• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 27

STN-116

Member
MTN 27

சம்மந்தக் கலப்பு இனிதே முடிய, இரு வீட்டாரும் பேசி அன்றே நிச்சயதார்த்தத்தையும் உறுதி செய்தனர். நல்ல நேரம் பார்த்து, மேகலா மற்றும் தரிந்துவின் திருமணத்திற்கான சுப முகூர்த்த நாளையும் அன்றே குறித்துக் கொண்டனர்.

நிச்சயத்தின் அடையாளமாக, தரிந்துவின் தாய் வத்சலா, மேகலாவுக்கு ஒரு அழகான தங்க மாலையை அணிவித்தார். அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்ட வத்சலா, வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார்.

பின்பு மேகலாவின் நாடியைத் தொட்டுத் தூக்கியவர்,
"ஏன் துவ (மகள்) அப்படி செஞ்சீங்க...? புதா (மகன்) சொன்னபோது எனக்கே அதிர்ச்சியா இருந்தது... மனசுக்கு கஷ்டமா போச்சு..."
என்று தழுதழுத்த குரலில் கூறியபோது, அவரது கண்கள் லேசாகக் கலங்கின.

மேகலா மீதான வத்சலாவின் அந்தத் தாய்மை கலந்த பாசத்தைக் கண்டு, அவளது குடும்பத்தினர் அப்படியே நெக்குருகிப் போயினர். வத்சலாவின் கனிவான பாந்தமும், ஜகத்தின் அலட்டலில்லாத நிதானமான பேச்சும் அரவிந்தன் - மகேஸ்வரி தம்பதியினருக்குப் பெரும் நிம்மதியை அளித்தன.

திருமணத்திற்குச் சம்மதித்திருந்தாலும், தரிந்துவின் குடும்பம் எப்படி இருக்குமோ என்ற ஒரு மெல்லிய அச்சம் அவர்களுக்குள் இத்தனை காலமும் இருந்தது. ஆனால், இன்று அவர்களை நேரில் பார்த்த மாத்திரத்தில் அந்தப் பயம் இருந்த தடம் தெரியாமல் மறைந்து போனது.

அந்த நெகிழ்வான தருணத்தின் பாரத்தைக் குறைத்துக் கலகலப்பாக்கும் விதமாக சிவா களத்தில் இறங்கினான்.

"அந்தக் காலத்தில மன்னர்கள் அடுத்த தேசத்தைக் கைப்பத்தப் படையெடுப்பு நடத்தினாங்க... இல்லையெண்டால் அந்தத் தேசத்து இளவரசியைக் கல்யாணம் கட்டினாங்க... இப்ப, முப்பது வருச யுத்தம் முடிஞ்சு, எங்கட தேசத்து இளவரசிய தட்டித் தூக்க வந்திருக்கிறீங்க... சும்மா விடமாட்டோம்... மாசம் மாசம் எங்களுக்குக் கப்பம் கட்டிப்போடோணும்... சொல்லிட்டோம்..."
என்று சிவா தரிந்துவைச் சீண்டினான்.

தரிந்துவோ, மெலிதான புன்னகையைச் சிந்தியபடி எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தான். அவனது கண்கள் மட்டும், தனது வெண்மேகத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மறுத்தன.

சிவாவின் சீண்டலுக்குப் பதிலளிக்கும் விதமாக இடையில் புகுந்த அனுஷ்கா,

"அப்படியே உங்கட ஸ்பின் பவுலரை என்னட்ட தந்தீங்க எண்டால் நல்லா வெச்சு... கொல்லுவன்..."
என்று அந்த கொல்லுவனை அழுத்தி, ஓங்கிச் சொல்ல, அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

அதிர்ந்து போய் ஒட்டுமொத்தச் சபையையும் ஒருமுறை பார்த்த முரளி, பின் தீயாக அனுவை முறைத்தான்.

