அத்தியாயம் - 43
"போதும்..இனஃப்! இனஃப்!" என்று கை காட்டி பதறித் தடுத்த நவீனின் பேச்சை அசட்டை செய்து அவனது தட்டில் காய்கறி கூட்டை இன்னமும் கொஞ்சம் வைத்தாள் அமிர்தா.
"என்ன போதும், அங்க பாருங்க உங்க ஃப்ரெண்ட் எப்படி கட்டு கட்டுறாருனு, நீங்க என்னனா சின்னக் குழந்தை போல தட்டுல வைச்சுட்டு தொட்டு பார்த்துட்டு இருக்கீங்க." என்று கலாய்த்தாள்.
அவளது பேச்சிற்கு எதிர்வினையாக என்ன செய்வது எனத் தெரியாமல் அவன் விழிக்க, அருகிலிருந்த மற்றவனோ உள்ளுக்குள் புகைந்ததை வெளியில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான்.
" ஹேய் வாயாடி! வர வர உனக்கு ரொம்ப கொழுப்பு கூடிடுச்சு. என் புள்ள சாப்பிடுறதை கண்ணு வைக்கறியா? " என்று அங்கு வந்த தமிழ் அமிர்தாவின் காதை திருக, "ஸ்ஸ்ஆ!!" என அலறினாள் அவள்.
"ஆன்ட்டி ப்ளீஸ்! அவங்க பாவம். நீங்க இன்னும் கூட வைங்க அம்ருதா. நான் சாப்டுறேன்." நவீன் அவளுக்காக பரிந்து பேச," அதுசரி.."தமிழ் சிரிக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து விட்டான் அகரன்.
"என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்ட!? நல்லா சாப்பிடு கண்ணா. ரெண்டு வருசமா வெளிநாட்டுல வெறும் பன்னு, பீட்சா சாப்பிட்டு நாக்கு ருசியே மறந்து போயிருக்கும்." மகன் பாதி சாப்பாட்டில் எழுந்த கவலை தாய்க்கு.
எம்.பி.பி.எஸ் முடித்த அகரன் தனது முதுகலை படிப்பை நியூயார்க் நகரில் படிக்கச் சென்றிருக்க, அங்கு அவனுக்கு அமைந்த ஒரு நல்ல நட்பு தான் நவீன். அமெரிக்கவாழ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
அங்கிருக்கும் நாட்களில் அகரன் தன் வீட்டிற்கு வீடியோ கால் பேசும்போது தமிழ் மற்றும் அகத்தியனுடன் பேசி இருக்கிறான் நவீன். அப்போது அமிர்தாவையும் சில நேரங்களில் கண்டிருக்கிறான்.
இன்ஜினியரிங் முடித்த அமிர்தா கிடைத்த நல்ல வேலைகளை எல்லாம் விட்டு விட்டு பெற்றோரின் ஆசைக்கு இணங்க அருகிலேயே கிடைத்த ஒரு ஐடி கம்பெனி வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அதனால் அகரன் வீட்டில் தான் அதிக நேரம் செலவிடுவாள். அகரன் நியூயார்க் சென்ற புதிதில் துளசிம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட, இறுதி சடங்கிற்கு வந்தவனால் தாயுடன் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
கணவன் உடனிருக்கும் நேரத்தில் அந்த துக்கத்தை மறப்பவள், அவர் இல்லாத சமயத்தில் சோகத்தில் கரைய, தமிழின் மனநிலையை மாற்ற அமிர்தா அங்குவந்து தங்கி பழகிய பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
அமிர்தாவிற்கு முத்ராவினால் நேர்ந்த சம்பவத்தால் கண்டிப்பாக அவளது மனம் பாதிப்படைந்து இருக்கும் என்று அவளது பெற்றோரிடம் கூறினாள் தமிழ். அது அவளுக்கான அனுபவத்தால் வந்த விழிப்புணர்வு.
அதற்கான மருத்துவரைச் சந்தித்து அமிர்தாவிற்கு சிகிச்சை மற்றும் தெரபிகள் என மெனக்கெட்டு அவளை இயல்பாக்கினாள். அதனால் தான் முத்ராவை நேரில் கண்ட போது கூட அமிர்தாவால் அவளிடம் இயல்பாக பேச முடிந்தது.
இப்படி தங்கள் மகள்மீது அக்கறை கொண்ட தமிழிடம் இயல்பாகவே அமிர்தாவின் பெற்றோருக்கு நன்றி உணர்வு உண்டு. தமிழின் கவலையை போக்க அகரனும் உடன் இல்லாத போது தமிழின் துணையாக மகளை அடிக்கடி அங்கு அனுப்பி விடுவார்கள்.
பெரும்பாலும் அகரன் வீட்டிற்கு அழைத்து பேசும் நேரத்தில் அமிர்தாவும் அங்கு இருப்பாள். சிறிது நேரம் உரையாடல் தொடர, அந்த அழைப்பில் அமிர்தா பேச வந்ததுமே அகரனும் அவளும் ஒருவருக்கு ஒருவர் வாயாட முதலில் அதை ஆச்சர்யமாக பார்த்தான் நவீன்.
இப்படியாக ஒரு வருடமாக அவர்களைப் பார்த்த நவீனும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக மாறி விட்டான். அகரன் வீடியோ கால் பேசினாலே சிறிது நேரம் அவர்கள் பேச ப்ரைவஸி கொடுத்த பிறகு நவீனும் வந்து கலந்து கொள்வான்.
ஆரம்பத்தில் அமிர்தாவுடன் நலம் விசாரிப்பது போல பேசுபவனது பார்வை மறுவருடம் முதல் அவளைப் பார்க்கும் போது மாறிட, பேச்சின் ஊடே அவனை கவனிக்கத் தொடங்கினான் அகரன்.
படிப்பு முடியும் தருவாயில் ஒருநாள் அகரன் அதை நவீனிடம் குறிப்பிட்டுக் கேட்க, வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் ஆதலால் அமிர்தாவின் மீது தன் மனதில் தோன்றிய விருப்பத்தை மறைக்காமல் வெளிப்படையாக அகரனிடம் ஒத்துக் கொண்டான்.
அதைக்கேட்டு திகைத்த அகரன், "அவளுக்கு இதிலெல்லாம் விருப்பம் கிடையாதுடா. அதோட அவளோட பேரண்ட்ஸ்.. இதெல்லாம் சான்ஸே இல்ல. நீ உன் மனசை மாத்திக்க." பட்டென்று கத்தரிக்க முயன்றான்.
"அதெப்படி நீயா சொல்ற கரன்? அவங்களுக்குமே விருப்பம் இல்லாமத் தான் எங்கிட்ட அப்படி பேசறாங்களா? அதோட எங்க வீட்ல தமிழ்நாட்டு மருமகள் தான் வேணும்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அமிர்தா அதுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க." கல்யாண கனவுகள் கண்ணில் மின்ன அவன் பேச அகரனுக்கு ஏக கடுப்பு.
"ஸ்டாப் இட் நவீன்! இது நடக்காது. அம்மு எங்க வீட்டு பொண்ணு. பெட்டர் யூ சேன்ஜ் யுவர் மைன்ட். இனிமே இதைப்பற்றி பேசாத." எச்சரிக்கும் குரலில் கூறியவன் தனது அறையில் சென்று அடைந்து கொண்டான்.
அறைக்குள் சென்றவனுக்கு ஏனோ அத்தனை கோபம் வந்தது. அவனால் அமிர்தாவை நவீனுடன் பொறுத்திப் பார்க்கவே முடியவில்லை. அமிர்தா கல்லூரி படிக்கும் நாட்களில் எத்தனையோ பேர் அவளிடம் ப்ரோபோஸ் செய்தது பற்றிக் கூறி "என்ன பண்றது அகரா?" அகரனிடம் அபிப்ராயம் கேட்டிருக்கிறாள்.
அப்போது கூட "உனக்கு என்ன தோணுதோ அதை செய் அம்மு. உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லனா நோ சொல்லிடு. லைஃப்ல இதெல்லாம் தவிர்க்க முடியாது. நீ மறுத்த பிறகும் யாராவது முத்ரா மாதிரி இருந்தா, எங்கிட்ட சொல்ல தயங்காத அம்மு." அவளையே முடிவெடுக்க சொன்னவன்,
தற்போது ஒருவன் அவனிடமே அமிர்தாவை விரும்புவதாகக் கூறியதில் அவன் அடிமனதில் ஏதோ ஒன்று தடுக்க, நவீன் சொன்னதை ஏற்க முடியாமல் திணறுகிறான்.
ஒருவழியாக படிப்பை முடித்து ஊருக்கு கிளம்பும்போது நவீனை எப்படியாவது கழட்டிவிட்டு வர அவன் நினைத்திருக்க, நவீன் பெரிய பெட்டியுடன் கிளம்பி வந்து அவனது எண்ணத்தை தூள் தூளாக்கி இருந்தான்.
அமிர்தாவின் விருப்பத்தையும் அவளது பெற்றோரின் சம்மதத்தையும் நேரிலேயே கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறி அகரனோடு சேர்ந்து இந்தியா வந்தவன் சட்டமாக அகரன் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறான்.
அதற்கு அகரனின் பெற்றோரும் ஒரு காரணம். நவீன் உடன் வருவதாக சொன்னதும் பெரிதாக மகிழ்ந்த தமிழ், தங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும் என வற்புறுத்தினாள். அகத்தியனும் அதையேக் கூற நவீனும் சம்மதித்து விட்டான்.