• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8


பீட்சாவை பார்த்து விட்டு கெட்டுப் போன உணவு என்று பயந்த இந்திர ராவணன் அடுத்த நிமிடம் வீட்டின் அருகில் இருந்த மரத்தின் மீது வேக வேகமாக ஏற தொடங்கி விட்டான்..


உடனே அவனைப் பார்த்து விட்டு பயந்து போனாள் சீதா..


அடுத்து என்ன பண்ண போறான்னு தெரியலையே தேரை இழுத்து தெருவுல விட்டுருவான் போலருக்கு இவனை வீட்டில் வச்சிருக்கிறதே பெரும்பாடு போல.. என வாய்க்குள் திட்டிக்கொண்டு வேகவேகமாக அவன் பின்னே ஓடி வந்தாள் அவள்..


அவனும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருந்த முருங்கை இலைகளை பறித்தான்..


அதே போல் பக்கத்தில் இருந்த தூதுவளை செடியில் உள்ள இலைகளை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அவள் அருகில் வந்து நின்றான்.


இவன் மரம் ஏறும் லட்சணத்தை பார்த்தா குரங்குகள் எல்லாம் அவமானத்தில் சூசைட் செய்து செத்து விடுமே அந்த ரேஞ்சுக்கு மிக வேகமாக மரம் ஏறி இறங்குகிறானே எங்க ட்ரெய்னிங் எடுத்திருப்பான் இவன்..?? என்று சம்பந்தமே இல்லாமல் அந்த நேரம் பார்த்து அவளுடைய மனம் குதர்க்கமாக யோசித்தது..


"என்ன பெண்ணே அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாய் முதலில் இதை கையில் வாங்கு",என்றவன் அவளின் கையை இழுத்து பிடித்து அதில் இலைகளை திணித்தான்.


" வாய்க்கு ருசியாக பீட்சா வாங்கி வச்சா அதை திங்க விடாமல் செஞ்சிடுவானோ ?? இந்த இலை தலை எல்லாம் கொண்டு வந்து கையில் திணித்திருக்கிறானே என்ன பண்ண போறான் இப்போ ?? ", என்று அவனையே உற்று நோக்கினாள் அவள்..


அங்கே ராவணனின் கண்களோ சுற்றும் முற்றும் அலை பாய்ந்தது.


" ஹலோ சார் என்ன தேடறீங்க இதுக்கு மேல நீங்க ஏறுறதுக்கு எங்க வீட்ல எந்த மரமும் இல்ல இருந்த இரண்டு மரத்திலும் ஏறி இறங்கிட்டிங்க இதுக்கு மேல என்ன தேடிட்டு இருக்கீங்க இந்தர் சார்", என்று கேட்டாள் கிண்டலாக.


அவன் பதில் எதுவும் கூறவில்லை ஆனால் பக்கத்து வீட்டிலிருந்த வாழை மரத்தை பார்த்துவிட்டு வேகமாக சுவர் ஏறி குதித்தான்.


" டேய் டேய் இப்படி மரம் மரமா சுவர் சுவரா ஏறி குதிக்கிறியே என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல?? நில்லுடா", என்று அவள் கத்துவதைக் கூட பொருட்படுத்தாமல் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தவன் வேகமாக இருந்த வாழை இலையை சர்ரென்று அறுத்துவிட்டு வந்தான்.


ஒரு கையில் அதை பிடித்துக் கொண்டு மறுகையால் அவளை வேகமாக இழுத்து வந்தவன் அடுப்படிக்கு சென்றான்.


பார்வையால் அவன் எதையோ தேடுவதை பார்த்துவிட்டு,


" என்ன இந்தர் என்ன தேடிட்டு இருக்க??"


" இங்கே ஆட்டாங்கல் அம்மிக்கல் என்று எதுவும் இல்லையா??"


" அம்மிக்கல்லா?? அது எங்க இங்க இருக்கு?? எதுவும் அரைக்கணுமா சொல்லு நான் அரைச்சு தரேன் மிக்ஸி இருக்கு"


"மிஷியா?? அது யாரு ?? ஆள் வைத்து அரைக்க சொல்வீர்களோ??"


" வெளங்கிடும்.. உனக்கு விளக்கம் கொடுக்கிறதுக்குள்ள என் நெஞ்சே வெடிச்சிடும்.. அதனால் இப்போ உனக்கு விளக்கம் குடுக்குற அளவுக்கு எனக்கு நேரம் இல்ல என்ன செய்யணும் சொல்லு", என்று அவள் கேட்கவும் அவன் ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்கினான்.


உடனே அவன் சொன்னது போலவே மிளகு சீரகம் சோம்பு வெங்காயம் என்று அனைத்தையும் வைத்து நன்றாக ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டாள்..


விறகடுப்பில் சமைக்கிறேன் என்று ஒற்றை காலில் நின்றவனை சமாதானப்படுத்தி ஒரு வழியாக அவன் கண் முன்னாடி கேஸ் சிலிண்டரை ஆன் செய்து அதில் பாத்திரத்தை வைத்தாள்.


