• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 20

Vishakini

Moderator
Staff member


மையல் 20



மேகவியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழிகளைத் திருப்பும் பொழுதெல்லாம், அழகாய் வடித்த சிலை போல உயிர் கொண்ட மனிதர்களின் அசைவுகளே பார்வையில் தென்பட்டது. ஒவ்வொருவரும் குறை சொல்ல இயலா அளவிற்கு நேர்த்தியாய் உடுத்தி, அதற்கு தக்கபடி ஒப்பனை செய்து இருந்தனர்.



தோழிக்கான உடைத் தேர்வு முதல் விருந்து உணவு வகைகள் வரை அனைத்தையும் பொறுப்பேற்று கச்சிதமாய் ஏற்பாடு செய்து இருந்தாள்‌ தாரிகா.



விழாவின் நாயகி ஆலிவ் வண்ண பிண்ணனியில் மயில் கழுத்து நிறத்தில் பூ மற்றும் கல் வேலைப்பாடு செய்த புடவையை உடுத்தி இருந்தாள். அவளின் நாயகன், மனைவிக்கு இணையாய் அதே வண்ணத்தில் மேல் சட்டையும், பாலேடு நிறத்தில் கால் சராயும் அணிந்திருந்தான்.



ஒவ்வொருவராய் வந்து வாழ்த்துத் தெரிவிக்க, இன்முகமாய் இருவரும் இணைந்து அதனை ஏற்றுக் கொள்வதைக் காண, இரு கண்கள் போதாது தான்.



புதுமண தம்பதிகள், இணையை அவரவரது விருந்தினர்களிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். பொதுவான பேச்சுகள் மற்றும் நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன‌. அத்தோடு கல்யாண கதையும்.



"சொல்லாம கொள்ளாம திடீர்னு மேரேஜ் பண்ணீட்டீங்க, ஏன்.?‌" என்று வந்தவர்கள் எழுப்பிய வினாவிற்கு, மேகவியின் இயல்பான குணத்தால் 'நடந்ததை இவர்களிடம் பகிர வேண்டுமா?' என அவள் புன்னகையில் சமாளித்துக் கொண்டிருக்க, அப்பொறுப்பை ஏற்று சத்தியே பதில் அளித்தான்.



எவ்வித பொய்மையும் கலக்காது, "வீட்டுல பேசி முடிச்சிட்டாங்க‌. பெரியவங்க விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல முடியாம அவ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா!" என நடந்த நிகழ்வை அப்படியே ஒப்புவித்தான்.



"நீங்க எப்படி சார்.?" என்று மறுவினா எழுந்திட, "எனக்கு‍, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!" என பதில் வந்தது.



அவனது ஒவ்வொரு பேச்சிற்கும், கூச்சல் தான்.



உண்மையில் சென்னைக்கு வந்த பின்னர், சத்யகீர்த்தி தனது நேர்மையான குணத்தால் பெண்மையின் மனக் கதவைத் தட்டி உள்ளே நுழைந்து விட்டான்‌ என்றுதான் சொல்ல வேண்டும்.



அவனின் இந்த நேர்மையானது ஓரிடத்தில் தவறிவிட்டது எனத் தெரியவந்தால் மங்கையின் நிலை என்னவாகும் என்பதை, காலம் மட்டுமே அறியும்.



"கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் தமிழ் போல..

அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல.."



என மெலிதாய் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.



தோழியின் அருகே வந்த தாரிகா, "க்ளௌட் டான்ஸ் பண்ணலாமா.?"



மேகவி திகைத்து, "என்ன விளையாடுறியா.?"



"இது என்ன, ஊருல நடக்குற விசேஷமா? கம்முனு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறதுக்கு. ஹேப்பி ஸ்டீரீட், வீக் எண்ட் பார்ட்டினு என்ஜாய் பண்ணுற கேங் இவங்க எல்லாம். வந்தவங்களை எண்டர்டெயின் பண்ணாம, ரெண்டு பேரும் ஜவுளிக்கடை வாசல்ல இருக்க பொம்மை மாதிரி நின்னு வணக்கம் சொல்லிட்டு இருக்கீங்க?"



