• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 25

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 25

இரு தினங்களுக்கு முன்பு..
மாலை வகுப்பு முடிந்ததும் அகரனுடன் கிளம்பிச் சென்ற தருண் தனது இயற்பியல் புத்தகத்தை மறந்து விட்டதாகச் சொல்லித் திரும்பி வகுப்பை நோக்கி வந்தான்.

வரும் வழியிலேயே எதற்கும் பையில் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனது பையில் தேடிக் கொண்டே வர சரியாக வகுப்பின் வாசலில் நுழைவதற்கு முன்பாக பையின் மற்றொரு அறையில் நோட்டுகளுடன் அந்த புத்தகம் கலந்து இருந்தது தெரிய வந்தது.

"ச்சே! ஒழுங்கா தேடாம கொஞ்ச நேரத்துல டென்சன் ஆகிட்டியே தருணே. இது இல்லனா ட்யூஷன்ல அந்த சார் அட்வைஸ் பண்ணியே ஒருவழியாக்கிடுவாரு." தன்னைத் தானே திட்டியபடி திரும்பியவன்,

வகுப்பின் ஜன்னல் வழியாக சற்று சத்தமாக அகரனின் பெயர் கேட்கவும் அப்படியே நின்று விட்டான். அதுவும் சரியாக முத்ரா "அகரன் என் ஆளு." அமிர்தாவிடம் பேசத் தொடங்கியதை கேட்க நேர்ந்த தருண்,

"இந்த பைய எங்கிட்ட கூட ஒரு வார்த்த சொல்லலையே. இருக்கட்டும் பார்த்துக்கறேன்." மனதிற்குள் சொல்லி கொண்டிருக்கும் போது, அதன்பின் அமிர்தாவை முத்ரா கேவலமாக பேசிய அனைத்தையும் கேட்டவனுக்கு அமிர்தாவை எண்ணி பாவமாக இருந்தது.

அவனுக்கு தெரிந்தவரை அமிர்தா பயந்த சுபாவம் உள்ளவள், யாரிடமும் சட்டென பழக முடியாத குணம். ஏதோ அகரனிடம் தான் சற்று இலகுவாக இருக்கிறாள் அதையும் இப்படி கேவலமாக பேசுகிறாளே இந்த முத்ரா என்றிருந்தது.

முத்ராவின் மிரட்டலைக் கேட்ட தருண் அமிர்தாவை பரிதாபமாக எண்ணிவிட்டு இது பெண்கள் விசயம், அதுவும் அந்த திமிர் பிடித்த முத்ராவிடம் எதற்கு வம்பு என்றெண்ணி அதில் தலையிட வேண்டாமென சென்று விட்டான்.

ஆனால் அகரனும் முத்ராவும் விரும்புவதாக சொன்னது அவனுக்கு புதிய செய்தி. தனது நண்பன் இந்த விசயத்தை தன்னிடம் மறைத்து விட்டான் என்றெண்ணி அவன்மீது மனத்தாங்கல் கொண்டான். அகரனாக சொல்லாத போது அவனிடம் தானாகச் சென்று எதையும் கேட்கவும் கூடாது என்றிருந்தான்.

அடுத்து வந்த நாட்களில் அமிர்தா உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்ததன் காரணம் தருணுக்கு மட்டும் தெரியும். அகரன் அவளது தோழியிடம் சென்று கேட்டபோது தான் அவனிடம் வாய் திறந்தான் தருண்.

"அமிர்தா ஏன் வரலைனு உனக்கு தெரியாதா? உன் ஆளு பேசுன பேச்சைக் கேட்டா அந்த மாதிரி சாஃப்ட் ஆன பொண்ணு மனசு எல்லாம் தாங்குமா?" வெடுக்கென்று கேட்டு விட்டான்.

"என்னடா உளர்றே? யாரு என் ஆளு? எனக்கு அந்த மாதிரி விசயம் எல்லாம் பிடிக்காதுனு இத்தனை மாசமா எங்கூட பழகற உனக்கு தெரியாதா?" சற்று கோபமாகவே அகரன் கேட்க, தருண் விழித்தான்.

