மொழியின் இலக்கணம் நீயடா - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் - 29

அரையாண்டு தேர்வின் கடைசி தேர்வான இயற்பியல் பாடத்திற்கு முன்பான கணிதத் தேர்வு முடிந்து வந்த அகரனிடம் வந்து நின்றான் அவனது வகுப்புத் தோழன் நிர்மல்.

யாரிடமும் அதிகமாக பேசாதவன், தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சுமாரான மார்க் எடுக்கும் மாணவன். அவனுக்கு அனைத்திலும் சிறந்து விளங்கும் அகரன் மீது நல்ல மதிப்பு உண்டு.

"மேத் எப்படி எழுதுன நிர்மல்? ஈஸியா இருந்துச்சா?" புன்னகையுடன் உண்மையாக விசாரித்த அகரனிடம், "பரவால்ல அகரா. உங்கிட்ட ஒன்னு சொல்லனும்." என தொடங்க, அகரன் அவனுடன் தனியாக வந்தான்.

" நீ ரொம்ப நல்ல பையன்னு எனக்கு நல்லா தெரியும். உனக்கும் அந்த பொண்ணுக்கும் செட் ஆகாது அகரா. எனக்கு மனசுல பட்டதை சொல்றேன். தப்பா இருந்தா மன்னிச்சுடு." நிர்மல் சொல்லி விட்டு கிளம்ப எத்தனிக்க, யாரைச் சொல்கிறாய்? எனக் கேட்டு நிறுத்தினான் அகரன்.

"நீயும் முத்ராவும் விரும்பறதா க்ளாஸ் மொத்தமும் தெரிந்த விசயம் உனக்கு தெரியாதா?! " சற்று ஆச்சர்யமாகக் கேட்ட நிர்மலிடம் இல்லையென தலையசைத்தான் அகரன்.

"எல்லா பசங்களும் பண்றது தானேனு யாரும் உங்கிட்ட சொல்லலை போல. அந்த பொண்ணு கூட ஒருத்தி இருப்பாளே அவ தான் எல்லார்கிட்டேயும் சொன்னா. ஆனா நீ இப்படி சொல்ற!!?" என்று குழப்பமாகப் பேசியவன்,

"எப்படியோ நீ சொன்ன மாதிரி உங்களுக்குள்ளே ஒன்னுமில்லனா நல்லது தான். எதுக்கும் இதைப்பற்றி என்னனு விசாரி அகரா. போன வருசத்துல இருந்தே இந்த பேச்சு ஓடிட்டு இருக்கு." ஒரு நண்பனாக அகரனை எச்சரிக்கை செய்தான்.

நிர்மல் சொன்னதையே யோசித்துக் கொண்டு நின்ற அகரனிடம் வந்த தருண் என்னவென்று கேட்க, அவன் சொன்ன விசயத்தை தருணிடம் கூறியவன், "உனக்கும் இது தெரியுமாடா?" என அவனிடம் கேட்டான்.

அகரனை முறைத்தவன், "நல்லா வந்துடும் வாய்ல, முதல்லயே அவ இதே மாதிரி பேசி அப்றம் உங்கிட்ட நான் கேட்டு, நீ அப்படி எதுவும் இல்லனு சொன்னதுக்கு பிறகு இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாதுடா. நான் வேணும்னா பசங்கள்ட்ட விசாரிச்சு பார்க்கறேன்." தருண் மற்றவரிடம் கேட்பதாக சொன்னவன்,

"இரு! அதோ அவ கூட எப்பவும் ஒரு கொடுக்கு சுத்துமே, அது அங்க நிக்குது. நிர்மல் அதைத் தானே சொன்னான். அதுகிட்டேயே போய் விசாரணையை போட்டுடுவோம் வா." அகரனை அழைத்துக் கொண்டு சற்று தள்ளி நின்ற நித்யாவிடம் வந்தான்.

"ஹேய் ஜால்ரா!" என்றழைப்பில் திரும்பிப் பார்த்த நித்யா, அவனை முறைத்து வைக்க, நண்பனை அடக்கிய அகரன், "முத்ராவும் நானும் லவ் பண்றதா க்ளாஸ் மொத்தமும் நீங்க தான் சொன்னீங்களா?" எடுத்தவுடன் நேரடியாகக் கேட்டான்.

அவனது நேர்பார்வையுடனான கேள்வியில் தடுமாறியவள் "நானா சொல்லலை அகரா. அவ தான் எங்கிட்ட அப்படி சொன்னாள்." என்றிட, குழப்பமாக யோசித்த அகரன் எப்போது சொன்னதாகக் கேட்டான்.

"அவ இப்பவரை அப்படித்தான் சொல்லிட்டு இருக்கா. அப்ப அது உண்மை இல்லையா?" சந்தேகமாக அவள் கேட்க இல்லையென தலையசைத்த அகரன் அவளை அனுப்பி விட்டான்.