தன் வாய்த்துடுக்கை உணர்ந்த அனுஷ்கா,
"ஹி.. ஹி.. நல்லா வெச்சுப் பார்த்துக்கொள்ளுவன்... எண்டு சொல்ல வந்தனான்..."
என்று அசடு வழிந்து மழுப்பினாள்.

இடையில் புகுந்த சுபா, விடயத்தை இன்னும் சூடாக்கும் விதமாகத் தனது கலகலப்பான கிண்டலைத் தொடர்ந்தாள்.

"ஓஹோ... இது 'பை வன் கெட் வன்' ஒஃபர் மாதிரி இருக்கே... அப்ப இது பண்டமாற்றா..? அந்த தேசத்து இளவரசியை இஞ்ச ராணியா கோலோச்ச வைக்கலாம் எண்டு சொல்லுறீங்க..."
என்று முரளியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கூற, அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

சுபாவின் இந்த அதிரடி பேச்சால் முரளி தடுமாற, அனுஷ்காவோ தனது வெட்கத்தை மறைக்கப் போராடிக்கொண்டிருந்தாள்.

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற முடிவோடு, அனைத்துச் சம்பிரதாயங்களையும் இனிதே நிறைவு செய்துவிட்டு, மிகுந்த மனநிறைவுடன் தரிந்துவின் குடும்பத்தினர் விடைபெற்றுச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மறுநாள் சிவாவினதும் சரவணனினதும் குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றனர். ஆரவாரங்கள் அடங்கி அந்த வீடு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது.

அன்று இரவு உணவின் போது, அந்த அமைதியைக் கலைத்து அரவிந்தன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

"அந்தப் பெட்டைய உங்களுக்கு பிடிச்சு இருக்குதா தம்பி..? அவாக்கு உங்கள பிடிச்சிருக்குதாம் எண்டு மகள் சொன்னவா... நீங்க என்ன நினைக்கிறீங்க...?
என்று முரளியின் முகம் பார்த்து நிதானமாகக் கேட்டார்.

அவரைத் தொடர்ந்து மகேஸ்வரியும் தன் பங்கிற்கு,

"ஓம் தம்பி... அவா பார்க்க நல்லமாதிரி தான் இருக்கிறா... அண்ணி அண்ணி எண்டு மேகலா மேல அத்தனை பாசம்... அண்டைக்கு நல்லா துருதுரு எண்டு ஓடியாடி திரிஞ்சவா... எனக்கும் அவாவை பிடிச்சிருக்கு..."
என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இடைபுகுந்த மேகலா,
"அவா நல்ல பிள்ளை அண்ணா... அவான்ர அப்பா அம்மாவும் நல்ல மாதிரி தான்... அவேயளோட நான் கதைச்சிருக்கிறன்... உங்கள வற்புறுத்தேல்ல... ஆனால், அவா எனக்கு அண்ணியா வந்தா நான் மிச்சம் சந்தோசப்படுவன்..."
என்று கெஞ்சலாகக் கூறினாள்.

அனைவரது எதிர்பார்ப்பையும் தன் மௌனத்தால் எதிர்கொண்டான் முரளி. யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல், அங்கிருந்த அனைவரையும் ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, அமைதியாகச் சாப்பிடத் தொடங்கினான்.

அவனது எண்ணவோட்டம் அவனுக்கே பிடிபடவில்லை. அன்று அவளை சல்வாரில் கண்ட நொடியிலிருந்து, அவன் அவனாகவே இல்லை.

காலம் காலமாகக் கட்டிக்காத்த அவனது அந்த இறுக்கமான பிம்பம், மெல்ல மெல்லச் சரிவதை அவனால் உணர முடிந்தது. அது ஆழமான காதலா அல்லது அவளது அந்தப் புதிய தோற்றம் தந்த ஒருவித ஈர்ப்பா என்று தெரியாமல், அவனது மனது அலைபாயும் தராசாக ஊசலாடிக்கொண்டிருந்தது.

