மையல் 19
அலுவலகம் செல்வதற்காக தயாராகி வந்தாள் மேகவி. அன்றைய தினம் சத்தியும் திருமணத்திற்காக எடுத்துக் கொண்ட விடுமுறை முடிந்து பணிக்குச் செல்வதாக இருந்தான்.
"குட்மார்னிங் பொண்டாட்டி!" என்றவனின் சொற்களில் பாவையின் கண்கள் அனிச்சையாய் சமையல் அறையின் பக்கம் திரும்ப, "டைம் இருக்கு தான..?"
"யா.. ஹாஃப் ஹவர் இருக்கு. எப்பவும் வெளிய சாப்பிட்டுப் போவேன். இப்பதான் அதுக்கு நீ ரெஸ்டிரிக்ஷன் போட்டுட்டியே..?"
"ஹேய்.. நான் கண்ட்ரோல் எல்லாம் பண்ணல பொண்டாட்டி. உன்னோட ஹெல்த் முக்கியம் இல்லயா? அதுக்காக சொன்னேன்."
அவள் புரிந்து கொண்டது போல் தலையசைத்தாள்.
முதல்நாள் இரவில் இருவரும் உரையாடிய பின்னர், 'சத்தி சொல்வது போல் தங்களுக்கு இடையேயான உறவை துவக்கினால் என்ன?' என்ற எண்ணம் உருவாகி இருந்தது. எந்த முடிவும் எடுக்கவில்லை எனினும், நடக்கும் நிகழ்வுகளை அப்படியே ஏற்பது என்ற மனநிலைக்கு வந்திருந்தாள் தற்போது.
அவன் அவ்வப்போது சுவர் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே தேங்காய் சட்னி அரைப்பதற்கான பொருட்களை எடுத்து வைக்க, அதை கவனித்து அருகே சென்றாள்.
"நீ எத்தனை மணிக்கு ஆஃபிஸ் போகணும் கீர்த்தி.?"
"உன்னோட டைமிங் தான் எனக்கும்!"
நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்தவள், "இன்னும் குளிக்கல நீ..?"
"அவ்வளவு தான். தோசை ஊத்தி, இதை மட்டும் அரைச்சிட்டா வேலை முடிஞ்சிடும்."
மொத்த பணிகளையும் ஆடவனைச் செய்யவிட்டு தான் அமைதியாய் இருப்பது மங்கைக்குள் மெலிதான வருத்தத்தை ஏற்படுத்த, "சரி. நான் செய்யிறேன். நீ போயி ரெடியாகு." என உதவிட முன் வந்தாள்.
"நீயா.? என் தங்கச்சி, கிச்சன் பக்கமே போனது இல்லனு மாம்ஸ் சொன்னாரு?"
"போனது இல்லதான். ஆனா சொல்லுறதைச் செய்யிற அளவுக்கு எனக்குப் புரிதல் இருக்குனு நினைக்கிறேன். சொல்லு, என்ன செய்யணும்?"
"ஆர் யூ ஸுயர்?"
"யா."
"ஓ.. தேங்க்ஸ் பொண்டாட்டி!" என்றவன் தோசைக் கல்லை அடுப்பில் வைத்துவிட்டு, "ஃபிரிட்ஜ்ல மாவு வச்சிருந்தேன், எடுத்துட்டு வா!" என அடுத்தப் பணியினைத் தொடர்ந்தான்.
எடுத்து வந்து கொடுத்தவள், "ரொம்ப பெரிய வேலைதான்!" என்றிட, "இங்க வா!" என மனைவியின் கைப்பற்றி இழுத்து தனக்கு முன்னால் நிற்க வைத்தான்.
அவளின் பின்பக்க தேகம் அவனது முன்புறம் உரசியது. எதிர்பார்த்திடாத இந்த நெருக்கத்தை அசௌகர்யமாய் உணர்ந்த மேகவி, "விடு!" என்று சற்றே விலகி நின்றாள்.
மனைவி தள்ளிச் செல்வதைக் கண்டவன், "என்ன ஆச்சு.?"
"என்ன செய்யிற நீ.?"
புரியாது விழித்தவன், "நான் தப்பா எதுவும் நடந்துக்கலயே?"
"இவ்வளவு பக்கத்துல என்னை கூப்பிட்டு தான் வேலை சொல்லணுமா? தள்ளி நின்னா ஆகாதா? டச் பண்ணாம பேச மாட்டியா நீ.?"
