வழியிலே இதயத்தின் நிழலாய் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
61
267
53
Srilanka
VIN - 11

அன்றைக்கு ஆகாய நீலத்தில் சேலை உடுத்திருந்தாள் ஷோபா. கண்ணாடி முன்னே அமர்ந்திருந்தவளுக்கு அவளது சித்தி, தலைவாரிக் கொண்டிருந்தார். உதடுகளில் லிப்ஸ்டிக் அளவாய் இருந்தது; ஆனால் இடக்கன்னத்தில் ரோஸ்பவுடர் சற்றுக்கூடினாற் போலிருக்கவும், முகத்தை திருப்பிப்பார்க்க முற்பட்டவளுக்கு,

"ஆட்டாதையடி." என்று தலையிலேயே ஒன்று கொடுத்தார் வசந்தா. மெதுவாகத்தான்.

வலித்தது போலவே முகம் சுளித்துக்கொண்டவள்,
"எனக்குப் பூவெல்லாம் வைக்க ஏலாது சித்தீ.. பேசாம, எப்பவும்போல இறுக்கி ஒரு போனிடெயிலே போட்டுவிடுங்க."

அவளை முறைத்தவர்,
"ஓம், நான் கட்டிவிடுறன். நீ காப்பையும் கழட்டிவச்சிட்டு அப்டியே ஸ்கூலுக்கு போனியென்டா சரி."
அம்மா இவ்வாறு கூறவும், கண்ணாடியில் தெரிந்த ஷோபாவின் பிம்பத்தைப் பார்த்து "ஹாஹா" என நக்கலாய் நகைத்தான் அபி.

"இங்காலென்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? வை அவள்ட போன கெதிய. எவ்ளோ நேரமா பாத்துக்கொண்டிருக்காய்? சீப்பாலயே நாலு போடப்போறன் இப்ப." என்று சித்தி சீப்பை அவன்புறம் ஓங்கவும், இப்போது " ஹாஹா'' என்று சிரிப்பது ஷோபனாவின் முறையாயிற்று.

"இங்கப் பாருங்களனம்மா அத்தான. நேத்து சங்கரண்ணா காட்டின ஃபோட்டோவ விட அவர்ட ப்ரோஃபைல்ல, சன்கிளாஸ் எல்லாம் போட்டு சட்டப்படி இருக்கேர்."
எப்போது எதைச்சொல்லி அம்மாவின் கோபங்களை திசைதிருப்பலாமென நன்றாகவே தெரிந்திருந்தது-அந்த ஈராயிரக்குழவிக்கு.

சொன்னதோடு எழுந்துவந்து அம்மாவிடம், வருணின் வாட்ஸப் டிபியைக் காட்டினான் அபி. வசந்தா வாங்கிப்பார்த்து விட்டு,
" பெடியன் நல்ல உயரம் என?"

"ம்ம்" என்றாள் ஷோபனா.

"என்ன... பொண்ணுட 'ம்ம்'க்கு சத்தில்லாமக் கிடக்கு. இன்டைக்கு மாப்பிள்ள வரமாட்டாரென்டு ஒரே கவல போல ஆளுக்கு" அபி கலாய்த்ததில் அவனை முறைத்தவள், "தாடா இங்க" என்று போனைப் பறித்துக்கொண்டாள்.

சட்டென்று ஓட்டமும் நடையுமாக அறைக்குள் வந்த அமுதா, "வசந்தா, அவங்க வந்துட்டாங்க. அபி நீயும் வா." என்று இருவரையும் அழைத்துச் சென்றார்.

அறைக்குள் நின்றிருந்த ஷோபனா, போனில் வருணின் டிபியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 'அன்டைக்கு அவ்ளோ கோவமா கதைச்சிட்டு, எப்படி ஓம் என்டேர்?' அதுதான் அவளுக்குப் புரியவில்லை. அதை அவனிடம் கேட்கவும் பிரியமில்லை அவளுக்கு.

நேற்று அவள் ஸ்கூலில் இருந்து வரும்போதே சங்கர் வீட்டிற்கு வந்திருந்தான். சிவாவும் யாழினியும்தான் அவனுடன் பேசி இருந்தார்களாம். தங்கைக்கு விருப்பம் என்றதுமே சரியென்று சொல்லிவிட்டானாம்.

