• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 8

STN-116

Member
MTN 8

பரபரப்புக்கு பஞ்சமேயில்லாத கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தின் அந்த ஈரப்பதமான காற்றும், வாகனங்களின் இரைச்சலும், பலவிதமான மனிதர்களும் அவர்கள் பேசும் பன்னாட்டு மொழிகளும் யாழ்ப்பாணத்தின் அமைதிக்கு முற்றிலும் மாறாக இருந்தன. அமைதியான சூழலில் வளர்ந்த அந்த இரு பெண்களுக்கும், அந்தப் பிரம்மாண்டம் மிரட்சியைத் தந்தது. உயரமான கண்ணாடிக் கட்டடங்கள், சீருடை அணிந்த அதிகாரிகள், வரிசையாக நிற்கும் சொகுசுப் பேருந்துகள் என அந்த இடமே ஒரு புதிய உலகமாகத் தெரிந்தது.

'ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏவியேஷன் ட்ரெய்னிங் கொலேஜ்' (Sri Lankan Airlines Aviation Training College) என்ற பெயரை பொன்னெழுத்துக்களால் தாங்கியபடி, விமான நிலையத்திற்கும் இலங்கை வான்படை தளத்திற்கும் அருகிலேயே அமைந்திருந்தது இலங்கை விமான சேவையின் விமானக் கல்லூரி பயிற்சி மையம்.

அதன் வாயிலில் வந்து நின்றபோது, இருவருக்கும் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

நீல நிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான கட்டடம், வானத்தைத் தொடுவது போல நின்றிருந்தது. வரவேற்பறையில் 'SriLankan Airlines' என்ற அந்த நீல நிற மயில் இலச்சினை கம்பீரமாக வரவேற்றது.

கண்களில் சற்று நிம்மதி கலந்த நன்றிப் பெருக்குடன் உடன் நின்ற சரவணனைப் பார்த்தாள் மேகலா.

"நன்றி அண்ணா... நீங்க கூட வரேல்ல எண்டால் உண்மையிலேயே எங்களுக்கு அவதியா போய் இருக்கும்... தனியா போகேலும் என்ற ஒரு அசட்டு தைரியத்துல வந்தனாங்க... ஆனால் இஞ்ச வந்து பார்த்ததும் ஒரு மாதிரி பதட்டம் வந்திட்டுது..."

"தெரிஞ்சதால தான் நான் வந்தன்... அதுமட்டுமில்லாம நேத்து போகேய்க்க முரளியும் சொன்னவன்... ஏலுமெண்டா போ மச்சான் எண்டு..." என்று ஆறுதல் படுத்தினான்.

அதிகாலை எழுந்து, காலைக் கடன்களை முடித்து, உணவும் உண்டு இருவரும் வெளியே வந்தபோது, சரவணனும் ஏற்கனவே ஆயத்தமாகி நின்றிருந்தான். அவனைப் பார்த்து இருவரும் கேள்வியாக நோக்கினர்.

“நான் கொண்டுபோய் விடுறன்...” என்று இயல்பாகச் சொன்னான் அவன்.

“இருக்கட்டும் அண்ணா... நாங்க பிக் மீ ல போறம்... உங்களுக்கு எதுக்கு அலைச்சல்…” என்று தயக்கத்துடன் கூறினாள் மேகலா.

“ஒரு அலைச்சலும் இல்ல... தெரியாத இடத்துக்கு முதல்தடவையா போறீங்க… எனக்கும் இண்டைக்கு ஓப் தான்…” என்று மறுக்க இடமில்லாதபடி சொன்னான் சரவணன்.

“ஓம் பிள்ளை… தனியா போக வேணாம்...” என்று உதயமலரும் ஆதரவாகக் கூறினார்.

மேலும் எதுவும் சொல்ல முடியாமல், அவனுடன் சேர்ந்து கிளம்பினர்.

இருவரையும் வாழ்த்திய சரவணன், முடிந்ததும் தானே வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கிக் கொண்டான். பின்னர், அவர்களை வரவேற்புக் கூடம் வரை வந்து விட்டுச் சென்றான்.

