• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 52

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் - 52

நவீனிடம் அமிர்தா பேச வந்ததும் அவர்களை ஒன்றாக காணும் சக்தி தனக்கில்லை என்றெண்ணிய அகரன் எழுந்து சென்று விட, அவனது முகத்தில் வந்துபோன உணர்வுகளில் யோசனையான அமிர்தாவிற்கு அதுவரை இருந்த சந்தேகம் தீர்ந்தது.

தனது கணிப்பு பொய்யாகவில்லை என்று உள்ளுக்குள் பொங்கிய உவகையுடன் இருந்தவளிடம், "பசிக்குது சாப்பிடலாம்னு சொன்னான், இப்ப இப்படி ஓடுறான். வரவர இவனோட போக்கை புரிஞ்சுக்கவே முடியல! " தானாகவே புலம்பிக் கொண்டிருந்தான் நவீன்.

" அதுக்கான காரணம் எனக்கு தெரியும். ஓகே, அதை விடுங்க நவீன். நான் சொல்ல வந்த விசயத்துக்கு வர்றேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குனா, அதை முதல்ல எங்கிட்ட தானே சொல்லனும். அதை விட்டுட்டு ஏன் இப்படி செய்தீங்க?" எடுத்தவுடன் கேட்டாள்.

அவளது கேள்வியில் முதலில் திகைத்தவன்,"கரண்கிட்ட முதல்ல சொன்னேன். ஹி காட் எங்க்ரி அன்ட் உனக்கு இதெல்லாம் பிடிக்காது, உன் பேரண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்கனு எல்லாம் சொன்னான். "

"ஸோ..முதல்ல அவங்கள கன்வின்ஸ் பண்ணிட்டு உன்ட்ட பேசலாம்னு நினைச்சேன். ஐ தாட் யூ லைக் மீ! " தோள்களை குலுக்கி விளக்கினான்.

அகரன் கோபம் கொண்டதாக நவீன் சொல்லவும் மனதில் நிம்மதி விரவ தொண்டையை கனைத்தவள், "மே பி! பட்.. லைக், லவ் ஆகாதே நவீன்." என்றவளின் பேச்சில் அவன் என்னவென்று பார்க்க,

"அகரனோட ஃப்ரெண்ட் அப்படீன்ற முறையில நான் உங்கள்ட்ட ஃப்ரீயா பேசினேன். பட் அது இப்படி இம்பேக்ட் ஆகும்னு நினைக்கல." வருத்தமாகக் கூறினாள்.

அவளுக்கு அவன் மீது அகரனின் நண்பனாக மரியாதை மட்டும் தான்.அது காதல் என்ற அளவிற்கு இல்லை என்றான பிறகு,

"ஸோ! இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க அம்ருதா? கட் டூ த ச்சேஸ்!" பன்மையில் அழைத்து அவள் சொல்வதை நேரடியாக சொல்லச் சொன்னான்.

ஒருநொடி கண்கள் மூடி நிதானித்து, "ஐம் கமிட்டேட். இன்னமும் வீட்ல அதை சொல்லலை. ஸோ.. உங்க ப்ரோபோஸலை நீங்களே நிறுத்துன மாதிரி சொல்லிடுங்க ப்ளீஸ்! அதைப் பற்றிப் பேசத் தான் உங்கள மீட் பண்ணனும்னு சொன்னேன்." வந்த விசயத்தை கூறி முடித்தாள்.

அவளுக்கு விருப்பமில்லை என்று சொன்ன பிறகு மனம் சற்று வலித்தாலும் சில நொடிகளில் தன்னை தேற்றியவன், " இட்ஸ் மை பேட் லக்!" அதை வெளியே காட்டாமல் சிறு புன்னகையுடன் இயல்பாகவே கடந்தான்.

"ஆல் தி பெஸ்ட் அம்ருதா! சீக்கிரமே வீட்ல பேசுங்க." என்றவன் தன்னால் இந்த உண்மை யாருக்கும் தெரிய வராது என்ற உறுதியளித்து அவளிடம் கை குலுக்கியபடி விடை பெற்றான்.

அமிர்தாவின் தந்தை அவள் ஏறக்குறைய சம்மதித்து விட்டதாக சொன்னதால் நவீன் தன் தாயிடம் கிளம்பி வரும்படி பேசி இருந்தான். தற்போது அது தடைப்பட்டு போனதை தாயிடம் விவரிக்க வேண்டியே உடனே அமெரிக்கா கிளம்பி விட்டான்.

நவீனை சமாளித்து அனுப்பி விட்ட அமிர்தாவிற்கு அவளது தந்தையை சமாளிக்க சற்று சிரமமாக இருந்தது.

"என்னமா இப்படி பண்ணிட்ட?! அவ்வளவு எடுத்து சொன்னேனே, உன்னோட ஹெல்த் கண்டிஷன் எல்லாம் யோசிச்சு தானே நான் இதுக்காக அத்தனை விளக்கினேன். அத்தனையும் கெடுத்துட்டியே." என்று புலம்பித் தள்ளினார்.

அவளிடம் நான்கைந்து நாட்களாக அவர் பேசவே இல்லை. அவளது தாய் ரூபாவிற்கு ஏற்கனவே சிறு சம்சயம் உண்டு. தற்போது மகள் நவீனை நிராகரிக்கவும் தனது எண்ணத்தை அவளிடம் கேட்க, மறுக்காத அவளது மௌனமே அவருக்கான பதிலைக் கூறியது.

