• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 8

"மாப்ள கொஞ்சம் பாயாசம் கொடுக்கவா?" என்ற மாமியாரிடம் "அத்த இதுக்கு மேல என் வயித்துல இடமே இல்ல. இப்ப வேணாமே." நாசூக்காக மறுத்தான் அகத்தியன்.

தமிழின் வீட்டிற்கு வந்தது முதல் மாமியார் வீட்டு விருந்து அவனை மலைக்க வைத்திருந்தது. அதுவும் திருமணம் முடிந்த பின்னர் சிலமாதங்களுக்கு பிறகு வந்த பெண்ணையும் மருமகனையும் அன்பில் குளிப்பாட்டி திக்குமுக்காடச் செய்தனர் அவளது பெற்றோர்.

ஒரேநாளில் அனைத்து அசைவ உணவுகளும் தடபுடலாகச் செய்து அமர்க்களப்படுத்தி விட்டார் விசாலம். தமிழின் மாற்றம் கண்டு அந்த தாய்க்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

திருமணத்தின் போது முகத்தில் மலர்ச்சி இல்லாமல் இருந்த தமிழ், தற்போது மாப்பிள்ளையுடன் இயல்பாகப் பேசி சிரிப்பதில் மனம் நிறைந்து போன ஈஸ்வரனுக்கு அகத்தியனின் மீது பெரும் மதிப்பு தோன்றியது.

கண்டிப்பாக அவளது மாற்றத்திற்கு தங்களது மாப்பிள்ளையின் நிதானமான குணமே காரணமாக இருக்கும் என்று அகத்தியனைப் பற்றி இருவரும் தனிமையில் பேசிச் சிலாகித்தனர்.

"எனக்கு இப்பதாங்க மனசே நிம்மதியாச்சு. இந்தப் புள்ள வேற விரைப்போட இருந்தாளே, தனியாப் போய் அவர்ட்ட என்னவெல்லாம் செய்றாளோனு மனசு கெடந்து தவிச்சது. நம்ப மாப்பிள்ளை உண்மையிலேயே தங்கமான பிள்ள."

"இப்படி ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்து ஒரு பேரப்பிள்ளையை பெத்துக் கொடுத்துட்டா என் மனசே நிறைஞ்சுடும். அதே சந்தோஷத்துல மரியாத்தாளுக்கு பால் குடம் எடுக்கிறேன்னு வேண்டுதல் வைச்சு இருக்கேன். " கணவனிடம் நெகிழ்வான மனநிலையில் கூறிக் கொண்டிருந்தார் விசாலம்.

மனைவி சொல்வதைக் கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்த ஈஸ்வரனுக்கு அகத்தியனை எண்ணிப் பெருமையாக இருந்தது.

காலையில் சமையலறையில் பிஸியாக இருந்த விசாலத்திடம் வந்த தமிழ்," அவர் எழுந்துட்டாரும்மா. டீ நானே போடவா? இல்ல நீங்க போட்டு வைச்சு இருக்கீங்களா?" பொறுப்பான மனைவியாக வந்துக் கேட்ட மகளை நெட்டி முறித்தார் தாய்.

"எந்தங்கம்! இப்ப தான் சந்தோஷமா இருக்கு தமிழு. இதோ ரெடியா தான் இருக்கு. ஒரு நொடியில சூடா தர்றேன்." என்ற விசாலம் எதையோ கேட்க வெகுவாக தயங்கியதை உணர்ந்த தமிழ் என்னவென்று விசாரித்தாள்.

" ஒன்னுல்ல கண்ணு. மாப்ள கூட நீ.. சந்தோஷமா தானே இருக்க?" தயக்கமாக அவர் கேட்க, தாயைக் குழப்பமாகப் பார்த்த தமிழ்," அவரும் நானும் சிரிச்சு பேசறத நீங்க பார்க்கலையா?" மகள் எதிர்கேள்வி கேட்டாள்.

"அட அதில்லடி. உங்களுக்குள்ள.. எல்லா.. ஒழுங்கா நடக்குது தானே?" சிறு ஆர்வத்துடன் அவர் விளக்கமாகக் கேட்க, தமிழுக்கு இப்போது தான் அவர் கேட்க வருவது புரிந்து விழித்தவள்,

சட்டென, "ச்சீ! போங்கம்மா." அசூயையாக முகத்தைத் திருப்பிக் கொண்டு கூறிவிட்டு அங்கிருந்து அகல முனைந்தாள். அவள் வெட்கத்தில் கூறுவதாக நினைத்து மகிழ்ந்தார் விசாலம். "ஹே நில்லு. இந்தாம்மா இந்த டீயை மாப்ளைக்கு கொண்டு போ." என்று மகளைத் தேக்க மீண்டும் அழைத்தவர்,

"அப்றம் உன் உயிர்த்தோழி கௌசி வளைகாப்பு முடிஞ்சு ஊர்லேருந்து அவ அம்மா வீட்டுக்கு வந்திருக்கா. நீ வர்றனு சொன்னதும் உன்னைப் பார்க்கனும் சொல்லிட்டு இருந்தா. நேத்து இருந்த பரபரப்புல சொல்ல மறந்துட்டேன் தமிழு." வேகமாகக் கூறிமுடிக்கவும், தமிழ் மனநிலை முற்றிலும் பரவசமாக மாறியது.

