• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 17

ஷாரிகா

Member
Staff member
VIN -17

"ட்ர்... ட்ர்ர்..."

அறையின் நிசப்தத்தைக் குலைக்காமல் மெதுவாய் அதிர்ந்த கைப்பேசியால் வருணின் தூக்கம், மெல்ல கலைந்தது.

திரையைப் பார்த்தால், அழைப்பு யாழினியிடமிருந்து. சத்தமில்லாமல் படுக்கையிலிருந்து கவனமாக இறங்கி, போனை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், பால்கனிக்கு சென்று கைப்பிடிச்சுவரில் சாய்ந்துநின்று பேசத் தொடங்கினான்.

"சொல்லு யாழி!"

"......."

"ஆள் நல்ல தூக்கம். ஹ்ம்ம்.. இப்ப ஓகே தான்."

"........"

"இல்லக்கா.. காலைல வராத. இன்டைக்கு ஸ்கூல் போ. எப்படியும் ரெண்டு நாளைக்கு நீ லீவு போட வேண்டி வரும்."

"........."

"ஏனா... ஏனென்டு, பிறகு சொல்றனே.."

"........."

"இல்லையில்ல. அம்மாவ நாங்களே போய் பாப்போம்"

"........."

"சரி. வெக்கிறன்"

பேசி முடித்துவிட்டு அண்ணார்ந்து வானைப் பார்த்தான். கிழக்கே மேலேறிக் கொண்டிருந்த சூரியன், மேகங்களின் ஓரங்களை தங்கமென ஒளிரச்செய்ய, அந்த வெளிச்சம் வானம் முழுக்க மெதுவாய் பரவிக்கொண்டே இருந்தது. செம்மஞ்சள், மஞ்சள், சிவப்பு வண்ணங்களின் கலவையில், நொடி ஒவ்வொன்றுக்கும் நிறம் மாறிக் கொண்டேயிருந்த விடிவானைப் பார்க்கப் பார்க்க மனோரம்மியமாய் தோன்றியது.

ஷோபனா எப்போதோ எழுந்திருந்தாள். சொற்ப நேரத்தில் அறைக்குள் வந்த வருண், அவளைப் பார்த்ததுமே புன்னகை செய்தான். அவனை ஒருமாதிரி ஏறிட்டவள், எந்தவொரு பாவனையும் காட்டாமல் வேறுபக்கமாய் பார்வையைத் திருப்பிவிட்டாள். ஷோபனா முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பில்லை.

வருணுக்கு, 'என்னடா இது..? மறுபடியுமா..?' என்று தானிருந்தது. சூரியோதயம் தந்திருந்த புத்துணர்ச்சி மொத்தமாய் வடிந்து போன உணர்வு.

அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து கொண்டவள் வெகுநிதானமாய் தேநீர் அருந்தத் தொடங்கினாள்.

குமரன் அடிக்கடி நொந்து கொள்ளும் - அவனது சேட் பிளாஷ்பெக்கைப் பயன்படுத்தி, நேற்று எப்படியோ சமாளித்திருந்தான். பிறகு... வருண் எந்தக்காலத்தில் மரத்தன் எல்லாம் ஓடினான்.
ஆனால் இப்போது என்ன சொல்லி அவளை மரமிறக்குவது... அவனது மண்டையில் எந்த பல்பும் எரியவில்லையே.

பார்த்து சிரிக்கக் கூட இல்லை அவள். 'ஹாஸ்பிடல் போக வரமாட்டேன்' என்றால் என்ன சொல்லி அழைத்துச் செல்வது..?

போனை உள்ளங்கையிலே ஓசையின்றி தட்டிக்கொண்டே, சோர்ந்துபோன முகத்துடன் யோசனையாய் நின்றிருந்தவனின் பார்வை என்னவோ, டீ குடித்து முடித்துவிட்டு கண்ணாடி முன்னே நின்று சாவதானமாய் தலைவாரிக் கொண்டிருந்த மனைவியிடம் தான்.

சட்டென்று வருண்புறமாய் திரும்பினாள் அவள்.

உடனே, கையிலிருந்த ஃபோனில் எதையோ பார்ப்பது போல் பாவனை செய்தான் வருண்.

"ம்க்கூம்.." அவள் தொண்டை செருமலில் மெல்ல நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"குட்மோர்னிங்!"
இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவள் கூறியதில்தான், அவனுக்கு மூச்சே வந்தது.

"ஷப்பாஹ்...!" வருண் வெளிப்படையாய் ஆசுவாசப்பட்டு கொண்டதில் சிரித்தவள்,

"எப்படி என்ட ஆக்டிங்?" கேட்டுவிட்டு புருவங்களை ஏற்றி இறக்கினாள்.

"சத்தியமா பயந்துட்டன். ஒஸ்கார் லெவல் பர்ஃபார்மன்ஸ்.. But, please madam, never try this at home.."

அவன் சொல்லியதில் நகைத்தவள், ஃபிளாஸ்கை சுட்டிக்காட்டி "டீ..?" என்று கேட்க,

"ம்ஹூம். bபிரஷ் பண்ணல நான் . இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே ஷோபா.."

