மையல் 15
அன்றைய விடியல் மேகவியின் வாழ்விலும் உணர்வுகளிலும் சிலபல மாற்றங்களைத் தந்துவிடக் காத்திருந்தது.
வழக்கம் போல் ஏழு மணிக்கு எழுந்தவள் பணிக்குச் செல்வதற்காக தயாராகி வர, "குட்மார்னிங் பொண்டாட்டி!" என்றான் சத்தி.
கையைத் திருப்பி மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், "கிளம்பலயா நீ இன்னும்?"
"எங்க?"
"வேலைக்கு? உன்னோட ரூமுக்கு வேற போகணும்னு சொன்ன?"
மறுத்துத் தலை அசைத்தவன், "மேரேஜுக்காக நான் போட்ட லீவ் இன்னும் முடியல!"
"ஓ.. அதுனால தான் இப்படி அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு என்னை இம்சை பண்ணுறியா நீ?"
மெலிதாய்ச் சிரித்தவன், "நாளைக்குக் கிளம்பிடுவேன், கவலைப் படாத!"
"ஓகே. நான் கிளம்புறேன். என்கிட்ட வீட்டோட கீ இருக்கு. உன்கிட்ட இருக்கிறதை நீயே வச்சுக்கிட்டாலும் சரி, இல்ல செக்யூரிட்டிக்கிட்ட கொடுத்தாலும் சரி."
"ஹேய் பொண்டாட்டி, வெயிட் வெயிட்.."
அவனின் அழைப்பில் நிதானித்தவள், "என்ன?"
"லஞ்ச்!" என்று டப்பாவை நீட்டினான்.
"மணி எட்டரை தான ஆகுது. அதுக்குள்ள செஞ்சிட்டியா?"
"ப்ச்ச்ச் ப்ச்ச்ச்.." என இரு பக்க தோள்களையும் குலுக்கி புன்னகைத்தான் சத்தி.
அவள் அதனை வாங்குவதற்காக இரண்டு அடி எடுத்து வைத்து முன்னே வர, "அப்படியே சாப்பிட்டுப் போ!" என வேக வைத்த முட்டையும் சில ரொட்டித் துண்டுகளும் இருந்த உணவுத் தட்டை நீட்டினான்.
"இது என்ன? காலையிலயும் மதியமும் ஒரே சாப்பாடு தான்னு சொன்ன?"
"இன்னைக்கு முட்டை வேக வைக்க டைம் இருந்தது, சோ.."
ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வேக வைத்து மசாலா சேர்த்து கலந்த காய்வகைகள் இருந்தன. உண்பதற்கு ஏற்றதாகவே அதன் ருசி இருக்க, எதுவும் பேசாது உண்டு முடித்தாள் மேகவி.
"லஞ்சுக்கு தேங்காய் சாதம் செஞ்சிருக்கேன். சாப்பிடுவ தான நீ?"
"நான்தான் இதெல்லாம் செய்ய வேண்டாம்னு சொன்னேனே?"
"பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல. துருவிப் போட்டுத் தாளிச்சு விட்டிருக்கேன், அவ்வளவு தான். வார நாள்ல நான் ரொம்ப எல்லாம் மெனக்கெடுறது இல்ல. ஏதாவது வேணும்னா, வீக் எண்ட் லீவ் தான? அப்ப செஞ்சுக்கலாம். அப்புறம் ஃபேமிலியை இப்படித்தான் ரன் பண்ணனும்! இஷ்டத்துக்கு தோணும் போது, கடையில ஆடர் பண்ணி சாப்பிட்டா, வீடு வீடா இருக்காது."
"ஓ.." என அவள் புன்னகைக்க, "பொண்டாட்டி, அப்புறம் ஒரு விஷயம்!"
"இன்னும் என்ன?"
"இந்த கழுத்துல இருக்கிற தாலி கொஞ்சம் வெளிய தெரியிற மாதிரி டிரஸ் பண்ணுறியா?"