தன்னால் எளிதில் கடந்து செல்ல முடியாத ஏதோ ஒன்று, அவளது அந்த ஒற்றைக் கண்ணசைவில் ஒளிந்திருப்பதையும், தன் இதயத்தின் தாளம் தடம் மாறுவதையும் கண்டு ஒருவித இனம் புரியாத குழப்பம் நீடித்தது.

அன்றைய மௌனத்திற்குப் பிறகு, யாருமே அவனிடம் அனுஷ்காவைப் பற்றிப் பேச முற்படவில்லை.

அனைவரும் ஆவலுடனும் ஆரவாரத்துடனும் எதிர்பார்த்த அந்தப் பொன்னாளும் விடிந்தது.

சுபயோக சுபமுகூர்த்தத்தில், வேத மந்திரங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்கத் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. அக்னி சாட்சியாக மேகலாவின் சங்குக் கழுத்தில் பொன்தாலியைச் சூட்டி, அவளைத் தனது சரிபாதியாக்கினான் தரிந்து.

மேடு பள்ளங்கள் நிறைந்த கரடுமுரடான பாதைகளைக் கடந்து வந்த தங்களது காதல், இன்று கைகூடிய நிம்மதியும் பரவசமும் இருவரின் முகத்திலும் பேரொளியாய்ப் படர்ந்திருந்தது.

செந்நிறப் பட்டுப்புடவையில் மேகலா ஒரு தேவலோகத் தேவதையாய் ஜொலிக்க, முதன்முறையாகப் பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்த தரிந்துவோ ஒரு தமிழ் ஆணழகனாய் மிளிர்ந்தான். ஒவ்வொரு சம்பிரதாயத்தையும் அந்த மண்ணின் மணம் மாறாமல், மிகுந்த ஈடுபாட்டோடு அவன் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

செம்மஞ்சள் வண்ணப் பட்டுச் சேலையில், ஒரு புள்ளிமானாய் மண்டபம் முழுவதும் துள்ளித் திரிந்தாள் அனுஷ்கா. பட்டு வேட்டியில் கம்பீரத்தின் மறுவுருவமாய் நின்றிருந்த முரளியைச் சைட் அடிப்பதிலேயே அவள் மும்முரமாக இருந்தாள்.

அவன் தனது சக பெண் மருத்துவர்களுடன் சகஜமாகச் சிரித்துப் பேசும் கணங்களில், ஒருபுறம் அவனது அந்தப் புன்னகையில் அவள் மனம் மயங்கினாலும், மறுபுறம் அவன் தன்னைச் சற்றும் கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கமும் பொறாமையும் அவள் நெஞ்சைக் காந்தியது.

ஆனால், அந்தக் கள்வன் அவள் மண்டபத்திற்குள் நுழைந்த நொடியிலிருந்தே, தனது லேசர் விழிகளால் அவளை அணு அணுவாக ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்பது அந்தப் பேதைக்குத் தெரிய வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவளைக் கண்டுகொள்ளாதது போல நடித்து, அவளது உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருந்தான் முரளி.

அவனது பிடிவாதமான மனம் எப்பொழுதோ அவள் பக்கம் சாய்ந்துவிட்டது. ஆனாலும், அவளது அந்தத் தவிப்பையும் துறுதுறுப்பையும் இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்க விரும்பி, அவளுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தான் அவன்.

*******************************

கண்டியின் அந்த அமைதியான இரவு, மின்விளக்குகளின் ஒளியில் ஒரு நட்சத்திரக் காடு போல மின்னிக்கொண்டிருந்தது. மொட்டை மாடியில் நின்றிருந்த மேகலாவுக்கு, அந்த இதமான குளிரும், மெல்லிய நிலவொளியும் ஒரு இனிய ராகத்தைப் போலத் தோன்றியது. தனது இரவாடைக்கு மேல் ஒரு சால்வையைத் தளர்வாகப் போர்த்திக்கொண்டு, அந்தப் பேரழகில் தன்னைத் தொலைத்திருந்தாள் அவள்.

