அத்தியாயம் - 44
அகரன் பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டதில், தமிழ் கவலையாகவும் "நான் சும்மா வெளாட்டுக்கு தான் சொன்னேன் அகரா. நீ சாப்பிடு. இல்லனா ஆன்ட்டி அழுதுடுவாங்க போல," கேலி போல கூறிய அமிர்தா,
அகரனிடம் தமிழை நோக்கி கண்ணை காட்ட, தாயின் முகத்தில் கவிழ்ந்த கவலையில் சட்டென நிதானித்தவன், "இல்லம்மா, திடீர்னு நிறைய சாப்பிட முடியல. இனி உங்களோட ஸ்பெஷல் பாயாசம் வேற குடிக்கனுமே. அதுக்கு வயித்துல இடம் வேணாமா?" புன்னகையுடன் கேட்டான்.
"ஓஓ.. அப்படியா கண்ணா! இதோ உடனே எடுத்து வர்றேன். நவீன் நீயாவது ஒழுங்கா தட்டுல வைச்சதை சாப்பிடனும். ஆமா, சொல்லிட்டேன்." அவனை செல்லமாக மிரட்டியபடி உள்ளே செல்லத் திரும்பினாள்.
"ஸ்யூர் ஆன்ட்டி! அம்ருதா வச்சுட்டாங்களே, வேற என்ன செய்ய முடியும்!?" அவன் சொல்வது உணவை வீணாக்க முடியாதே என்ற தோரணையில் இருந்தாலும், அகரனுக்கு மட்டுமே அதன் பொருள் புரிந்து உள்ளுக்குள் புகைந்த ஒன்று தற்போது எரியத் தொடங்கியது.
அதன் சூட்டை "நீ இன்னிக்கு ஆஃபீஸ் போகலையா? வீட்ல உன்னை எதுவும் கேட்கறதில்லையா? " சற்று கடுப்பாகவே அமிர்தாவிடம் கொட்ட, அவன் ஊரிலிருந்த வந்ததால் அவனுக்காக வந்தவளிடம் அவன் எரிந்து விழுந்ததில் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.
கையில் கிண்ணத்துடன் வந்த தமிழ் அமிர்தா கண் கலங்குவதை கண்டு,"என்ன அகரா நீ!? உனக்காக இங்கே வந்து எங்கூட சேர்ந்து ஆசையா சமைக்கவெல்லாம் செய்தாள். அவளைப் போய் அழ வைக்கற," வருத்தமாக கேட்டாள்.
தாய் கூறிய பிறகு தன் தவறை உணர்ந்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட அகரன் அவள் கண்ணீர் சிந்துவதில் வருந்த, சரியாக அதேசமயம் நடப்பதைப் பார்த்த நவீன்,
"அம்ருதா அழாதீங்க. அவன் ஏதோ டென்சன்ல பேசி இருப்பான். சில்!" சமாதானம் சொல்லவும் மீண்டும் மலையேறினான்.
" நான் என்னம்மா தப்பா சொன்னேன்? இப்படி அடிக்கடி லீவ் போட்டா, கம்பெனியில அவளுக்கு ப்ராப்ளம் வரும். அதான் அப்படி கேட்டேன். அதுக்குனு உடனே டேப் தொறந்து விட்டு என்னை உங்கள்ட்ட திட்டு வாங்க வைக்கறா." மீண்டும் அவளையே குற்றம் கூறினான்.
அதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்றெண்ணிய அமிர்தா, "நான் கிளம்பறேன் ஆன்ட்டி. நைட் டின்னர்க்கு அம்மாப்பா உங்கள எல்லாம் வர சொன்னாங்க. ஸாருக்கு ஓகே'னா கூட்டிட்டு வாங்க." எனக் கூறி கண்களை துடைத்தவாறே விறுவிறுவென கிளம்பி விட்டாள்.
அவனுக்கு இப்போது நவீனின் கண்ணிலிருந்து அவளை அகற்ற வேண்டும் அதற்காக பேசி விட்டான். அதனால் அவள் அழுதது வருத்தம் என்றால் அவ்வாறு பேசியதற்காக தன் மீதே கோபமும் வந்தது.
"உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல அகரா. இந்தா நீ ஆசையா கேட்ட பாயாசம்." மகனது கையில் கிண்ணத்தை கொடுத்தவள் சமையலறை சென்று மறைய, தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அகரன்.
அவனது தோளைத் தொட்ட நவீன், "உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது கரண்? நான் கேஷுவலா தானே பேசுனேன். பாவம் அம்ருதா!" என்றிட அவனது பேச்சில் எரிச்சலாக," ஜஸ்ட் லீவ் மீ அலோன்!" என்றவன் தனது அறைக்கு சென்று விட்டான்.
அகரனின் செயலைப் புரியாத நவீன் தோள்களை குலுக்கி விட்டு, அவனுமே சிறிது நேரம் ஓய்வெடுக்க சென்று விட்டான். ஜெட்லாக் காரணமாக இருவருமே நன்கு உறங்கி விட, மாலை மங்கிய வேளையில் அகத்தியனும் வந்து விட்டார்.
இருவரோடும் சிறிது நேரம் உரையாடிய அகத்தியன், " ஆமா, அமிர்தா பொண்ணு சீக்கிரமே கிளம்பிட்டாளா? அகரன் வர்றான்னு அப்படி குதிச்சுட்டு இருந்தா, நான் வர்றதுக்குள்ள அவ வீட்டுக்கு போயிட்டாளா?!" ஆச்சர்யமாகக் கேட்டார்.
"நைட் டின்னர்க்கு அவ வீட்டுக்கு வர சொல்லிட்டு கிளம்பிட்டா." செய்தி போல சொன்ன தமிழின் பார்வை மகனிடம் பாய, அகத்தியனும் புரியாமல் அகரனை பார்த்தார்.
"அவள் இருந்த குஷியில நைட் நான்தான் அவளைக் கூட்டிட்டு போய் அவ வீட்டுல விடனும்னு நினைச்சுட்டு இருந்தேன். சரி விடும்மா, அவ வீட்டுக்கு போயே என்ன சேதி'னு கேட்டுக்கலாம்." மனைவியின் குரல் மாற்றத்திலேயே அவளது வருத்தம் புரிந்தவர் சமாதானம் கூறினார்.
அதைப்பார்த்து நவீன் வியந்து போக, எப்போதும் தாய் மீதான தந்தையின் காதலைக் கண்டு பிரமிக்கும் அகரனுக்கு, அமிர்தாவிடம் தான் சத்தமிட்ட செயல் பெரும் தவறாக தெரிய, இரவு அவள் வீட்டிற்குச் சென்ற பிறகு அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
ஆனால் அதையும் அவனுடன் விக்கிரமாதித்தனின் வேதாளமாக இருக்கும் நவீன் ரப்பர் கொண்டு அழிக்கப் போகிறான் என அகரன் அறியவில்லை.
இரவு உணவிற்காக அமிர்தாவின் வீட்டிற்கு கிளம்பியவர்கள் நவீனும் உடனிருப்பதால் யோசிக்க, அவனோ முதல் ஆளாக தயாராகி வந்திருந்தான்.
அழையாத வீட்டிற்கு அவனாக புரிந்து கொண்டு தவிர்க்க வேண்டும் அதை விடுத்து அவன் தயாராகி வந்துவிட, வெளிநாட்டில் வசித்தவன் இம்மாதிரி மரியாதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டான் போல என்றெண்ணி அவனை தடுக்க மனமின்றி அவனையும் உடன் அழைத்து சென்றனர்.
அமிர்தாவின் வீட்டில் தடபுடலான வரவேற்போடு அவர்களை எதிர்கொண்ட ராகவன் நவீனை வேறாக பார்க்காமல் ஏற்றதில் அகரனின் பெற்றோருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
அமிர்தாவிடம் தனியாக பேசி அவளை சமாதானம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்க காத்திருந்தான் அகரன்.
அதற்குள் இருவரிடமும் அடுத்து என்ன என்பதைப் பற்றி ராகவன் கேட்க, "ப்ராக்டிஸ் பண்ணிட்டே, ந்யூரோ சர்ஜனுக்காக மூணு வருசம் M.Ch பண்ணனும்னு இருக்கேன் அங்கிள். " என்று அகரன் கூறிட,
"நான் படிச்ச வரை போதும்னு இருக்கேன் அங்கிள். அப்படியே எதாவது ஹாஸ்பிடல்ல சேர்ந்து ப்ராக்டிஸ் பண்ண வேண்டியது தான். நான் உங்கள்ட்ட ஒன்னு கேட்கனும்." என நவீன் பீடிகை போட, அகரனுக்கு இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.