• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 30

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 30

சுற்றுத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் என்று தொடங்கி முழு நேர வகுப்புகள் வைப்பது குறைந்து விட்டாலும் இடையிடையே வந்த நாட்களில் அகரனின் மீது படிந்த ஏளனமான பார்வைகளும் சொற்களும் அவனை மிகவும் குறுகச் செய்தது.

"எக்ஸாம் அப்ப முத்ராவை இவன் திட்டுனதைப் பார்த்து அவள் தான் அலையறா போலனு நினைச்சா, இவன் இத்தனை மோசமா இருப்பான்னு தெரியலை பாரேன்! இவனைப் போய் நல்லவன்னு நினைச்சேனேடி. "

"நல்லவேளை இவன்ட்ட சிக்காம தப்புச்சேனே. இந்த அப்பாவி அமிர்தா பொண்ணு வேற இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கு. பாவம்! அது என்னிக்கு மாட்டப் போகுதோ!?" சில மாணவிகள் அவன் காதுபடவே பேசியதைக் கேட்டு மனதிற்குள் மருகினான்.

அந்த புகைப்பட விசயத்திற்கு பிறகும் அமிர்தா அகரனிடம் வந்து இயல்பாக பேசியும், சிலமுறை பாடங்களைப் பற்றி விளக்கம் கேட்டும் சென்றதை அவர்கள் தவறாகக் கூறவும் அகரனுக்கு மனம் உடைந்து போனது.

அவர்களின் பேச்சைக் கேட்டபிறகு, அடுத்து அமிர்தா அவனிடம் பேச வந்த போது, "உங்களுக்கு எந்த டவுட்டுனாலும் இதுல பார்த்துக்குங்க அம்மு. எங்கூட பேசறதால உங்க பேரும் தப்பா பேசப்படுறத நான் விரும்பலை." யூ டியூப் சேனல் ஒன்றின் முகவரியை கொடுத்தவன் வருத்தமாக உரைத்தான்.

எல்லாரிடமும் புன்னகை முகமாக உரையாடும் அகரனை தற்போது இப்படி பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அகரன்." அவள் அழுத்தமாகச் சொல்ல அவனது மனம் இதமானது.

அதன்பிறகு யாரிடமும் அவன் அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவன் ஒடுங்கிப் போனதைக் கண்டு முத்ராவின் ஈகோ சற்று சமனப்பட்டது. ஆனால் அவளைக் காணும் போதெல்லாம் தருணிற்கு தான் ஆத்திரமாக வந்தது.

எப்படி இருந்த தன் நண்பனை திட்டமிட்டு இம்மாதிரி நிலைக்கு தள்ளி விட்டாளே. அவளை எதுவும் செய்ய முடியாமல் தன்னை தடுத்து விட்டதற்காக நண்பனையும் திட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் இந்தளவு திட்டமிட்டு அவனை ஏமாற்றிய முத்ராவின் செயலில் அவளை அற்பமாக எண்ணிய அகரன், 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது போல முடிவெடுத்து விட்டான். அவளை திட்டி எதாவது செய்து, தன்மீதான அவளது பழிவெறியை மேற்கொண்டு கூட்ட விரும்பவில்லை அவன்.

"ஏன்டா பொண்ணுங்க போல இப்படி இந்த மாதிரி ரூமர்க்கு எல்லாம் ஒடுங்கி போகற? நீ அன்னிக்கே அவள்ட்ட ஸாஃப்ட்டா பேசி இருக்கக்கூடாதுடா. அவளை நல்லா அசிங்கப்படுத்தி இருக்கனும்." என்று அகரனை இயல்பாக்க தருண் பேச, அவனை அசையாத பார்வை பார்த்தவன்,

"ஒழுக்கம்ன்றது ஆண், பெண் ரெண்டு பேருக்கும் இருக்கனும்டா. அதென்ன பொண்ணுங்க மாதிரினு சொல்ற? அந்த ஒழுக்கத்தை கேள்விக்குறி ஆக்குற மாதிரி இப்படி எல்லாம் நடந்தா, வலிக்கத்தானே செய்யும்." சற்று காட்டமாக கேட்க, தருண் அமைதியாகி விட்டான்.