"எதுக்கு?"
"கண்ணாடியில உன்னை நீயே பார்க்கும் போதெல்லாம் கல்யாணம் ஆனது ஞாபகம் வரும் இல்ல?"
"அடப்பாவி!"
"நீ அப்பப்ப மறந்துடுற பொண்டாட்டி. சோ.! அதோட, உனக்கு மேரேஜ் ஆனது தெரிஞ்சா தான, மத்த ஆம்பளைங்களும் கொஞ்சம் விலகி இருப்பாங்க?"
"மேல வந்து இடிக்கணும்னு நினைக்கிறவன், அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ஆகலயானு பார்த்துக்கிட்டா இருப்பான்?"
"நான் சொன்னது என்னை மாதிரி இருக்கிற நல்ல ஆம்பளைங்களை!"
"நீ நல்லவனா.?"
"யா.. டெஃபனெட்லி!"
"சரி சரி!" என்றவளிற்குச் சிரிப்பு வர, அதனை வெளிக்காட்டாது இதழ்களிற்கு உள்ளேயே மறைத்துக் கொண்டாள்.
"அதோட இன்னொன்னும் செய்யலாம்!"
"அது என்ன?"
"இதோ வர்றேன்!" என்றவன் பூஜை அறைக்குச் சென்று குங்குமத்தை எடுத்து வந்து, அவளது வகிட்டில் வைத்து விட்டான்.
மேகவி ஆடவனின் செயலை திகைப்புடன் பார்க்க, அதில் சில துகள்கள் சிதறி மங்கையின் மூக்கின் மேல் விழுந்தன.
"அச்சச்சோ!" எனப் பதறியவன் கைக்குட்டையை ஈரம் செய்து துடைத்து விட, "இந்த குங்குமம் உனக்கு செட் ஆகல. நெத்தியில ஒட்ட மாட்டிது. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ஈவ்னிங் பஜாருக்குப் போயி, அம்பர் மாதிரி இருக்கிறதை வாங்கிட்டு வர்றேன். இப்ப லேட்டஸ்டா புது வெரைட்டில எல்லாம் வந்திருக்கு. கையால தொட வேண்டியதே இல்ல." என்றான்.
உண்மையில் அவனது நடவடிக்கைக்கு எப்படி எதிர்வினை செய்வது என்றே புரியவில்லை மேகவிக்கு.
நியாயமாய் சத்தி நடந்து கொண்ட முறைக்கு சினம் வந்திருக்க வேண்டும். அவளிற்கும் வந்தது தான். ஆனால் அடுத்தடுத்து, அவன் பேசிய பேச்சினில் மெல்ல நீர்த்துப் போய் விட்டது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது என்பார்களே? அதுபோல் தான் நடந்து கொண்டிருந்தது தற்போது.
மனைவியை ஒவ்வொரு விஷயத்திலும் மெல்ல மெல்ல சீண்டி, அடுத்த நொடியே அந்த சீண்டலை மறக்கும் விதமாய் பேசிப் பேசியே மனதை லேசாக்கும் மாய வித்தையையும் அரங்கேற்றினான்.
ஆடவனின் இந்த வழிமுறையைக் கண்டு கொண்டாள் மேகவி. ஆனாலும் அதில் இருந்து தப்பிக்கத்தான் இயலவில்லை.
"நீ என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணுற மாதிரி ஃபீல் ஆகுதே?"
"அப்படியா? இல்லயே! ரெக்வெஸ்டா தான கேட்டேன்! பிடிக்கலேனா, நான் வற்புறுத்தல. முகத்தைக் கழுவிட்டுப் போ ஆஃபிஸுக்கு!" என்றவன் அங்கிருந்து நகர, "ஓ.. சாருக்கு வருத்தம் போலயே.? செய்யிறதையும் செஞ்சிட்டு, ஒன்னும் தெரியாத சின்னப் பையன் மாதிரி பேசிட்டுப் போறதைப் பாரு!" என முணுமுணுத்தபடியே வெளியேறி சென்றாள் மேகவி.
தோழியின் இல்லத்தை நெருங்கும் பொழுது, முந்தைய நாளின் நிகழ்வால் நெஞ்சம் படபடக்க, 'ஸ்டார் மட்டும் வெளிய வந்துடக் கூடாது!' என்ற வேண்டுதலோடு மெல்ல கடந்து சென்றாள் பாவை.
இரண்டு எட்டுதான் வைத்திருப்பாள், "ஓய்.. எங்க எஸ்கேப் ஆகப் பார்க்கிற?" என்று தடையிட்டு இருந்தாள் தாரிகா.
திரும்பிப் பார்த்த மேகவி, "இல்ல ஸ்டார்! நான் எதுக்கு உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணணும்?"
"ஆஹான் அப்படியா?" என்றவளின் கண்கள் தோழியினது முகத்தின் மீது ஆராய்ச்சியுடன் படிந்தது.
"ஹேய்.. என்ன பார்க்கிற?"
"ஏதோ சேஞ்ச் தெரியிதே உன்கிட்ட?"
"என்ன சேஞ்ச்?"
"முகத்துல ஒரு புது தேஜஸ் மின்னுதே க்ளௌட்?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான், எப்பவும் போல தான் இருக்கேன். கிறுக்குத் தனமா ஏதாவது பேசிக்கிட்டு இருக்காத!"
"ஓ.. நான் கிறுக்குத் தனமா பேசுறேனா? நீ மட்டும் ரொம்ப புத்திசாலித் தனமா நடந்துக்கிறதா நினைப்பு? கல்யாணம் ஆனதை என்கிட்ட ஏண்டி மறைச்ச? என்னை ஃப்ரெண்டா நினைச்சு இருந்தா தான, சொல்லுவ?"
"ஹேய் ஸ்டார்.. அப்படி எல்லாம் இல்ல. அன்எக்ஸ்பெட்டடா நடந்திடுச்சு. எனக்கு உண்மையிலேயே இதை எப்படிச் சொல்லுறதுனு தெரியல."
"ம்ம்.. புரியிது. உன்னோட ஹஸ்பண்ட் நடந்த எல்லாத்தையும் சொன்னாரு?"
"அப்படி என்ன சொன்னான்?"
சத்தி, முதல் நாள் தன்னிடம் உரைத்ததை அப்படியே தோழியிடம் ஒப்புவித்தாள் தாரிகா. எவ்வித பொய்மையையும் கலக்காது நடந்ததை தான், சொல்லி இருந்தான் அவன்.
மேகவி அதைக் கேட்டு, 'நல்லவன் தான் போல! பரவாயில்ல கொஞ்சம் நம்பலாம்!' என எண்ணி மெலிதாய்ப் புன்னகைக்க, "ஹேய்.. உன்னோட முகத்துல இருக்கிற தேஜஸுக்குக் காரணம் கண்டுபிடிச்சிட்டேன்." என்றாள் மற்றவள்.
"அப்படி என்ன கண்டு பிடிச்ச?"
"உன்னோட ஃபோர்ஹெட்ல ரெட் கலர் லைட் போட்டிருக்க!"
"அட லூசு!" எனச் சிரிக்க, "வாட் எ சேஞ்ச் க்ளௌட்? உண்மையிலயே மிஸ்டர் சத்திய கீர்த்தியைப் பாராட்டணும். வந்த ஒரே நாள்ல, உன்னோட அப்பியரன்ஸையே டோட்டலா மாத்தி இருக்காரு."
"ஹேய்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்ன, இன்னைக்கு எக்ஸ்ட்ரா வகிட்டுல குங்குமம் ஆட் ஆகி இருக்கு!"
"ஓ.. கும்கும்மோட பவரா அது! எனக்குத்தான் அந்தப் பழக்கமே இல்லையே? ஆமா, என்ன திடீர்னு?"