அதன்பின் ரூபா அவளை வற்புறுத்தவில்லை ஆனால் ராகவன் தான் அவள்மீது கோபத்தில் இருந்தார். அவரையும் குறை சொல்ல முடியாது.

இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மகள்! இதில் ஒருமுறை அட்டாக் வேறு வந்துள்ளது. அவளது உடல்நிலையை புரிந்து கொள்ளும் கணவன் வாய்க்க வேண்டும்.

தாம்பத்யம், மகப்பேறு என ஒவ்வொன்றிலும் அவளது உடல்நிலையை கண்ணும் கருத்துமாக பார்க்கக்கூடியவனாக அவளுக்கு வருபவன் இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தார்.

அதற்கு தகுந்தாற்போல இருதய மருத்துவம் பயின்றவனே அவளை மணக்கக் கேட்கும் போது அவனை தவறவிட அவருக்கு மனமில்லை.

தந்தையை சமாதானம் செய்ய முடியாமல் ஒருகட்டத்தில் "என்னோட விருப்பம்னு ஒன்னு இல்லையாப்பா?" அவள் ஆற்றாமையாகக் கேட்க,

"நவீனுக்கு என்னம்மா குறை? பார்க்க நல்லா இருக்கான், நல்ல குடும்பம். அதோட அவன் டாக்டர் வேற. உன்னை கவனமா பார்த்துப்பான்." அவர் அதிலேயே நின்றார். ஒரு தந்தையாக மகளின் உயிர்மீது கொண்ட அக்கறை அவரை அதற்கு மேல் சிந்திக்கவிடவில்லை.

அவளது மனதின் விருப்பம் பற்றி எல்லாம் யோசிக்காமல் அவளை ஒரு நோயாளியாக எண்ணி பேசுபவரின் பதிலில் அவளுக்கு லேசாக கோபமேறியது.

"இப்ப என்ன உங்க பேஷண்ட் மகளைப் பார்த்துக்க உங்களுக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளை தானே வேணும். ஏன் அது நவீனா தான் இருக்கனுமா? அகரனா இருக்கக் கூடாதா?" வேகமாகக் கேட்க, அவளது பேச்சைக் கேட்டவர் திகைத்தார்.

அகரனை அவ்வாறு எல்லாம் யோசிக்காதவரின் அதிர்வைக் கண்டு, "ஓஓ.. இதுலயும் உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்குல.. அகரன் ந்யூரோ தானே படிச்சிருக்கான்." சற்று நக்கலாக கேட்டவள்,

"பேசாம ஒரு நல்ல கார்டியாலஜி ஹாஸ்பிடல் பார்த்து என்னை அட்மிட் பண்ணிடுங்க. உங்க பொண்ணு அங்கே ரொம்ப பத்திரமா இருப்பா." கடுப்புடன் கூறினாள்.

மகள் கூறியதை கேட்டபிறகு தான் அவளது மன விருப்பம் பற்றி அறியாமல், தான் அவளை ஒரு நோயாளியாக உணர வைத்ததை புரிந்து வருத்தம் கொண்ட ராகவன்,

"ஸாரிடா அம்மு! உன் மனசுக்கு பிடிக்காத விசயத்த நான் இனிமே கம்பெல் பண்ண மாட்டேன்." என்று உறுதியளித்தார்.

"அப்ப உடனே அகத்தியன் அண்ணாவை கூப்டு பேசுங்க." என்ற மனைவியின் பேச்சில் குழம்பியவர் பிறகு விசயம் புரிந்து மகளிடம் 'அப்படியா' எனும் விதமாக கேட்க அவளும் ஆமோதித்தாள்.

இவள் இங்கு பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இருந்ததால் தமிழை பார்க்கச் செல்லவில்லை. தமிழே அழைத்து பொரிந்ததும் உடனே அங்கு ஓடி வந்து விட்டாள்.

அவர்கள் பேசுவதை அகரன் கவனிக்கிறான் என்பதை கதவு திறந்து கிடந்ததில் அறிந்தவள்,
வேகமாக சென்று அதை மூடிவிட எப்படியும் அவன் வெளியே வருவான் என்பதை கணித்தவள் அதற்குள் நடந்த அனைத்தையும் தமிழிடம் ஒப்புவித்தாள்.

தமிழுக்கு அத்தனை மகிழ்ச்சி! அவன் வருவதை அறிந்து வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றவே அவ்வாறு மொட்டையாக கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.

அமிர்தா தான் அந்தப்பெண் எனக் கூறாமல் திருமணத்தைப் பற்றி மட்டும் பேசி தமிழ் வற்புறுத்த, அதில் முறுக்கிக் கொண்ட அகரன் இரு தினங்களாக தருணின் வீட்டிற்கு சென்று விட்டான்.

தற்போது தன்னை இறுக்கமாக கட்டிக் கொண்டவனை விலக்க முடியாமல் திணறியவள், நடந்த அனைத்தையும் மெதுவாக அவனது காதில் உரைக்க, தங்களது காதலுக்காக அவள்பட்ட சிரமங்களை எண்ணி நெகிழ்ந்து போனான்.
 
Top Bottom