வரவேற்புப் பெண்ணிடம் விபரம் கேட்டு உரிய இடத்தினுள்ளே நுழைந்தபோது, அங்கே இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கானப் பெண்களின் ஒரு அழகிய அணிவகுப்பே நின்றிருந்தது. பலர் நவீனமான உடைகளில், மிகச் சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

"மேகி... என்ர கால் நடுங்குதடி... அங்க நிக்கிற பெட்டையளைப் பார்... எவ்வளவு ஸ்டைலா கோட் சூட் போட்டு வந்திருக்கினம்... அப்படியே எங்களைப் பார்... சாரி கட்டி அம்மா கொண்டை போட்டு வந்திருக்கிறம்..." என்று சுபா அங்கலாய்க்க,

"முதல்ல இப்படி ஒப்பிட்டு கதைக்கிறதை நிப்பாட்டு... கோட் சூட் போட இது என்ன 'எயார் ஏசியா'வா இல்ல 'எமிரேட்ஸ்'சா..?? இஞ்ச ட்ரெஸ் கோட் சாரி தானே... அதை தானே நாங்க கட்டியிருக்கிறம்..." என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டுக் கூறிய மேகலாவும், சுபாவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்களின் வரிசைப்படி அமர்ந்தனர்.

சுபாஷினி சொன்னது போல, சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் கொழும்பின் நவீன நாகரிகத்தில் திளைத்தவர்களாகத் தெரிந்தனர். ஆனால் மேகலா அணிந்திருந்த அந்த மெல்லிய வெண்ணெய் நிற பருத்திச் சேலையும், உயர்த்திப்போட்ட கொண்டையும் அவளுக்கு ஒரு தனித்துவமான கண்ணியத்தைத் தந்திருந்தது.

முதற்கட்டமாக உயரம் மற்றும் எடை சரிபார்க்கப்பட்ட பின், அவர்களுக்கு ஒரு எண் வழங்கப்பட்டது. அதன்படியே ஒவ்வொருவராக நேர்முகத் தேர்வுக்கு உள்ளே அழைக்கப் பட்டனர்.

மேகலாவின் முறை வர, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு, மனதில் நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு கதவைத் திறந்தாள். அங்கே சுவர்களில் பெரிய பெரிய விமானங்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. உள்ளே ஒரு நீண்ட மேசைக்கு பின்னால் மூன்று அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். இருவர் இலங்கையர்கள், ஒருவர் வெளிநாட்டவர்.

"குட் மோர்னிங் சேர்... குட் மோர்னிங் மேடம்...", மேகலாவின் குரலில் நடுக்கம் இல்லை, ஒரு தெளிவு இருந்தது.

அவர்கள் அவளது கோப்புகளைப் புரட்டினர்.

"யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள்... உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள். ஏன் பல்கலைக்கழகம் செல்லாமல் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று அந்த வெளிநாட்டு அதிகாரி ஆங்கிலத்தில் கேட்டார்.

மேகலா சற்றும் தயங்காமல் பதில் சொன்னாள்.

"பல்கலைக்கழகம் எனக்கு அறிவைத் தரும், ஆனால் இந்த வேலை எனக்கு உலகத்தைத் தரும். ஒரு தீவுக்குள் முடங்கிக் கிடக்காமல், வானமே எல்லையாகப் பறக்க வேண்டும் என்பது என் சிறுவயதுக் கனவு. சேவை மனப்பான்மையும் பொறுமையும் கொண்ட ஒரு பெண்ணால் மட்டுமே இந்தச் சீருடைக்குக் கௌரவம் சேர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்."

அவளது ஆங்கில உச்சரிப்பும், பேச்சில் இருந்த நேர்மையும் அவர்களைக் கவர்ந்தது.

சில தொழில்நுட்பக் கேள்விகள், அவசர காலச் சூழல்களை எப்படிக் கையாள்வது என்பது போன்ற மனநலக் கேள்விகள் என இருபது நிமிடங்கள் அந்த நேர்முகத்தேர்வு நீடித்தது.

இறுதியில் அந்த பெண் அதிகாரி புன்னகையுடன்,
"யூ மே லீவ் நவ்... வெயிட் போர் த மெடிக்கல் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அவுட்சைட்..."

என்றார். (நீங்கள் இப்போது வெளியேறலாம்... மருத்துவ பரிசோதனைக்கு வெளியே காத்திருக்கவும்)

வெளியே வந்த மேகலாவின் முகம் மலர்ந்திருந்தது. சுபாஷினியின் தேர்வும் முடிந்திருந்தது.

"முடிஞ்சிட்டாடி... நானும் முடிச்சிட்டன். என்னையும் மெடிக்கல் செக்-அப்புக்கு வெயிட் பண்ணச் சொல்லியிருக்கிறாங்க. வா... ஒருக்கா வெளிய போய் காத்து வாங்கிட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டுட்டு வருவம்.... உள்ளே ஏசி குளிருல என் கையே உறைஞ்சு போச்சு... பசி வேற வயித்த கிள்ளுது.." என்றாள் சுபா.