"ஹோ.?" என மெலிதாய்ச் சிரித்தவன், “நேத்து ஹக் பண்ணதைக் கம்பேர் பண்ணும் போது, இன்னைக்கு அப்படி ஒன்னும் டச் ஆகலயே?"
அவள் முறைக்க, "பொண்டாட்டி, உன்னை டீஸ் பண்ணுறதுக்கு எல்லாம் எனக்கு இப்ப நேரம் இல்ல. ஆஃபிஸ் கிளம்பணும். அதுஅதுக்குனு ஒரு நேரம் இருக்கு. சோ, நம்பி வந்து என் பக்கத்துல நிற்கலாம் நீ!" என்றவாறே முன்பு இருந்த அதே நிலையில் மனைவியை நிறுத்தினான் சத்தி.
மங்கையும் அதை உணர்ந்து, "என்ன செய்யணும்?"
"தோசை ஊத்தத் தெரியுமா?"
"நோ!"
"அப்ப, சொல்லித் தர்றேன் கத்துக்கோ." என்றவன் வலது கரத்தை தண்ணீரில் தொட்டு தோசைக் கல்லின் மீது தெளித்தான்.
அது சூடானதன் அறிகுறியாய் சுருசுருவென்ற ஒலியுடன் நீர்த்துளிகளை ஆவியாய் மாற்றியது.
"ஹீட் கரெக்டா இருக்கு. இப்ப ஊத்தலாம்!" என்றவன் அவளின் கைப்பற்றி மாவை எடுத்து ஊற்றி வட்டமாய் சுற்றி விட்டான். அதனை மூடி வைத்துவிட்டு, சட்னியை அரைத்து வந்தான்.
சரியாய் இரண்டரை நிமிடங்கள் இருக்கலாம். தோசை வெந்திருந்தது. அது தானாகவே மேலெழும்பி வர, தட்டிற்குப் பரிமாறினான்.
"இப்படிதான் தோசை ஊத்தணும். இந்தா சாப்பிடு. அப்படியே உனக்கு வேணும்கிற அளவுக்கு ஊத்திக்கோ. எனக்கும் ரெண்டு தோசை. அதுக்குள்ள நான் போயி ரெடியாகி வந்திடுறேன், ஓகே?" என்றவன் துரிதமாய் அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் தயாராகி வரும் பொழுது, மேகவியும் சொல்லிச் சென்ற வேலையைச் சரியாய் செய்திருந்தாள்.
தட்டில் இருந்த தோசையைக் கண்டவனது விழிகள் வியப்புடன் விரிய, அப்படியே அவள் பக்கம் நோக்கினான்.
"ஹேய் பொண்டாட்டி! தோசை ஊத்தத் தெரியாதுனு பொய் தான சொன்ன?"
"பொய் சொல்லி உன்னை உரசிக்கிட்டு நிற்கணும்னு, எனக்கு என்ன தேவையா?"
"ம்ம்.. நீ சொல்லுறதும் கரெக்ட் தான். ஒருவேளை புருஷன் மேல கொஞ்சமா இருந்த ஃபீலிங்ஸ் ஓவர்ஃப்ளோ ஆகிடுச்சோ.?"
"இது, உனக்கே ஓவரா தெரியல?"
"ஏன், அப்படி ஆகாதுனு சொல்லுறியா.? ஆசைனு வந்துட்டா, ஒரு ஸ்டேஜுக்கு மேல அது அடங்கி நிக்காது. நம்ம சுயத்தை மீறி சில விஷயங்களைச் செய்யச் சொல்லும்!"
"அவ்வளவு சீன் எல்லாம் இங்க இல்ல."
"ஓ.." என்றவன் அமைதியாகி விட, மெலிதான புன்னகை மலர்ந்தது அவளிற்கு.
"சரி சாப்பிடு."
"ம்ம்.." என இருவாய் உண்டவன், "ஆனா பொண்டாட்டி இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமுனு சொன்னா, நம்ப முடியல. தோசை பர்ஃபெக்டா வந்திருக்கு. சரியான அளவுல வெந்தும் இருக்கு."
