அத்தியாயம் - 39
"என்ன ஸார் சொல்றீங்க!!? என்னால நம்பவே முடியல! அமிர்தாவுக்கு அப்படி நடந்ததுக்கு காரணம் ஒரு பொண்ணா!!?" நம்ப முடியாத திகைப்புடன் கேட்டார் சதானந்தம். அவருக்கு இன்னமும் அந்தப் பெண் யாரென்று அகத்தியன் கூறவில்லை.
"ஆமா ஸார். அதை செய்தது அவங்க கூடவே படிச்ச பொண்ணு தான். பேர் முத்ரா." என்றதும் சதானந்தத்திற்கு திக்கென இருந்தது. அடுத்து அகத்தியன் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
பள்ளிக்கு வருமானத்தை அதிகரிக்க முத்ராவின் தகப்பனிடம் மானாவாரியாக வாங்கிய நன்கொடை அவரது வாயைக் கட்டிப் போட்டது. இருப்பினும் அவள் செய்து வைத்த காரியங்களை நினைக்கும் போது மன்னிக்கவும் மனமில்லை.
"ஸார்! நான் இதை.. சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க." சற்று தயக்கத்துடன் சதானந்தம் தொடங்க, என்னவென்று பார்த்திருந்தார் அகத்தியன்.
"இது எக்ஸாம் டைம். போலீஸ், கேஸ் அது இதுன்னு போனா, பசங்களோட வாழ்க்கை கேள்விக்குறியாகும் அத்தோட அவங்க கவனமும் சிதறிப் போகும். ஸ்கூல் பேரும் கெட்டுப் போகும். அதனால.." அவர் இழுக்க, அவரே முடிக்கட்டும் என்று அமைதியாக பார்த்தார்.
"போலீஸ்ல எல்லாம் சொல்லாம, முதல்ல அந்தப் பொண்ணோட அப்பாட்ட போய் பேசுவோமே! வயசு பொண்ணு வேற, பெத்தவருக்கும் சில கனவு இருக்கும்ல.." என்றவரின் பேச்சில் ஒப்புதல் இல்லை என்றாலும் யோசனை செய்தார் அகத்தியன்.
அவருக்குமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த விசயத்தை முடிக்க தோன்றவில்லை. அவர் சொல்வதையும் முயற்சித்துப் பார்க்க அவளது தந்தையை சந்திக்க முடிவு செய்தார்.
ஆனால் இது அவர் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவில்லையே!
சம்பந்தப்பட்ட அமிர்தாவின் பெற்றோரும் என்ன சொல்கிறார்கள் என்பது அவருக்கு அறிய வேண்டி இருந்தது.
"என்னோட பையனை முன்னிறுத்தி தான் பிரச்சினை என்றாலும், இதுல பாதிக்கப்பட்டது அமிர்தா பொண்ணு ஸார். அவங்க பேரண்ட்டோட பேசிட்டு சொல்றேன். அதுவரை நமக்கு விசயம் தெரிஞ்சதைப் பற்றி அந்தப் பொண்ணு வீட்ல எதுவும் சொல்லாதீங்க. ஏன்னா அமிர்தா ஃபோட்டோ அவங்கள்ட்ட இருக்கு." எச்சரித்தார்.
அமிர்தா அதற்கு பயந்துதானே போலீஸிடம் கூட வாயை திறக்கவில்லை. அப்படி இருக்கும் போது முத்ராவின் மனநிலை என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் உண்மை வெளிவந்தது தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அமிர்தாவின் பெற்றோரை கலந்தாலோசிக்கும் வரை சதானந்தத்தை எதுவும் தெரியாதது போல அமைதியாக இருக்கச் சொன்னார்.
மாலையே அமிர்தாவின் தந்தை ராகவனிடம் விசயம் தெரிவிக்கப்பட, மகள் உயிரோடு விளையாடிய முத்ராவை சுலபத்தில் விட அவருக்கு மனமில்லை "அகரன் வர்றதுக்கு கொஞ்சம் நேரம் தவறி இருந்தாலும், இன்னிக்கு என் பொண்ணு இல்ல ஸார்." தொண்டை அடைக்க சொன்னவர்,
"அந்தளவு கீழ்த்தரமா நடந்த பொண்ணை கூப்டு வைச்சு பேச்சுவார்த்தை நடத்த சொல்றீங்களா?" கோபத்தில் கொதித்தார்.
