• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 14

ஷாரிகா

Member
Staff member
VIN - 14

பாடசாலை முற்றத்தில் தனியாக நின்றிருந்தாள் ஷோபா. அது அவள் வேலைபுரியும் பள்ளி இல்லை; முன்னர் படித்த பள்ளி. (இப்போது அங்கே ஏன் நிற்கிறாள்?) முற்றத்தைக் கடந்து கேட்டைத் தாண்டி வீதிக்கு வந்தாள். முன்னெதிரே இருந்த தேவாலயத்தில் ஏதோ திருமணநிகழ்வு நடக்கிறது போலும். ஆனால் இது அவளுக்கு நன்கு பரிச்சயமான டவுன்சேர்ச் ஆயிற்றே. (அது எப்படி இந்த இடத்தில் இருக்கும்!) மெல்ல முன்னேறிச்சென்று சர்ச்சினுள் நுழைந்தால், பள்ளி சீருடையணிந்து நின்றிருந்தான் ஜோ!

பதறி எழுந்தாள் ஷோபனா.

அருகில் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனுக்கு கேட்டு விடுமோ என பயந்துகொள்ளும் அளவிற்கு, வேகவேகமாய் அடித்துக்கொண்டிருந்தது இதயம்.

மெல்லக் கட்டிலில் இருந்து இறங்கி குளியலறைக்கு சென்றவள், முகத்தை 'மளமள'வென நீரினால் அடித்துக் கழுவிக்கொண்டாள்.

அவளுக்கு திருமணம் நிகழ்ந்து இன்றோடு மூன்றாவது நாள். நேற்றையதினம் எவ்வளவு சந்தோஷமாக கணவனை தன்பைக்கில் ஏற்றிக் கொண்டு சுற்றியிருந்தாள்; கதைத்துப் பேசிச் சிரித்திருந்தாள். இனி எல்லாமே சரியாகி விடுமென நம்பினாளே!

'கடவுளே! இது என்ன ஆக்கினை?' வாஷ் பேசினில் கைகளை ஊன்றிக் கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கு, தன்னையெண்ணிக் கழிவிரக்கமாக இருந்தது. அழுகை வரும் போலிருந்தது.

இப்போதெல்லாம் எதையும் நினைத்துக் கவலைப்பட்டு அழுவதெல்லாம் இல்லை. ஆனால் என்ன முயற்சித்தபோதும் எட்டு வருடகால நினைவுகளை சட்டென்று முழுமையாய் விலக்கி வைத்துவிட இயலவில்லை. சொட்டுச் சொட்டாய்த்தான் சொல்பேச்சுக் கேட்டது இதயம்.

எங்கேயோ ஒளிந்திருந்து கொண்டு, அவ்வப்போது அரிதாய் தலைதூக்கும் அந்த ஞாபகங்களின் பிடியிலிருந்து, தன்னை திசைதிருப்புவதற்கு இறைவனிடம் சரணாகதியடையலாம்; அடுப்படியில் நின்று அன்னையுடன் கதையாடலாம்; நல்ல நாவலொன்றிற்குள் புதைந்து போகலாம்; தம்பிமாருடன் சேர்ந்து படம் பார்க்கலாம்; யாழினியிடம் சென்று மிக்ஸ்ட் ஜூஸ் குடிக்கலாம்... இன்னும் இன்னும் ஆயிரம் வழிகள் வைத்திருக்கிறாள். ஆனால் இதற்கென்ன வழி செய்வது???

அவளது கல்யாணப் பேச்சிற்குப் பின்னர்தான் அடிக்கடி இந்த விசித்திரமான கனவுகள். அப்போதெல்லாம் யாழினியிடம் அழைத்துப் புலம்பிச் சமன்பட்டிருக்கிறாள். ஆனால், இப்போது முடியாது. அவள் தான் நாத்தனார் ஆயிற்றாளே. என்ன நினைப்பாளோ எனும் எண்ணம் தடுத்தது.

அர்த்தராத்திரியில் பதறி எழவைக்கும் கனவுகள் வந்தால் என்னதான் செய்யலாம்? இந்த விஷயம் தெரிந்தால் கணவன் தன்னை எத்தனை தரக்குறைவாய் நினைக்கக்கூடும் எனக்கணிக்க முடியாமல் தூக்கமின்றிக் குழம்பித் தவிக்கலாம். இப்போது அதைத்தான் ஷோபனாவும் செய்தாள்.