"அடுப்போட ஃப்ளேமை நான் அஜெஸ்ட் பண்ணவே இல்ல. நீ வச்சிட்டுப் போனது தான். எவ்வளவு நேரம் அதை வேக விடுறனு கவனிச்சிக்கிட்டேன். மாவை கொஞ்சம் நிதானமா ரௌண்டா ஊத்த டிரை பண்ணேன். ஃபார்முலாவைக் கரெக்டா அப்ளை பண்ணா, எப்படியும் ரிசல்ட் வந்திடும் தான? தட்ஸ் இட்!" என அவனது தட்டில் இருந்ததைக் காட்டினாள்.
"ஓ.. இதை வேற மாதிரியும் சொல்லலாம்!"
"எப்படி?"
"டீச்சர் கரெக்டா சொல்லிக் கொடுக்கும் போது, ஸ்டூடண்டோட ரிசல்டும் அதுக்குத் தகுந்தபடி இருக்கும் தான.?"
மறுத்துத் தலை அசைத்தாள் மேகவி.
"என்ன..?"
"ரிசல்ட், முழுக்க முழுக்க ஸ்டூடண்டோட உழைப்பு. எல்லா ஸ்டூடெண்டுமே சென்டம் எடுக்கிறது இல்லையே? சோ அதோட கிரெடிட்டை டீச்சருக்கு கொடுக்கிறது சரியில்ல."
மேலும் கீழுமாய் தலையசைத்து சிரித்தவன், உணவு உண்பதில் கவனமாக.. கணவனையே பார்த்திருந்தாள் மேகவி.
"என்ன சைலண்ட் ஆகிட்ட.?"
"ஏன்?"
"பதிலுக்குப் பதில் பேசுபவன் ஆச்சே நீ! ஏதாவது சொல்லுவனு எதிர்பார்த்தேன்."
"சில நேரங்கள்ல பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிறது, நல்ல புருஷனுக்கு அழகு. அதான்.."
"ஹோ.." என்றவள் கணவனை விழிகள் சுருக்கி ஒருமுறைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் இருவரும் அலுவலகம் செல்ல தயாராகி இருந்தனர்.
"ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்!" என வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு வந்து நின்றான் சத்தி.
புரியாது பார்த்தவள், "சேர்ந்தா? உன்னோட ஆஃபிஸ் எங்க இருக்கு?"
"நீ ஒர்க் பண்ணுற ஆஃபீஸ்ல இருந்து நாலு பில்டிங் தள்ளி."
"ஓ.. இப்படித்தான் நீ இங்க என்னைப் பார்த்தியா.?"
"யா.. ஸ்டேஷன்ல இருந்து வெளிய வரும் போது, கரெக்டா சிக்னலை கிராஸ் பண்ணி போவ. நீ கரெக்டான டைமிங்க்கு வந்தா பார்க்கிற சான்ஸ் கிடைக்கும். இல்லேனா.. ப்ச்ச்.."
அவனது இறுதி வார்த்தைகளைக் கேளாதது போல், "ஸ்டேஷனா.? பைக் இல்லையா உன்கிட்ட.?" என முந்தைய சொற்களிற்கான வினாவை எழுப்பினாள்.
"எதுக்கு பெட்ரோலுக்கு செலவு பண்ணுவானேனு வாங்கல. ஊருக்குப் போகும் போது அப்பாவோட வண்டியை யூஸ் பண்ணிக்குவேன்."
"ஹோ.. இப்ப என்ன, டிரைன் டிக்கெட் பணத்தையும் மிச்சம் பண்ணுறதுக்காக இந்த ஐடியாவா? சரியான கஞ்சனா இருப்ப போலயே.?"
மெலிதாய் சிரித்து மறுத்துத் தலை அசைத்தவன், "இனி பெட்ரோலுக்கான பணத்தை நான் கொடுத்திடுறேன். நீ அதையும் சேர்த்து, வீட்டோட ஈஎம்ஐக்குக் கட்டிக்கோ. இதுக்கு பேரு கஞ்சத்தனம் இல்ல. கொஞ்சம் சிக்கனமா இருக்க ட்ரை பண்ணுறது. சரி போலாமா.? வண்டி நீ டிரைவ் பண்ணுறியா? இல்ல நான் ஓட்டவா.? என்னை, நீ டிராப் பண்ண வேண்டாம். நேரா உன்னோட ஆஃபீஸ்க்கே போ. நான், அங்க இருந்து என் ஆஃபீஸுக்கு நடந்து போயிக்கிறேன்!"
