• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 27

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 27

முத்ரா அகரனை நிறுத்த, நண்பனின் முகம் பார்த்த தருண் அங்கிருந்து அகன்றதும் அகரனிடம் கண்கள் கலங்கி அவள் பேசியதில், "இதுக்கெல்லாம் எதுக்கு கண் கலங்கறீங்க முத்ரா. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல." என்று அவள் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டான் அகரன்.

முத்ராவின் திட்டம் இதுதான். அவளுக்கு ஏற்கனவே ப்ளஸ் ஒன் கெமிஸ்ட்ரி மற்றும் மேத் கடினமாக இருப்பதாகவும், இந்த வருடம் கண்டிப்பா நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் தான் அடுத்து காலேஜ் சென்று படிக்க முடியும் என்று சொல்லி கண்கள் கலங்கினாள்.

"தெரியும் முத்ரா. அதுக்கு நீங்க கொஞ்சம் முயற்சி எடுத்து படிச்சா அதெல்லாம் வாங்கிடலாம். டோன்ட் வொர்ரி." நம்பிக்கையூட்டும் விதமாக அகரன் பேச, "அதில்ல அகரன். அது வந்து.. அதாவது," சொல்வதற்கு அவள் திணற, என்னவென்று சொல்லுமாறு அவன் ஊக்கினான்.

"தினமும் ஸ்கூல் முடிஞ்ச பிறகு ஒரு அரை மணி நேரம் எனக்கு ஃபர்ஸ்ட் லெஸன்ல ஆரம்பிச்சு, என் கூடவே இருந்து சொல்லி கொடுக்கிறியா? நீ சொல்லித் தர்றது நல்லா புரியுதுனு எல்லாரும் சொல்றாங்க." நயமாக கேட்க அவன் தயங்கினான்.

பள்ளி முடிந்த பிறகு தங்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் வரும்வரை சில மாணவர்கள் அங்கேயே இருக்கிறார்கள் தான். இருப்பினும் அவன் தயக்கமாக யோசித்தான்.

அவனை அதிகம் யோசிக்க விடாமல், இமைகளை பிழிந்து கண்ணீர் உகுத்தவள், "இட்ஸ் ஓகே அகரா. நானே இப்பதான் படிக்கலாம்னு நினைச்சேன். ஆனா சொல்லித் தர நீ இவ்ளோ யோசிக்கிற. உனக்கு விருப்பம் இல்லாம எனக்காக செய்ய வேணாம் விட்டுடு." என்றாள்.

படிப்பில் ஆர்வம் வந்து கேட்பவளுக்கு தன்னாலான உதவியை செய்யவில்லை என்றால் அவன் மனசாட்சியே அவனை மன்னிக்காது.

அதனால்," இதுக்கெல்லாம் கண் கலங்காதீங்க முத்ரா. எனக்கு ஓகே தான். நான் நாளையிலிருந்தே உங்களுக்கு சொல்லித் தர்றேன். நமக்கு டைம் ரொம்ப இல்ல." சம்மதித்து விட்டான்.

தனது திட்டம் சரியாக செல்கிறது என்பதில் உள்ளுக்குள் பொங்கிய ஆனந்தத்தை மறைத்தவள், "அப்றம், நீ எனக்கு சொல்லித் தர்றதை யார்கிட்டவும் சொல்லாத அகரா. ப்ளீஸ்!" லேசான தயக்கத்துடன் சொன்னவளை அவன் புரியாமல் பார்க்க,

"இல்ல, என்னவோ எல்லாரும் என்னை தத்தி மாதிரி பார்க்கற ஃபீல் ஆகும். அதனால ப்ளீஸ் யார்கிட்டவும் சொல்லாத அகரா." விளக்கம் வேறு அவள் அளிக்க, தோள்களை குலுக்கி சரியென்றான்.