" இங்க பாருங்க ராகவன், கோபத்துல எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. உங்க பொண்ணோட ஃபோட்டோ அந்த பொண்ணுட்ட இருக்கு. அதுக்கு பயந்து தான் அமிர்தா உண்மைய சொல்லாம இருந்ததே. அந்த முத்ரா என்ன மனநிலையில இருக்குனு தெரியல." நிதானமாக கூறியவர்,
"நாம முத்ரா அப்பாட்ட பேசிப் பார்க்கலாம். நடந்ததை சொல்லுவோம். வயசு வந்த பொண்ணுக்கு தகப்பனா அவருக்கு இதோட வீரியம் புரியும். கண்டிப்பா எதாவது ஆக்ஷன் எடுப்பார். அப்படி இல்லனா நாம போலீஸ்க்கு போயிடலாம்." எடுத்துரைத்தார்.
போலீஸ் கேஸ் என்று சென்றால், மீடியாவின் முன்பு விசயம் வரும். தன் பெண்ணிற்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கும் ஆனால் அவளது மனநிலை எந்தளவு பாதிக்கும் என்று சராசரி மிடில் கிளாஸ் தந்தையாக யோசித்த ராகவன் அரைமனதாக சம்மதித்தார்.
மறுநாளே பிரின்சிபால் சதானந்தம் முத்ராவின் தந்தை பிரபாகரனை பள்ளிக்கு அழைக்க, அவரும் யோசனையுடன் உடனே வந்து விட்டார்.
ஆனால் அங்கிருந்தவர்களின் முகத்தில் இருந்த பாவனை அவரை யோசிக்கச் செய்ய, தன் மகள் ஏதோ பிரச்சனை செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டார்.
"சொல்லுங்க ஸார் காலையிலேயே வரச் சொல்லி இருக்கீங்க. எதாவது பிரச்சனையா? என் மக எதாவது தப்பு செய்துட்டாளா?" பொறுமையாகவே கேட்டார்.
"அது வந்து.. இவங்க இதே ஸ்கூல்ல படிக்கற அமிர்தவல்லியோட அப்பா ராகவன், இவரு அகரனோட அப்பா அகத்தியன்." என்றவரை இன்னமும் விசயம் தெரியாததால் குழப்பமாக பார்த்திருந்தார் பிரபாகரன்.
"என்ன ஸார் என் பொண்ணு அவங்கள்ட்ட எதுவும் சண்டை போட்டாளா? காம்ப்ரமைஸ்க்கு கூப்டு விட்டு இருக்கீங்களா?" பழைய பள்ளியில் இதுப்போல அடிக்கடி நடக்கும் என்பதால் அவர் இயல்பு போல கேட்க, இருவரது தந்தைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"அது.. இங்க பிரச்சனையே வேற பிரபாகரன் ஸார்," என்ற சதானந்தம் விசயத்தை சொல்லத் தயங்க, "வணக்கம்! நான் அகத்தியன். சண்டைனு இல்ல ஸார், உங்க பொண்ணு அதுக்கும் மேல செய்து வைச்சிருக்காங்க." எனத் தொடங்கினார்.
புருவ முடிச்சுடன் அவரைப் பார்த்த பிரபாகரனிடம் முத்ரா செய்த காரியங்களைச் சொல்ல, தன் பெண்ணின் மீது அவதூறாக சொல்கிறார்கள் என்று அவருக்கு அப்படியொரு கோபம் வந்தது.
"என் பொண்ணு மேல பழி போடனும்னு கூட உங்க பொண்ணு இப்படி சொல்லி இருக்கலாமே. என் பொண்ணு தான் இதை செய்தாள்னு எதை வைச்சு இவ்வளவு உறுதியா சொல்றீங்க? அதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா?" அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டார்.