"என்ன விந்தை இது இந்த உலகமே விசித்திரமாக தான் இருக்கிறது குதிரைகள் இல்லாத ரதங்கள் வேகமாக தெருவில் ஓடுகிறது ரதத்தில் இருக்க வேண்டிய சக்கரங்கள் அனைத்தும் அந்தரத்தில் சுழல்கிறது.. போதாத குறைக்கு இதோ அக்னி பகவான் இங்கே சொடக்கு போட்ட நேரத்தில் வருகிறான்.. பெரும் விந்தையாக அல்லவா இருக்கிறது பெண்ணே", என்றான் ஆச்சரியத்தோடு.


"நீ வியந்தது போதும் விஷயத்துக்கு வா", என்று அவள் சொன்னதும்..


பிறகு அரைத்ததை எல்லாம் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போட்டு முருங்கைக் கீரை தூதுவளை என்று எல்லாவற்றையும் வைத்து சூப் போல தயாரிக்க தொடங்கினான் ராவணன்.


பாக்குறதுக்கு பைத்தியம் மாதிரி இருந்தாலும் சமைக்க தெரியும் போலருக்கு இவனுக்கு என்று அதிசயமாக அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்..


சில நிமிடங்களில் ஆவி பறக்க அந்த மணமணக்கும் சூப்பை எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி அவள் கையில் திணித்தான்..


சூடு தாங்காமல் கையை உதறினாள் சீதா..


உடனே அவளருகில் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தான் ராவணன்..


" சீதா என்ன ஆச்சு கையில் காயம்ப்பட்டு விட்டதா?? மிகவும் சூடாக இருந்ததா??", என்று அக்கறையோடு கேட்டு அவளின் கைகளை பற்றிக் கொண்டான்.


மயிலிறகால் வருடுவது போல் அவளின் உள்ளங்கைகளை தன் விரல்களால் வருடி கொடுத்தான் ராவணன்..


உடனே தண்ணீரால் அவளின் கைகளில் கழுவி விட்டான்..


உதடுகளை குவித்து உஃப் உஃப் என்று ஊதி விட்டான் அவன்.


கொதிக்கும் கோப்பையை கையில் பற்றிய காரணத்தினால் லேசாக எரிச்சல் ஏற்பட்டது ஆனால் இப்பொழுது அவன் காட்டிய அக்கறையில் அந்த எரிச்சல் தானாக மாயமாகி இருந்தது அவளுக்கு..!!


ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி பதறுகிறானே நம் மீது என்ன அவ்வளவு அக்கறையா இவனுக்கு?? என ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் ஆனால் அவன் விழிகளோ அவளின் கையை பார்த்துக் கொண்டிருந்தது பதட்டமாக..!!


அவள் விரல்களை அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டவள் "இப்போ எனக்கு ஒன்னும் இல்ல எல்லாம் ஓகே தான்", என்றாள்.


மீண்டும் அந்த கோப்பையை கையில் எடுத்து கொண்டு அவனையும் அந்த கோப்பையையும் மாறி மாறி ஒரு பார்வை பார்த்தாள்..


அக்கறையெல்லாம் ஓகே தான் இவன் காட்டுற அக்கறைக்காக நம்ம உயிரை அடகு வைக்க முடியுமா ?? என்று யோசித்தாள்..


இவனை நம்பி இதையெல்லாம் குடிக்கலாமா இல்லை குடித்து ஏதாவது வயிற்றுக்கு கேடு வந்து விடுமோ என்று அஞ்சியவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள்..


" நன்றாக இருக்கும் குடித்து பாரு சீதா உனக்கு நிச்சயமாக இது பிடிக்கும் உடலுக்கும் மிகவும் வலிமை மிகுந்தது இந்த முருங்கை கீரை.."


சந்தேகத்தோடு ஒரு வாய் அருந்தியவள் அதன் பிறகு ஆச்சரியத்தில் விழி விரித்து பார்த்தாள் அவனை..!!


சும்மா சொல்லக்கூடாது இவ்வளவு நல்லா ருசியா செஞ்சிருக்கானே இவனுக்கு நல்லா சமைக்க வேறு தெரியும் போலருக்கே.. நான் கூட என்னவோ நினைச்சேன்.. சும்மா சொல்லக்கூடாது கலக்கிட்டான் இந்த இந்திர ராவணன் என்று மனதிற்குள் அவனை மெச்சி கொண்டாள்.


" நன்றாக இருக்கிறதா?? இப்பொழுது உனக்கு பசியாறி விட்டதா??", என்று கேட்டான் அவன்.


"ம்ம்", என தலையாட்டி விட்டுக் கொடுத்த சூப்பை மிச்சம் வைக்காமல் மொத்தமாக குடித்து முடித்து விட்டாள் அவளே..


பிறகு அவனும் கொஞ்சம் அருந்திவிட்டு உறங்க சென்றான்.


ஹாலில் இருந்த சோபாவில் படுக்கப் போன இந்திர ராவணனை பார்த்து..


