அத்தியாயம் - 40
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அபரிமிதமாக நம்பிக்கை உண்டு. தவறுகளை திரும்பத் திரும்பச் செய்தாலும் மன்னித்து மறக்கும் மனம் கொண்டவர்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.
முத்ராவின் தந்தை பிரபாகரனும் அதைப் போலத்தான். அவருக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தால் அவரது வசதிக்கு வாய்ப் பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் அவர் முதுகின் பின்னால் படிப்பறிவு இல்லாதவன் என்று கேலி பேசுவதை அறிவார்.
அதனால் தன் ஒரே வாரிசான மகளை எப்படியாவது எதாவது செய்து ஒரு பட்டப்படிப்பையாவது வாங்க வைக்க வேண்டும் என்ற உத்வேகம்.
அவள் இந்த பனிரெண்டாம் வகுப்பு தாண்டி விட்டால் மட்டும் போதும், கல்லூரிக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுத்து படிக்க வைக்க தயாராக இருந்தார்.
ஒரே மகளென்று ஓவர் செல்லம்.. அவள் மனதால் நினைத்தாலே உடனே செய்து மகளை மகிழ்வித்து, அவளது மகிழ்ச்சியில் தானும் மகிழ்வார். பெண் பிள்ளைக்கு இத்தனை செல்லம் கூடாதென மனைவி கூறினாலும் அசட்டை செய்வார்.
"என்னதான் வசதி இருந்தாலும் டாடியை மரியாதையா பார்க்கிறவன் எல்லாம் படிக்கலனு பின்னாடி பேசுவான் முத்து! நீ அதை எல்லாம் மாத்தி காட்டனும். ஓஹோனு படிக்கலனா கூட ஒரு டிகிரியாவது வாங்கிடனும்."
"அதுக்கு உனக்கு என்ன தேவையோ அத்தனையும் அப்பா செய்வேன்." என்று மகளிடம் சொல்லிச் சொல்லி மாய்வார். பிறந்தது முதல் அவளை திட்டக்கூட செய்யாத தந்தை தனக்காக எதையும் செய்வார் என்ற இறுமாப்பு அவளிடம் எப்போதும் உண்டு.
பள்ளி படிக்கும் போதே அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் அவள் நிற்கும் போது,"ஸ்கூல் போற பொண்ணுக்கு எதுக்கு காசு?" அதட்டும் தாயை அவள் அலட்சியம் செய்தால், "படிக்கற புள்ளைக்கு ஏதோ செலவு இருக்கும். உனக்கென்ன தெரியும்? உன் வேலையைப் பாரு போ."அவரோ மனைவியை திட்டுவார்.
அவள் கேட்பதற்கு எல்லாம் இல்லை என சொல்லாமல், அவள் செய்யும் தவறுகள் எதையும் தட்டிக் கேட்காமல் கொம்பு சீவிய காளையைப் போல வளர்த்த பலனை இன்று தன் கையில் காண்கிறார்.
தன் மகளின் புத்தி எத்தனை குரூரமாக மாறி போய் விட்டது என்பதை அறிந்து உள்ளுக்குள் சில்லு சில்லாய் உடைந்து போனவர் அவளது அலைபேசியில் இருந்த அமிர்தாவின் அரைகுறை ஆடை புகைப்படத்தை கண்டதும் டெலிட் செய்து விட்டார்.
பள்ளியில் அவள் மீது அப்படியொரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் கோபம் கொண்டு, 'என் மகள் தான் செய்தாள் என்பதற்காக ஆதாரம் எங்கே?' எனக் கேட்டு அவர்களின் வாயடைத்தார்.
அதை எதிர்பாராத மூவரில் முதலில் சுதாரித்த பிரின்சிபால் சதானந்தம், "ஸார் அந்த ஃப்ளோர் சிசிடிவி ரீசன்ட்ஆ தான் ரிப்பேர் ஆகிடுச்சு. சரி செய்ய சொல்லி இருக்கு, ஆளு வர்ற நாளுக்குள்ள இந்த சம்பவம் நடந்துச்சு. இதுக்கு எப்படி ஆதாரம் எல்லாம்.." விளக்கமளித்தவர் தயங்கினார்.
"இந்த விசயத்த போலீஸ்ல கொண்டு போனாளே சாட்சி எல்லாம் கேட்ட மாட்டாங்க ஸார். ஏன்னா அமிர்தா இருந்த கோலத்தை அப்ப பார்த்தவங்களே இருக்காங்க." என்றார் அகத்தியன்.
தன் பிள்ளையை கொல்லப் பார்த்திருக்கிறாள் இதில் இவருக்கு ஆதாரம் வேண்டுமாமே! என்ற கடுப்போடு பிரபாகரனை ராகவன் முறைத்துப் பார்த்திருக்க, அப்போதும் நம்பிக்கை இன்றி தான் இருந்தார் முத்ராவின் தந்தை.
"இப்ப என்ன உங்களுக்கு சாட்சி தானே வேணும்?" எனக் கேட்ட அகத்தியன் வெளியே சென்று நித்யாவை அழைத்து வந்து, "உங்க பொண்ணு கொஞ்சம் க்ளோஸா பழகறது இந்த பொண்ணுட்ட மட்டுந்தான். அதுவாவது உங்களுக்கு தெரியும் தானே?" சிறு ஏளனத்துடன் கேட்டார்.