"அவ ஏதோ கேம் ஆடுறாள்னு நினைக்கிறேன்டா. எதுக்கும் கவனமா இரு. இப்ப அவ கிளம்பி போயிட்டா. அடுத்த எக்ஸாம் முடிஞ்சதும் அவளை தட்டிக் கேட்டு அடக்கி வைச்சா தான் சரி வரும். இல்லனா உன் பேரையே கெடுத்து விட்டுடுவா." கோபத்துடன் தருண் கொதிக்க, அகரனும் அதே சிந்தனையில் தான் இருந்தான்.

அரையாண்டு தேர்வின் கடைசி தேர்வும் வந்தது. பரீட்சை முடிந்த பிறகு சீக்கிரமே சென்று விடும் முத்ராவை நிறுத்தி வைக்கச் சொல்லி நித்யாவிடம் இருவரும் ஏற்கனவே சொல்லி இருந்தனர்.

அதனால் முத்ராவிடம் காரணம் எதுவும் சொல்லாமல் நித்யா அவளை நிறுத்தி வைத்திருக்க, அகரனும் தருணும் அங்கு வந்து சேர, ஆங்காங்கே சிலர் தங்களது விடைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

முத்ராவை நேருக்குநேர் பார்த்த அகரன், "நான் உங்கள எப்பயாவது லவ் பண்றேன்னு சொன்னேனா முத்ரா? ஃபர்ஸ்ட் டைம் இந்த பிரச்சினை வந்தப்பக் கூட எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு உங்கள்ட்ட தெளிவா தானே சொன்னேன்."

"அப்ப 'சரி, புரிஞ்சிடுச்சு'னு எல்லாம் சொல்லிட்டு.. இப்ப இந்த மாதிரி எல்லாம் சொல்லி வைச்சிருக்கீங்க? உங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணுனதை நினைச்சு கோபமா வருது. இத்தோட உங்களோட பேச்சு வார்த்த முடிஞ்சது."

"இனிமே இந்த மாதிரி எதாவது சொல்லிட்டு சுத்துனீங்க அப்றம் உங்கள பற்றி நான் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி இருக்கும். மைன்ட் இட்!" சற்று கோபமாக பேசிய அகரன் தருணை அழைத்துச் சென்றான்.

செல்லும் போதே, " நீ என்னடா இவ்ளோ ஸாஃப்ட்டா பேசிட்டு வர்ற? இதுநாள் வரை உன்னை டேமேஜ் பண்ணி வைச்சிருக்கா. அவளை நல்லா நறுக்குனு நாலு கெட்ட வார்த்தை போட்டு வெளுத்து வாங்காம, " என்றவனை அகரன் முறைக்க,

"ச்சை! உன்னோட பெரிய ரோதனைடா. பொண்ணுங்கள மதிக்கனும் தான், அதுக்குன்னு இந்த மாதிரி சீப்பான ஆட்களை எல்லாம் மதிக்க வேண்டிய அவசியம் இல்ல." ஆற்றாமையோடு புலம்பிக் கொண்டே வந்தான்.

"இதுவரை ரெண்டு பேரும் லவ் பண்றதா சொன்னது எல்லாம் பொய் போல, இவளா திரிச்சு விட்டுட்டு சுத்தி இருக்கா!" என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு சுற்றி இருந்த சில மாணவிகள் முத்ராவை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தனர்.

அதைக்கேட்ட முத்ராவிற்கு அவமானம் பிடுங்கித் தின்றது. "இவளுக்கு எதுக்கு இந்த பொழப்பு! சரியான அலைஞ்சான் கேஸ் போல. இதுல என்னா கெத்தா லுக்கு வேற விடுவாள்."

எல்லா மாணவிகளும் சற்று சத்தமாகவே அவளை எள்ளி நகையாட இதுவரை இப்படியொரு சூழலில் நிற்காத முத்ராவின் மனதில் அகரன் மீது கோபமும் வன்மமும் கொழுந்து விட்டு எரிந்தது.

விடுமுறை நாட்களும் தொடங்கி விட அகரனை எதுவும் செய்ய முடியாமல் நாலைந்து நாட்களாக கொதித்துக் கொண்டிருந்த முத்ராவிற்கு, நித்யாவிடம் ஏற்கனவே அந்த புகைப்படத்தை வாங்கி வைத்து இருந்தது நினைவில் வந்தது.

எல்லார் முன்பும் அவமானப்பட்ட பிறகு பள்ளி சுற்றுலாவிற்கு செல்லும் மனநிலை அவளுக்கு இல்லை.

எப்படியும் எல்லாருடன் அகரன் சுற்றுலா செல்வதை அறிந்தவள் சுற்றுலா தினத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாக்ரமில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு அனைவரும் பார்க்கும்படி குறுஞ்செய்தியும் அனுப்பி விட்டாள்.

தான் சொன்னது பொய் இல்லை என்பதை நிரூபித்த மாதிரியும் ஆயிற்று. அவனது 'நல்லவன்' இமேஜை கெடுத்தது போலவும் ஆயிற்று என்று குரூர திருப்தியுடன் வீட்டில் மகிழ்ந்து கிடந்தாள்.
 

Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.