" இங்க தூங்க வேண்டாம் ஹாலில் ஃபேன் இல்ல அப்படியே இந்த ஃபேன் ஓடினாலும் சரியா காத்து வராது அதனால நீ ரூம்ல வந்து படுத்துக்கோ.. நான் கீழ படுத்துக்கிறேன்", என்று அவனை பெட்டில் உறங்க சொன்னாள்.


" இல்லை பெண்ணே எனக்கு இந்த மஞ்சத்தில் உறங்குவதில் அத்தனை விருப்பமில்லை நீயே உறங்கு நான் தரையில் படுத்து கொள்கிறேன்"


என்ன ஓவரா சீன் போடுறான்?? ஒருவேளை நல்லவன் மாதிரி நடிக்கிறானோ என்று ஓரகண்ணால அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,


" பரவால்ல நீ மேலேயே தூங்கு நான் கீழே படுத்துகிறேன்", என்று அழுத்தமாக சொல்லி அவனை பெட்டில் படுக்க சொல்லி விட்டு அவள் தரையில் போர்வை விரித்து உறங்க முயற்சி செய்தாள்..


இந்த பைத்தியக்காரனை வீட்டில் வைத்திருப்பது சரியா தவறா என்று கூட தெரியவில்லை வீட்டில் விஷயம் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்று அதை பற்றியும் இன்னொரு பக்கம் யோசித்து அவள் பயம் கொண்டாள்..


நிச்சயமாக அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக திட்டுவார்கள்.. முன்பின் அறியாத எவனோ ஒருத்தனை வீட்டில் கூட்டிட்டு வந்து வச்சிருக்கியா அதுவும் பைத்தியக்காரன்னு வேற சொல்ற ஏதாவது உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா ?? அப்படின்னு கேக்குறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.. சொல்ல முடியாது கோவமா கிளம்பி நேரா வீட்டுக்கு வந்தாலும் வந்துடுவாங்க இந்த விஷயத்தை இப்போதைக்கு அம்மாக்கிட்ட சொல்ல வேணாம் சொன்னால் டென்ஷன் ஆவாங்க என்று நினைத்துக் கொண்டு அவள் கண்களை மூடி உறங்க தொடங்கினாள்..


நள்ளிரவு 12 மணி..


நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சீதா.


அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அவளின் இடையை சுற்றி ஒரு இரும்பு கரம் வளைத்தது..!!


இடையில் அழுத்தமாக பதிந்திருந்த கரங்களும் கழுத்து வளைவில் பலமாக சூடான மூச்சுக் காற்று படவும் திடுக்கிட்டு போய் கண்விழித்தாள் சீதா.


தூக்கத்தில் கெட்ட கனவு கண்ட பிறகு இறுக்கமாக அருகில் படுத்திருக்கும் தாயை அணைத்துக் கொள்ளும் சிறுபிள்ளை போல அவளை இறுக்கமாக அணைத்தபடி படுத்திருந்தான் ராவணன்..


" டேய் கையை எடுடா என்னடா பண்ணிட்டிருக்க டேய்...", கலவரத்தோடு ஒலித்தது அவளுடைய குரல்.


" மேலே சுழன்று கொண்டிருக்கும் அந்த சக்கரம் என் தலை மீது விழுந்து விடுமோ என்று மிகவும் பயமாக இருக்கிறது சீதா எனக்கு உறக்கமே வரவில்லை.. அதனால்தான் பயத்தில் நான் இங்கே வந்து விட்டேன்.."


" ஏது சக்கரம் மேல சுழலுதா?? என்னடா சொல்ற??", என்று தூக்க கலக்கத்தோடு கேட்டபடி மேலே பார்த்தால், அங்கே வேகமாக சுழன்று கொண்டிருந்தது சீலிங் ஃபேன்..!!


" அட கருமம் புடிச்சவனே இது ஃபேன்டா இது இல்லாம இங்க எல்லாம் தூங்க முடியாது இவனோட பெரிய இம்சையா போச்சு.. இதைப் போய் ரதத்தில் இருக்கும் சக்கரம்னு சொல்றானே இவன் கிட்ட என்னால பேசவும் முடியல.. இந்த லட்சணத்தில் என்னமோ குழந்தை மாதிரி வந்து கட்டிப்பிடித்து படுத்திருக்கான்.. நிஜமாவே பயந்து போய் கட்டிப்பிடித்தானா இல்ல வேணும்னே ஏதாவது கேம் பிளே பண்ணுகிறானா நல்லவன் போல நடிச்சு??", என்று அவளுடைய மனம் குதர்க்கமாக யோசித்துக் கொண்டே சந்தேக பார்வையோடு அவனை பார்த்தது..


ஆனால் அவனோ கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு பயத்தில் அவளுடைய மார்பில் சிறு பிள்ளை போல் தலை சாய்த்து கட்டியணைத்தபடி படுத்திருந்தான்..!!


- தொடரும்..
 
Top Bottom