒருக்கா கொஞ்சம் செக் பண்ணிக்கொள்ளுங்கோ டொக்டர்... தாறுமாறா ஏறி இருக்கும்..."

"ஏய்..."
என்று அவன் கடுப்பாக,

"எனக்குப் பண்ணச் சொன்னனான் டொக்டர்..." என்றாள் குறும்பு புன்னகையுடன்.

"அதை நேர்ஸ்மார் பார்ப்பினம்... நான் சேர்ஜன்..." என்றான் பல்லைக் கடித்துக்கொண்டே.

அவளோ விடாமல், "எமெர்ஜென்சி நேரத்தில எல்லாரும் பார்க்கலாம்... பீபி செக் பண்ணத் தெரியாம எப்படி சேர்ஜன் ஆனனீங்க..? தொழில் தர்மம் தெரியும் தானே... எதிரியா இருந்தாலும் ட்ரீட்மெண்ட் குடுக்கோணும்..." என்று பிடிவாதமாக கை நீட்டினாள்.

முரளி எரிச்சலுடன் அவளது மணிக்கட்டைப் பற்றி இரத்த அழுத்தத்தைச் சரிபார்த்து, நாடித்துடிப்பையும் கவனித்தான்.

"பல்ஸ் கூடத்தானே?" என்றாள் கிசுகிசுப்பாக.

"ஓம்..." என்றான் சற்று யோசனையுடன் அவளைப் பார்த்தவாறே.

"நீங்க சிரிக்கும்போது உங்கட பல்லைப் பார்த்தாலே என்ர பல்ஸ் தானா கூடுது.." என்று அவள் கண் அடிக்க, முரளி காண்டாகி கையை உதறினான்.

இன்னும் இருந்தால் அடித்தே விடுவான் என்று பயந்து, ஒரு கண்ணசைவில் குறும்புடன் அறையை விட்டு குடுகுடுவென ஓடி மறைந்தாள் அனு. அழையாமலே வந்து தன்னை சுழற்றியடிக்கும் இந்த சூறாவளியை அடக்கும் வழியறியாமல் விழி பிதுங்கி நின்றான் முரளி.

அவள் வெளியேறிய பின் அந்த அறையில் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. அவளது வருகை ஏற்படுத்திய அந்தத் திகைப்பிலிருந்து மீளாத முரளி, கையில் இருந்த காகிதத்தை எரிச்சலுடன் பார்த்தான்.

"விசரி..."

என்று கடுகடுப்புடன் முணுமுணுத்தபடி, அதைச் சுருட்டித் தூக்கி எறியக் கையை உயர்த்தியவன், ஏனோ அடுத்த நொடியே அப்படியே சிலையென நின்றான். அவனது கை காகிதத்தை எறிய மறுத்தது. மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தவன், அந்தக் காகிதத்தைத் தன் கைகளில் ஏந்தியபடி நீண்ட நேரம் மௌனமாக இருந்தான்.

அவனது மருத்துவப் பயணத்தில், எத்தனையோ சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான பரிந்துரை கடிதங்களை அவன் கையாண்டிருக்கிறான். ஆனால், ஒரு பெண்ணின் காதலையும், குறும்புத்தனத்தையும் சரிபாதியாக சுமந்து வந்த இந்த விசித்திரமான மருத்துவ அறிக்கை, இன்று அவனது இதயத்தின் இரும்புச் சுவர்களை மெல்லத் தட்டித் திறந்தது.

மெல்ல எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். அங்கே அனுஷ்கா தனது ஜீப்பை நோக்கித் துள்ளலாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளது நடையில் தெரிந்த அந்தத் தன்னம்பிக்கையும், சற்று முன் அவன் முன் நின்ற அந்தத் துணிச்சலும் முரளியின் இதழோரம் ஒரு மிக மெல்லிய புன்னகையை வரவழைத்தது.

அவனுக்கே தெரியாமல் அரும்பிய அந்தப் புன்னகையால், அவனது ஈகோ எனும் பனிப்பாறை மெல்ல உருகத் தொடங்கியது.

"நான் முரட்டு டொக்டரா...? சேர்ஜனுக்கே சேர்ஜெரி பண்ணப் பார்க்கிறனீயா... ? உனக்குத் தைரியம் அதிகம்தான்..."
என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து, அந்த அறிக்கையை நிதானமாக வாசித்தான். ஒரு அறுவை சிகிச்சை நிபுணரான தனக்கு, தனது தொழில்முறை வார்த்தைகளைக் கொண்டே அவள் வைத்த குறி சரியாகத் தைத்திருந்தது.

