• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 38

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம் - 38

"என்னாச்சு தமிழ்?! தமிழ்! எதாவது சொல்லுங்க. தமிழ்! உங்களத்தான்," என்று அமிர்தாவின் தாய் ரூபா வந்து உலுக்கும் வரை தமிழ் கிட்டத்தட்ட சிலையென அமர்ந்திருந்தாள்.

"ஹான்!!" ஏதோ கனவிலிருந்து வெளி வருவது போல விழித்த தமிழ் ரூபாவை பார்த்தவள் திரும்பி அமிர்தாவை பார்க்க, அவள் கண்கள் மூடி உறங்கிக் கொண்டிருந்தாள்.

தமிழிடம் நடந்ததை உரைத்தவள் மருந்தின் வீரியத்திலும் மனதில் இருந்ததை யாரிடமாவது சொல்லி விட்ட நிம்மதியிலும் கண் அயர்ந்து விட்டாள். ஆனால் அதைக்கேட்ட தமிழ் உறைந்து போயிருந்தாள்.

அவள் இன்னமும் இயல்புக்கு வராமல் போக, "தமிழ்! அகரன் உங்கள கூட்டிகிட்டு போறதுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றான்." அவளை மீண்டும் உலுக்கி சொல்ல, சட்டென வெளியே வந்தாள் தமிழ்.

அந்த அறையின் வாசலில் முகத்தில் கோபத்தை காட்டாமல் இறுக்கமாக அகரன் நின்ற கோலத்திலேயே அமிர்தா சொன்னதை அவனும் கேட்டு விட்டான் என்பதை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டாள்.

'ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அந்த முத்ராவிற்கு சக வகுப்புத் தோழியான ஒரு பெண்ணை இத்தனை கீழ்த்தரமாக செய்ய மனம் வருமா?!' என்ற அதிர்விலேயே இருந்தாள் தமிழ்.

இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு ஆண்களால் தான் இம்மாதிரி துன்புறுத்தல் ஏற்படும் என்று இதுவரை தமிழ் நினைத்திருக்க, ஒரு பெண்ணின் வன்மம் இந்தளவு தரங்கெட்டு இறங்கியதில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள்.

அதுவும் அமிர்தா அகரனுடன் பேசுவதைக் கூறி அதற்காக அவளை பழி வாங்கி இருக்கிறாளே! அவளுக்கு மனதளவில் ஏதும் பிரச்சினை உள்ளதோ!? என்று தமிழுக்கு சிந்தனை சென்றது.

இப்படியான யோசனையோடு இதை எப்படி சரிசெய்வது என்றும் அந்தப் பெண் முத்ரா பற்றியே சிந்தித்துக் கொண்டும் வீட்டிற்கு வந்த பிறகு தன்னைப் போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள் தமிழ்.

துளசிக்கான பணிவிடைகளை முடித்தவள் அகரனைக் காண அவனது அறைக்குச் செல்ல, டேபிளில் தலையை சாய்த்து இருந்தவனைக் கண்டு அவனது தலையை பரிவாக கோதியவள்,

"அமிர்தா சொன்னதை நீயும் கேட்டு இருக்கனு எனக்கு தெரியும். நீ என்ன நினைக்கிறனு சொல்லு அகரா?" நேரடியாகவே கேட்க, சில நொடிகள் அமைதியாக இருந்தவன், "அம்முட்ட அந்த பொண்ணு பிரச்சனை பண்றது இது முதல் தடவை இல்லம்மா." என்றிட, தமிழுக்கு இது புதிய செய்தி.

"என்ன சொல்ற கண்ணா!?" தமிழ் திகைப்பாக கேட்க, அகரனிடம் பேசியதால் முத்ரா ஏற்கனவே அமிர்தாவை மிரட்ட, அதனால் அவள் இவனிடம் அந்த வருடம் முழுவதும் பேசாமல் இருந்ததை கூறினான்.

மகன் சொன்னதைக் கேட்ட தமிழ் சற்று நேர யோசனைக்கு பிறகு, "அந்தப் பொண்ணு உன்னை சின்சியரா லவ் எதுவும் பண்ணுதா அகரா?!" எனக் கேட்க, அவளிடம் ஏற்கனவே தனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என தான் சொல்லி விட்டதாகச் கூறினான் அகரன்.

