• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 54 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member

இறுதி அத்தியாயம் - 54

மங்கல வாத்தியங்கள் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பட்டு வேட்டி சட்டையில் அழகனாக மிளிர்ந்த அகரன்,

தன்னருகே தேவதை என அமர்ந்திருந்த அமிர்தவல்லியின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி தனது மனைவியாக்க, சுற்றி நின்ற சுற்றத்தாரும் நட்பும் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

மணமக்கள் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் அகத்தியன் பாதம் பணிய, "தீர்க்க சுமங்கலியா இருடா!" ஆனந்தத்தில் கண்கள் கலங்க அவளை கன்னம் வழித்து நெட்டி முறித்தாள் தமிழ்.

"அம்மா! அப்ப எனக்கு வாழ்த்து இல்லையா?" அகரன் சிணுங்கலாக கேட்க, "அட மக்குப் பையா! அவ தீர்க்க சுமங்கலியா இருந்தா, நீ தானேடா நீண்ட ஆயுளோட இருப்ப." தமிழ் விளக்கவும் அகரன் அசடு வழிய அனைவரும் நகைத்தனர்.

"ஏன்டா அகரா இந்த அவமானம் உனக்கு தேவையா!? இந்த அம்மாக்கள் எல்லாம் நம்மள மாட்டி விட்ற வரை தான் ரொம்ப பாசமா இருப்பாங்க." என்ற தருண்,

"அப்றம் எல்லாம் அவங்க ரெண்டு பேர் ராஜ்யம் தான். நம்மள ஃபுட் பால் ஆடுறது தான் அவங்களோட ஃபுல் டைம் வேலையே. அனுபவஸ்தன் சொல்றேன் நல்லா கேட்டுக்க." என்றவனை இடித்தாள் அவனது மனையாள் அபிநயா.

"வாழ்த்துகள் அகரன் அன்ட் முத்ரா!" என்றபடி கையில் பூங்கொத்துடன் வந்த முத்ரா இருவரிடமும் பொதுவாக நீட்டவும், அதுவரை புன்முறுவலுடன் இருந்த அகரனின் முகம் சற்று சுணங்க, அமிர்தா கண்களால் அவனை அதட்டினாள்.

வேண்டா வெறுப்பாக அதைப் பெற்று ஒரு தேங்க்ஸை உதிர்த்தவன் அமைதியாகி விட, அவள் அகன்றதும் "நாந்தான் அகரா அவளை இன்வைட் பண்ணுனேன். அவ இப்ப ரொம்ப மாறிட்டா. அவ செய்ததுக்கு அவளுக்கு பெரிய தண்டனையே கிடைச்சுடுச்சு." என்றவள்,

அவளுக்கு நடந்த விபத்து மற்றும் பார்வை பறிபோனதும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு கண்கள் பொருத்தப்பட்டதும் சொல்ல அகரன் அமைதியாக கேட்டுக் கொண்டான்.

திருமணத்திற்கு வந்த நவீனும், "ஏன்டா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றதா முதல்லயே சொல்லி இருந்தா, நான் குறுக்கேயே வந்திருக்க மாட்டேனே." என்று புலம்ப,

"அதுக்கு இந்த டாக்டர்க்கு முதல்ல அதுல தெளிவு வேணுமே நவீன். சுத்தி இருக்கற எங்க எல்லாருக்கும் தெரியுது, ஆனா ஸாருக்கு மட்டும் பல்பு லேட்டா எரியுது. இதுல நான் என்னத்த சொல்றது!?" அமிர்தா சலித்துக் கொள்ள," யா! யூ ஆர் ரைட்!" என்று சிரித்தான் நவீன்.

திருமணம் இனிதே முடிந்து சற்று ஆசுவாகமாக அமர்ந்திருந்த வேளையில் அகரனை தனியாக சந்தித்த அமிர்தாவின் தந்தை ராகவன்," உனக்கு தெரியாதது இல்ல மாப்ள." என்றதும்,

"என்ன மாமா இது! புதுசா எதுக்கு இப்படியெல்லாம் கூப்பிடுறீங்க? எப்பவும் போல பேர் சொல்லியே பேசுங்க." இடையிட்டான் அகரன்.

"சரிப்பா! அது வந்து.. நான் புதுசா சொல்ல ஒன்னுமில்ல. அம்மு பற்றி.. அவ உடல்நிலை பற்றி உனக்கே நல்லா தெரியும்.." என்றவருக்கு அதற்கு மேல் விளக்க முடியாமல் திணற, அவரது கைகளை பற்றிக் கொண்டான்.

"எனக்கு புரியுது மாமா. மேரேஜ்க்கு முன்னாடி நாங்க அடிக்கடி வெளியே போனது எங்கேன்னு நினைச்சீங்க? அம்முவோட ஹார்ட் ரொம்ப இயல்பா தான் இருக்காம். அவள் நார்மலா ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அவ என்னோட உயிர் மாமா."

"அப்படி எல்லாம் கேர்லெஸ்ஆ விட்டுட மாட்டேன். நாந்தான் எப்பவும் அவகூட இருக்கேனே, நீங்க தேவையில்லாம பயப்படாதீங்க." அவரது பயத்தைப் பற்றி அமிர்தா ஏற்கனவே அகரனிடம் கூறி இருந்ததால் அவரது அந்தப் பயத்தைப் போக்க புன்னகையுடன் விளக்கமாக எடுத்துரைத்தான்.

