• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 22

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 22

"அகரன்!" என்ற குரலில் காரிடாரில் தன் நண்பன் தருணுடன் சென்றவன் திரும்பிப் பார்க்க, ஜன்னலருகே நின்றிருந்தாள் அமிர்தா.

"என்ன அம்மு? உங்களுக்கும் தண்ணி பிடிக்கனுமா?" தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே வந்தவன் அவளுக்கும் சேர்த்து பிடித்து வரச் சொல்லி அழைக்கிறாளோ என்ற சந்தேகத்தில் கேட்டான்.

"அதில்ல" என்றவள், "சரி, நீங்க போயிட்டு வாங்க." தயக்கத்துடன் சொல்ல வந்ததை முழுங்கி விட்டு நகர்ந்து விட, தனது தண்ணீர் புட்டியை தருணிடம் கொடுத்தவன், "நீ போயிட்டு இரு. நான் வந்துடறேன்டா." சொல்லி விட்டு உள்ளே வந்தான்.

தண்ணீர் புட்டியுடன் வெளியே சென்ற அகரனை கவனித்த முத்ரா, கையில் புட்டி இல்லாமல் உள்ளே வந்ததோடு நேராக அமிர்தாவிடம் செல்ல, புருவங்கள் சுருக்கி கவனத்தை அங்கு குவித்தாள்.

"சொல்லுங்க அம்மு. என்ன விசயம்? எதாவது பிரச்சனையா? தயங்காம சொல்லுங்க." அவளது தயக்கம் கண்டு சற்று பரபரப்பாகவே அகரன் கேட்க, அதெல்லாம் இல்லை என மறுத்தாள் அவள்.

"ஸாரி! உங்கள ரொம்ப தொல்லை பண்றேன்னு நினைக்கிறேன். எனக்கு இன்னமும் யார்கூடவும் க்ளோஸ் ஆக முடியல. அதான், " அவனையே எப்போதும் அழைப்பதில் சற்று சங்கடமாக உரைத்தாள் அமிர்தா.

முதல் நாளிற்கு பிறகு அவளது மனம் அவனிடம் மட்டுமே நம்பிக்கை கொண்டிருக்க, அகரனின் நண்பர்கள் அவளிடம் இயல்பாக பேசினாலும் அவளும் இயல்பாக பேச முயன்றாள். அவ்வளவே!

நாட்களும் மாதங்களாக நகர்ந்து, ஏறக்குறைய வருடமே முடியப் போகும் தருவாயிலும் அவளால் இன்னமும் அகரனைப் போல யாரிடமும் தனது தேவையை, கேள்விகளை வெகு சுலபமாகக் கேட்டு விட முடிவதில்லை.

அவனும் அவளிடம் பொறுமையாக சிலமுறை எடுத்துச் சொல்லி பார்த்து விட்டு, அவளாக தன் கூட்டை விட்டு வெளியே வராமல் எதுவும் மாறாது என்ற எண்ணத்தில் விட்டு விட்டான்.

அன்றொரு நாள் இயற்பியல் வகுப்பில் ஆசிரியர் தேர்வு சொல்லி இருக்க, வீட்டில் படிப்பதற்காக அமர்ந்து எத்தனை முட்டியும் அவளால் அதை முழுதாக முடிக்கவில்லை. அந்த நேரம் அவளது நினைவிற்கு வந்தது அகரன் தான்.

மறுநாள் வகுப்பிற்கு வந்தவள் மதிய உணவிற்கு பிறகு தேர்வு என்பதால், அவளுக்கு புரியாத பாடத்தைப் பற்றி அவனிடம் கேட்க, அவனும் வெகு சிரத்தையுடன் அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.

மற்ற மாணவிகளும் அவளிடம் பேசுவார்கள். இருப்பினும் அவள் அவர்களிடம் பேசும்போது ஒவ்வொரு சொல்லையும் கவனமாக கோர்த்து பேச சிரமப்படுவாள். அதுவே அகரன் என்றால் அவளுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.

அவள் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்வான் அத்தோடு அதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை தன்மையாக அவளுக்கு சொல்லிக் கொடுப்பான். அதனால் அவள் தனது தயக்கத்தை தாண்டி உதவி என எதிர்பார்ப்பது அகரனிடம் மட்டுந்தான்.

தற்போது கூட கணிதம் அவளுக்கு சற்று கடினமாக இருப்பதாக தந்தையிடம் அவள் சொல்லி கலங்கிய போது, "அடுத்து +2வே வரப் போகுதேம்மா. எதாவது ட்யூஷன் வேணும்னா போடலாமா? எங்கே நல்லா சொல்லித் தர்றாங்கன்னு உன் ஃப்ரெண்ட்ஸ்ட்ட கேட்டுச் சொல்லுடா" என்றவரிடம் சரியென்று விட்டாள்.

