• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 50

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 50

தமிழ் அமிர்தாவை மகிழ்ச்சியாக கொஞ்சியதைக் கேட்ட அகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க அப்போது தான் அவன் அங்கு நிற்பதை கவனித்தவள், "எதாவது வேணுமா கண்ணா?" எனக் கேட்டாள்.

அமிர்தா சொன்ன விசயத்தை கிரகிக்க முடியாமல் தடுமாறியவன் தொண்டையை அடைக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கி, " இ.. இல்லம்மா.. கொஞ்சம்..தலைவலி.. அதான் காஃபி கெடைக்குமா?" ஒருவாறு சமாளித்து கேட்டான்.

தலைவலி என்று அவன் சொன்னதும் உடனே பதறிய தமிழ், "ரொம்ப வலிக்குதாப்பா?! இதோ உடனே போட்டு தர்றேன்." என்றபடி சமையலறைக்குச் சென்றுவிட, அமிர்தா அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அகரனும் சிரமத்துடன் தன் முகத்தை இயல்பாக வைக்க,"என்ன டாக்டர் ஸார்! எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகப் போகுதுனு சொல்லிட்டு இருக்கேன். அதுக்கு ஒரு விஷ் கூட பண்ண மாட்டீங்களா?" அவனை சீண்ட வேண்டுமென்றே கண்களில் குறும்புடன் கேட்டாள்.

"ஓ!! அப்படியா அம்மு!!? வாழ்த்துகள்!" தடுமாற்றதோடு வாழ்த்தியவன் அதற்கு மேல் இயல்பாக பேச முடியாமல் "உள்ள லேப்டாப் ஆஃப் பண்ண மறந்துட்டேன். போய் பார்க்கறேன்." வேகமாக திரும்பி அறைக்குள் சென்று மறைந்தான்.

செல்லும் அவனை நமட்டுச் சிரிப்புடன் அமிர்தா கண்டிருக்க, கையில் தேநீர் கோப்பையுடன் வந்த தமிழ் அகரனைக் காணாமல், "அதுக்குள்ள ரூம்ல போய் அடைஞ்சுட்டானா?" சலிப்புடன் தலையசைத்து அவனது அறைக்குச் சென்றாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் அகரன், 'அம்முவோட விருப்பம்னு முடிச்ச பிறகு, அவளுக்கு அவனை பிடிச்சிருக்குன்ற போது நீ இப்படி இருந்து என்ன ஆகிட போகுது அகரா?!' என தன்னைத்தானே கேட்டு ஓரளவு தேற்றிக் கொண்டான்.

அறைக்குள் அடைந்து கிடக்காமல் தாயுடன் நேரம் செலவழிக்க முயன்று தன்னை இயல்பாக காட்டிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் எழும் ஏமாற்றத்தை சில வேளைகளில் தடுக்க முடியாமல் திணறினான்.

நன்றாக பேசிக் கொண்டிருக்கும் மகன் திடுமென அமைதியின் தத்துப் பிள்ளையாக மாறி சிந்தனையில் மூழ்கி விட, "என்னாச்சு கண்ணா?! எதாவது பிரச்சனையா? ஏன் அடிக்கடி ஆஃப் மைன்ட்டா இருக்க?" ஒருநாள் தமிழ் கேட்டு விட்டாள்.

"ஒன்னுல்லம்மா. ஏதோ யோசனை.." என்றவன் அமைதியாக தாய் மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள, அவனது தலையை ஆதுரமாக கோதி விட்ட தமிழ், "பேசாம நீயும் கல்யாணம் பண்ணிக்கிறியா அகரா?" எனக் கேட்டாள்.

அந்த கேள்வி தந்த அதிர்வில் பட்டென்று அவளது மடியிலிருந்து எழுந்தவன், "என்ன!!!!? " நம்ப முடியாத திகைப்புடன் கேட்க "கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டேன்." அழுத்தமாக மீண்டும் அதையே சொன்னாள் தமிழ்.

"வெளாடுறீங்களா!!? திடீர்னு உங்களுக்கு என்னாச்சு? கல்யாணம்!! அதுவும் இந்த வயசுலயே.. ஐம் ஜஸ்ட் 26!..ஹோ காட்!! யூ ஆர் க்ரேஸிம்மா." பதறியடித்துக் கொண்டு பேசியவன் அதற்கு பதில் சொல்லாமல் எழுந்து செல்ல விழைந்தான்.

