• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 1

Vishakini

Moderator
Staff member



தேனாத்தூர்

வாசலில் கட்டிய குலை தள்ளிய வாழை மரங்களும், கமுகு கொப்புகளும் அந்த KSR மண்டபத்தில் விசேஷம் நடப்பதை பிரகடனம் செய்தது.

பட்டுப்புடவையை உடுத்தி மின்னும் அணிகலன்களோடு பின்னலிட்ட கூந்தலில் பூச்சரம் தொங்க வளைய வந்த பெண்களும், பாவாடை சட்டை சரசரக்க இங்குமங்கும் சுற்றியபடி சிறுமிகளும், பரபரப்பாக சுற்றிக் கொண்டும் அரட்டை அடித்தபடி சில ஆண்களும் அங்கு குழுமி இருந்தனர்.

வளைவுகளாக தொங்கிய பூத்தோரணங்களும், பலூன்களின் அலங்காரமும் அந்த மண்டபத்தின் உள்ளரங்கிற்கு இன்னமும் அழகுகூட்டியிருக்க, மங்கல வாத்தியங்கள் தங்கள் பங்கிற்கு அந்த சூழலை இனிமையாக்கிக் கொண்டிருந்தன.

மேடையில் சூழ்ந்திருந்த மெல்லிய புகைக்குள் இருந்து புரோகிதர் கையை உயர்த்தி 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்றபடி சைகையால் காட்டி, 'மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா|கண்டே பத்நாமி ஸுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்' என்று மந்திரம் ஓதியபடி மங்கலநாணை எடுத்து மணமகனிடம் நீட்டினார்.

மலர்ந்த முகத்துடன் அதை வாங்கியவன், அருகிலிருந்த மணமகளின் கழுத்தில் கட்டுவதற்கு எழுந்து அவளருகே நெருங்கி வந்து கட்ட, கண்களில் அலைப்புறுதலோடு இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் லேசாக அவனது விரல்படவும் கைமுஷ்டிகளை நன்றாக இறுக்கி தன்னைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

அந்த மேடையில் நெருக்கியபடி அவர்களை சுற்றி நின்றவர்களில் நடுத்தரவயது உறவினர் ஒருத்தி, "பொண்ணு இதுக்கே இவ்ளோ பயந்து நடுங்குனா, அப்றம் மத்ததெல்லாம் எப்படி..," கேலியாகப் பேசிச் சிரிக்க, சுற்றியிருந்தவர்களும் நகைத்தனர்.

"ஹேய்! சும்மா இரு" என்று அந்த உறவினளை மென்னகையுடன் அடக்கிய நாத்தனார்முறை முடிச்சிட வந்த அமுதா, மணமகன் கட்டிய தாலியில் அவள் முறைக்கான முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள்.

தாலி கட்டி முடித்ததும் தன்னவளின் முகத்தைப் பார்த்த மணமகன், இன்னமும் இயல்புக்கு வராத அவளது வதனம் கண்டு புருவங்கள் சுருங்க யோசனையானான்.

அவனது சிந்தனையை தொடரவிடாமல் அடுத்தடுத்த சடங்குகள் அரங்கேற, அனைத்திலும் வெளிப்படையாக மற்றவர்களுக்கு தெரியாத அளவில் அவள் காட்டிய விலகலை நன்றாக உணர்ந்தவன் சிந்தனை, அவளைப் பெண் பார்க்கச் சென்ற தினத்தில் வந்து நின்றது.

அன்று..

இரு வீட்டாருக்கும் சம்மதம் என்ற நிலையில் எல்லா பொருத்தமும் அம்சமாக அமைந்திருக்க, பெண் பார்க்கும் படலம் தொடங்கி சம்பிரதாய பேச்சுகள் முடியவும், "என் பையன், பொண்ணுகிட்ட பேசனும்னு சொன்னான்" சிறு தயக்கத்துடன் கூறினார் அவனது தாய் துளசி.

பெண்ணின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேகமாக உள்ளே சென்ற விசாலம், சிறிது நேரத்தில் ஒரு அறையை காட்டி, "அவ அங்க தான் இருக்கா. போய் பேசுங்க மாப்ள." பவ்யமாகச் சொல்லி அனுப்பினார்.