மெல்லப் சிரித்தபடி, அந்த காகிதத்தை மடித்துத் தனது மேசை இழுப்பறைக்குள் வைத்துப் பூட்டினான்.

அடுத்த நோயாளிக்கான அழைப்பு மணியை அழுத்தும்போது அவனது முகம் வழக்கத்திற்குத் திரும்பியிருந்தது. ஆனால், அவனது கண்களில் ஒரு புதிய மென்மை குடிகொண்டிருந்தது. சத்திரசிகிச்சை நிபுணனுக்கே தெரியாமல், அவனது இதயத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தது.

இப்படியே ஒரு வாரம் உருண்டோடியது. மேகலாவின் உடல்நிலை மற்றும் காதல் விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன், சிவாவும் சுபாவும் தங்கள் குடும்பத்தினருடன் அடுத்த கணமே அங்கே வந்து சேர்ந்தனர்.

சோகத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டைத் தங்கள் வம்பிழுப்புகளாலும், கலாட்டாக்களாலும் மீண்டும் கலகலப்பாக்கினர். மேகலாவைச் சுற்றிச் சுற்றி வந்து அவர்கள் செய்த கேலிகளில், அந்த வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டிருந்தது.

அந்த வார இறுதியில், இத்தனை காலக் காத்திருப்புக்கும் கண்ணீருக்கும் ஒரு அழகான முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சம்மந்தம் பேசிக் கலக்க, தரிந்துவும் அவனது பெற்றோரும் வந்திறங்கினர். தரிந்துவின் பெற்றோர் முகத்தில் ஒருவித நிம்மதியும் புன்னகையும் குடி கொண்டிருந்தன. மங்கலமான ஆரம்பம் என்பதைப் பறைசாற்றுவது போல, பூக்கள், கனிகள் மற்றும் இனிப்புகள் நிறைந்த தட்டுகளை அவர்கள் சுமந்து வந்தனர்.

தரிந்துவோ, தன் வாழ்வின் வசந்தம் மீண்டும் திரும்பப் போகும் பரவசத்தில், அடக்கமான அதேசமயம் பொலிவான முகத்துடன் அவர்கள் பின்னே வந்தான். ஆனால், இவர்கள் அனைவரையும் விட ஒருபடி மேலே போய், ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் துள்ளிக்குதித்து வந்திறங்கினாள் அனுஷ்கா. அவளது உற்சாகம், அங்கிருந்த இறுக்கத்தை மொத்தமாகத் துடைத்தெறிந்தது. அவள் வந்த வேகத்திலேயே ஓடிச் சென்று,

"அண்ணி..."
என்று மேகலாவை இறுக அணைத்துக் கொண்டாள்.

அரவிந்தனின் இல்லம் ஒரு புதிய பொலிவுடன் காட்சியளித்தது. வாசலில் வந்து நின்றவர்களை இன்முகத்துடன் வரவேற்று, அன்புடன் உபசரித்தனர் அரவிந்தன் குடும்பத்தினர்.

வரவேற்பறையில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமுமாக அமர்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க, அந்த வீடே மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது.

அனைவரது கண்களும் மேகலாவின் மீதுதான் நிலைத்திருந்தன. அத்தனை சோகங்களையும் கடந்து, இன்று ஒரு தேவதையாய் ஜொலித்த மேகலாவின் பேரெழில் தரிந்துவின் கண்களைப் பறித்தது. வார்த்தைகள் மௌனமாகிப் போன அந்த இடத்தில், இருவரின் கண்களும் ஒன்றையொன்று தழுவித் தீராத காதல் பேசிக்கொண்டன.

இங்கு முரளியின் நிலையோ, அத்தனை மோசமாயிருந்தது. இதுநாள் வரை நீலநிற விமானப்படைச் சீருடையில், உயர்த்தி முடிக்கப்பட்ட கொண்டையுடன் மட்டுமே முரளி அனுஷ்காவைப் பார்த்திருக்கிறான்.

ஆனால் இன்று, சிவப்பு நிற அனார்கலி சல்வாரில், முதுகு வரை சீராக வெட்டி விடப்பட்ட கூந்தல் காற்றில் அலைபாய, ஒரு தங்கச் சிலையாகவே அவள் அவன் முன் வந்து நின்றாள். சீருடைக்குள் ஒளிந்திருந்த அந்தப் பெண்மை, இன்று மொத்த அழகையும் திரட்டி அவனது இதயக் கதவை பலமாகத் தட்டியது.

