அத்தியாயம் - 35
நடந்த நிகழ்வின் உண்மைத்தன்மை அறியாமல் யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் சுலபமாக கூறினாலும் மாணவிகளால் அப்படியே இருக்க முடியுமா!? தங்களுக்கும் இம்மாதிரி எதாவது நடந்து விடுமோ என்ற அச்சம் இருக்குமல்லவா?
அதனால் அந்த மாணவிகளுள் ஒருத்தி, வீட்டில் தனது பெற்றோரிடம் பயத்துடன் விசயத்தை கூறிவிட, அவர்கள் கொதித்து விட்டார்கள். அதெப்படி பெண்ணிடம் தவறாக நடந்தவனை சும்மா விட முடியுமா?
அதிலும் அவளது தந்தை போலீஸ் வேறு. மகள் சொன்னதைக் கேட்டதும் கட்டுக்கடங்காத கோபத்துடன் மறுநாள் காலையிலேயே தலைமை ஆசிரியரின் முன் நின்றிருந்தார்.
"இதான் நீங்க ஸ்கூல் நடத்துற லட்சணமா? ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்திருக்கு. அந்த பையனை பிடிச்சு உள்ள போடாம, அவன் பேரண்ட்டோட அனுப்பி வச்சிருக்கீங்க." எகிறிக் குதித்தார் அவர்.
"நான் இப்பவே அவன் மேல FIR போடுறேன். நாள பின்னே இன்னொரு பொண்ணுகிட்ட இப்படி நடக்க மாட்டான்னு என்ன ஸார் கேரண்டி? உங்க ஸ்கூல் மேலேயும் கம்ப்ளைன்ட் கொடுக்கறேன்." என்றெல்லாம் அவர் கத்தத் துவங்கினார்.
தலைமை ஆசிரியர் சற்று ஆடிப் போனவர், " ஸார்! கொஞ்சம் பொறுங்க. என்ன நடந்ததுனு தீர விசாரிக்காம எடுத்தோம் கவிழ்த்தோம்னு அவனோட வாழ்க்கைய வீணாக்க முடியாது ஸார், ஸ்டூடண்ட் ஸார்! அவனைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்."
"அதான் நிதானமா இருக்கேன். நூறு குற்றவாளி தப்பிச்சாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்றது உங்களுக்கும் தெரியும்தானே. தப்பு யாரு செய்தானு முதல்ல கண்டுபிடிக்கனும் ஸார்." அவர் சொல்வதை அந்த போலீஸ் காதில் வாங்கவே இல்லை.
"அந்த பொண்ணு கண் விழிச்சதா இப்ப தான் எனக்கு தகவல் வந்தது. நான் அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன். அப்படி நீங்க அவனை பிடிச்சு உள்ளே தான் போடனும்னு நினைச்சா, அந்தப் பொண்ணு சொல்றதையும் கேட்டுட்டு செய்ங்க." என்றபடி கிளம்பினார்.
அவர் சொன்னதில் நிதானித்த அந்த நேர்மையான போலீஸ் அதிகாரி யோசனையுடன், அவரோடு அமிர்தாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்தார்.
அமிர்தாவின் பெற்றோர் ராகவனும் ரூபாவும் மகள் அருகே அமர்ந்திருக்க, தலைமையாசிரியர் சதானந்தனுடன் போலீஸ் சீருடையில் இருந்தவர் உள்ளே வருவதைக் கண்டு சற்று பதற்றம் அடைந்தனர்.
"பதட்டப்படாதீங்க. இவர் அமிர்தா க்ளாஸ்மேட்டோட ஃபாதர் தான். உங்க பொண்ணை பார்க்கனும்னு வந்திருக்கார். வேற ஒன்னுமில்ல. டாக்டர் என்ன சொன்னாரு?" சதானந்தம் கேட்க போலீஸ் அவரைத் திரும்பிப் பார்த்தார்.
"கார்டியாக் அரஸ்ட் ஆகி மூர்ச்சை ஆகி இருக்கா போல, யாரோ கொடுத்த சிபிஆர் தான் அவளை காப்பாத்தி இருக்குனு சொன்னாங்க ஸார்." கண்கள் கலங்க உரைத்த ரூபா.