அப்போது, இரு வலிய கரங்கள் பின்னாலிருந்து அவளை வளைத்து, ஒரு இதமான சிறைக்குள் அவளைப் பூட்டிக்கொண்டன. அந்த வாசம், அந்தத் தீண்டல்... அது அவளது சரிபாதிதான் என உணர்ந்த மேகலா, மென்சிரிப்புடன் திரும்பாமலே தரிந்துவின் அகன்ற தோள்களில் தனது தலையைச் சாய்த்து, இன்னும் அவனோடு நெருங்கிக் கொண்டாள்.

அவளது கழுத்தின் வளைவில் முகம் புதைத்த தரிந்து, தனது அனல் மூச்சுக் காற்றை அவள் மேனியில் படரவிட்டான். அவனது இதழ்கள் அவள் கழுத்தில் மென்மையாக அழுத்தி முத்தம் பதிக்க, அந்தச் சிலிர்ப்பில் மேகலாவின் உடல் ஒரு கணம் விதிர்த்தது.

"தரிந்து..."

என்று அவள் மெல்லிய குரலில் முணுமுணுக்க, அவளை அப்படியே தன் புறம் திருப்பிக் கொண்டான் அவன்.

"ஏழு வருசத்துக்குப் பிறகு... அதே இடத்தில, அதே நிலா வெளிச்சத்தில நிக்கிறனாங்க... இந்த நிமிசத்துக்காக என்ர உயிர் எவ்வளவு தவிச்சது எண்டு உனக்குத் தெரியுமா...? உன்ன இப்படி என்ர கைகளுக்குள்ளயே பொத்தி வச்சுக்கொள்ளோணும் எண்டு தவமிருந்தவனடி நான்..."

தரிந்துவின் குரலில் அந்த ஐந்தாண்டு கால ஏக்கமும், இப்போது கிட்டிய காதலின் நிம்மதியும் இழையோடியது.

அவன் அவளது விழிகளைத் தன் விழிகளால் ஊடுருவியபடி, மெதுவாக அவளது கரங்களைப் பற்றினான். அன்று இதே இடத்தில் வைத்து அவன் அணிவித்து, பின் பிரிவின் வலியால் கழற்றப்பட்ட அந்த மோதிரத்தை மீண்டும் எடுத்தான். அவளது விழிகளை நேருக்கு நேர் சந்தித்தபடி, ஒரு புனிதமான வாக்குறுதியைப் போல மீண்டும் அவளது விரலில் அந்த மோதிரத்தை மென்மையாக அணிவித்தான்.

மேகலா கண்களில் கசிந்த நீருடன், அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

"இப்பத்தான் உண்மையாவே எனக்கு நிம்மதியாயிருக்கு தரிந்து.... நாங்க ஒண்டா சேருவமா எண்டிருந்த பயமெல்லாம் போய், இப்ப உங்கட மார்புல இருக்கிற இந்தத் துடிப்பு எனக்குப் புது தைரியத்தைத் தருது..."
என்று அவள் தழுதழுத்தாள்.

தரிந்து அவளது தாடையை மெல்லத் தூக்கி, அவளது கலங்கிய கண்களைத் துடைத்தான்.

"இனி உனக்குப் என்ன பயம்...? உன்ர ஒவ்வொரு மூச்சுக்காத்திலயும் நான் இருப்பன்... இனி ஒரு கணமும் உன்னை விட்டு விலக மாட்டன்..."

என்று உறுதியளித்தவன், மெல்லக் குனிந்து அவளது அதரத்தில் தனது ஆழமான காதலின் முத்திரையைப் பதித்தான்.