அரையாண்டு தேர்வுகள் நெருங்குவதற்குள் அவளுக்கு அனைத்து பாடங்களையும் கற்றுக் கொடுக்க எண்ணி அவன் திட்டமிட, அவளோ நித்யாவிடம் சொன்னதை நிஜமாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் நித்யாவிடம், "நேத்து நான் சொன்னதை நீ நம்பலை தானே?! இன்னிக்கு சாயந்தரம் நீ கிளம்பி போற மாதிரி போயிட்டு கொஞ்சநேரம் கழிச்சு திரும்பி வந்து நம்ம க்ளாஸ் தாண்டி இருக்கற ஸ்டெப்ஸ் கிட்ட பாரு. அப்ப நம்புவ நீ." கெத்தாகச் சொன்னவள்,

"வேணும்னா டீச்சர்ஸ்க்கு தெரியாம நீ பேக்ல மறைச்சு வச்சிருக்கிறியே அந்த ஃபோன்ல ஃபோட்டோ கூட எடுத்துக்கோ. நோ அப்ஜெக்ஷன்." தோள்களை குலுக்கிச் சொல்ல, புருவம் உயர்த்திய நித்யா தலையசைத்தாள்.

அன்றைய வகுப்பு முடிந்து கிளம்பும் போது தருண் அகரனை அழைக்க,"நீ போ தருண் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு." அவள் கேட்டுக் கொண்டதால் முத்ராவிற்கு பாடம் சொல்லித் தருவதை மறைத்து அவனை அனுப்பி விட்டான் அகரன்.

சிலர் மட்டுமே வகுப்பில் மீதமிருக்க, அகரனை தனியா அழைத்தவள் அன்று பேசிய அதே இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கலாம் என்கவும்,

ஏற்கனவே மற்றவர் முன் கீழாக நினைக்கப்படுவோமோ என்று பயந்தவள் அதனால் தனியாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள் போல என்றெண்ணிக் கொண்டான் அகரன்.

அவள் சொன்னது போல கீழாக செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்து அகரன் பாடம் சொல்லத் தொடங்க அவனுக்கு வலபுறமாக அமர்ந்திருந்த முத்ரா, அவன் சொல்வதை கர்மச் சிரத்தையுடன் எழுதுவது போல பாவ்லா காட்டியபடி தோழி வருகிறாளா என்று அரைக்கண்ணில் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நித்யா காரிடாரில் வருவது தெரிந்ததும், அதுவரை எழுதிக் கொண்டிருந்தவள் திடீரென கையைப் பிடித்துக் கொண்டு அலற, குனிந்து புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அகரன் என்னவோ என்று பதறினான்.

உடனே, "கை சுளுக்கிடுச்சு அகரா!" வலியில் துடிப்பது போல அவள் நடிக்க, "என்ன! திடீர்னு எப்படி!? எங்க கையைக் கொடுங்க. பார்க்கறேன்." அவளை குணமாக்கும் பொருட்டு அவளது கையைப் பற்றியவன் இப்படி அப்படி திருப்பிப் பார்க்க, வலி குறைந்ததாக தெரியவில்லை.

"இப்போ வலி இங்க மாறிடுச்சு அகரா! ஆஆ!! அம்மா!!.. "வலி வலது தோள்பட்டையில் இருப்பதாக முணங்கியவள் அலற, அவளது வலக்கரத்தை அவனது வலக்கரத்தால் பிடித்து இருந்தவன் சட்டென இடக்கரத்தால் அவளது தோள்பட்டையைப் பற்றினான்.

அவளது வலது தோள் பட்டையை தன் இடக்கரத்தால் பற்றி அழுத்திக் கொடுத்து அவளை குணமாக்க அவன் முயன்று கொண்டிருக்க, பக்கவாட்டில் இருந்து பார்ப்பதற்கு அந்த நிலை அவன் அவளை முத்தமிடுவது போலவும்,

அவன் அழுத்தியதில் இதமாவது போல அவள் நடித்தது, வேறு மாதிரி உணர்வாகவும் நித்யாவின் அலைபேசியில் புகைப்படமாக பதிந்தது.
 

ஷமீம்

Active member
முத்ரா இந்த வயதில் இவ்வளவு கெட்ட எண்ணம், தந்திரம் செய்து அகரனுக்கு கெட்ட பெயரும் பிரச்சினையும் ஏற்படுத்த போகிறாள்..
 
Top Bottom