" அவளுக்கு எட்டு வயசுலேயே ப்ளாக் இருக்குனு ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் செய்திருக்கு. அதனால அவளை பொத்திப் பொத்தித் தான் பார்த்துக்கிட்டோம். அவள்ட்ட நாங்க அதிர்ந்து கூட பேச மாட்டோம். திடீர்னு அவளுக்கு இப்படினதும் எங்களுக்கு உயிரே இல்ல." கண்களை துடைத்தபடி கூறினார்.
"அவளுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்குனு பழைய ஸ்கூல்ல அவளை பேஷன்ட் மாதிரி பார்த்தாங்க. ஆனா இங்க எல்லாருமே எங்கிட்ட இயல்பா பழகறாங்கப்பானு சொல்லி ரொம்ப சந்தோஷமா இருந்தா."
"அவளோட ஹார்ட் பற்றி தெரிஞ்ச யாரோ தான் அந்த சமயத்துல அவளுக்கு சிபிஆர் கொடுத்து காப்பாத்தி இருக்காங்க. அது யாருனு உங்களுக்கு தெரியுமா ஸார்? விசாரிச்சீங்களா?" ராகவன் கேட்க சதானந்தம் போலீஸை பார்த்தார்.
"உங்க பொண்ணுக்கு இங்க ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் யாருங்க?" சதானந்தத்தின் பார்வையை கண்டு கொள்ளாத போலீஸ் ராகவனிடம் கேட்க அவரும் ஒரு மருத்துவர் பெயரைக் கூறினார்.
அவள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை தனது மகள் கூறி இருக்க, இங்கே இவர்கள் இவ்வாறு சொல்வதில் குழப்பமான அவருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
மருத்துவரிடம் சென்றவர் அவளுக்கு பாலியல் ரீதியாக எதுவும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்று விசாரிக்கவும் குழப்பத்துடன் அவரைப் பார்த்த மருத்துவர், "நோ! நோ! அதெல்லாம் இல்ல ஸார். இட்ஸ் ப்யூர்லி ஹார்ட் அரஸ்ட் தான்." அதை வேகமாக மறுத்தார்.
அதற்குள் அமிர்தா கண் விழித்த விசயம் அறிந்து அகரனும் அவனது பெற்றோரும் அங்கு வந்துவிட, அந்த போலீஸ் அதிகாரி அவனை சந்தேக்கண் கொண்டு காண்பதில் தமிழுக்கு வேதனையாக இருந்தது.
அமிர்தாவை பார்க்க உள்ளே நுழைந்தவர்களை தடுத்தவர் அமிர்தாவின் பெற்றோரிடம்," உங்க பொண்ணுட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும்." என்றிட ராகவனும் ரூபாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழப்பத்துடன் அனுமதி அளித்தனர்.
அதற்குள் அமிர்தாவின் பெற்றோரிடம் தமிழ் அவளது நலம் விசாரித்தபடி இருந்தாள். உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, " ஓகே! நீங்க போய் பாருங்க." அவளது பெற்றோரிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தவர் சந்தானந்தத்தை பார்த்தார்.
உடனே அருகில் வந்தவர், "என்னாச்சு ஸார்?!" சிறு பதைபதைப்புடன் வினவ, "அந்த பொண்ணுக்கு எதுவும் நடக்கல. அந்த பையன் அகரனுக்கும் அவளோட அந்த நிலைக்கும் சம்பந்தம் இல்லைனு வேற சொல்றா. ஆனா யார் காரணம்னு கேட்டா அதையும் சொல்ல மறுக்கறா." தாடையை தடவியபடி யோசனையோடு கூறினார்.
அதைக்கேட்ட அகரனுக்கும் அவனது பெற்றோருக்கும் பெரும் விடுதலை உணர்வு. ஆனால் அகரனுக்கு அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியது யாரென்று அறிய வேண்டி இருந்தது.
தன் பெற்றோரை அவன் திரும்பிப் பார்க்க, அவர்கள் தலை அசைத்ததும் உள்ளே வந்தவனைக் கண்டு அமிர்தாவின் விழிகள் கலங்கிவிட அவளருகில் சென்ற அகரன்,
"ரொம்ப தேங்க்ஸ் அம்மு!" கைகூப்பி கலங்கிய குரலில் சொல்ல அவளது பெற்றோருக்கு ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.