அவருக்கு ஒரு புன்னகையை தந்தவன், மெதுவாக எழுந்து தாயிடம் தலையசைத்து திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைய, ஜன்னலருகில் நின்றிருந்தவள், அவன் வருவதைப் பார்த்து விரைத்தாள்.

அதைக்கண்டு, "ஹே ரிலாக்ஸ்! " புன்சிரிப்புடன் சொன்னவன் 'என்னை பிடிச்சிருக்கா?' என அவன் கேட்க வருவதற்குள், "எனக்கிந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. என்னை பிடிக்கலைனு வெளியே போய் சொல்லிடுங்க. ப்ளீஸ்." கெஞ்சலான பார்வையில் கேட்டாள் அவள்.

சில நொடிகள் என்ன பேச என்று தெரியாமல் விழித்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு," எதனால பிடிக்கலைனு தெரிஞ்சுக்கலாமா? யாரையாவது.." நிதானமாகக் கேட்க,

"கல்யாணம் வேணாம்னு சொன்னா உடனே அதான் காரணமா? எனக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்கு கல்யாணமே பிடிக்கலைனு சொல்றேன். இதுல அதான் குறை," சற்று எரிச்சலாகக் கூறினாள்.

"அப்ப என்ன ரீஸன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? உங்க ஃப்ரெண்ட் மாதிரி நினைச்சு சொல்லலாம்." பெருந்தன்மையாக அவன் கேட்டதும் அவனை ஏற இறங்கப் பார்த்தவள்,

"எனக்கு இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி ஃப்ரெண்ட் எல்லாம் தேவையில்லை. எனக்கு மேரேஜ் எல்லாம் இன்ட்ரெஸ்ட்டே இல்ல. நான் சொன்னா, என் அம்மாப்பா கேட்க மாட்டீன்றாங்க. ப்ளீஸ்! அதனால நீங்களே என்னை பிடிக்கலைனு சொல்லிடுங்க." மீண்டும் தனது பிடியில் நின்றாள்.

அவளை சுவாரஸ்யமாக பார்த்தவன், "வெல்! உங்க ஸ்டாண்டை கொஞ்சம் கன்ஸிடர் பண்ணலாமே? பிகாஸ் ஐ லைக் யூ." சிரிப்பு மாறாமல் அவன் சொல்ல அவனை கடுமையாக முறைத்தாள் அவள்.

"ஆனா உங்க 'லைக்'குக்காக எல்லாம் என்னோட எண்ணத்தை மாத்த முடியாதே. நான் சொல்றத தான் கேட்க மாட்டீன்றாங்க. நீங்களே என்னைப் பிடிக்கலைனு சொல்லிட்டா, என் ப்ராப்ளம் சால்வ்ட்." அவளது பிரச்சனையைப் பற்றியே பேசினாள்.

அவளையே ஆராய்ச்சியாக பார்த்தவன் வெளியே செல்ல எத்தனிக்க, கதவருகே சென்றவனிடம் " எனக்கு பதில் சொல்லாம போறீங்க." என்று நினைவூட்டினாள் அவள்.

அவளை நிதானமாக திரும்பிப் பார்த்தவன்,"உனக்கு பிடிக்கலைனா நீதான் பேசி இதை நிறுத்தனும். அதுக்காக என்னால பொய் சொல்ல முடியாது." அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றுவிட,

'எனக்கு உன்னை பிடித்திருக்கிறது அதனால் நீ சொன்னதை செய்ய முடியாது' என்று அவன் சொன்னதன் பொருள் புரிய அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.

வெளியே வந்தவன் தனது சம்மதத்தை சொல்ல, 'இந்த புள்ள என்னென்ன பேசி வைக்கப் போறாளோ!?' என்று அதுவரை பதைபதைக்க நின்றிருந்த அவளது தாய் விசாலம்' தாயே மாரியாத்தா! இந்த கல்யாணம் நல்லபடியா முடிந்ததும் உனக்கு பால்குடம் எடுக்கிறேன் தாயி.' பரவசத்தில் மாரியம்மனிடம் மனு போட்டு விட்டார்.

