அத்தியாயம் - 32
அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த கணம், எப்போதும் தங்களை பெருமைப்படுத்தி புன்னகையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் மகன், தற்போது நின்ற கோலம் கண்டு பதறி அவனருகில் வர முனைந்த தமிழ்,
"வாங்க ஸார்! வாங்க மேடம்! உங்க பையனால ஸ்கூல் பேரே கெட்டுப் போகும் போல, ஒரு பொண்ணை ரேப் பண்ண ட்ரை பண்ணிருக்கான் ஸார்."தலைமையாசிரியர் காட்டமாக அடுத்து சொன்னதைக் கேட்டு அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள்.
இருவருக்கும் அவர் சொன்ன விசயம் பெரிய அதிர்வைத் தர, "என்ன ஸார் சொல்றீங்க? ரெண்டு வருசமா இங்க தானே படிக்கிறான் அகரனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா ஸார்?" அகத்தியன் கேட்டபடி அகரனைப் பார்க்க, அவன் அமைதியாக நிற்பது வேறு கலக்கமாக இருந்தது.
"என்னாலேயும் நம்ப முடியல தான் ஸார். ஆனா ஹாஃப் ந்யூட்ஆ மயக்கத்துல இருக்கற பொண்ணை, அவன் கிஸ் பண்ணிட்டு இருந்ததை பார்த்ததா சொன்னப்ப எங்களுக்கு எல்லாம் பயங்கர ஷாக்!." அந்த சூழ்நிலையை எண்ணி அதிர்வோடு கூறியவர்,
"அங்க அந்த பொண்ணு இருந்த நிலையும் இவனோட நிலையும் நேர்ல பார்த்தவங்க சொல்லும்போது எனக்கு என்ன சொல்றது'னே தெரியல." மேலும் அவர் சொன்ன தகவல் எல்லாம் பெற்றோருக்கு உறைய வைக்கும் அதிர்ச்சி தான்.
சிறுவயது முதல் பெண்பிள்ளைகளை மதிக்கச் சொல்லிக் கொடுத்து வளர்த்த மகன், இன்று ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்ததையும் அதை கண்ட சாட்சிகளும் இருக்கும் பொழுதும் கூட பெற்றவர்களுக்கு இன்னமும் அதை நம்ப முடியவில்லை.
அதுவும் ஒழுக்கம் என்பது இரு பாலருக்கும் பொதுவானது. பெண்களை மரியாதையுடன் நடத்துபவனே உண்மையான ஆண்மகன் என்றெல்லாம் சிறுவயது முதல் மகனுக்கு சொல்லிச் சொல்லி வளர்த்தி இருக்க, இன்று அதில் இடறிய மகனின் செயல் தமிழை வெகுவாக பாதித்தது.
பாலியல் துன்புறுத்தலால் அவளுக்கு ஏற்பட்ட நிலை, தன் காதல் கணவனுக்காக அதிலிருந்து வெளி வர அவள் கடந்த துன்பங்கள் என அனைத்தும் ஒரு நொடி கண் முன்னே ஓட, மகனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை நினைத்து தமிழின் ஒரு மனம் கலங்கியது.
அதேசமயம் தனது வளர்ப்பு பொய்யாகக் கூடாதே என மற்றொரு மனம் பதைபதைப்புடன் அடித்துக் கொள்ள, அவர் கூறிய அனைத்தும் கேட்ட தமிழ் அகரனை அசையாத பார்வை பார்த்தபடி வந்தவள்,
"அவர் சொல்றது எல்லாம் நிஜமா அகரா? நீ அந்த பொண்ணு சுயநினைவுல இல்லாதப்ப அப்படி செய்தியா? " எனக் கேட்க இப்படியான குற்றச்சாட்டுகளோடு அவனால் தாயை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றான்.
அவளது கேள்வியை மறுக்காத அவனது மௌனமே அவளை மொத்தமாக உடைந்து போகச் செய்தது. அதில் நிலை தடுமாறி அவள் விழப் போக," அம்மா!!"தாயைப் பற்ற வந்தவனை அந்த நிலையிலும் கைகாட்டி விலக்கி இருந்தாள்.
