• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா- 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 3

வேலைகள் அனைத்தும் முடிந்து, டிவியையும் அலைபேசியையும் எவ்வளவு நேரம்தான் பார்ப்பது! அகத்தியனுக்கு மதிய உணவு சமைத்து தருவதால் சமையல் வேலையும் காலையிலேயே முடித்தாயிற்று.

நேரத்தை ஒருவழியாக நெட்டித் தள்ளியவள், மாலையில் அவர்களது குடியிருப்பின் பூங்காவில் சிறிது நேரத்தை கழித்துவிட்டு, இரவு உணவைத் தயாரித்து வைத்து அகத்தியனின் வரவிற்காகக் காத்திருந்தாள்.

திருமணமும் பிடிக்கவில்லை, அவனுடன் தனியாக இருக்கவும் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு மனைவியாக அவனுக்கான அவளது கடமைகளை சரியாகவே செய்தாள் ஒன்றைத் தவிர.

நல்லவேளை! இவர்களது வசிப்பிடம் ஒற்றை படுக்கையறை என்பதால் தனியறைக்குச் செல்லும் அவளது எண்ணம் ஈடேறவில்லை.

அவர்களை தனிக்குடித்தனம் வைத்துச்செல்ல வந்த அவளது பெற்றோரும் இவனது தாயும் கிளம்பிய பிறகு, ஹாலில் படுத்துக் கொள்வதாக அவள் சொன்னதும் அவனது ஆழமான பார்வையில் அவளது வாய் தானாக மூடிக்கொண்டது.

அதை நினைத்து 'லுக்கு விட்டே எல்லாத்தையும் ஆஃப் பண்ணிடறது!' அவனது பார்வையை எண்ணி அலுத்துக் கொண்டு தனது சிந்தனையில் இருந்தவள் இப்போதெல்லாம் அவனைப் பற்றியே அதிகம் சிந்திப்பதை உணரவில்லை.

அழைப்பு மணியோசை அவளை கலைக்கவும் சென்று கதவைத் திறக்க, புனேவின் வாகன நெருக்கடியில் சிக்கி சோர்வாக உள்ளே வந்தான் அகத்தியன்.

எப்போதும் புன்னகை முகமாக இருக்கும் அவனது வதனம் களைப்பினால் வாடித் தெரிய, 'பாவம்! பசியில் இருப்பார் போல.'என அவனுக்காக அவள்மனம் பரிவாக சிந்தித்ததை உணராமல்

சமையலறைக்கு விரைந்த தமிழ், அறைக்குள் சென்ற அகத்தியன் திரும்பி வருவதற்குள் டேபிளில் உணவை தயாராக எடுத்து வைத்தாள்.

அவன் வந்தமர்ந்ததும் அவள் உணவை பரிமாற, "நீ சாப்டியாமா?" அவளை முதலில் கேட்க, பசியில்லை என்றவள் சிறிது நேரம் கழித்து உண்பதாகக் கூறவும், திடீர் வானிலை மாற்றம் போல மனதில் சூழ்ந்த நிரசையோடு தனக்கான உணவை உண்ணத் தொடங்கினான்.

தினமும் இதுதான் நடக்கிறது. என்றாவது ஒருநாள் அவளும் அவனுடனமர்ந்து, இருவரும் இயல்பாக அன்றைய தினத்தைப் பற்றி பேசிப் பகிர்ந்து கொண்டு உணவருந்த வேண்டும் என்ற அவனது ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

எப்போதும் உணவை வைத்துவிட்டு சென்று விடுபவள் சில நொடிகள் அங்கேயே நிற்க, "என்னடா எங்கிட்ட எதாவது சொல்லனுமா?" அவனது சோர்விலும் அத்தனை பரிவாகக் கேட்க,

வழக்கம் போல அவளை புரிந்து கொண்டு உடனே கேட்கும் அவனது அன்பான விசாரணை, தமிழுக்கு தடுமாற்றத்தைக் கொடுக்க"ம்ப்ச்!" என்றபடி அங்கிருந்து அகல விழைந்தாள்.

ஏதோ சொல்வதற்குத் தயங்கி அவள் சொல்லாமல் செல்லவும், அதை அறியும் முனைப்பில் அனிச்சையாக அவளது கையை தன் இடக்கரத்தால் பற்றி நிறுத்தினான் அகத்தியன். அவ்வளவு தான்.

வேகமாக அவளது கையை உருவிக் கொண்டவள் சட்டெனத் திரும்பி அவனது விரல்களை மேல்நோக்கி மடக்கியிருக்க, திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் "ஸ்ஸ்ஸ்ஆ!" வலியில் லேசாக முனகியதும் கனவிலிருந்து வெளிவருவது போல விழித்து பட்டென கையை விட்டாள்.