அதன்பிறகு கல்யாண வேலைகள் விரைந்து நடக்க, அவளது பிடித்தமின்மையை ஒரு பொருட்டாக சல்லிபைசாவிற்கு கூட யாரும் மதிக்கவில்லை.

அதன் விளைவாக இன்று திருமணத்தில் அவள் அதைக்காட்ட, அன்று நடந்த நிகழ்வின் நினைவுச் சுழலில் சுழன்றிருந்தவனை, உறவினர் ஒருத்தி உலுக்கி அவனது சிந்தனையை கலைக்க, 'அவளிடம் பேச வேண்டும்' என்பதை மட்டும் மனதில் குறித்துக் கொண்டான்.

மணமக்களுக்கான விளையாட்டுகள்
தொடங்கியது. மஞ்சள் நீர் நிறைந்த குடத்தில் இருந்த மோதிரத்தை எடுக்கச் சொன்னபோது குடத்தில் கையை விட்டவள், கவனமாக அவன் கைமீது படாதவாறு உள்ளேயே வைத்துக் கொண்டாள்.

இருவரும் அடித்து பிடித்துத் தேடவேண்டிய மோதிரத்தை போட்டியே இல்லாமல் எவ்வளவு நேரம்தான் அவனும் துளாவுவான். சட்டென அவன் எடுத்துவிட, "பார்ரா! இப்பயே புருசனுக்காக விட்டுக் கொடுக்கறா!" என்று அதற்கும் ஆச்சரியம் காட்டினர் சுற்றி இருந்தவர்கள்.

அப்பளத்தை ஒருவர் மாற்றி ஒருவர் தலையில் உடைக்கச் சொன்னபோது, அவளது கையிலிருந்த அப்பளத்தை அவனது தலையிலடித்து நொறுக்க வரவும், விளையாட்டிற்காக அவன் பின்வாங்க, அவள் கண்கள் சுருக்கி முறைத்த முறைப்பில் பையன் தலை ஆட்டோமேடிக்காக முன்னால் வந்தது.

"என்னடா அதுக்குள்ள ஒரு பார்வைக்கே பம்மி அடக்கிட்ட. இனி வாழ்க்கை முழுக்க இதான்டி உன் நெலமை." அவனது நண்பர்கள் கேலி பேசி சிரித்து வைக்க, அசடு வழிய சிரித்தான் அவன்.

"இப்படி எல்லாம் சிரிக்காதடா. அப்றம் சிஸ்டர் பார்வையிலேயே பஸ்பம் பண்ணிடப் போறாங்க." அவனது நண்பர்கள் அவனை கேலி செய்ததில் அவளது முகம் ஒரு நொடி இறுக்கம் தொலைத்து இயல்புக்கு வந்ததில் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

அடுத்தகட்ட சோதனை ஆரம்பமானது. இருவரையும் உணவுக்காக அழைத்துச் சென்ற இடத்தில் ஃபோட்டோக்ராபர் அவளை அவனுக்கு உணவூட்டச் சொல்ல, அவள் நிமிர்ந்து பார்த்த பார்வையில் கப்பென்று வாய் மூடிக் கொண்டான் அந்த புகைப்படக் கலைஞன்.

அவளது பிடித்தமின்மையை புரிந்து கொண்டவன் " பரவால்ல விடுங்க." புன்சிரிப்புடன் அதை தவிர்க்கப் பார்க்க, அவளுக்கு சற்று நிம்மதி. சில நொடிகள் கூட அவளது அந்த நிம்மதியை நிலைக்க விடாமல் அதை குலைப்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் அவனது சகோதரி அமுதா.

"அதெப்படிடா அப்படி விட முடியும்? என்னோட கல்யாணத்துல மாமாவுக்கு ஊட்டிவிடச் சொல்லி அவரை தள்ளிப் போக வைச்சு, என்னென்ன ஆட்டம் காட்டுன நீ. அதுக்கெல்லாம் நான் பழிவாங்க வேணாமா? செல்லாது!செல்லாது! நீ ஊட்டும்மா. பார்த்துக்கலாம்." என்றாள்.