இருவரும் அந்தப் பெரிய கட்டடத்தின் தாழ்வாரத்தில் நடந்து, வான்படைத் தளத்திற்கும் பயிற்சி மையத்திற்கும் இடையிலான அந்தத் திறந்தவெளிப் பகுதிக்கு வந்தனர். அங்கே வான்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

மேகலா தன் கையில் இருந்த அந்த முக்கியமான ஒரிஜினல் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை மார்போடு அணைத்தபடி, அந்தப் பிரம்மாண்டத்தை ரசித்துக் கொண்டே நடந்தாள். அப்போதுதான் அந்தத் திருப்பத்தில் அது நடந்தது.

எதிர் திசையில் விறுவிறுவென நடந்து வந்து கொண்டிருந்த ஒரு உருவம், மேகலாவின் மேல் பலமாக மோதியது. எதிர்பாராத அந்த மோதலில் மேகலா நிலைதடுமாறினாள். அவள் கையில் இருந்த கோப்புகள் சரிந்து, அதில் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் தரையில் சிதறின. சில தாள்கள் காற்றில் பறந்து அருகில் இருந்த புல்வெளியில் விழுந்தன.

"அறிவு இல்லையா உங்களுக்கு...? மனுசன் வாறது தெரியேல்லயா?... கண்ணை என்ன பிடரிலயா வெச்சிருக்கிறனீங்க..."

விழுந்த காகிதங்களை எடுக்கும் அவசரத்தில், அவள் எதிரே நின்றவனின் முகத்தைப் பார்க்காமல் வசைபாடினாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ...?"

கணீரென்ற ஒரு குரல் கேட்டது. அந்தத் தொனியில் ஒரு அதிகாரமும், அதே சமயம் ஒரு சிறு வியப்பும் கலந்திருந்தது.

மேகலா நிமிர்ந்துப் பார்த்தாள். அவளது வார்த்தைகள் அப்படியே தொண்டையிலேயே நின்றன. அவனது சீருடையின் கச்சிதமும், அவனது நிமிர்ந்த நடையும் ஒரு அதிகாரத் தோரணையைத் தந்தது. சூரிய ஒளியின் பின்னணியில், அந்த உருவம் ஒரு சிலையைப் போல நின்றது. அவனது கண்கள் கூர்மையாக மேகலாவைப் பார்த்தன. கச்சிதமான நீல நிற வான்படைச் சீருடை, அகன்ற தோள்கள், அவன் நெஞ்சில் சுமந்த 'தரிந்து சேனநாயக்க' என்ற அவன் பெயர், அவன் அணிந்திருந்த தொப்பியில் இருந்த வான்படைச் சின்னம், அவனது சட்டையில் இருந்த சின்னங்கள் அவன் யாரென பறைசாற்றின.

அவனது கண்கள் கழுகைப் போலக் கூர்மையாக மின்னின.

அவன் மேகலாவை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அதிகாரத் தோரணைக்கு முன்னால் இன்றுவரை யாரும் இப்படிச் சத்தமிட்டதில்லை. அதுவும் ஒரு சாதாரணப் பெண், தன் கண்களை நேருக்கு நேர் பார்த்துத் திட்டுவதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால், அவளது அந்தச் சிவந்த முகமும், கோபத்தில் விரிந்த கண்களும், கலைந்திருந்த அவள் கூந்தலும் அவனுக்குள் ஏதோ ஒரு விசித்திரமான ரசனை உணர்வைத் தூண்டியது.

"யாழ்ப்பாணத்துச் சின்ன தமிழ் பெட்டைகளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம்னு கேள்விப்பட்டிருக்கன்... இப்ப நேர்லயே பார்க்கிறன்... நொட் பேட்..." என்று அவன் சிங்களம் கலந்த ஆங்கிலத்தில் சொல்ல, மேகலாவுக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது.

"சின்னப் பெட்டைகளோ பெரிய பெட்டைகளோ... மோதிட்டு மன்னிப்புக் கேட்கத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு இந்தச் சீருடை?... தமிழாக்களை குறை சொல்லாட்டி சோறு இறங்காதே உஙகளுக்கெல்லாம்..."

என்று படபடவெனத் தமிழில் கேட்க, தரிந்துவுக்குத் தமிழ் புரியவில்லை என்றாலும் அவளது கோபம் புரிந்தது. அவன் மேகலாவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில் அதிகாரமும் இருந்தது, ஒரு சிறிய ஏளனமும் இருந்தது. அவன் மெதுவாகக் குனிந்து, கீழே கிடந்த ஒரு காகிதத்தை எடுத்தான்.