அன்று மாலையில் சங்கரினால், வீட்டில் எல்லோருக்கும் விஷயம் தெரியப்படுத்தப்பட்டது. யாழினியை ஓரிருமுறை சந்தித்திருந்ததால் அமுதாவுக்கு இதுவிடயத்தில், மிகுந்த சந்தோஷமே. மனைவிக்கு விருப்பமென்றதில் நேசனும் "சரி வரச்சொல்லு, பாப்போம்" என்றிருந்தார்.

இதோ, யாழினி வீட்டினர் வந்துவிட்டனர். சிறிது நேரத்தில் ஷோபனாவும் ஹாலுக்கு அழைக்கப்பட்டாள். சற்றுப் பதட்டமாக இருந்தாலும், சில நிமிடங்களில் இயல்பாகியிருந்தாள்.

மணிநேரம் கடந்திருக்கும். எங்களுக்குப் பூரண சம்மதம் என்றிருந்தனர், ஷோபனாவின் குடும்பத்தினர்.

"அப்ப கல்யாணத்த தீபாவளி கழிய வெப்பமா?" வருணின் தந்தை ஜெயந்திரன் கேட்டிருந்தார்.

"உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஷோபாவுக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்க இருந்தது. நாங்க எல்லாரும் சரியான ஆசையோட இருந்தம். ம்ம்.. என்ன சொல்ல வர்றனென்டா, இந்த கல்யாணம் நேரத்துக்கு நடந்தா நல்ல சந்தோஷப்படுவம். இதுதான் எங்கட பக்கமிருந்து ஒரேயொரு ரிக்வெஸ்ட்" என்ற தமிழ்நேசனின் குரலில் சற்று வருத்தம்.

ஜெயந்திரன் உடனே மனைவியின் முகம் பார்த்தார். வைதேகியும் சரி என்பதாக தலையசைக்க,
"அதுக்கென்ன சேர், வருண்ட லீவப்பாத்து மே மாதம் இல்லாட்டி ஜூன்ல செய்வமே." என்றிருந்தார்.

அதன் பிறகு எந்தக்கோயிலில் கல்யாணம், ரிசப்ஷன் ஹால், சாப்பாடு மெனு, சமையலுக்கான ஆள் இப்படியான பேச்சுக்களோடு கரைந்தது நேரம். சுவர்க்கடிகாரத்தின் சிறியமுள், ஏழைத்தொட சில நிமிடங்களே இருந்த நிலையில் விடைபெற்றுக் கொண்டனர் வருண் குடும்பத்தினர்.

*****

வெசக் இரவு. கண்டி வீதியெங்கும் வெளிச்ச வெள்ளம். உயர் கட்டடங்களில், வீடுகளில், வீதியோர தேநீர்க்கடைகளில் அதன் பக்கத்தில்நின்ற பலா மரங்களிலும்கூட வகை வகையான வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டு, காற்றில் சுழன்றவண்ணம் இருந்தன. தாமரைமொட்டு வடிவிலான சில ஆறடி ராட்சசக்கூடுகளும் வீதியோரமாக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.
புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது ஜாதகக்கதைகளைக் காட்சிப்படுத்தும் பெரியளவிலான வெசாக் தோரணங்களும்(Pandols) அமைக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

வீதிக்கு வீதி தன்சால் (வெசாக் காலங்களில் இலவசமாக உணவு/ பானம் வழங்கப்படும் தானசாலைகள்) காணப்பட்டதால் வழமையை விட சற்று சனநெரிசலாகவே இருந்தது.

சாலையை அடைத்து நின்றது அந்த நாற்பதடி உயர பந்தல். வெஸ்ஸந்தர ஜாதகக் காட்சிகள் போடப்பட்டிருந்தன. கீழே பெரிய கூட்டம். அதற்கு அடுத்த வளைவில் தன்சல. ஏற்கனவே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்த காரின் வேகத்தை இன்னும் குறைத்தான் வருண். அவனின் கார் கண்ணாடி தட்டப்பட என்னவெனப் பார்த்தான். வெள்ளை சாரம் அணிந்திருந்த ஓர் சிறுவன். பத்து வயதிருக்கலாம்.