கௌசல்யா! தமிழ்மொழியின் நெருங்கிய தோழி. இருவரும் பள்ளி, கல்லூரி என ஒன்றாகவே படிப்பை முடித்தார்கள். தமிழுக்கு திருமணம் நடப்பதற்கு ஒருவருடம் முன்புதான் கௌசல்யாவிற்கு திருமணம் நடந்து சென்னைவாசியாகி விட்டாள்.

அதுமுதலாக "உன் ஃப்ரெண்டு தானே கௌசி. அவ எல்லாம் வீட்ல சொல்ற பேச்சுக் கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ல? நீ மட்டும் ஏன்டி படுத்தற?" விசாலத்தின் தொடர் அனர்த்தலில் அகத்தியன் பெண் பார்க்க வருவதையே சம்மதித்தாள் தமிழ்மொழி.

தோழி கருவுற்றிருப்பதே மகிழ்ச்சி எனும்போது அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்த தமிழ்," இதோ இப்பயே ரெடியாகிட்டு நானே போய் அவளைப் பார்த்துட்டு வர்றேன்ம்மா."வெகு உற்சாகமாகக் கூறினாள்.

"மாப்ளைட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு என்ன சொல்றாருனு கேட்டுட்டு கிளம்பிப் போம்மா." என்ற தாயை முறைத்தவள் எனது தோழியைப் பார்க்க செல்வதற்கு அவரிடம் அனுமதி கேட்க வேண்டுமா? போர்க்கொடித் தூக்கினாள்.

அதற்குள் அவளைத் தேடி வந்த அகத்தியன் அவளது கோபமான முகத்தைக் கண்டு விசயத்தைக் கேட்க, தமிழ் வேகமாக நடந்ததைச் சொல்லவும் அவன் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று விசாலத்திற்கு பதட்டமாகியது.

தன் அத்தையிடம் அதிருப்தி பார்வை வீசியவன், " ஏன் அத்த நீங்க வேற. நீ என்ன செய்யனுமோ செய் மொழி. இதென்ன ஸ்கூலா? இல்ல நீதான் குழந்தையா? ஒன்னொன்னும் பர்மிஷன் கேட்டுச் செய்யறதுக்கு?" புன்சிரிப்புடன் கூறினான்.

அவன் அப்படித்தான் சொல்வான் என்று அவளுக்குத் தான் தெரியுமே அதனால் தன் தாய்மீது மிதப்பான பார்வையை வீசியவள் 'ம்ஹ்ம்' முகத்தை வெட்டியபடி திரும்பிச் செல்ல சிறுபிள்ளைத்தனமான அவளது செயலை புன்னகையுடன் பார்த்திருந்தான் கணவன்.

இருவரையும் கண்ட விசாலத்திற்கு தன் மருமகன் மீதான மதிப்பு ஒருபடி மேலேறியது. மகளும் மருமகனும் ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்வர் என்றெண்ணி நெகிழ்ந்து போனார்.

காலை உணவிற்கு பிறகு தமிழ் அவளது தோழியைக் காணச் சென்றுவிட, ஆசுவாசமாக அமர்ந்திருந்த அகத்தியன் இதுதான் சமயமென்று தன் மாமனாரிடம் தமிழின் சிறுவயது புகைப்படங்கள், வீடியோ இருந்தால் போட்டுக் காட்டச் சொன்னான் .

மனைவியின் வாய்மொழியாக காலையில் அடுப்பங்கறையில் நடந்த நிகழ்வை அறிந்த ஈஸ்வரன், மருமகன் எதைக்கேட்டாலும் விழுந்தடித்து செய்யும் மனநிலையில் இருந்தவர் உடனே அனைத்தையும் அவனுக்குக் காட்டினார்.

ஒவ்வொரு புகைப்படம் மற்றும் காணொளியை ரசித்துப் பார்த்தவன், வித்தியாசமாக தெரியாதவாறு சிறுவயது முதல் அவளது குணநலன்கள் மற்றும் அவளுக்கு எதாவது குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்ததா என்பதைப் பற்றி விசாரித்தான்.

அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லாததால், தமிழின் விசித்திர நடவடிக்கை பற்றி எதையும் அறிய முடியாமல் சோர்ந்து போனவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறு சிரிப்புடன் அமர்ந்திருக்க,

அங்கு வந்த விசாலம் " அவளைப் பற்றி இவர்ட்ட போய் கேட்கறீங்களே மாப்ள? இவரே அஞ்சு வருசங்களா அவளோடவே இருக்கல்ல. இவரு வெளிநாட்டு வேலைக்கு போயிருந்தாரே." சன்னச்சிரிப்போடு கணவனைப் பார்த்தபடி கூறியவர்,

"அவ செய்ற திருகுதாளம் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நானே கௌசிகிட்ட தான் கேட்பேன். சரி அதை விடுங்க. மதியம் ஆகிடுச்சே நீங்க சாப்பிட வர்றீங்களா? அவ அங்கிருந்து இனி நைட்டு தான் வருவா." விவரிக்க, அகத்தியன் அதை மனதில் குறித்துக் கொண்டான்.
 
Top Bottom