• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 41

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 41

அந்த அறையின் ஓரத்தில் இருந்த ஸோஃபாவில் முகம் முழுக்க வேதனையோடு அமர்ந்திருந்த பிரபாகரனுக்கு அருகில் அவரது மனைவி விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

அதற்கு எதிரில் மருத்துவமனைக்கே உண்டான கட்டிலில் தலையை சுற்றி பெரிய கட்டுடன், கை,காலிலும் கட்டுகள் இடப்பட்ட நிலையில் அறுந்த கொடியாக கிடந்தாள் அவரது தவப்புதல்வி முத்ரா.

அன்று நித்யாவின் வாய்மொழியாக நடந்த அனைத்தையும் அறிந்தவர் இடிந்து போனார். அவரது நிலையைக் கண்ட மூவருமே சில நிமிடங்கள் அவருக்கு அந்த உண்மையை உள்வாங்க அவகாசம் கொடுத்து அமைதியாக இருந்தனர்.

சில நிமிட மௌனத்திற்கு பின் சட்டென எழுந்தவர் அமிர்தாவின் தந்தை ராகவனை நெருங்கி கையெடுத்துக் கும்பிட்டு, "மன்னிச்சுடுங்க ஸார்! என் பொண்ணு இப்படி ஒரு காரியத்தை செய்தும் அதுக்கான சாட்சியம் இருந்தும்,"

"உடனே போலீஸ் போகாம, முதல்ல எனக்கு தெரியப்படுத்த நினைச்ச உங்க அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல." என்றவர் சடாரென்று அவரது காலில் விழ குனிய, அவரை பதறி தடுத்திருந்தார் ராகவன்.

இத்தனை பெரிய வசதி படைத்தவர் தன்னிடம் இந்தளவு இறங்கிவந்து மன்னிப்பு வேண்டியதில் ராகவனுக்கு சற்று சங்கடமாகக் கூட இருந்தது. அவரது மகள் அளவிற்கு அவர் இல்லை என்பதை அதிலே உணர்ந்து கொண்டார்.

அவரிடம் எப்படி மன்னிப்பு கேட்டாலும் இப்படிப்பட்ட செயலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தகப்பனாக, தானாக இருந்தாலுமே கூட தன்னாலே மன்னிக்க இயலாத போது, ராகவன் இந்தளவு அமைதி காப்பதே பிரபாகரனுக்கு பெரும் குற்ற உணர்வாக இருந்தது.

மகளுக்கு கடிவாளம் போட்டு வளர்த்தாத தனது முட்டாள்தனம் தற்போது எந்த நிலையில் தன்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்றெண்ணி உள்ளுக்குள் உடைந்து போனார்.

பிஸினஸில் எதிரிகளைக் கூட நேர்மையான முறையில் மட்டுமே எதிர்கொண்ட அவருக்கு இம்மாதிரி பழிவாங்கும் எண்ணம் எல்லாம் அறவே கிடையாது. தன் மகள் இத்தனை கேவலமான காரியத்தை செய்து விட்டாளே என்று புலம்பித் தள்ளினார்.

அவரது அந்த நிலையைக் கண்டு 'நல்லவேளை போலீஸிற்கு போகும் முன் இவரிடம் கூறினோம் இல்லை எனில் போலீஸ் மூலமாக இவருக்கு விசயம் தெரிய வந்திருந்தால் இவர் உயிரையே விட்டிருப்பார் போல' என்றுதான் மூவருக்கும் தோன்றியது.

முத்ராவிற்கு ஒரு நல்ல மனநல ஆலோசகரிடம் சென்று கவுன்சிலிங் கொடுக்கும்படி அறிவுரைத்து அவர்கள்தான் பிரபாகரனை தேற்றி அனுப்ப வேண்டியிருந்தது.

இனிமேல் யாருக்கும் தன் மகளால் பிரச்சனை வராது. அமிர்தாவின் அந்த புகைப்படத்தைக் கூட உடனே அழித்து விடுவதாக உறுதியளித்த பிறகு அங்கிருந்து மொத்தமாய் உடைந்த மனதோடு கிளம்பினார் பிரபாகரன்.

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அவரது மனம் அங்கு நடந்ததையே நினைத்து வேதனையடைந்து ஒரு கட்டத்தில் அது அப்படியே மகள் மீது கட்டுக்கடங்காத கோபமாக மாற தன்னை கட்டுப்படுத்த முயன்றார்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக மகளைத் தேடி அவளது அறைக்குச் செல்ல, தன் அலைபேசியில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த முத்ரா, "டாடி! வந்துட்டியா? " முகம் மலரக் கேட்பதில் வழக்கமாக பொங்கும் பாசம் மறைந்து தற்போது கோபம் கொப்பளித்தது.