அகத்தியன் அதற்குள் சுதாரித்து மனைவியை தாங்கிப் பிடித்தவர் அவளை வெளியே சென்று அமர வைத்து, " தீர விசாரிக்காம எந்த முடிவையும் எடுக்காத மொழி. நாம அகரன்ட்ட பேசுவோம். நீ இங்கேயே இரும்மா." என்றவர் மீண்டும் உள்ளே சென்றார்.
அகத்தியன் உள்ளே வந்ததும், "ஸார்! இது உங்களுக்கு மட்டும் அதிர்ச்சி இல்ல. எங்களுக்கும் தான். அந்த பொண்ணு ஹாஸ்பிடல்ல மயக்கத்துல இருக்கு. அந்தப் பொண்ணு திடீர்னு மயங்குனதாகத் தான் சொல்லி இருக்கோம். அவங்க பேரண்ட்ஸும் பேனிக்கா தான் இருக்காங்க."
"அந்தப் பொண்ணு கண் முழிச்சதும் விசாரிச்சுட்டு, அவங்க அகரன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கனும்னு எதாவது சொன்னா அவனோட ப்யூச்சர்.. கேள்விக்குறி தான்." தமிழின் மனநிலை உணர்ந்த தலைமை ஆசிரியர் தணிந்த குரலில் தயக்கத்துடன் பேசத் தொடங்கினார்.
மகனை திரும்பி ஒருமுறை பார்த்த அகத்தியன், "அந்த பொண்ணு எந்த ஹாஸ்பிடல்ல இருக்காங்க ஸார்?" நிதானமாகக் கேட்க, அகரன் கண்ணீர் வழிய அப்படியே நின்றிருந்த அவனது நிலையும் அகத்தியனை யோசிக்கச் செய்தது.
மருத்துவமனை பெயரைச் சொன்ன தலைமையாசிரியர், "நீங்க இப்போ அங்க போகாதீங்க ஸார். முதல்ல அந்த பொண்ணு கான்ஷியஸ்க்கு வரட்டும். போலீஸ்னு போனா.. உங்களுக்கு தெரியாதது இல்ல, பொண்ணு விசயம்ன்றதால அவங்க எதையும் யோசிக்க மாட்டாங்க."
"அகரனை அக்யூஸ்ட் ஆக்கிடுவாங்க. போக்சே ஆக்ட் ஸார்! அகரனோட ப்யூச்சர் முடிஞ்சுடும். அங்கிருந்த ஸ்டூடண்ட்ஸ் அன்ட் டீச்சர்கிட்ட கூட இப்போதைக்கு எதையும் வெளியே சொல்ல வேணாம்னு தான் சொல்லி இருக்கேன்."
"இப்பவும் அவன் மேல மிச்சம் இருக்கற துளி நம்பிக்கையில தான் இன்னமும் ஆக்ஷன் எடுக்காம உங்கள கூப்டு பேசிட்டு இருக்கேன். கூட்டிட்டு போய் என்ன நடந்ததுனு நிதானமா விசாரிங்க. நானும் ஒரு தகப்பன் தான் ஸார்." இதுவரை ஆசிரியராக பேசியவர், ஒரு தகப்பனாக இறுதியில் முடித்தார்.
அவர் நினைத்திருந்தால் போலீஸில் அவனைப் பிடித்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால் இத்தனை மாதங்களாக அவனைப் பற்றி அறிந்தவர், அவன்மீது கொண்ட அந்த நம்பிக்கையால் அதைச் செய்யாதவருக்கு நன்றி சொல்லி மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் அகத்தியன்.
வெளியே பென்ச்சில் இடிந்து போய் சுவற்றில் தலை சாய்த்து வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவிக் கண்டு ஆவி துடித்தது அவருக்கு. மகனது நிலையை கருத்தில் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினார்.