"இவ ஒருத்தி. சும்மா இருக்க மாட்டியா நீ?"



"ஹேய்.. இன்னும் ஒரு அரை மணி நேரம் இப்படியே போச்சுனு வச்சுக்க, போர் அடிக்க ஆரம்பிச்சிடும்."



"அப்ப போய் சாப்பிடு."



"அடிப்பாவி, நான் என்ன சாப்பிடவா வந்தேன்.?"



"அப்ப இல்லையா.?"



"எனக்கு, ஒரு நாள் டைம் கிடைச்சிருந்தா போதும். உனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து நல்லா ட்ரைன் பண்ணி இருப்பேன். ஆனா நீதான் ப்ராஜெட் வொர்க் இருக்கு, அது இதுனு கண்ணுலயே படல."



"நீ இந்த மாதிரி ஏதாவது வேலை செய்யிவனு தான்‍, உன்கிட்ட சிக்காம இருந்தேன்." என அவள் முணுமுணுத்தது அருகே நின்றிருந்த சத்தியின் செவியில் விழ, சின்னதாய் சிரித்தான்.



"என்ன ப்ரோ சிரிச்சிட்டு இருக்கீங்க? இவ சரி வர்றது மாதிரி தெரியல, பேசாம கையைப் பிடிச்சு ஆரம்பிங்க."



"எனக்கும் தெரியாது சிஸ்டர்."



"என்ன தெரியாது?"



"ஆடத் தெரியாது."



"அட ராமா! நல்லா ஜோடி சேர்ந்தீங்க. தெரியாதுனா என்ன, கத்துக்கோங்க வாங்க."



சத்தி திகைத்து, "இப்பவா.?"



"எஸ், வெயிட். என்னோட ஆளைப் போய் கூட்டிட்டு வர்றேன். காலேஜ் டேஸ்ல செம டான்ஸர் தெரியுமா அவரு? எங்க மேரேஜ்ல, அவரோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஆடுனது எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு."



"அடிப்பாவி! அவருக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு. இன்னும் முழுசா கியூர் ஆகல. ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு.?"



"இப்ப கொஞ்சம் பரவாயில்ல. லைட் ஸ்டெப்ஸா சொல்லிக் கொடுக்கட்டும்!" என்றவள் இணை நடனம் ஆடுவதற்கு ஏற்றது போல் பாடலை மாற்றிவிட்டு‍, கணவனை அழைத்து வந்தாள்.



"நான் தாரிக்கூட சேர்ந்து ஸ்டெப்ஸ் போடுறேன். நீங்க அப்படியே அதை ஃபாலோ பண்ணிக்கோங்க பாஸ்‌!" என சத்தியிடம் உரைத்து, ஆகாஷ் மனைவியின் இடையில் இடக்கரத்தைப் பதித்து வலக்கையை அவளது கையோடு பிணைத்து மேல்நாட்டு நடனம் போல் ஆடத் துவங்க, விருந்தினர்களில் இருந்த இளையவர்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.



இரண்டு நிமிடங்கள் நடனத்தில் கரைய, "பொண்டாட்டி டிரை பண்ணுவோமா.?‌" என்றான் சத்தி.



"ஏன், இந்த வேண்டாத ஆசை எல்லாம் உனக்கு‌‍?"



"ஆசைப்படுறது தப்பா? வேண்டாம்னா விடு! அதுக்கு ஏன் உன்னோட டோன் இப்படி சேஞ்ச் ஆகுது?" என உரைத்தவன் மற்றவர்களை ரசிக்கத் துவங்கிட, கணவனிற்கு ஓய்வைக் கொடுத்து விட்டுச் சிறிது நேரத்தில் தோழியின் அருகே வந்தாள் தாரிகா‌.



"க்ளௌட்."



"வந்துட்டியா திரும்பவும்?"



"ஹேய்.. உனக்காக நான் உடம்பு சரி இல்லாத மனுஷனை இழுத்துட்டு வந்து ஆட வச்சேன். எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாம, இப்படி கல்லு மாதிரி வேடிக்கை பார்த்துட்டு நின்னா என்னடி அர்த்தம்.?"