*************

ஆறாம் பாடவேளைக்கான அறிவிப்புமணி ஒலித்து ஓய்ந்தது. தரம் பதினொன்று மாணவர்களுக்கு சங்கீதப்பாடம். அன்று சங்கீத ஆசிரியை வரவில்லை. வகுப்பு தலைவியிடம் வேலை கொடுத்திருந்தார்.

"எல்லாரும் இடத்துல வந்திருங்க. நான் நோட்ஸ் வாசிக்க ஸ்டார்ட் பண்ணப் போறன். திருப்பவும் கேட்டா சொல்ல மாட்டேன்." ஆளுமை தெறிக்க, முன்னே நின்று சவுண்டுவிட்டாள் அவள்.

ஒன்றிரண்டு விதிவிலக்கான உருப்படிகளைத் தவிர, மற்றதெல்லாம் எழுதுவதற்கு ஆயத்தமாயின.

அவள் சத்தமாக வாசிக்கத் தொடங்கினாள்.

"சங்கராபரணம் என்டு ஹெடிங்க் போட்டுட்டு, கீழ எழுதுங்க... இது 29ஆவது மேளகர்த்தா ராகம். ஹிந்துஸ்தானி இசையில் 'பிலாவல்' என...."

அந்த நேரம் பார்த்து வகுப்பறையின் உள்ளேவந்த PTசேர், "நாலு பெடியல் வாங்களேன்டா. ஸ்போர்ட்ஸ் யூனிட்டுக்கு புதுசா சாமான்கள் வந்திருக்கு. அடுக்க வேணும்" என்று வருமாறு அழைத்துவிட்டு சென்றார்.

அபித்ரனின் அருகிலிருந்த அருள் உடனே எழுந்துகொண்டு, நண்பனையும் அழைக்க,

"நோட்ஸ் எழுதாட்டிக்கு கலைமகள் டீச்சர் எப்படி அடிப்பாங்கென்டு தெரியும் தானே..? எனக்கு வீட்ட போயெல்லாம் எழுதிக் கொள்ளேலாது. நான் வரேல்லப்பா." என மறுத்தான் அபி.

"அபி! நீ போறண்டாப் போ. நான் எழுதி வைக்கிறேன் உனக்கு." அருகில் வந்து அவன் காதில் தேன்பாய்ச்சினாள் மது. அவர்களின் வகுப்புத் தலைவி மதுஷ்னவி.

புன்னகைத்தவாறே எழுந்து கொப்பியை நீட்டியவன், நண்பனோடு தானும் சென்றிருந்தான்.
**************

ஸ்கூல்முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அபித்ரனுக்கு, திடீரென சற்றுப்பாரமான பொருட்களைத் தூக்கிவைத்ததில் கைச்சந்துப் பகுதியெல்லாம் வலியெடுத்தாலும், எல்லாம் மறந்து எங்கோ உயரப் பறப்பது போலிருந்தது. மதுதான் அடிக்கடி இறக்கைகள் தருகிறாளே!

சைக்கிளை வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழையப் போனவன் முன்னே, "டொட்டடொய்ய்ங்ங்!" என்று கைகள் விரித்து அழகு தரிசனம் தந்தாள், அவன் அன்புத்தமக்கை.

புதிய ஜோடிக்கு இன்று தங்கள் வீட்டில் விருந்துஎன அவனுக்கு முன்பே தெரியுமே. கண்டுகொள்ளாததைப் போல முகத்தை வைத்துக்கொண்டு,

"இப்படி ரெண்டு நாள்ல வர்றதுக்குத்தானா, அன்டைக்கு கண்லருந்து மகாவலி கங்கையைத் திறந்து விட்டனீ?" கேலியாகக் கேட்டான்.

"யார்டாப்பா.. அது! அன்டைக்கு கொஞ்சம் விட்டிருந்தாலும் மச்சான்ட கண்ணுலருந்து நயாகராவே வழிஞ்சிருக்கும்" ஷோபனாவின் பின்னால் வந்துநின்ற வருண் குரல் கொடுக்க,

கபிஷும் ஷோபாவும் ஒற்றைகையால் வாய் பொத்திச் சிரித்தவர்கள், ஹைஃபைவும் கொடுத்துக் கொண்டார்கள்.

"என்ன ஆள் நீங்க! போங்க அத்தான்." அபி சிணுங்கலாகச் சொன்னான்.