"மஹத்தயா, காபி எக்கக் பொனவத?" ( சேர், ஒரு காபி குடிப்பீங்களா?)

மறுக்கத் தோன்றாமல் ஒன்றை வாங்கிக் கொண்ட வருண், காரை ஓரம்கட்டி குடிக்கத்தொடங்கினான். சற்றுக்கசப்பாய் இருந்தாலும் மிதமான சூட்டில் குடிப்பதற்கு நன்றாகவே இருந்தது. வருண் காஃபி குடித்து முடியவும் காரின் உள்ளே ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடியவும் சரியாக இருந்தது.

_“ஹேய்ய்ய்! கேட்டீங்களா மக்களே, அந்த வரிய! ‘நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன்’ அடேயப்பா! என்ன ஒரு அழகான வரி! அதுக்கப்புறமும் அழகுதான். ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’னு அவர் கேட்க, ‘என்னையே தந்தேன் உனக்காக’னு அவங்களும் தன்கண்ணாலயே பதில் சொல்லுவாங்க!
அதுசரி, மணிரத்னம் படத்துல காதல காட்சிப்படுத்துற விதமே தனிதானே!
அட படத்த விடுங்க. நீங்க சொல்லுங்க, உங்க வாழ்க்கையில இப்படி ‘ஜென்மமே, கொண்டேன் அதற்காக’னு சொல்ற ஒரு சுப்புலக்ஷ்மியோ இல்லனா ஒரு ஷோபனாவோ இருக்காங்களா? இருந்தா.. இப்பவே கால் பண்ணுங்க. உங்க கதைய எங்களோட ஷேர் பண்ணுங்க."


RJ அக்கா வெளுத்து வாங்கியதில், வருண் தன்னையறியாமல் பக்கென்று சிரித்துவிட்டான்.

ஷோபனா.
காரை ஸ்டார்ட் பண்ணி, மெதுவாக ஓட்ட ஆரம்பித்தவனுக்கு அவளின் எண்ணம்தான். அவள், இன்னும் மூன்று நாட்களில், அவன் மனைவி ஆகப்போகிறாள்.

ஆமாம். கம்பெனியில் எல்லோருக்கும் மூன்று நாட்கள் வெசாக் விடுமுறை. வருணுக்கு மட்டும் கூடுதல் நான்கு நாட்கள் சேர்த்து ஒரு வாரகாலம் அவன் கல்யாணத்துக்கான விடுமுறை.
பெண் பார்த்துவிட்டு வந்த அன்றே, வருணிடம் கல்யாணத்தை முன்னமே வைப்பதைப் பற்றிப் பேசினர் அவனது பெற்றோர்.

இவ்வளவு சீக்கிரம் வைப்பதில் வருணுக்கு விருப்பமில்லை.
"ட்ரெய்னிங் முடியட்டுமேம்மா." என்றான்.

"இல்லடா. அவங்கட அப்பா கேக்கும் போது நீயில்ல. மனுஷன்ட குரல்ல அவளோ கவல. உங்கட அப்பாவும் சரி என்டுட்டேர். இனி மாத்திக் கதச்சா நல்லாருக்காதுடா தம்பி" என்றார் வைதேகி.

அப்போதும் மறுத்துப் பேசியவனை, எல்லாருமாய் சேர்ந்து சம்மதிக்க வைத்தனர்.

இதோ மூன்று நாட்களில் திருமணம்.

இடையில் இருந்த ஒரு மாத காலத்தில் அவளும் இவனுடன் பேச முற்படவில்லை; இவனும் கல்யாணத்திற்கு பிறகு பேசத்தானே போகிறோம் என அப்படியே விட்டுவிட்டான்.

தேவையேற்படும்போது, வட்ஸப்பில் பேசுவார்கள். அவர்களின் உரையாடல் பதிவை (Chat History) எடுத்துப் பார்த்தால், ஒருசில 'இது ஓகேயா?' மெசேஜ்களும், சில 'தம்ப்ஸ் அப்' ரியாக்சன்களுமே இருக்கும்.

ஒரேயொரு முறை பேசியிருந்தனர். அதுவும் நேரடியாக இல்லை.