"ஸாரி!" மெல்லிய குரலில் அவள் கூற, அவன் விரல்களை வளைக்கும் போது அவளது முகத்திலிருந்த உணர்விற்கும், தற்போதைய அவளது முகபாவனைக்கும் இருந்த பெரும் வித்தியாசத்தை கவனித்தவன் யோசனையானான்.

அதற்குள் "ஸாரி! தொட்டு பேசாதீங்க. எனக்கு பிடிக்காது." ஸ்ருதி இறங்கிய குரலில் மீண்டும் மன்னிப்பு கேட்ட தமிழ், அவளது எதிர்வினைக்கான விளக்கத்தை கொடுத்தபடி அமைதியாக நின்றாள்.

அவளது பேச்சில் தன் சிந்தனையில் இருந்து நிகழுக்கு வந்த அகத்தியன், தனது இடக்கரத்தை லேசாக உதறி விரல்களை மடக்கி விரித்து வலியை குறைக்க முயன்றபடி,

"நீ சொல்லாம போறியேன்ற வேகத்துல தான் பிடிச்சுட்டேன். மற்றபடி நானும் இன்டென்ஷனலா பண்ணல மொழி. மன்னிச்சுடு."தனது செயலுக்கு அவன் விளக்கம்தர சில நிமிடங்கள் அங்கே மௌனம் சூழ்ந்தது.

அதை நீட்டிக்க விரும்பாத அகத்தியன் மீண்டும் தனது கேள்வியை கேட்க, அவனிடம் அவள் நடந்து கொண்ட முறையால் சற்று சங்கடமாக உணர்ந்துக் கொண்டிருந்தவள் தற்போதைக்கு இயல்புக்கு வந்தாள்.

"எனக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க போர் அடிக்குது. நான் மறுபடியும் இங்கேயே டீச்சர் வேலைக்குப் போகலாம்னு டிசைட் பண்ணிட்டேன்." என்றாள் செய்தியாக. அவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டாளாம்.

அவள் இயல்பாக பேசத் தொடங்கியதும், பிடிவாதக் குழந்தை போல அவள் கூறிய தோரணையில் அகத்தியனுக்கு இதழ்களில் புன்முறுவல் அரும்பியது.

"சரி, ஆனா லாங்க்வேஜ் ப்ராப்ளம் மேனேஜ் செய்துடுவியாடா? அப்றம் இந்த மிடில் டைம்ல ஸ்கூல்ல வேகன்ஸி இருக்கா என்ன!?" அவளுக்காக யோசித்துக் கேட்டான்.

"அதெல்லாம் விசாரிச்சுட்டேன். 503ல இருக்கற பல்லவி ஆன்ட்டி வொர்க் பண்ற ஸ்கூல்ல ஒரு வேகன்ஸி இருக்காம். என்னைய வந்து பார்க்கச் சொன்னாங்க. அவங்களும் ஸ்கூல்ல சொல்லி வைக்கிறதா சொன்னாங்க." அவள் விசாரித்த விசயங்களை சற்று தன்மையாகவே கூறினாள்.

"உனக்கு என்ன பிடிக்குதோ அதையே செய்மா. ஆனா ஃபினான்ஷியலி நமக்கு பெருசா எந்த தேவையும் இல்ல. உன்னோட மைன்ட் சேன்ஜுக்காக தான் போகப் போற. அதனால உன்னை ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதேடா." அப்போதும் அவளது நலனையே அவன் முன்நிறுத்தினான்.

அவள் செய்த காரியத்திற்கு பிறகும், வெளிப்படும் அவனது அக்கறையும் அன்பும் அவளை அசைக்கச் செய்ய, சில நொடிகள் இமைக்க மறந்து அவனையே கண்டிருந்தாள். ஆனால் அதை உணவில் கவனமாக இருந்த அகத்தியன் கவனிக்கவில்லை.

அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்து அவன் நிமிர்ந்து பார்க்க, அவள் சட்டென இமைதட்டி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவும், புருவங்கள் சுருங்க ஒருநொடி யோசித்தவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.

'என்னடி தமிழ் இப்படி எல்லாம் பார்க்கற? என்னாச்சு உனக்கு!?' தனக்குள் திட்டிக் கொண்டு சத்தமில்லாமல் பெருமூச்சு விட்டபடி தன்னை மீட்டுக் கொண்டாள் தமிழ்.
 
Top Bottom