சகோதரியை பரிதாபமாக பார்த்தவனை கண்டு பொங்கிச் சிரித்த அமுதா, மணமகளை ஊட்டிவிடச் சொல்லி வற்புறுத்த, வேறுவழியின்றி ஒரு கவளம் கேசரியை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

"பொண்ணு இதுக்கே இப்படி கூச்சப்பட்டா, அடேய் மாப்ள உன் பாடு திண்டாட்டம் போ!" அதற்கும் பகடி பேசி சிரித்தனர் அவர்களை சுற்றி இருந்த உறவுப் பெண்களும் நண்பர்களும்.

அவளை மேலும் சிரமப்படுத்தாமல் அவனது வாயருகே கொண்டு வந்த கேசரியை அவனே வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். அதற்கும் ஒரு வெடிச்சிரிப்பு கிளம்பியது.

தற்போது அவனை ஊட்டச் சொல்லி அவர்கள் வற்புறுத்த, அவளது முகம் பார்த்தவன், அதில் இருந்த உணர்வற்ற தன்மை கண்டு தயங்கினான்.

ஆனால் இதெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் என்றுணர்ந்து கேசரியை கையில் எடுத்து அவள் இதழ்களுக்கு அருகே செல்லவும் அவளும் அதேப்போல வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள்.

ஒருவழியாக பட்டும் படாமலும் இருவரும் ஊட்டிக் கொள்ள, அத்தனை நேரமும் அவனருகில் இருப்பதில் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதைப் போல இருந்தாள் அவள்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க, அவன் அருந்திய டம்ளரை அவளிடம் நீட்டவும், அதைப்பெற்றவள் அவன் இதழ்கள் படாத இடத்தில் வைத்து குடிப்பதாக பாவ்லா செய்து தந்து விட்டாள்.

இருவருக்குமிடையில் கண்ணுக்கு புலப்படாத விலகலோடு இப்படியே ஒருவழியாக மாலை வரவேற்பும் முடிந்துவிட, பெண் வீட்டிற்கு திரும்பிய மணமக்களின் இரவு சடங்கிற்காக அறையை தயார் செய்திருந்தனர்.

அவளை மிதமாக அலங்கரித்து, "ராசாத்தி! தேவதை மாதிரி இருக்கற. மாப்ள மனசு கோணாம நடந்துக்கடி. லூசு மாதிரி எதையாவது பேசி வைக்காதே." விசாலத்தின் அறிவுரையோடு மேலும் சில எச்சரிக்கைகளும் அறை வாசலை அடையும்வரை அவள் காதுகளில் அடைத்து அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டாள் அவள்.

அவளிடம் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தவன், அவள் உள்ளே வந்ததும் அவளருகே வர,"கிட்ட வராதீங்க. அப்றம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது." அடக்கப்பட்ட குரலில் காட்டமாக அவள் மிரட்ட, அப்படியே நின்றான் அவன் அகத்தியன்.

அவனிடம் ஓரெழுத்து கூட பேசாமல் நேராகச் சென்று கட்டிலின் மறுபக்கம் சென்று ஒரு ஓரமாக தன்னைக் குறுக்கி படுத்துக் கொண்டாள் அவள்.

அதைக்கண்டு பெருமூச்சுடன் ஆயாசமாக தலையசைத்தவனது 'அவளுடன் பேச வேண்டும்' என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து, அவளது கோபம் குறைந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற முடிவோடு மற்றொருபுறம் அவனும் படுத்துக் கொண்டான்.

மின்விசிறியின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இன்றி அமைதியாக இருந்த அந்த முதலிரவு அறைச்சூழலில் இருவரும் உறங்காமலே படுத்திருந்தனர்.

அவனுக்கு முதுகுகாட்டி படுத்திருந்தவளின் ஜாக்கெட் இல்லாத வெற்று முதுகுப்பகுதியில் திடீரென லேசான தீண்டலை உணர்ந்தவள், சடாரென திரும்பி காம்பஸ் பாக்ஸில் இருக்கும் டிவைடரை வைத்து ஓங்கிக் குத்தி இருந்தாள் அவள் தமிழ்மொழி.
 
Top Bottom