"மேகலா அரவிந்தன்... ம்ம்... நைஸ் நேம்... "

என்று அவன் முதன்முதலில் அவள் பெயரை மென்மையாக உச்சரித்தான். அந்த உச்சரிப்பில் ஒரு விசித்திரமான ஈர்ப்பு இருந்தது.

மேகலா அவனிடமிருந்து காகிதத்தை பிடுங்காத குறையாக வாங்கினாள்.

"பேரைப் படிக்கச் சொல்லேல்ல... ஒழுங்கா நடக்கப் பழகுங்கோன்னு சொன்னன்... நைஸ்சாம்... நைஸ்... சுபா வாடி போவம்...!"

என்று அவனை முறைத்துப் பார்த்துவிட்டு விறுவிறுவென நடந்தாள்.

தரிந்து அங்கேயே சில நொடிகள் நின்றான். அவன் பின்னால் வந்த சக அதிகாரி நண்பன்,

"மொகத மச்சங்... மொகத வுனே... கவுத ஏ கெல்ல...???"

(என்ன மச்சான்... என்ன ஆச்சு... யார் அந்தப் பெண்..?) என்று கேட்டான்.

தரிந்து ஒரு மெல்லிய புன்னகையுடன்,
"யாழ்ப்பாணத்தில இருந்து வந்த அழகான புயல் ஒண்டு என்னை உரசிப் பார்த்துட்டு போகுது... வேற ஒண்டுமில்ல... நீ வா நம்ம போகலாம்..." என்று நண்பனை அழைத்துச் சென்றான்.

சற்று தூரத்தில் சென்ற பின், சுபாஷினி மேகலாவின் தோளைப் பிடித்துக் உலுக்கினாள்.

"அடியேய்... உனக்கு என்ன விசராடி...? அவ்வளவு பெரிய ஒபிஸரை ஆராவது இப்படித் ஏசுவாங்களா...? அவன் பார்த்த பார்வையை கவனிச்சியா... அப்படியே உன்னையே உத்துப் பார்த்தானடி..."

"அவன் பார்த்தா நானென்ன செய்ய...? என்ர செர்டிபிகேட் எல்லாம் மண்ணுல விழுந்துட்டு... இவேயளுக்குச் சீருடை இருந்தா காணும்... உலகமே இவங்க காலுக்கு அடியில இருக்கிறதா நினைப்பு..." என்று மேகலா இன்னும் கோபமாகப் பேசினாலும், அவளது மனதிற்குள் தரிந்துவின் அந்த ஆழ்ந்த கண்களும், அந்தத் தனித்துவமான ஆண்மை நிறைந்த குரலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது அவளறியாத உண்மை.

அடுத்த கட்டமாக மருத்துவப் பரிசோதனைக்காக இருவரும் ஒரு நீண்ட வரிசையில் அமர்ந்தனர். மேகலா தன் கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அவளுக்குத் தெரியவில்லை அந்தத் தளத்தின் ஜன்னல் வழியாகத் தரிந்துவின் பார்வை அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை.

"உண்ட காத்து வடக்கு பக்கம் வீசுது போல... இந்த புயல் கரையைக் கடக்குமா...?"

என்று அவன் பார்வை செல்லுமிடத்தை அவதானித்த அவன் நண்பன் பின்னாலிருந்து அவனைச் சீண்டினான்.

"வெறும் பெயரையும் ஊரையும் வெச்சிட்டு நான் என்னடா செய்ய... தெவியன் கெமத்தினம் (இறைவன் நாடினால்)... நல்லது நடக்கும்... பலமு...(பார்க்கலாம்)" என்று மென்மையாக கூற,

"அடேய்... நடிக்காத டா... இந்த நேரத்துக்கு நீ அவள் ஜாதகத்தை கையில எடுத்து இருப்பியே... உன்னப் பத்தி நல்லா தெரியும் எனக்கு..."
என்றான் நண்பன்.

அதற்கும் மெல்லிய சிரிப்பே தரிந்துவிடம்... அவன் கைகளில் அவள் விட்டுச் சென்ற ஒரு காகிதம்..

விமான நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே, ஒரு போர் விமானியின் இதயத்திற்குள் ஒரு சிறு இளம்தென்றல் நுழையத் தொடங்கியிருந்தது.

 
Top Bottom