"எல்லாம் என்னோட வீட்டுல ஒருத்தன் இருக்கானே? அவன் செஞ்ச வேலை தான் இது!"
"ஓஹோ... எதுக்காம்? காரணம் எதுவும் சொன்னாரா?"
"அதை ஏன் கேட்கிற?" என்றவள் சத்தி சொன்ன விளக்கத்தை சுருக்கமாய் உரைக்க, "அவரோட பிராப்பர்ட்டியை சேஃப்கார்ட் பண்ணுறாரு போல?" எனச் சிரித்தாள் தாரிகா.
"கிண்டலா பண்ணுற?" என்று மேகவி தோழியை அடிப்பதற்காக கை ஓங்க, "ஏய், மீ பாவம்! என்னோட புருஷனுக்கு நான் ஒரே ஒரு பொண்டாட்டி தான் இருக்கேன்!"
"சரி, பிழைச்சுப் போ. எங்க, உன்னோட ஹஸ்பெண்ட்?"
"இப்பத்தான் அவரை பேக் பண்ணி அனுப்பி விட்டேன். உன்னோட ஆளு எங்க, ஆளைக் காணோம்?" எனத் தோழியின் வீடு இருக்கும் திசையில் விழிகளைச் சுழல விட்டாள்.
"என்னை பேக் பண்ணி அனுப்பி இருக்கான்!" என உணவு டப்பாவைக் காட்டிட, தாரிகாவின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.
"பார்றா?" எனச் சிரிக்க, "நேத்து எப்படி நீங்க ரெண்டு பேரும் இண்ட்ரடியூஸ் ஆனீங்க?"
"அது ஒரு பெரிய கதை!"
"ரொம்ப பெருசோ?"
"இல்ல.. இல்ல, ஓரளவுக்குச் சின்னது தான்!"
"நான் கிளம்புறதுக்குள்ள உன்னால சொல்ல முடியுமா ஸ்டார்?"
"எதுக்கு?"
"சும்மா ஒரு கியூரியாசிட்டி தான். நேத்து நைட் வீட்டுக்கு வரும் போது, ரொம்ப நாள் பழகின மாதிரி பேசிக்கிட்டு இருந்தீங்களே?"
"அதுவா.. வா, கதையை சொல்லிக்கிட்டே வந்து உனக்கு டாட்டா காட்டிட்டு வர்றேன்!" என்றவள் பளுதூக்கியின் பொத்தானை அழுத்த, அது ஒன்பதாவது மாடிக்கு வந்து தோழியர் இருவரையும் விழுங்கிக் கொண்டு கீழே இறங்கத் தயாரானது.
"நேத்து மதியம் வெளிய போயிட்டு வந்தேன். எதார்த்தமா திரும்பிப் பார்த்தப்ப, உன்னோட வீட்டுக் கதவு திறந்து இருந்துச்சு. என்னனு உள்ளப் போயி பார்த்தா, முகத்தைக் கர்ச்சீப்பால மூடிக்கிட்டு சர்ட் இல்லாம ஒருத்தர் கிளீனிங் வொர்க் பார்த்துட்டு இருந்தாரு. நான்கூட முதல்ல, நீதான் ஆளை அனுப்பி இருக்கனு நினைச்சேன்!"
"நானா?" என மேகவி சிரித்திட, "இல்லப்பா, வேலைக்கார அம்மா வர மாட்டாங்கனு நான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்ல? உன்னாலயும் ஆஃபீஸ் வொர்க்கை முடிச்சிட்டு வந்து இந்த வேலை எல்லாம் பார்க்க முடியாது. இப்பதான், கிளீன் பண்ணுறதுக்காக புரொஃபஷனல் வொர்க்கர்ஸ் இருக்காங்களே? அவங்களைத்தான் அனுப்பி வச்சிருக்கியோனு நினைச்சிட்டேன்."
"அதுசரி!"