அவனைச் சந்தேகமாய்ப் பார்த்தவள், "எனக்கு ஒரு விஷயம் சொல்லு."
"ம்ம்.. என்ன?"
"நம்ம ரெண்டு பேரோட ஆஃபீஸும் ஒரே ஏரியால இருக்கிறது கோஇன்ஸிடெண்ஸா? இல்ல, நீ எதுவும் பிளான் பண்ணியா.?"
"பொண்டாட்டி! நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்ல. இது நிச்சயமா கோஇன்ஸிடெண்ஸ் தான்."
"ஹோ.. இருந்தாலும் நம்ப கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு."
"நம்பு பொண்டாட்டி! நம்மளை நேச்சரும் விதியுமே சேர்த்து வைக்கப் பார்க்குது."
"இந்த விதிக்கு, அப்படி என் மேல என்னதான் கோபமோ?" எனச் சலித்த படி அவள் வாகனத்தின் திறவுகோலை சத்தியிடம் கொடுக்க, சிரித்தவாறே முன் இருக்கையில் அமர்ந்து இயக்கினான் அவன்.
நாற்பது நிமிட பயணத்தின் முடிவில் மனைவியை இறக்கிவிட, "வண்டியை நீ எடுத்துட்டுப் போ. நான் ஈவ்னிங் கிளம்பும் போது வந்து வாங்கிக்கிறேன்."
"ஆஃபீஸ் முடிஞ்சதும் கால் பண்ணு. சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்."
புரியாது விழித்தவள், "உனக்கு எப்ப முடியும்.?"
"எனக்கு முன்ன பின்ன ஆகும். டைமிங் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம். பிரச்சனை இல்ல. பாய் பொண்டாட்டி!" என்றவன் விடைபெற, "கீர்த்தி."
சற்றே நிதானித்தவன், "ம்ம்.."
"ஒரு விஷயம். கொலிக்ஸ்கிட்ட மேரேஜ் விஷயத்தைச் சொல்லி இருந்தேன். ரிஸப்ஷன் எதுவும் இங்க வைக்கலயானு கேட்டு இருந்தாங்க. சோ.. சின்னதா கெட் டூ கெதர் மாதிரி அரேஞ்ச் பண்ணலாம்னு நினைக்கிறேன்." எனப் பாதியில் நிறுத்த, "பண்ணிட்டாப் போச்சு!" என்று புன்னகைத்தான் சத்தி.
"உன்னோட ஃப்ரெண்ட்ஸை இன்வைட் பண்ணுறதுனா, பண்ணிக்கோ."
"ம்ம்.. எப்படி செய்யலாம்னு எனி ஐடியா?"
"நான், ஸ்டார்கிட்ட பேசி இருக்கேன். அவ பார்த்துப்பா."
"ஓகே, அமௌண்ட் எவ்வளவு தேவைப்படும்?"
"இதை செய்யலாம்னு முடிவு பண்ணது நான்தான? சோ, நானே பார்த்துக்கிறேன். நீ சும்மா கலந்துக்கிட்டா போதும்!"
"பொம்மை புருஷனா வந்து நில்லுடானு சொல்லுற. அப்படிதான.?"
அவனை ஆழ்ந்து பார்த்தவள், "இஷ்டம் இல்லனா, போ!" என்றுவிட்டு நகர, "ஹேய்.. பொண்டாட்டி பொண்டாட்டி!" என அவளின் கைப்பற்றி நிறுத்தினான்.
"பப்ளிக் பிளேஸ்ல கொஞ்சம் டீசெண்டா தான் நடந்துக்கோயேன்.?" என்ற மேகவியின் பார்வை அவன் பிடித்திருந்த கரத்தின் பக்கம் திரும்பியது.
"பொது இடத்துல பொண்டாட்டி கையைப் பிடிக்கிறது இன்டீசெண்ட் இல்ல, சரியா? அப்புறம் பொம்மை புருஷனா இருக்கிறதுல, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. சத்யகீர்த்தி, அட் யுவர் சர்வீஸ் எனிடைம்!" என முன் பக்கமாய் குனிந்து அவளிடம் உரைத்தவன் தலையசைப்பில் விடைபெற்று செல்ல, அனிச்சையாய் மலர்ந்த புன்னகையோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள் மங்கை.