• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 28

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 28

"என்ன அகரா தினமும் உன் ஆளோட ஒரே ஜாலியோ ஜிம்கானா தான் போல!? படிக்கட்டுல பலான படம் நடக்குது போலயே!" கண்கள் சிமிட்டி ஒரு மாதிரி புன்னகைத்து கேட்ட பிரனீத்தின் கேள்வியில் அகரனுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது.

பிரனீத் காமர்ஸ் குரூப் பையன். முத்ரா பெரிய இடத்து பெண் என்பதை தெரிந்த பிறகு அவளுக்கு தீவிரமாக நூல் விட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் அவளது திமிர் பார்வை கூட அவன்மீது விழாத புகைச்சலில் இருக்கிறான்.

ஏற்கனவே காமர்ஸ் குரூப் மாணவர்களுக்கு சயின்ஸ் குரூப் மாணவர்கள் என்றாலே பிடிக்காது. இதில் அவன் ரூட்டு விடும் முத்ராவை அகரன் காதலிப்பதாக அவள் பரப்பிய வதந்தி தற்போது காமர்ஸ் குரூப் வரை வந்து விட்டது.

'என்னமோ அவன்தான் உலகத்துலேயே நல்லவன் மாதிரி சீன் போடுறான்' என்று அகரன் மேல் ஏற்கனவே அவன் கொண்ட வன்மத்தீ தற்போது இன்ஸ்டாவில் பார்த்த அவர்களது புகைப்படத்தால் பற்றி எரிந்தது.

"உண்மை என்னன்னு தெரியாம அநாவசியமா வார்த்தைய விடாத பிரனீத். நல்லதுக்கு இல்ல." நடந்த விபரீதம் தெரியாமல் அடக்கப்பட்ட கோபத்தோடு அகரன் கொதிப்பாக கூற, அவன் அட்டகாசமாக சிரித்தான்.

மாணவர்களுக்கு அடுத்தடுத்து சுற்றுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அரையாண்டு விடுமுறையில் ஒருநாள் சுற்றுலாவாக அனைத்து ப்ளஸ் டூ மாணவ மாணவிகளை தீம் பார்க் அழைத்து வந்திருக்க, அங்கு அகரனை தனியாக கண்டதும் தன் வன்மத்தை கொட்டி விட்டான் பிரனீத்.

"பார்ரா!! உங்க விசயம் தான் போன வருசத்துல இருந்தே உன் க்ளாஸ்க்கு தெரியுமாமே. ஆனா அது இந்தளவு இருக்கும்னு எனக்கு தெரியாதுபா. செய்றது எல்லாம் செய்துட்டு உனக்கு கோபமெல்லாம் வருதா!?" நக்கலாக சொல்லி சிரித்தவன்,

"ஒன்லி அது மட்டும் தானா? இல்ல சம்பவம் எல்லாம் முடிஞ்சதா? ஏன்னா இந்த ரெண்டு மாசமா எல்லாரும் கிளம்புன பிறகு நீங்க அடிக்கற கூத்து தான் ஹாட் டாபிக் ஆகிடுச்சு." தன்னருகே இருந்தவனிடம் ஹை ஃபை கொடுத்து அட்டகாசமாக சிரித்தான் பிரனீத்.

எல்லை மீறிய கோபத்துடன் அகரன் அவனை அடிக்கப் பாய, சரியாக அங்கே வந்து தடுத்த தருணிடம் "என்னை விடுடா. அவனை.."என்று திமிறிய அகரனை தனியே இழுத்துச் சென்றான் அவன்.

அப்போதும் விடாமல் பிரனீத் அகரனை கேவலமாக பேசிக் கொண்டிருக்க, அது காதில் விழாத தூரத்திற்கு இழுத்து வந்த தருணிடம், "விடு தருண். அவனை அடிச்சா தான் எனக்கு கோபம் அடங்கும். உண்மை என்னன்னு தெரியாம அபாண்டமா என்ன பேச்சு பேசறான் அவன்." எனக் குதித்தான் அகரன்.

"அதான் நானும் கேட்கறேன். என்ன உண்மை? எங்கிட்ட கூட நீ இதுவரை சொல்லலை இல்ல," நிதானமாக தருண் கேட்க, அதிர்ச்சியுற்ற அகரன், "அப்ப அவன் சொன்னதை நீயும் நம்புறியாடா?! " நம்ப முடியாத திகைப்புடன் கேட்டான்.