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து வலது காலெடுத்து வைத்து இத்தனை நாட்களும் வெளியாளாக வந்து போன அகரனின் வீட்டில், இன்று முழு உரிமையோடு புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் அமிர்தா.

அமிர்தாவின் தாய் ரூபாவிற்கு அவளைப் பற்றியும் அவளது உடல்நிலை பற்றியும் நன்கு அறிந்த குடும்பத்தில் அவள் வாழப் போவதில் பெருத்த நிம்மதி.

அதன்பிறகு வந்த நாட்கள் அந்த காதல் பறவைகளுக்கு வசந்த காலமாக மாறிவிட, கூடலில் கூட அவளை பூப்போல தாங்கினான் அகரன்.

நாட்கள் மாதங்களாக கடக்க, அமிர்தா கருவுற்ற சேதி அறிந்து குடும்பம் மொத்தமும் அளவிட முடியாத மகிழ்ச்சியில் திளைத்தது. இருந்தாலும் அவளது உடல்நிலை எண்ணி அனைவருக்குமே சிறு கலக்கம் இருந்தது.

கணவனாக இருந்த அகரன் அதன்பிறகு மருத்துவராக மாறி, தனது பணியையும் படிப்பையும் சேர்த்து கவனித்துக் கொண்டே மனைவியையும் கவனித்துக் கொண்டான்.

இதய நோய் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளிக்கும் ஒரு சிறந்த பன்னோக்கு மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அவர்களின் கண்காணிப்பில் மிகுந்த பாதுகாப்புடன் சுகபிரசவத்தில் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள் அமிர்தா.

பிரசவம் முடிந்து மேலும் சில தினங்களுக்கு அவளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க, அவள் இயல்புக்கு வந்ததும் அறைக்கு மாற்றி இருந்தனர்.

அனைவரும் வந்து அவளிடம் நலம் விசாரித்து செல்ல, இறுதியாக அறைக்குள் வந்த அகரனின் முகமே அவன் எந்தளவு உள்ளுக்குள் பயந்து இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

மென்னகையுடன் அவனை கைகாட்டி அருகில் அழைத்தவள், "ரொம்ப பயந்துட்டியா அகரா?" மெல்லிய குரலில் வினவ, கேதிட்டர் போடாத அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு முத்தமிட்டவன்,

"ரொம்பவே பயந்துட்டேன்டி. அதை வெளியே காட்டுனா இவங்க எல்லாம் பயந்துடுவாங்கனு சமாளிச்சுட்டு இருந்தேன்." கண்கள் கலங்க கூற,

அவனது தலையைக் கோதி விட்டவள், "துளசி பாட்டி சொன்ன ஒரு விசயம் எப்பவும் என் மனசுல மறக்காம இருக்கு." என்றிட, என்னவென்று பார்த்தான் அகரன்.

"அவங்க அடிக்கடி சொல்லுவாங்க, ஒரு மொழிக்கு இலக்கணம் இல்லனா அந்த மொழி சிதைந்து, கருத்துக்களைப் பரிமாற முடியாம முழுமையாக அழிஞ்சிடுமாம்."

"அதுமாதிரி தான் ஒரு பெண்ணோட வாழ்க்கைக்கு கணவனோட காதல் இலக்கணமா மாறும் போது அழகான இலக்கியங்கள் பிறக்கும்னு.. "

"ஸோ.. நாம இப்ப தான் ஒரு இலக்கியம் படைச்சிருக்கோம். இன்னமும் நிறைய இருக்கே, இதுக்கே இப்படி பயந்தா எப்படி டாக்டர் ஸார்!?" என்று குறும்புடன் கண்கள் சிமிட்டி கேட்டாள்.

"அடிப்பாவி!!! இதுக்குத்தான் இத்தனை பெரிய கதையா!!? நானும் என்னமோ நினைச்சு கேட்டா.. யம்மா தாயே! இந்த ஒரு இலக்கியத்துக்கே நான் செத்து பொழச்சுட்டேன். இனி எல்லாம் என்னால முடியாதுப்பா." வாய்மீது கை வைத்து வியந்தவன் பதறியபடி கூறினான்.

அவனது பாவனையில் வாய்விட்டு சிரித்த அமிர்தா,"இதெல்லாம் பொதுவா பொண்ணுங்க தான் சொல்லுவாங்க.. இங்க என்னடா னா எல்லாம் உல்டாவா இருக்கு." என்று கணவனது கன்னம் பிடித்து கிள்ளி ஆட்டியபடி சிரிப்புடன் கூறினாள்.

'போதும்! நீங்க கொஞ்சுனது.' என்பது போல அவர்களது இலக்கியம் சிணுங்கலோடு தன் இருப்பைக் காட்ட, தொட்டிலிருந்த பிள்ளையை அவளிடம் எடுத்து தந்த அகரன், உள்ளம் பூரிக்க தனது உயிர்களை புன்னகை முகமாக பார்த்திருந்தான்..

🌺 சுபம் 🌺
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom