அத்தியாயம் - 36
அகரனைக் கண்டதும் அமிர்தாவின் கண்கள் கலங்க, அவன் நன்றி சொன்னதைக் கேட்டு அவளது பெற்றோர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமிர்தா சோர்வாக கண்களை மூடிக் கொள்ள, மகளின் வாய்மொழியாக அகரனைப் பற்றி அறிந்திருந்த அவளது பெற்றோருக்கு அவனது நன்றி எதற்கென புரியவில்லை.
நடந்ததைப்பற்றி அவள் அவனிடம் பேச விரும்பவில்லை என்பதை உணர்ந்த அகரன், "சீக்கிரம் சரியாகி வந்துடுங்க அம்மு. போர்ட் எக்ஸாம் வரப் போகுது. இப்போதைக்கு எல்லாத்தையும் தள்ளி வச்சுட்டு அதுல கவனம் செலுத்துங்க." என்று விட்டு வெளியேறி விட்டான்.
அகத்தியனிடம் பேசிக் கொண்டிருந்த சதானந்தத்திற்கு அகரன் சொன்ன விசயத்தை அகத்தியன் விளக்க, "எனக்கு புரியுது ஸார். அந்த சூழ்நிலையில ஐ ம் ஹெல்ப்லெஸ்." என்றிட அவரது சூழ்நிலையும் அகத்தியனுக்கு புரிந்தது.
"யார் அந்த கல்ப்ரிட்னு அந்தப் பொண்ணு வாய் திறந்து உண்மைய சொன்னா தான் நான் மேற்கொண்டு ஆக்ஷன் எடுக்க முடியும், பார்ப்போம். அந்த பொண்ணு உடம்பு தேறி வரட்டும்." பெருமூச்சுடன் கூறியவர்,
"பப்ளிக் எக்ஸாம் டைம்ல இந்த மாதிரி நடந்தது.. இது அவங்களோட படிப்பை பாதிக்காம பார்த்துக்கனும்." என்றெல்லாம் அறிவுரைத்தவர் சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்றார்.
அகரனின் தந்தை அகத்தியனிடம் ராகவன் வெளியே பேசிக் கொண்டிருக்க, அகரன் அருகே அமைதியாக நின்றிருந்தான். அமிர்தா இருந்த அறையில் ரூபாவும் தமிழும் இருந்தனர்.
தமிழுக்கு குடிக்க தேநீர் வாங்கி வருவதாக சொல்லி ரூபா நகர்ந்து விட, "உன் மனசு பட்ற கஷ்டம் எனக்கு நல்லா புரியும் அம்மு. ஆனா அது யாருனு நீ சொல்லாம, அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம உன் மனசு அமைதியாகாது."
தன்னை மனதில் வைத்து தமிழ் பேசிக் கொண்டிருக்க, மௌனம் சாதித்த அமிர்தா வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. சில நொடிகள் அவள் பேசுவாள் என எதிர்பார்த்த தமிழ் பெருமூச்சுடன் விட்டு விட்டாள்.
"நிறைய பெண்களோட வாழ்க்கையில இந்த மாதிரி ஏதோ ஒரு நிகழ்வு கலந்திருக்கும். அதை நாம எப்படி ஃபேஸ் பண்ணி அதிலிருந்து வெளி வர்றோம்ன்றதுல தான் நம்ம மனசோட அமைதி இருக்கு."
"உனக்கு நடந்ததை யார்கிட்டயாவது சொல்லனும்னு உனக்கு தோணுனா, தயங்காம எனக்கு கால் பண்ணுடா." தமிழ் சிறிது நேரம் ஆதரவாக பேசப் பேச அமிர்தாவின் மனம் தெளியத் தொடங்கியது.
அகரனிடம் உணரும் அதே இதமான மனநிலை தமிழிடமும் அவளுக்கு தோன்ற, அவள் மனம் உண்மையை சொல்லத் தயாரானாலும் எதையோ நினைத்து அவள் அச்சப்படுவது தமிழுக்கும் புரிந்தது.
அவளுக்கு ஒரேயடியாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என சிறிது நேரம் படிப்பைப் பற்றி பேசி பேச்சை திசை திருப்பிய தமிழ், அவள் அங்கிருக்கும் வரை தானே வந்து அவளுக்கு பாடம் படிக்க உதவுவதாக கூறினாள்.
அடுத்து வந்த தினங்களில் அமிர்தாவை காண தமிழும் அகரனும் அவ்வப்போது வந்து சென்றனர். இந்நிலையில் அன்று நடந்ததை அமிர்தாவின் தோழி அதுல்யா மூலமா அறிந்த அவளது பெற்றோர் அதிர்ந்து போயினர்.
அதுல்யா சொன்னதை வைத்து இந்த சில தினங்களாக கண்ட அகரனை அவர்களால் சந்தேகிக்கவும் முடியவில்லை. அதற்கு மகளிடம் அவர்கள் நடத்திய விசாரணையும் ஒரு காரணம்.
அகரன் அப்படிச் செய்யக்கூடியவன் கிடையாது என்பதில் இருந்த மகளது உறுதி கண்டு அவர்களே குழம்பிப் போயினர்.
விசயம் அறிந்ததும் அவர்கள் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்யப் போவதாகச் சொல்ல, அதுல்யா சொன்னதில் அவளை யார் காப்பாற்றி இருப்பார்கள் என்பதை உணர்ந்த அமிர்தா, தீவிரமாக அதற்கு மறுப்பு தெரிவித்தாள்.
"ஏன் அம்மு வேணாம்னு சொல்ற? உங்கிட்ட நல்லவன் மாதிரி பழகிட்டு இப்படி கீழ்த்தரமா நடந்து இருக்கலாமே." அவளது தகப்பனுக்கு மனம் ஆறவில்லை.
" புரியாம பேசாதீங்கப்பா. அன்னிக்கு அகரன் இல்லனா இன்னிக்கு உங்க பொண்ணு உயிரோடவே இருந்திருக்க மாட்டா. அதை முதல்ல நினைவுல வைங்க. அகரனுக்கும் இதுக்கு சம்பந்தமில்லை." இத்தனை உறுதியாக சொல்பவளிடம் அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
அவர்களிடம் அகரனே அன்று அவனுக்கு தெரிந்து நடந்ததை விளக்க, அவர்களால் அதை ஏற்கவும் முடியவில்லை. சந்தேகிக்கவும் முடியவில்லை. அவனைப் பற்றிய மகளது உறுதியான பேச்சு தடுத்தது.
என்னதான் அமிர்தா அகரனைப் பற்றி விளக்கம் சொன்னாலும் அவளது பெற்றோர் தனது ஒரே நெருங்கிய நண்பனான அவனை சந்தேகம் கொண்டு பார்ப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அவளைக் காண வந்த தமிழிடம் மனம் விட்டுப் பேச தொடங்கி இருந்த அமிர்தா தனது வருத்தம் பற்றி கூற, "அகரனை எல்லாரும் நல்ல விதமா பார்க்கனும்னு நினைச்சேனா, என்ன நடந்ததுனு சொல்லுடா அம்மு. நீ எதுக்கோ பயப்படறனு மட்டும் எனக்கு நல்லா புரியுது."
"ஐ ப்ராமிஸ்! உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ சொல்ற உண்மை மட்டும் தான் அகரனை எல்லாரோட சந்தேகப் பார்வையில இருந்தும் விலக்கி வைக்கும். அவன் சொல்ற உண்மைய நம்ப வைக்கும்."
" இந்த பிரச்சினை எல்லாம் மண்டைக்குள்ள இருந்தா எப்படி உங்க ரெண்டு பேரால எக்ஸாம்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும்? நீ மனசைத் திறந்து வெளியே கொட்டிட்டா, மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா. "தமிழ் சொல்லவும், அமிர்தாவின் நினைவுகள் அன்றைய தினத்திற்கு சென்றது.