"ஒருவேளை.. அவளால அதை அக்செப்ட் பண்ண முடியலனு இப்படி முரட்டுத்தனமா பண்றாளா?!" இன்னமும் சந்தேகம் தெளியாமல் தமிழ் பேச, தாயைத் திரும்பிப் பார்த்தான்.

"ஒரு பொண்ணுக்கு விருப்பம் இல்லனா விட்டுடனும்னு சொல்ற சமூகத்துல ஒரு பையனுக்கு அந்த தகுதி இல்லையாம்மா!?" மகனின் நியாயமான கேள்வி அவளை நிதானிக்க வைத்தது.

"ஒரு பொண்ணு வேணாம்னு சொன்னா, பையன் மட்டும் விலகிப் போயிடனும். அதே பையனுக்கு'னா அதை அவன் அக்செப்ட் பண்ணியே ஆகனுமா?! " மகன் கேட்க, "அப்படி எல்லாம் இல்ல கண்ணா. அம்மா தெரியாம கேட்டுட்டேன் விடு." என்றாள்.

" அப்படியே நீங்க சொல்ற மாதிரி இருந்தாலும் அவங்க என்னை உண்மையா விரும்பி இருந்தா, 'எனக்கு விருப்பம் இல்ல இதுக்கு மேல ப்ராப்ளம் செய்தா உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்'னு சொன்ன பிறகும் அந்த ஃபோட்டோ போட்டு இருக்க மாட்டாங்க." என்றவன்,

அரையாண்டு தேர்வின் போதும் அதன்பிறகு இன்ஸ்டாக்ரமில் அவள் செய்த வேலையையும் சொல்ல, தமிழுக்கு திகைப்பு. அந்த பெண்ணிற்கு மன ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றியது.

கணவன் வந்த பிறகு அவரிடம் பேசினால் தெளிவு பிறக்கலாம் என்றெண்ணிய தமிழ் தற்போது அகரனின் மனநிலையை மாற்ற,"சரி, அதை பிறகு பார்க்கலாம். பப்ளிக் எக்ஸாம்க்கு இன்னமும் ஒரு வாரம் தானே இருக்கு."

"அம்முவும் நீயும் இதையே மனசுல போட்டு யோசிச்சுட்டே இருக்காம, அதுக்கு ப்ரிப்பேராகுங்க. இந்த பிரச்சினையை எங்கள்ட்ட விட்டுடுங்க, சரியா? அம்முக்கு நாளைக்கு தானே டிஸ்சார்ஜ்?" எனப் பேச்சை மாற்ற அகரன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

அதன்பிறகு என்னென்ன பாடங்கள் எப்போது படிக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் திட்டமிடலில் அகரனின் கவனத்தை திசை திருப்ப, அவனும் பாடங்களைப் படித்து முடிப்பதைப் பற்றி தன் சிந்தனையை திருப்பி விட்டான்.

அகத்தியன் பணி முடிந்து இரவு வந்ததும் அமிர்தாவிடம் பேசிய விசயத்தையும் அகரனிடம் பேசியதையும் தமிழ் வருத்தமாக சொல்ல, "நாளைக்கே போய் பிரின்சிபால்கிட்ட பேசுவோம்டா. அதுவுமே படிச்சுட்டு இருக்க பொண்ணு தானே."

"இவங்க ரெண்டு பேருக்கும் மட்டுமில்ல இந்த பழிவெறியை இப்படியே வளர விடுறது அந்த பொண்ணுக்கும் கூட நல்லதில்ல. பிரின்சிபால் என்ன சொல்றாரு கேட்போம்."

" பப்ளிக் எக்ஸாம் டைம்.. நீ இவங்க ரெண்டு பேருக்கும் பாடம் சொல்லித்தர்றதை கவனி. இதை இனிமே நான் பார்த்துக்கிறேன்." என முடித்தவர் மறுநாளே பள்ளிக்கு சென்றார்.

 
Top Bottom