எந்தவொரு சவாலான அறுவை சிகிச்சையின் போதும் பதறாத முரளியின் இதயத் துடிப்பு, இன்று அவளைப் பார்த்த அந்த நொடியில் ஒரு கணம் அவனை நிலைகுலைய வைத்தது. தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் முரளியைக் கண்டதும், அனுஷ்கா சற்றும் தயங்காமல் பட்டென கண்ணடித்தாள்.

அவளது அந்தத் துடுக்குத்தனத்தை அருகிலிருந்து கவனித்துவிட்ட சுபா, சட்டென மேகலாவின் காதருகே குனிந்து,

"அடியேய் மேகி... இஞ்ச இன்னொரு லவ் ட்ரெக் தனியா ஓடுதடி..."
என்று கிசுகிசுக்க, மேகலாவிடமிருந்து ஒரு மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது.

"அவா எனக்கு அண்ணியாகோணுமாம்... ஆக்கிடலாம்..."
என்று மேகலா சிரித்துக்கொண்டே சொல்ல, சுபா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

"இந்தப் பெட்டைக்கு என்ன விசரா...? தெரிஞ்சே ஆராவது தீக்குள்ள தலைய விடுவினமா...? ஹிட்லர் ஓகே பண்ணிட்டாலும்..."
என்று சுபா வாய்க்குள் பொறுபொறுத்தாள்.

மேகலா ரகசியமாகச் சிரித்தபடி,

"அவா அண்ணாவுக்கு ப்ரொபோஸ்சே பண்ணிட்டா டி.. அதுவும் யாருமே நினைக்காத யூனிக் மெத்தட்டில..." என்று அனுஷ்காவின் 'மெடிக்கல் ரிப்போர்ட்' சாகசங்களை விவரித்தாள்.

"என்னடி சொல்லுறாய்... எவ்வளவு தைரியமா அவாக்கு... சும்மாவா விட்டவர் ஹிட்லர்..??"
என்று சுபா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.

இதற்கிடையே அவர்கள் அருகில் நளினமாக வந்தமர்ந்த அனுஷ்கா,
"என்ன... என்ர அண்ணியை வச்சு எல்லாரும் பயங்கரமா ஓட்டுறீங்க போல...?" என்று சுபாவை வம்புக்கிழுத்தாள்.

அவளது கலகலப்பான பேச்சும், முகத்தில் இருந்த மென்னகையும் சுபாவை சட்டெனக் கவர்ந்துவிட்டது.

"நீங்க ஓட்டுற ரீலை விட குறைவா தான் நாங்க ஓட்டுறம் அண்ணி..."
என்று அந்த அண்ணியை சுபா அழுத்திச் சொல்ல, அனுஷ்காவின் கன்னங்கள் வெட்கத்தில் மேலும் சிவந்தன.

இதனிடையே, சுபா மூலம் இந்த காதல் கலாட்டா சரவணனுக்கும் சிவாவிற்கும் கடத்தப்பட்டது. கிடைத்த கேப்பில் கிடா வெட்டுவது போல, இருவரும் முரளியைச் சூழ்ந்து கொண்டு சீண்டத் தொடங்கினர்.

"என்னடா மச்சான்... தங்கச்சின்ர மனுசன் தான் சிங்களம் எண்டு பார்த்தால், இப்ப உன்ர மனுசியும் சிங்களம் தான் போல..."
என்று சரவணன் கொளுத்திப் போட, முரளி அதிர்ந்து போனான்.

"ஆரடா உன்னட்ட இப்படிச் சொன்னது...?"
என்று முரளி பற்களைக் கடிக்க, சரவணன் அநாயாசமாக சுபா சொன்னதை வழிமொழிந்தான்.

'இவள... ஊருக்கே தண்டோரா போட்டு வெச்சிருக்கிறா...'
என்று மனதுக்குள் அனுஷ்காவைத் திட்டித் தீர்த்தான் முரளி.

ஆனால், அவனது ஆழ்மனதில் அந்தத் திட்டலையும் தாண்டி ஒரு மெல்லிய ரசனை அரும்பியிருந்தது அவனுக்கே வெளிச்சம்.
 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Hmm இவர் மட்டும் மெல்லிய சாரலை ரசிப்பார்....ஆன இவன் தங்கை செய்தா மட்டும்😏😏😏😏.....
அனு super da
 
  • Haha
Reactions: Sathya Karunya

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
Hmm இவர் மட்டும் மெல்லிய சாரலை ரசிப்பார்....ஆன இவன் தங்கை செய்தா மட்டும்😏😏😏😏.....
அனு super da
அவனுக்கே இப்ப தான் காதல் பல்ப் எரிஞ்சிருக்கு