இவன் யாழினியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான். ஷோபாவின் "பொயிட்டு வாரனக்கா" கேட்டது.

"வருண்தான்டி போன்ல" யாழினி கூறினாள்.

"...."

"என்னவாமென்டா கேக்கிறாய் ஷோபா? கல்யாணத்த தள்ளிப்போடட்டாம். அவனுக்கு ட்ரெய்னிங் முடிய எக்ஸாம் இருக்காமென்டு ஒரே அழுகை."

"கல்யாணமென்டா என்ன இப்ப. எவ்ளோ படிக்கனுமோ அவளோ படிக்க சொல்லுங்க. படிக்கிற ஆள யாரும் தடுக்கப் போறேல்ல; தட்டி வேணுமென்டாக் குடுப்பம். இதுக்கு இவளோ சீன்" அவனுக்கு கேட்கும்படிக்கு யாழினியிடம் சத்தமாய்ச் சொன்னாள் ஷோபனா.

"அப்படிங்களா டீச்சர்? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்" வரவழைக்கப்பட்ட பவ்வியத்துடன் பதிலளித்தான் வருண்.

"ஆ... தம்பி! உங்கட பதில்ல, இங்கால நிக்கிற ஆளுக்கு ஒரே சிரிப்பு. அங்காலப்பக்கம் என்ன மாதிரி?" யாழினி கேட்கவும்

"ஓம் அக்கா. இக்கால எங்கட டிபார்ட்மெண்ட் ஹெட்தான், முறச்சிக்கொண்டு நிக்கிறேர். பிரேக் டைம் முடிஞ்சும் என்னடா உனக்கு போன் கத என்டு, அவர் என்ட கழுத்தப்பிடிக்க முதல், நானே கட் பண்றேன் . பாய்." என்று போனை வைத்திருந்தான்.

நினைத்துப் பார்த்தவனின் இதழ்களில் புன்னகை. வருணின் கார் வேகமெடுத்தது.

*****
பள்ளிக்காலத்திலும் சரி பல்கலைக்கழகத்திலும் சரி, வருண் நன்றாகப் படிக்கும் திறமையான மாணவன். ஒரே...டியாக, பெண்களின் கனவு கண்ணன் என்றிட முடியாது. ஆனாலும் அழகன்தான்.பல்கலையில் இரு லவ் ப்ரபோசல் கூட வந்தது. 'இல்ல, சரியா வராது' என்றதோடு கடந்திருந்தான்.

கன்னிகளைவிட கட்டடக்கலை மீதான ஆர்வமே அதிகம். ஆதலால் கல்யாணம் பற்றியெல்லாம் பெரிதாக எண்ணமிருந்ததில்லை அவனுக்கு.

அன்று கஃபேயில்,கோவமாகப் பேசியவனிடம், அவள் சொன்னவைகள் மனதை சற்று அசைத்திருந்தாலும், நண்பனின் காதலி என்ற ஒரேஎண்ணம் 'வேண்டாம்' என்பதைத் தாண்டி வேறு சிந்தனையே வேண்டாம் என்றது.

அந்த மனநிலையிலேயே கஃபேயை விட்டு வெளியேறி இருந்தவன், வரும் வழியில் அந்த பஸ் ஹோல்ட்டைக் கடக்கையில் சட்டென்று ப்ரேக்போட்டு பைக்கை நிறுத்தியிருந்தான்.

இங்கே உட்கார்ந்து ஜோவின் திருமணத்தன்று அழுதவள்தான் இன்று, '...அவங்க எல்லாரையும் பிடிக்கும். ஏன் உங்களையும் தான். சந்திச்ச ஒவ்வொரு முறையும் நல்லாத்தான் நடந்தனீங்க..' என்று பிடித்தம் சொல்லி, அவனைத் திருமணம் செய்யக் கேட்கிறாள்.

'இந்த விஷயத்திலும் அவளிடம்
நல்லா நடந்தாத்தான் என்ன?' என இதயத்தில் உதயமான எண்ணத்தை, செயல்படுத்தியும் இருந்தான் அவன்.
 
Last edited:

Author: ஷாரிகா
Article Title: வழியிலே இதயத்தின் நிழலாய் - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.