அவள் பேசக்கூடிய சில மாணவிகளிடம் கேட்டுப் பார்க்க அந்த ட்யூஷன் எல்லாம் கும்பலோடு கோவிந்தா போடும் ட்யூஷன் சென்டர்களாக இருக்க அவளுக்கே அதில் விருப்பமில்லை. இதில் தந்தையிடம் எங்கே அதைப்பற்றி கூறுவாள்!?

அதனால் கடைசியில் அகரனிடம் கேட்டுப் பார்க்க விரும்பினாள். காலையிலிருந்து வகுப்புகள் இடைவிடாது இருக்கவும், அவனிடம் ஆலோசிக்க அவளுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை.

மதிய உணவு இடைவேளையில் தீர்ந்து போன தனது தண்ணீர் புட்டியை நிறைக்க அவன் கிளம்பியதைப் பார்த்தவள் ஜன்னல் வழியாக வேகமாக அவனை அழைத்து விட்டாள்.

ஆனால் அவனை தொல்லை செய்து விட்டோமோ என்று தயங்கியவள் சொல்ல வந்ததை விழுங்கி விட்டாள். அவளது தயக்கம் உணர்ந்து அவன் உடனே வந்து விடவும் மிகவும் இதமாக உணர்ந்தாள்.

"சொல்லுங்க அம்மு. எதாவது ப்ராப்ளமா?" அவன் மீண்டும் கேட்டதும் தான் அவனை அழைத்தது நினைவில் வர தனது சிந்தனையில் இருந்து வெளி வந்தவள், "ப்ராப்ளம் எல்லாம் இல்ல அகரன். எனக்கு நல்லதா ஒரு மேத் ட்யூஷன் இருந்தா சொல்றீங்களா?" எனக் கேட்டாள்.

அவன் யோசனையாக பார்க்கவும், "இல்ல ஃப்ரெண்ட்ஸ்ட்ட கேட்டேன். அவங்க எல்லாம் ட்யூஷன் சென்டர் மாதிரி சொல்றாங்க. நான் மத்த சப்ஜெக்ட் எல்லாம் மேனேஜ் பண்ணிடுவேன். அதனால மேத்ல மட்டும் தனி அட்டென்ஷன் இருக்கற மாதிரி ட்யூஷன் பார்க்கறேன். அதான்," அவனிடம் கேட்டதற்கான காரணத்தை விளக்கினாள்.

"இதைக்கேட்க இத்தனை தயக்கம்! இத்தனை விளக்கம்! இன்னும் மாறவே இல்லை. நல்ல பொண்ணு போங்க." தலையசைத்து சிரித்தவன்,

சில நொடிகள் யோசித்தவன், "எனக்கு அப்படி எதுவும் தெரியாதே. நான் தருண்ட்ட வேணும்னா கேட்டு சொல்லவா?" எனக் கேட்க சரியென தலையசைத்தவள் மீண்டும் தயங்கினாள்.

"இப்போ என்ன!?" அவளது தயக்கத்தை புரிந்து கொண்டவன் கேட்க, " இல்ல, நீங்க மேத்க்கு என்ன பண்றீங்க? அதாவது எங்கே ட்யூஷன் போறீங்க? ஏன்னா, எப்பவும் மேத்ல நல்ல மார்க் எடுக்கீங்களே அதான் கேட்டேன்." அவளை தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற வேகத்தில் விளக்கமும் கூறினாள்.

"நான் ட்யூஷன் எல்லாம் போகல. எங்கம்மாவே எனக்கு சொல்லிக் கொடுப்பாங்க. தெரியாததை யூ டியூப்ல பார்த்துக்குவேன்." சிரிப்புடன் பதிலளிக்க 'ஓ'போட்டவள் எந்த சேனலில் பார்க்கிறான் என்பதை எல்லாம் கேட்டு குறித்துக் கொண்டாள்.

அவளிடம் பேசிவிட்டு அவன் திரும்புவதற்குள் தருண் அகரனின் தண்ணீர் புட்டியையும் நிறைத்து கொண்டு வந்து விட்டான். அவனிடம் நன்றியை சொன்ன அகரன் அடுத்து வந்த வகுப்புகளில் தன் கவனத்தை செலுத்தினான்.

கடைசி வகுப்பு முடிந்த பிறகு அகரன் தன் நண்பனுடன் பேசியபடி கிளம்பிச் சென்றுவிட, கிட்டத்தட்ட வகுப்பில் இருந்த அனைவருமே வெளியேறி விட்டனர். அமிர்தா மட்டும் தனது பொருட்களை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவள் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள்.
 
Top Bottom