• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 34

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 34

மாணவிகள் சொன்னபிறகு அகரன் அமிர்தாவை திரும்பிப் பார்க்க, அவளிருந்த அரைகுறை ஆடை நிலையில் கண்களை சட்டென மூடி மறுபக்கம் திரும்பி விட்டான். தேவிகா அவனது செய்கையை கவனித்துக் கொண்டிருந்தார்.

அமிர்தா மேலே வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்திருக்க, அது அவனது கவனத்தில் பதியவே இல்லை என்பதும் அவளது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமே அவனது மூளையில் நின்றிருக்கிறது என்பதும் அவருக்கு புரிந்தது தான்.

ஆனால் இந்த சூழ்நிலையில் அவனுக்காக பேசினால் சரியாக இருக்காது என்பதால் உடனே தலைமை ஆசிரியரை அழைக்க ஒருத்தியை அனுப்பி விட்டு, மற்றொரு பெண்ணை வேகமாக அமிர்தாவின் ஆடையை சரிசெய்யச் சொன்னார்.

அகரன் நடந்ததை விளக்கிச் சொல்ல முனைய, அதைக்கேட்க யாரும் அங்கே தயாராக இல்லை. அவனை நம்பவும் இல்லை. தலைமை ஆசிரியர் வந்த பிறகு அங்கு கண்ட காட்சியை அவர்கள் சொல்ல அவருக்கும் அதிர்வு தான்.

சென்ற வருடம் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் தொந்தரவு செய்த ஒரு மாணவனைப் பற்றி அவரிடம் புகார் தெரிவித்த அகரன், "அவனால அந்த பெண்ணிற்கு தொல்லை வராதபடி பிரச்சனையை தீர்த்து வைங்க சார்!" என்று கோரிக்கை வைத்தான்.

அப்படிப்பட்டவனைப் பற்றி இதுவரை நல்ல விதமாக மட்டுமே ஆசிரியர்கள் மூலம் கேள்விப்பட்டவருக்கு, தற்போது கண்ணால் கண்ட சாட்சிகளை மட்டும் கொண்டு அவனை குற்றவாளியாக்கி விட மனம் வரவில்லை.

அகரனோ, ஏற்கனவே முத்ராவின் செயலால் உள்ளுக்குள் முடங்கிப் போய் இருந்தவன் தற்போது சாட்டப்பட்ட பெரும் குற்றச்சாட்டில் ஸ்தம்பித்துப் போயிருந்தான்.

அவனால் தன்னை நியாயப்படுத்தக் கூட முடியவில்லை. சுற்றி இருந்த மாணவிகள் முத்ராவிற்கு அவன் முத்தமிட்டதை சொல்லிக் காட்டி அவனை ஒரு பொறுக்கியாகவே சித்தரித்து விட்டனர்.

இத்தனை அழுத்தமாக மாணவிகள் சொல்லும் போது தலைமை ஆசிரியராலும் அந்த சூழ்நிலையில் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேச முடியவில்லை.

இதில் புதிதாக அவருக்கு தெரியவந்த முத்ராவின் விசயம் கேள்விப்பட்டு அவளது தந்தையை நினைத்து ஒருபக்கம் கலக்கமாக வேறு இருந்தது அவருக்கு. அதனால் அகரனது பெற்றோரை அழைத்து விட்டார்.

இந்த நிகழ்வின் உண்மைத்தன்மை தெரியும் வரை உங்களைப் போல ஒரு பெண்ணான அமிர்தாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து இதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அங்கிருந்தவர்களை கேட்டுக் கொண்டார்.

நடந்ததை அகரன் சொன்னதுக் கேட்டு தமிழின் மனம் சமனப்பட்டது. என் மகன் தவறானவன் இல்லை என்ற நிம்மதி விரவியது. அதேசமயம் அவன் சொன்ன முத்ரா விசயம் என்னவென்று அவளுக்கு தெரியவில்லை. அதைப்பற்றி அவன் தன்னிடம் மறைத்ததாக நினைத்து கோபம் எழுந்தது.