"என்னை இதுவரை இயல்பா பார்த்த எல்லாரும் இப்ப ஏதோ பொறுக்கி மாதிரி பார்க்கறது.. இட்ஸ் ஹர்ட்டிங்டா! உனக்குப் புரியாது விடு." வலியுடன் அகரன் சொல்ல அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

வகுப்பாசிரியை தேவிகாவிற்கு கூட அகரனின் மாற்றம் யோசிக்கச் செய்யவும் அவனிடம் என்னவென்று அவர் விசாரிக்க, வரப்போகும் பொதுத் தேர்வுகளை எண்ணி பதற்றமாக இருப்பதாகச் சொல்லி விட்டான்.

இது பொதுவாக மாணவர்களுக்கு ஏற்படும் பயம் தானே என்று அவரும் அவனுக்கு பாடங்களை படிக்கும் திட்டமிடல்களும் அதற்கான அறிவுரைகளும் வழங்கினார்.

பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இத்தனை நாட்களும் தொடர்ந்து சுற்றுத் தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் என்று வறுத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க, ஃபேர்வெல் வைக்க முடிவு செய்து அதன்பின் படிப்பதற்கு விடுமுறைகள் என்று அறிவிக்கப்பட்டது.

" ஹப்பா! ஒருவழியா இந்த டென்சன் எல்லாம் முடியப் போகுதுடா. ஃபேர்வெல் முடிஞ்சப்புறம் எக்ஸாம்.. பிறகு பெரிய ரிலீஃப் தான். சரி, ஃபேர்வெல்க்கு நீ என்ன கலர் அவுட்ஃபிட்ல வரப் போற அகரா?" ஆர்வமாகக் கேட்டான் தருண்.

"நான் வர்றதா இல்லடா." என்றவனை ஆன மட்டும் முறைத்து," என்ன வெளாடுறியா?! இத்தனை நாளும் படிப்பு படிப்புனு இருந்த நாம ரிலாக்ஸ் பண்ணத்தான் இந்த ஏற்பாடே செய்றாங்க. அதுக்கு வர்றதுல உனக்கென்ன பிரச்சினை?" தீவிரமாக முறைத்தபடி கேட்டான்.

சில நொடிகள் அமைதியாக இருந்த அகரன்," எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லடா. நீ மத்தவங்களோட என்சாய் பண்ணு. என்னை விட்டுடு ப்ளீஸ்! எனக்கு பிடிக்கல." என்றிட, அவனை கூர்மையாகப் பார்த்தான் தருண்.

"நீ இன்னமும் அந்த பிரச்சனையை மறக்கவே இல்லையா அகரா?" எனக் கேட்டவனுக்கு மௌனத்தை அவன் பதிலாக தர, தருணுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

" நீயென்ன லூசாடா?! இந்த மாதிரி சோஷியல் மீடியால வர்ற விசயம் எல்லாம் கொஞ்சநாள்ல மறந்து போயிடும். அதைப்பற்றி பேசறவங்க எல்லாம் அடுத்து யாராவது விசயம் கிடைச்சா இதை மறந்துடுவாங்க. அதுக்காக உனக்கு கிடைக்கற தருணங்களை நீ இழக்கப் போறியா?" காட்டமாகக் கேட்டான்.

அகரன் அதற்கும் அமைதியாக இருக்க,"உன்னோட நண்பர்களான எங்களைப் பற்றி எல்லாம் உனக்கு கவலை இல்ல. ஆனா உன்னை டீஸ் பண்றவங்க தான் உனக்கு முக்கியம்ல?" என்ற தருணிடம் அப்படியெல்லாம் இல்லை என மறுத்தவன், அன்று வருவதாக சம்மதித்தான்.

நடக்கப் போகும் விபரீதம் தெரிந்து இருந்தால் ஒருவேளை அகரனை இத்தனை வற்புறுத்தி இருக்க மாட்டானோ என்னவோ!


 
Top Bottom