"உன்னை மாதிரி கிறுக்குத்தனம் செய்யிறதுல எல்லாம் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லனு அர்த்தம்!"



"எது கிறுக்குத்தனமா.? ப்ரோ உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லி வைங்க. வர வர ரொம்ப பேசுறா இவ."



அவன் சிரித்து, "என்னையே அப்படித்தான் பேசுறா சிஸ்டர்."



"சிஸ்டர்னு வாய்க்கு வாய் கூப்பிட்டா போதுமா? உங்க வொய்ஃப் கிட்ட இந்த நாத்தனாருக்கான மரியாதையை ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க!"



"சரி சரி சொல்லுறேன்!"



"இது ஒன்னும் ஆகுற கதையா தெரியல. நீங்க அவ சொல்லுறதுக்குத்தான் தலை ஆட்டுவீங்க போல‌. ஓ காட்! இந்த அப்பாவி ஜீவனை, இவகிட்ட வந்து மாட்டி விட்டுட்டியே? பாவம் மனுஷன் எப்படித்தான் குடும்பம் நடத்தி பிழைக்கப் போறாரோ? கருணைக் காட்டி அவரைக் கொஞ்சம் காப்பாத்தி விட்டுடு!" என அவள் கண்மூடி கைக்கூப்பி தலையை மேல் பக்கமாய் திருப்பி உரைத்திட,



"ஆமா தெய்வமே பெரிய மனசு பண்ணி என்னைக் காப்பாத்தி விட்டுடு!" என சத்தியும் உடன் இணைந்து வேண்டுதல் வைத்தான்.



இருவரது நடவடிக்கையும் அங்கு இருந்தவர்களிற்கு நகைப்பூட்டும் காட்சிப் படமாய் மாற, மெலிதான சிரிப்பலை எழுந்தது.



மேகவி இருவரையும் முறைத்து விட்டு நகர, கைப்பற்றி தடுத்தான் ஆடவன்.



"என்ன.?"



"கோபமா பொண்டாட்டி?"



"இல்ல, நீங்க செய்யிற கூத்து எல்லாம் பார்த்து நல்லா குளுகுளுனு இருக்கு."



"கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ.?" என தாரிகா சத்தியிடம் குரல் தாழ்த்தி வினவ, "சிஸ்டர் போதும் நீங்க செஞ்சது, இனி நானே பார்த்துக்கிறேனே ப்ளீஸ்?" என்றான் கெஞ்சலாய்.



"ஓகே ஓகே.." என அவள் வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள, "உன்னை டென்ஷன் பண்ணிட்டேனா.?" என்று மனைவியிடம் கனிந்த குரலில் கேட்டான்.



தோழியை ஒரு பார்வை பார்த்த மேகவி கணவனிடம், "அவதான் ஏதோ சின்னப்பிள்ள மாதிரி செய்யிறானா, நீயும் சேர்ந்து ஒத்து ஊதுற?"



"சேச்சே அப்படி எல்லாம் இல்ல. ஒருமாதிரி அமைதியா இருந்த. ஃபங்ஷன்னா நல்லா சிரிச்சு கலகலனு இருக்க வேண்டாமா? அதான் உன்னோட மைண்டை சேஞ்ச் பண்ணலாம்னு டிரை.." எனப் பாதியில் நிறுத்த, "ஆனா, நல்லா செய்யிற நீ!" என்று மிச்சத்தை உரைத்தாள் அவள்.



"என்ன செஞ்சேன்.?"



"ஆளைப்பாரு!" என அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள, மங்கையின் முன்னால் சிறிய அளவிலான பெட்டி ஒன்றை நீட்டினான்.



"என்ன இது?"



"ஓபன் பண்ணி பாரு."



திறந்து நோக்கினாள், ஒரு ஜோடி தங்க மோதிரம் இருந்தது.



மேகவி தலை நிமிர்ந்து அவனைக் கேள்வியாய் பார்த்து, "யாருக்கு?"



"உன்கிட்ட தந்தா, அது உனக்குனு தான அர்த்தம்?"