"ஏன்?? இந்த வயசுக்கு என்ன!? உன் ஃப்ரெண்டும் இந்த வயசு தானே, அவன் கல்யாணத்துக்கு பேசும் போது அமைதியா தானே இருந்த. உனக்கும் மட்டும் என்னவாம்!? நீயும் செய்துக்க. அப்ப எனக்கும் வீட்ல துணைக்கு ஒரு ஆளு கிடைக்கும்." பதிலளித்தாள் தமிழ்.

தாயை முறைத்த அகரன்,"அம்மா ஸ்டாப் இட். இதுக்கு மேல இந்த பேச்சு வேணாம். உங்களுக்கு வீட்ல ஆள் வேணும்ன்ற காரணத்துக்காக எல்லாம் என்னால இப்பவே கல்யாணம் பண்ண முடியாது." இடுப்பில் கைகளையூன்றி அவளை முறைத்தவன்,

"அதான் உங்களுக்கு அம்மு இருக்காங்கள்ல, அப்றம் என்ன?" எனக் கேட்க "ம்க்கும்!! அவளுக்கு மேரேஜ் ஆகற வரை தான் இங்க வந்து போக இருப்பா."

"அவளுக்கும் கல்யாணமாகி போயிட்டா அப்றம் யாரு இருக்கா? அவ அம்மாப்பா அவளை நம்ம வீட்டுக்கு தாரை வார்த்து விட்டு இருக்காங்களா என்ன!?" உடனே எதிர்க்கேள்வி கேட்டாள் தாய்.

அமிர்தாவின் திருமணம் பற்றிய பேச்சு வந்ததும் மனம் கனத்துப் போன அகரனின் வாய் பூட்டு போட்டுக் கொண்டது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தொடர்ந்து,

"அதனால தான் சொல்றேன். நீயும் கல்யாணம் பண்ணிக்கோ. அடுத்து, படிப்பு வேலைன்னு நீ எங்கூட இல்லனாலும் அவள் இருப்பாள்ல, அதுக்குத்தான் சொல்றேன்." விடாப்பிடியாக பேசினாள்.

"நோ!! அதெல்லாம் முடியாது. அவ்ளோ தான்." பேச்சு அத்தோடு முடிந்தது என்ற ரீதியில் அவன் எழுந்து அறைக்குள் சென்று விட, தமிழ் இந்தப் பேச்சை அத்தோடு விடுவதாக இல்லை.

அகரன் மீண்டும் தனது அறைக்குள் அடைந்து கொண்டான். மதிய உணவிற்கு கூட வெளியே வரவில்லை. கோபமாக இருந்த தமிழும் சென்று தரவில்லை. இரவு அகத்தியன் வந்ததும் தமிழ் நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தாள்.

இரவு உணவின்போது அகத்தியனும் அதையே வலியுறுத்தி பேச அகரன் பதில் பேச முடியாமல் திணறினான். அவனது தவிப்பை கண்ட தந்தை, "நீ யாரையாவது விரும்பறியா அகரா? அப்படி இருந்தாலும் தயங்காம சொல்லு. அந்த பொண்ணையே உனக்கு மேரேஜ் செய்துடலாம்." என்றார்.

"என்னங்க நீங்க!? அவன் எதாவது வெள்ளைக்கார பொண்ணை சொன்னா, என்னால எல்லா அவளோட இருக்க முடியாது." தமிழ் முகத்தை திருப்பிக் கொண்டு சொல்ல அகரனுக்கு அந்த நிலையிலும் லேசாக சிரிப்பு வந்தது.

"பயப்படாதீங்கம்மா. அப்படி எல்லா எதுவுமில்லப்பா." தாய்க்கு முதலில் பதிலளித்தவன் தந்தைக்கும் பதில் கூறிய பிறகும் அவர் அத்தோடு அவனை விடுவதாக இல்லை.

என்றுமே மனைவியின் ஆசையை மறுக்காத அகத்தியன், "அப்படினா, நாங்க பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஓகே தானே?" எனக் கேட்க, அதை மறுக்கவும் முடியாமல் திணறியவன், "ஓகே தான்ப்பா. ஆனா.." ஏற்கவும் முடியாமல் தடுமாறினான்.

"ஆனா எல்லா இல்ல அகரா. மொழி! நீ பார்த்து வைச்ச பொண்ணோட ஃபோட்டோவை அவன்ட்ட கொடு. அதோட பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு எப்ப வரலாம்னு கேட்டு வைம்மா." என்றவர் எழுந்து விட,

'இதென்ன உடனேவா!! ஏற்கனவே பெண் பார்த்து விட்டனரா!!?' அதிர்ந்த அகரன்," முடியாதுப்பா. என்னால அந்தப் பொண்ணை கண்டிப்பா கல்யாணம் பண்ண முடியாது." தீர்மானமாக மறுத்தான்.
 
Top Bottom