மனைவி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருப்பாள் என்பதை அறிந்த அகத்தியன், "அதென்ன முத்ரா பொண்ணை கிஸ் பண்ணுன விசயம் அகரா? நீ இதுவரை இந்த பிரச்சினை பற்றி சொல்லலையே!" அவளது மனதில் தோன்றிய கேள்வியை அப்படியே கேட்டார்.

"அது வந்து.." என்றவன் சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்தக் கதையை கூறி, இம்மாதிரி சோஷியல் மீடியாவில் வருவது சில நாட்களில் மறந்து விடுமென தருண் சொன்னதையும் அதனால் இவர்களிடம் சொல்லாமல் விட்டு விட்டதாகவும் சின்னக் குரலில் கூறினான்.

"தப்பு பண்ணிட்டியே அகரா. அப்பவே எங்கள்ட்ட இந்த விசயத்தை சொல்லி இருந்தா, உம்மேல எந்த தப்பும் இல்லன்னு ப்ரூவ் பண்ணி இருக்கலாமே."

" இப்ப பாரு அந்த பொண்ணுங்க அதையும் சொல்லிக் காட்டி தானே நீ செய்த உதவியை தவறா சித்தரிக்கறாங்க." அவன் செய்யத் தவறிய செயலால் ஏற்பட்ட விபரீதத்தை மகனுக்கு எடுத்துரைக்க, அகரன் தலை குனிந்து நின்றான்.

"நல்லா கேளுங்க! பெரிய இவனாட்டம் அவன் சொன்னானாம் இவன் சரினு விட்டுட்டானாம். இப்ப பேர் கெட்டுப் போய் நிக்கறது யாரு? இது கூட இவனுக்கு தெரியாதா? படிப்புல மட்டும் கவனமா இருந்தா போதுமா? தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு தெரிய வேணாம்?" தமிழ் படபடவென கேட்டபடி வெளியே வந்தாள்.

தாய் அவனைப் பற்றி பேசியதில் தமிழிடம் ஓடிவந்து" அம்மா!!"என கட்டிக் கொண்ட அகரன்," தப்பு தான்ம்மா. இது இவ்வளவு தூரம் வரும்னு நான் நினைக்கல." அழுகையில் குரல் உடைந்து,

"நான் எந்த தப்பும் செய்யலம்மா. என்னை நம்புறீங்க தானே?! " தவிப்போடு கண்ணீர் மல்க கேட்க ஏற்கனவே தன் மகன் தவறானவன் இல்லை என்பதில் சமன்பட்ட அவளின் கோபம் எல்லாம் பறந்து போனது.

ரெண்டு வருடங்களுக்கு முன்புவரை புனேவில் அவன் படித்த பள்ளியில் அவனது மதிப்பென்ன!

துளசியின் உடல்நிலை கருத்தில் கொண்டு இங்கு வந்து சேர்ந்த பிறகும் தங்களுக்கு அதே மதிப்பும் பெருமையும் தேடித்தந்து இங்கும் தங்களை பெருமைப்படுத்திய மகனின் தற்போதைய நிலையை எண்ணி மலையளவு வேதனை பொங்கியது தமிழுக்கு.

"நம்புறேன்டா கண்ணா! எல்லா விசயத்தையும் அம்மாட்ட சொல்லுற நீ இதை ஏன்டா மறைச்ச? இப்ப பாரு என் மகனை எப்படி எல்லாம் தப்பா பேசுறாங்க." மகனது மதிப்பு குறைந்து போனதில் தாயாக அவளுக்கு கொள்ளை வருத்தம்.

இருவரும் ஒன்றாகி விட்டதில் அகத்தியனுக்கு நிம்மதி. ஆனால் பிரச்சினை இத்தோடு முடியாதே! அகரன் சொல்வதை பெற்றோரான தாங்கள் நம்பலாம் ஆனால் மற்றவர்கள் நம்ப வேண்டுமென்று இல்லையே. அவர்களுக்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் மட்டுமே தெரியும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு அந்தப் பெண் கண் விழிக்க வேண்டும். நாளை அந்த பெண்ணை உடனே சந்தித்து நடந்தது என்னவென்று அறிய வேண்டும் என முடிவெடுத்தார் அகத்தியன். ஆனால் அதற்குள் பிரச்சனை போலீஸ் வரை சென்று விட்டது.
 
Top Bottom