"பார்றா? என்ன திடீர்னு.?"



"நமக்கு எங்கேஜ்மெண்ட் நடக்கல இல்ல, சோ.. அதோட இன்னைக்கான செலவு எல்லாம் நீதான் செஞ்ச. நான் எதுலயுமே இன்வால்வ் ஆகாத மாதிரி ஃபீல் ஆச்சு. அதான்.." என்றவன் மோதிரத்தை எடுத்து நீட்டி, "வித் யுவர் பர்மிஷன்.?" என அனுமதி வேண்டினான்.



விருந்தினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்திட, "சர்ப்ரைஸ் கிஃப்டா? செம ஆளு ப்ரோ நீங்க!" என்று அவனின் அருகே வந்து பாராட்டு வாசித்தாள் தாரிகா.



"தேங்க்ஸ் சிஸ்டர்!" என அவளிற்கு மறுமொழி தந்து விட்டு, மனைவியை கேள்வியாய் நோக்கினான்.



"போட்டு விடவா பொண்டாட்டி?"



சுற்றிலும் ஆட்கள் இருக்க மறுக்க இயலாது போனது அவளிற்கு. அத்தோடு மறுப்பு சொல்லவும் தோன்றவில்லை.



"நமக்கு மேரேஜ் ஆன அன்னைக்குப் பிரபோஸ் பண்ணும் போது, இப்படி தான் பிரபோஸ் பண்ணுவாங்களானு கேட்ட இல்ல? இன்னைக்கு ரிங்கோட கேட்கிறேன், இந்த பிரபோஸல் ஓகேவா.?"



அவனை வியப்புடன் நோக்கியவள், "இன்னுமா அதை ஞாபகம் வச்சிருக்க.?"



"நீ பதில் சொல்லலையே பொண்டாட்டி.? ஓகேவா இது? இல்லேனா முட்டி போட்டு, 'ஆர் யூ வில்லிங் டூ ஷேர் யுவர் லைஃப் வித் மீ'னு கேட்கணுமா.?"



"என்னமோ இது அமெரிக்காவோ சைனாவோ இல்ல முட்டி போட்டு பிரபோஸ் பண்ணுறதுக்கு. அந்த மாதிரி இங்க செஞ்சா, சுத்தி இருக்கிறவங்க பார்த்து சிரிச்சிடுவாங்கனு சொன்ன.?"



"என்ன பொண்டாட்டி, சொல்லிக் காட்டுறியா?"



"அப்படித்தான் வச்சுக்கோயேன்!"



"இப்ப சுச்சுவேஷனைப் பார்த்தா, அதுல தப்பு எதுவும் இல்லனு தோணுது. யாரும் சிரிக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்!" என்றவன் முழங்கால் இடுவதற்காக வலது காலை சற்றே மடக்க, "கீர்த்தி, நோ!" எனக் கணவனின் கைப்பற்றித் தடுத்தாள் மேகவி.



"என்ன.?"



"எனக்குத் தெரியும், உனக்கு இதுல எல்லாம் உடன்பாடு இல்லனு. பிடிக்காத ஒன்னை செய்யாத."



"ஏன்? உனக்குப் பிடிக்கும் தான இது.?"



"நான் ஒன்னும் டீன்ஏஜ் பொண்ணு இல்ல. இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் எக்சைட் ஆகுறதுக்கு. இப்பனு இல்ல, இனிமேல் எப்பவுமே உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் ஃபோர்ஸ் பண்ணிக்காத."



"உனக்காக கூடவா பொண்டாட்டி?"



"எஸ். நானுமே அந்த மாதிரி செய்ய மாட்டேன். சோ, நீயும் செய்யாத!" என அவள் உறுதியாய் உரைத்திட, புன்னகையுடன் மோதிரத்தைக் கண்களால் காட்டினான்.



மேகவி தனது கரத்தை நீட்டிட, மோதிர விரலில் அணிவித்தான். அவளும் போட்டுவிட, சில நிமிடங்கள் கைத்தட்டலிலும் கூச்சலிலும் வீடு கலகலத்தது.
 
Top Bottom