குளிர் காற்று அவர்களைத் தழுவிச் செல்ல, மேகலாவின் கண்கள் வெட்கத்தில் மூடிக்கொண்டன. அவளை அப்படியே ஒரு மலரைப் போலத் தனது கைகளில் ஏந்திக்கொண்ட தரிந்து, மெல்லத் தனது அறைக்குள் அவளைக் கொண்டு சென்றான்.

அவர்கள் இருவரின் புதிய வாழ்வின் மௌனமான சாட்சியாக அந்த அறைக்கதவு மென்மையாக மூடிக்கொண்டது.

தரிந்துவும் மேகலாவும் கண்டிக்கு வந்து மூன்று நாட்களாகியிருந்தது. யாழில் தமிழ்முறைப்படி திருமணம் முடிந்த மறுநாள், கண்டியில் 'போருவா' எனப்படும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சிங்கள முறைப்படி சடங்குகள் நடந்தன.

மேகலா ஏழு அடுக்கு தங்க மாலைகளுடன் 'ஒஸரிய' என்ற சிங்கள பாரம்பரிய வெள்ளை சாரியிலும், தரிந்து கம்பீரமான 'நிலமே' உடையிலும் தோன்றி, ஒருவருக்கொருவர் பாற்சோறு ஊட்டித் தங்கள் பிணைப்பை உறுதிப்படுத்தினர்.

மூன்றாம் நாள் தரிந்துவின் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேகலா சிங்கள வழக்கப்படி, சிவப்பு நிறச் சேலையில் பேரழகாய் ஜொலிக்க, இரு வீட்டாரும் மனநிறைவோடு இந்த இணைப்பைக் கொண்டாடினர்.

மூன்று நாட்கள் நீடித்த திருமணச் சடங்குகள், உறவினர்களின் வருகை எனத் தொடர் அலைச்சல்களால், அவர்களுக்குச் சரியாக உறங்கக் கூட நேரம் கிடைக்கவில்லை. இன்றுதான் அந்தப் பரபரப்புகள் அனைத்தும் அடங்கி, தங்களுக்குரிய தனிமையில் முதன்முதலாக ஆசுவாசமாக உணர்ந்தனர்.

வெளியே நிலவும் குளிரைத் தடுத்து, அறையின் குளிரூட்டி இதமான வெப்பநிலையைத் தந்து கொண்டிருந்தது. அந்த நிசப்தமான சூழலில், மேகலாவைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் தரிந்து. ஐந்து வருடப் போராட்டங்கள், பிரிவுகள், கண்ணீர் என அனைத்தும் அந்த ஒரு கணத்தில் அர்த்தமுள்ளதாக மாறின.

"இனி எங்களுக்கு நடுவில எந்தத் தடையும் இல்ல சுது வலாகுழு... நீயும் நானும் மட்டும் தான்..."
என்று அவன் மெல்லிய குரலில் அவளது காதோரம் கிசுகிசுக்க, அந்த அனல் மூச்சில் மேகலா நாணத்தில் சிலிர்த்துப் போனாள்.

அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தவன், மெதுவாக அவளது விழிகளிலும் கன்னங்களிலும் இதழிலும் தன் காதலைச் சொரிந்தான். மேகலா அவனது மார்பில் தஞ்சம் புகுந்து, தன் கரங்களால் அவனை இன்னும் நெருக்கமாகக் கோர்த்துக் கொண்டாள்.

காலங்கள் கடந்து, கனவுகள் கைகூடி, தடைகளைத் தகர்த்து இரு ஆன்மாக்களும் ஒருவரையொருவர் முழுமையாக ஆட்கொண்ட அந்த இரவு, அவர்களின் புதிய வாழ்க்கையின் மௌனமான கவிதையாக மலர்ந்தது. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து லயிக்க, அந்த அறையின் விளக்கொளி மெல்ல மங்கி அவர்களின் இனிய சங்கமத்தை ஆசிர்வதித்தது.




 
Top Bottom