" ம்ப்ச்! அவன் சொன்னதை கேட்கல. நீ சொல்ற உண்மை என்ன? ஏன்னா சாரு எனக்கும் தெரியாமல்தான் இத்தனை நாளா மறைச்சு வைச்சு இருக்கீங்க. "

"உண்மையில என்ன நடந்துட்டு இருந்தது?" தருண் முறைத்துக் கொண்டே கேட்க, முத்ராவிற்கு பாடம் சொல்லித் தந்ததை உள்ளே சென்ற குரலில் கூறினான் அகரன்.

அவனை ஆன மட்டும் முறைத்தவன், "அவளோட அட்டிட்யூட் சரியில்லனு நாந்தான் முதல்லயே சொன்னேன்ல, அப்றமும் ஏன்டா அவளுக்கு இதெல்லாம் செய்த? நீ செய்த உதவியை அவள் என்ன செய்து வைச்சிருக்கா தெரியுமா?" கோபமாக கேட்டான்.

தருண் சொல்வதை புரியாமல் பார்த்த அகரனிடம், " நாம கிளம்பும் போது என் ஃபோன் கைக்கு வந்ததும் அது என்னனு உனக்கு காட்டறேன்." என்றிட, விசயம் தெரியாமல் தலை விண்ணென்று தெறித்தது அகரனுக்கு.

படிப்பதற்கு உதவியது அவ்வளவு பெரிய குற்றமா!? என்று தான் அதுவரை அவன் நினைத்து இருந்தான். அலைபேசியில் யூ டியூப் பார்த்து படிப்பதோடு அவ்வப்போது பொழுதுபோக்கிற்காக சில ஷார்ட்ஸ் பார்ப்பது மட்டுமே அகரனின் வழக்கம், அதுவும் நேரக்கணக்கோடு.

மற்ற சமூக வலைத்தளங்களில் சென்று விட்டால் நேரம் போவது தெரியாமல் படிப்பில் கவனம் சிதறி விடுமென்று அவனது பெற்றோர் அறிவுரைக்க, சரியென சொல்பேச்சு கேட்டு நடக்கும் நல்ல பிள்ளை அவன். அவனுக்கு அதற்குள் கொட்டிக் கிடக்கும் சில குப்பை விசயங்களை பற்றி எல்லாம் தெரியாது.

அங்கிருந்து எப்போது மாலை வரும் அங்கிருக்கும் அவரவர் பொருட்களோடு தருணின் அலைபேசியும் கைக்கு வருமென காத்திருந்தான் அகரன்.

கிளம்பும் நேரம் வந்ததும் தருணின் பொருட்களுடன் அலைபேசியோடு அவனும் வர, என்ன விசயமென்று அறிய தருணிடம் அலைபேசியை கிட்டத்தட்ட பிடுங்கும் வேகத்தில் அகரன் கேட்க, அலைபேசியில் எதையோ தேடி எடுத்துக் கொடுத்தான் தருண்.

அதை அகரனிடம் நீட்டி, "நீயே பாரு! அவளுக்கு நீ பாடம் சொல்லித் தந்த லட்சணம், எப்படி படமா மாறி கதையா பரவி இருக்குனு, உன் கண்ணை நல்லா தெறந்து வைச்சு பாரு." கடுப்புடன் கூறினான்.

நல்லவனான தன் நண்பனின் பெயர் பலரின் முன்பு பேசுப்பொருளாக மாறியதில் தருணுக்கு அத்தனை கோபமும் கடுப்பும் ஏறியது. அகரன் சொன்ன விசயத்தை தன்னிடம் முன்பே கூறியிருந்தாலாவது அவனை எச்சரித்து இருப்பேனே என்ற குற்ற உணர்வும் ஒருபுறம் இருந்தது.

தருணின் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கிய அகரன் வேகமாக அதைப்பார்க்க, அதில் கண்ட காட்சியில் சிலையென உறைந்து நின்றான்.

அதில் அவளுக்கு பாடம் துவங்கிய நாளில் கை சுளுக்கியதாக அவள் அலற, அவன் அவளது கைப்பிடித்து சரி செய்ததை அவன் அவளை முத்தமிட்டதாகக் காட்டி,

'இவனுக்கு இதுல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் போல..' என்று முத்தச் சத்தத்துடன் ஒரு மார்க்கமான இசையை பிண்ணனியாக வைத்து தனது இன்ஸ்டாக்ரமில் அந்த புகைப்படத்தை ரீல் போட்டிருந்தாள் முத்ரா.
 

ஷமீம்

Active member
பின் விளைவுகளை யோசிக்காமல் சில பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களை தாங்களே இதுபோல் இழிவுபடுத்தி, மற்றவர்களையும் பிரச்சினையில் சிக்க வைத்து விடுகின்றனர் 😡😡
 
Top Bottom