"அப்ப முத்ரா உன் ஆளு இல்லையா? நீயும் அவளும் லவ் பண்ணலையா?" குழப்பத்துடன் தருண் கேட்க அவனை எரித்து விடுவது போலப் பார்த்த அகரனிடம் நடந்ததை விளக்கமாக சொல்லி விட்டான்.

"ஓஹோ! அதான் சாரு ரெண்டு நாளா எங்கிட்ட ஒழுங்கா முகம் கொடுத்து பேசலையோ!?" கோபமாகக் கேட்ட அகரனிடம் சங்கடமாக பார்த்து மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்தான் தருண்.

அதன்பிறகு அகரன் முத்ராவிடம் சென்று பேசிய கதை நாம் அறிந்ததே.
தற்போது அகரனிடம் நட்புக்கரம் நீட்டிய முத்ராவின் செயல் தருணுக்கு சந்தேகத்தை கிளப்ப, அகரன் சொன்ன மாதிரி இருக்குமென அவன் நம்பிவிடவில்லை.

பள்ளிக்கு வந்தநாள் முதல் அவளைப் பற்றி தெரிந்து கொண்ட தருணுக்கு அகரன் பேசியவுடன் திருந்தக்கூடிய குணம் அவள் கிடையாது. எதற்கும் அகரனிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என குறித்துக் கொண்டான்.

அமிர்தா மீண்டும் பள்ளிக்கு வந்த பிறகு அகரனிடம் பேசுவதை அறவே நிறுத்திக் கொண்டாள். எதுவாயினும் மற்ற தோழிகளுடன் அவள் பேசிக் கொள்ள, எப்படியோ அவள் மற்றவர்களிடம் சகஜமாக பழகினால் போதுமென அகரனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அகரன் படிப்பிலும் ஆளுமையிலும் கெட்டி என்பதால் அவனைத்தான் வகுப்பு தலைவனாக நியமித்து இருந்தார் ஆசிரியை தேவிகா.

முழு ஆண்டு தேர்வுகள் நெருங்கும் சமயம் ரெக்கார்ட் நோட் பற்றிய சந்தேகங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் என அனைத்தும் அவனிடம் தான் சொல்ல வேண்டும்.

நித்யாவிடம் சொன்ன பொய்யை உண்மையாக்க முத்ரா இந்த விசயத்தை பயன்படுத்திக் கொண்டாள்.

ஆசிரியரை பார்ப்பதற்காக அகரன் வகுப்பை விட்டு வெளியேறும் சமயம், சரியாக இவளும் பின்னாலேயே சென்று வேண்டுமென்றே அவனிடம் ஒன்றுமில்லாத கேள்விகளைக் கேட்டு சிறிது நேரம் தனித்து பேசுவாள்.

அதை தூரத்தில் இருந்து கவனிக்கும் நித்யாவிடம், " அவங்கூட எப்பவுமே யாராவது இருக்கறதால தனியா பேசவே முடியல அதனால 'இந்த மாதிரி நான் தனியா வெளியே போற சமயம் நீ டவுட்டு கேட்கற மாதிரி வா'னு அவன் எங்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கான்." முதலிலேயே போட்டு வைத்திருந்தாள்.

அத்தோடு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவிகளுக்கும் அகரன் முத்ராவை விரும்பும்(!?) விசயத்தை, "உங்கிட்ட மட்டுந்தான் சொல்றேன். வேற யார்கிட்டவும் சொல்லாதே" என்று படுரகசியமாக வைக்கும் படி நித்யாவை கொண்டு விளம்பரம் வேறு செய்து வைத்திருந்தாள் முத்ரா.

தன்னைச் சுற்றி சுற்றப்பட்ட வதந்தியின் வலையை அறியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான் அகரன். அதன்பிறகு முழு ஆண்டு தேர்வுகளும் தொடங்கிவிட இவர்களது விசயம் சற்று நீர்த்து போய் மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டனர்.

அமிர்தாவிற்கு அகரனுடன் படிப்பு சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்க முடியாமல் அப்படி தப்பித் தவறி அவனுடன் பேசுவதை முத்ரா கண்டு விட்டால் பிரச்சனை ஆகி விடுமோ என்றெண்ணி மிகவும் திணறினாள்.
 
Top Bottom