நித்யாவை பார்த்த பிரபாகரனுக்கு அவரது மகள் இவளோடு எடுத்த புகைப்படங்களை காட்டி இவளைப் பற்றி சொல்லியதுண்டு அதனால் அமைதியாக இருந்தார். ஆனால் அவருக்கு தன் மகள் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருக்க மாட்டாள் என்ற உறுதியே.
அன்று.. அதுல்யாவை தேக்கிய மாணவியிடம் அமிர்தா வகுப்பில் காத்திருப்பதாக அவள் சொல்ல, முத்ராவின் திட்டம் அறியா அப்பெண்ணுக்கு அவளை நிறுத்த மட்டும் தான் கூறியிருக்கப்பட்டது.
அதனால் வேறொருத்தியை அங்கு அனுப்புவதாகக் கூறி அதுல்யாவின் கண்முன்பே ஒருத்தியை அழைத்து அங்குப் போகச் சொல்லி சமாளித்தாள்.
அந்த வேறொருத்தி நித்யாவாக இருந்தது தான் முத்ராவின் செயலுக்கு சாட்சியாகி போனது. வகுப்பிற்கு அமிர்தாவை தேடி வந்த நித்யா, அமிர்தாவிடம் முத்ராவின் நடவடிக்கை கண்டு உறைந்து போய் வாயைப் பொத்திக் கொண்டு நின்றிருந்தாள்.
அமிர்தாவின் புடவையால் அவளது கைகள் மற்றும் வாயை கட்டி விட்டு முத்ரா வெளியேற திரும்ப, சட்டென அருகிலிருந்த கழிவறைக்குள் ஓடிச்சென்று தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒளிந்து கொண்டாள் நித்யா.
அமிர்தாவின் கட்டுகளை அவிழ்த்து அவளை காப்பாற்ற வேண்டும் என்று கூட அவளது மூளைக்கு எட்டவில்லை. முத்ராவின் குரூர செயலில் மூளை மரத்துப் போன நிலையில் தனது படபடப்பு அடங்கும் வரை அவள் அங்கேயே இருந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் வெளியே கேட்ட சலசலப்பில் மெதுவாக எட்டிப் பார்த்த நித்யா, அங்கே வகுப்பாசிரியை தேவிகாவின் குரல் கேட்கவும் வேகமாக வெளியேறி வர, சிறு கும்பலாக நின்ற மாணவிகளின் அருகே சென்று நின்று விட்டாள்.
அப்போதும் அவர்கள் அகரனை தப்பாக நினைத்து பேசியதை எல்லாம் காதில் வாங்கவில்லை. அந்த கூட்டத்தில் கண்களில் குரூர திருப்தியுடன் நின்ற முத்ராவை தான் பார்த்திருந்தாள்.
எவ்வளவு பெரிய காரியத்தை மனசாட்சி இன்றி செய்தவள், இத்தனை இயல்பாக நிற்கிறாளே! என்று அவளது நடிப்பில் உள்ளுக்குள் அரண்டு விட்டாள்.
ஏற்கனவே விளையாட்டாக நித்யா தன் அலைபேசியில் எடுத்த அந்த புகைப்படத்தை நயமாகப் பேசி அனுப்பச் சொல்லி அதை வைத்து அகரனின் பெயரை கெடுத்த முத்ரா, அதேப்போல தன்னையும் எதாவது செய்து விடுவாளோ என்ற பயத்தில் இருந்தாள்.
அங்கிருந்தவர்கள் போல எதுவும் அறியாதவளாக தன்னைக் காட்டிக் கொண்ட நித்யா, ஸ்டடி ஹாலிடேஸ் தொடங்கி விட தனது வீட்டிற்குள் முடங்கியவள் அதன்பின் முத்ராவிடம் பேசவில்லை.
இந்நிலையில் அகரன் சொன்ன விசயங்களை கேட்ட தமிழ், ஒருவேளை முத்ரா அகரனை விரும்புவதால் இவ்வாறு செய்தாளா என்றறிய அவளது தோழிகள் பற்றி மகனிடம் கேட்க அவன் நித்யாவைப் பற்றி கூறினான்.
அவளது இருப்பிடம் அறிந்து நேரில் சென்று அகரனின் தாயென தமிழ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முதலில் பயந்த நித்யா, சிறிது நேரம் தமிழ் பேசிய விதத்தில் அன்று நடந்த அனைத்தையும் கூறி விட்டாள்.
அவள் ஒன்றை நினைத்து கேட்க வந்தால், முத்ராவின் செயலை கண்ணால் கண்ட சாட்சியாக பயத்துடன் நித்யா சொன்னதில் தமிழுக்குமே திகைப்பு தான்.
இதை கேஸ் பதிவு செய்தால் அங்கு சாட்சியாக போலீஸிற்கு எல்லாம் வர முடியாது என்று உறுதியுடன் தான் தமிழிடமே இந்த உண்மையை உரைத்திருந்தாள் நித்யா.
வீட்டிற்கு வந்த பிறகு கணவனிடம் அவ்விசயத்தை தமிழ் சொல்லி இருக்க, அவளை இப்போது அழைத்து வந்து முத்ராவின் தகப்பனிடம் சொல்ல வைத்து விட்டார் அகத்தியன்.