"அப்புறம் அவர்கிட்ட விசாரிக்கும் போது தான், உண்மையைச் சொன்னாரு. அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன்!"
"எனக்கு ஏன் இந்த சென்டன்ஸ் மட்டும் வடிவேலு மாடுலேஷன்ல கேட்குது?"
"இக்கிஈஈ ஹிஹி... அப்படித்தான் இடை இடையில வரும் கண்டுக்காத!"
"ஐயோ முருகா! என்னை இப்படியா கோர்த்து விடுவ? வீட்டுல அவன், இங்க இவ! முடியலப்பா சாமி!"
"அச்சோ க்ளௌட், அப்படி எல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது!"
"ஆனா, உன்னை எல்லாம் எப்படித்தான் உன்னோட புருஷன் சமாளிக்கிறாருனு தெரியல."
"அதான், சண்டே கூட ஆஃபிஸுக்குக் கிளம்பிப் போயிடுறாரே?"
"சரி சரி விடு! ஃபீல் பண்ணாத!"
"சேச்சே! அதெல்லாம் பழகிப் போச்சு. இப்ப எல்லாம் அவரு வீட்டுல இருந்தா தான் எரிச்சலா வருது!"
"அடடா!" என்று உரைத்து சிரிக்க, "அச்சோ கதை?"
"ஆமா.. அதை வேற பாதியில நிறுத்திட்ட, ம்ம் ஸ்டார்ட் த மியூசிக்.."
"என்னது?"
"ஸாரி ஸாரி.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு. ஸ்டார்ட் த ஸ்டோரி!"
"அதான் முன்னாடியே சொன்னேனே? உங்க மேரேஜ் ஹிஸ்டரியை பேசப் போயி அப்படியே எங்க வேவ் லென்த் செட் ஆகிடுச்சு. அவரு வேலை பார்த்தாரு. டயர்ட் ஆகாம இருக்கிறதுக்காக, நான் பேசி கம்பெனி கொடுத்தேன். அதுக்கு தேங்க்யூ கிஃப்டா எனக்கு காஃபி போட்டுக் கொடுத்தாரு!"
"அவ்வளவு தானா?"
"அவ்வளவே தான்!"
"ஹேய் ஸ்டார், என்னைப் பத்தி எதுவும் கேட்டானா?"
"நீ என்ன நினைக்கிறனு எனக்குப் புரியிது க்ளௌட். ஓவரா திங்க் பண்ணாத. நம்ம எவ்வளவு நாளா ஃப்ரெண்டா இருக்கோம்கிறதைத் தவிர, உன்னைப் பத்தி அவரு எதுவுமே விசாரிக்கல. ஹீ இஸ் பக்கா ஜென்டில்மேன்!"
நேற்று இரவு இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் போது, மேகவியுமே அதனை உணர்ந்து இருந்தாள். அதனால் தான் காலையில் சத்தியிடம் இயல்பாய் உரையாட முடிந்தது. அத்தோடு அவன் நெற்றியில் குங்குமம் இட்டதையும் 'போனால் போகிறது!' என்று ஏற்றுக் கொண்டது மனம்.
என்னதான் இருவருக்குமான உறவு புதுமணத் தம்பதிகளைப் போல் இயல்பாக இல்லை என்றாலும், நடந்து முடிந்த திருமணத்தை இல்லை என்று வாழ்வின் பக்கங்களில் மாற்றி எழுதிவிட முடியாதே? அதனால், சத்தி உரைத்தைப் போல், இப்புதிய பந்தத்தை ஏற்றுக் கொள்ள முயன்றாள் மேகவி.
வண்டிகளை நிறுத்தும் பகுதிக்கு வந்து தனது இரு சக்கர வாகனத்தை இயக்கியவள், "ஓகே ஸ்டார். நான் கிளம்புறேன்!" என விடைபெற்றிட, தோழியை வழியனுப்பி வைத்துவிட்டு தனது இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள் தாரிகா.