அவளது கையிலிருந்த அலைபேசியை பிடுங்கியவர் விருட்டென வெளியேறி விட, அவரது செயலில் திகைத்த முத்ரா அவர் பின்னால் விரைய அதற்குள் அவளை அறைக்குள் வைத்து கதவடைத்தார்.

அவள் விடாமல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த அவளது தாய் வெளியே வர, ஸோஃபாவில் உறைந்து போய் இருந்த கணவனையும், மகள் கத்தும் சத்தமும் கேட்டு குழம்பியவர் கணவனின் அருகே வந்தார்.

அவரது கையிலிருந்த மகளின் அலைபேசியில் அவர் கண்ட காட்சியில் திகைத்தவர் கணவனை உலுக்கி என்னவென்று விசாரிக்க, பள்ளியில் நடந்த அனைத்தையும் கண்கள் கலங்க கூறியவர் உடைந்து போயிருக்கிறார் என்பதில் அவருக்கும் கண்கள் கலங்கியது.

கணவனின் மொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்த மகள் செய்த காரியத்தால் அவர் உடைந்து போனதில் வேகமாக சென்று முத்ராவின் அறைக்கதவைத் திறந்தவர் அவளுக்கு விட்டார் ஒரு அறை.

ஏற்கனவே அறைக்குள் அடைந்ததில் புரியாமல் குழம்பி இருந்தவளுக்கு தாயின் அறையில் கோபம் ஏற, தந்தையிடம் புகார் வாசிக்க சென்று அவரது முகத்தைக் கூட கவனியாமல், "பாரு டாடி! அம்மா என்னை அடிச்சுட்டா!" கண்கள் கசக்கினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவர், "நான் அதை முதல்லயே செய்திருக்கனும்." என்றபடி அவரும் அறைய, அதில் எரிச்சல் எடுத்த கன்னத்தை பிடித்தபடி அவரை அதிர்வுடன் பார்த்தாள் மகள்.

அதன்பிறகு பிரபாகரன் மடை திறந்த வெள்ளமென அவளிடம் அன்று நடந்த விசயத்தை பற்றி கேட்டு மீண்டும் மீண்டும் அடிக்க, முத்ராவின் தாயால் கூட அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதட்டிக்கூட பேசாத தந்தையின் அடிகள் மட்டுமே அவள் மனதில் நிற்க, எதற்கான அடிகள் அவை என்பது அவளது புத்திக்கு உரைக்கவேயில்லை. அவளை அடித்துப் போட்டவர் மனம் தாங்காமல் தங்களது அறைக்குள் சென்று விட்டார்.

இருவருக்கும் இடையே தடுமாறிய அவளது தாய் முதலில் கணவனைக் காண உள்ளே சென்று விட, அவர் அடித்துவிட்ட கோபத்தில் இருந்த முத்ரா, சட்டென எழுந்து தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

ஆத்திரத்தில் தாறுமாறாக வண்டியை ஓட்டியவள் நிலை தடுமாறி, கட்டிடப் பணிக்காக கொட்டி வைத்த ஜல்லிக்கற்களில் வண்டியை விட, அங்கிருந்த கல்லொன்று அவளது கண்களை பதம் பார்க்க, வலது கை மற்றும் வலது கால் வண்டிக்கு அடியில் சிக்கி இருந்தது.

சற்று நேரத்தில் அங்கு சேர்ந்த கூட்டத்தில் இருந்த சிலரால் அவள் யாரென அடையாளம் காணப்பட்டு பிரபாகரனுக்கு அழைப்பு பறக்க, ஓடி வந்த பெற்றோர் மகளது நிலைக் கண்டு பதறியடித்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அவளது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மேலும் கண்களின் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு பிறகு தான் பார்வையை பற்றிய முடிவைத் தெரிவிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூற, நொறுங்கிப் போயினர் பெற்றவர்கள்.

பூப்போல வளர்த்த மகள் விஷமாக மாறியதறிந்து அந்த கோபத்தில் தான் செய்த தவறால் மகளது நிலை இப்படியாகி விட்டதே என்று உடைந்து அழுதார் பிரபாகரன்.
 
Top Bottom