"ம்ம்.. போகத்தான் போறன்." வருண் சொல்ல,

"எங்க?" உடனே கேட்டான் அபி.

"அவர் நாளைக்கு வேலைக்கு போகணும்டா. நைட்டே கண்டிக்கு போறேர்." பதில் சொன்னாள் ஷோபனா.

"அபி! நீ உடுப்ப மாத்திட்டு வா. தம்பி வந்தாத்தான் சாப்பிடுவாவாம், உங்கட அக்காக்காரி." மகனிடம் சொன்னார் வசந்தா.

"கெதிய வாங்கப்பு. வருண்தம்பி வீட்டபோய் எல்லாம் ரெடியாக்கணுமல்லோ?" தயாளதேவியும் சொல்ல,

"சரி சரி. இந்தா வாரனம்மம்மா." என்று விட்டு வேகமாய்ப் படியேறினான் அபி.

***********

சாப்பிட்டு முடிந்ததும் சித்திவீட்டிலிருந்து கிளம்பியவர்கள், யாழினியிடம் சென்று, அவளையும் அழைத்துக்கொண்டு வருண்வீட்டுக்கு வந்தார்கள். சிறிது நேரத்திலெல்லாம் ஷோபாவின் பெற்றோரும் அங்கே வந்து விட்டிருந்தனர். பேச்சும் சிரிப்புமாய் நேரத்தைக் கடத்தியதில், ஷோபாவின் முன்னிரவுத் தூக்கம்பறித்த கனவுதந்த நெருடல், மெல்ல மெல்லக் கரைந்து மறைந்திருந்தது.

இருள் கவிழத் தொடங்கியிருந்தது. ரெடியாகிவந்த வருண் எல்லோரிடமும் பொதுவாக விடைபெற்றுக் கொண்டு, காரைநோக்கி சென்றான். வாசலில் தான் நின்றிருந்தனர் அனைவரும்.

ஷோபனாவின் முன், வந்துநின்ற யாழினி அவளின் முகத்தை ஆராய்ச்சியாய் அப்படியும் இப்படியுமாக உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன யாழி?" சிவா கேட்க

"கட்டி மூன்டுநாள்ல விட்டுட்டு வேலைக்கு போறான். இது எப்படி அசையாம சும்மாவே நிக்குதென்டு பாருங்களேன்."

"அப்ப என்ன செய்யணும்? வேணுமென்டா ஆடிக்கொண்டு நிக்கவா?" ஷோபா இடக்காக கேட்கவும்,

"வருண்! இந்தா உங்கட வைஃப் ஏதோ அவசரமா கதைக்கணுமாம்." என்று சத்தமிட்டு சொன்ன யாழினி,

"சரி சரி. பழைய ஜோடி எல்லாம் உள்ள வாங்க."என அழைக்க மற்றவர்களும் புன்சிரிப்புடன் வீட்டினுள் சென்றனர்.

கார் கண்ணாடியை இறக்கிவிட்டவன், தன்னை நோக்கி வருபவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அருகே வந்து நின்றவளிடம்,
"முதல்ல கண்ணத்தொட ஷோபா. ஹஸ்பண்ட் வேலைக்கு போறேரென்டு யாராச்சும் இப்படி அழுவாங்களா?" அவன் குறும்பாய்ச் சொல்ல, சோபையாய்ப் புன்னகைத்தாள்.

"காலையிலிருந்து சோககீதம் வாசிச்சஆள் இப்பதான் சிரிக்குது." சொன்னான் வருண்.

அவன் கவனித்திருக்கிறான் என்பதில் கண்கள் இரண்டும் பனித்தன.

"ஐயோ! உண்மையாவே அழப்போறியா என்ன?"

இல்லை என்பதாக தலையசைத்துவிட்டு, "நீங்க வேலைக்குப் போகேக்க நான் உண்மையா அழ, நீங்களும் உண்மையாவே ஆறுதல் சொல்ற ஒருநாள் கூடிய சீக்கிரமே வரும். அப்படி நான் நம்புறேன்." என்றாள்.

சில வினாடிகள் பதில் பேசாது அவளையே பார்த்திருந்தவன்,
"ஹ்ம்ம். வந்தா... சந்தோஷம் தான். பாப்போம்" என்றான்.

"கவனமா பொய்ட்டுவாங்க" அவள் சொல்ல,

புன்னகை முகமாகத் தலையசைத்துக் கிளம்பினான்.
 
Top Bottom