"நைட் நல்லாவே தூங்கினேன் வருண். அண்ணாட்ட இருந்து கால் வரவும் முழிப்பு வந்துட்டுது. சங்கரண்ணா வந்துட்டு இருக்காங்களாம்..."

"ஐயோ..! உங்கட அப்பா நேத்து அதட்டிக் கேட்டத, அண்ணா வந்து அடிச்சு கேட்கப் போறேரோ..?" கேட்டுவிட்டு போலிப் பயத்துடன் அவளைப் பார்த்தான்.

"ம்ச். அதெல்லாம் ஒன்னுமே நடக்காது."

"எப்படி சொல்ற?"

"சொன்னா நம்புங்க. அந்த மரத்தன் ரேஸ்ல கூட நீங்க ஃபர்ஸ்ட் வர்றதுக்கு சான்ஸ் இருந்திருக்கலாம். ஆனா அண்ணா, உங்கள அடிக்கிறதுக்கெல்லாம் சான்ஸே இல்ல." சிரிக்காமல் கூறினாள் ஷோபா.

' ஐயோ, கடவுள் காக்க '
"ஹா.. ஹா.. வெர்ரி ஃபன்னி! பழைய ஷோபனா கொஞ்சம் கொஞ்சமா வெளியில வர்றாங்க போல இருக்கே... அதுக்குள்ள நான் போய் குளிச்சிட்டு வர்றன்." இன்று பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான் வருண்.

***********************

மனநல மருத்துவப்பிரிவின் (Psychiatry Unit) காத்திருப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய மீன்தொட்டியில், Guppy வகை மீன்கள் மட்டுமே நீந்திக்கொண்டிருந்தன. பல வண்ணங்களில் மின்னிய அவற்றின் வால்கள் அசைந்தாட, தொட்டியெங்கும் ஓடித்திரிந்த அந்த சிறிய மீன்களையே பார்த்தபடி அமர்ந்திருந்த ஷோபனாவின் உள்ளத்தில் மெல்லிய பதட்டம். இங்கே வரும்வரை அமைதியாக இருந்த மனதில், மருத்துவமனைச் சூழல் ஒரு படபடப்பை மெதுவாக விதைத்துவிட்டிருந்தது.

கன்சல்டேஷன் ரூம் என பெயரிப்பட்டிருந்த அறைக்கதவைத் திறந்து டிஷ்ஷுவினால் கண்களை ஒற்றியபடி வெளியே வந்தாள் ஓர் இளம்பெண். அவள் முகத்தில் லேசாய் அழுத தடம் தெரிந்தது.

அடுத்து வருணும் ஷோபனாவும் உள்நுழைய, "ஆஹா..! நியூ கப்பிள் வந்தாச்சா.. வாங்க. உட்காருங்க." நாற்காலியில் சுழன்றபடி உற்சாகக் குரலில் வரவேற்ற பெண்மணி, எப்படியும் பின் நாற்பதுகளில் இருக்கலாம். இளஞ்சிவப்பு நிற கொட்டன் சாரி; ஆங்காங்கே நரைத்திருந்த தலைமுடியை ஒற்றைக் கிளிப்பில் அடக்கி இருந்தார். கையில் ஸ்மார்ட் வாட்ச்; முகத்தில் ஒருவித நம்பிக்கை தரும் வகையான புன்னகை.

"பிறகு.. சொல்லுங்க ஷோபனா, பிரேக்ஃபாஸ்ட் என்ன சாப்பிட்டீங்க..?"

"அது...இடியப்பம்.."

"அட! காலைல எங்கட வீட்டையும் இடியப்பம் தான். சரி... இப்படி ஈஸியான கேள்விகள்தான் கேப்பன். இடியப்பச்சிக்கலா ஒன்டுமே கேட்கப் போறதில்ல. So... மிஸ்டர் வருணக் கொஞ்சம் வெளியில் அனுப்புவோமா..?"

"Sure doctor.." என்று உடனே எழுந்த வருண், வெளியேறுவதற்கு முன் ஷோபாவை ஒரு நொடி பார்த்தான்.

அவள் மெதுவாக தலையசைத்தாள்.

கதவு மூடியதும் சில நொடிகள் நிலவிய அமைதியை உடைத்தது அந்தப்பெண்மணி தான்.

"சரி..." என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவர், முதலில் அவள் பற்றி விசாரித்துவிட்டு,
"ஓகே... இனி நான் கேக்குறதுக்கெல்லாம் ஹானஸ்டா ஆன்சர் பண்ணனும். ஒன்ட நல்லா விளங்கிக் கொள்ளுங்கம்மா, நான் உங்கள ஜட்ஜ் பண்ணப் போறதில்ல. ஜஸ்ட் உங்களுக்கு சின்ன ஹெல்ப் பண்ணப்போறது மட்டும்தான் நான். இந்த ரூம் தாண்டினா எல்லாத்தையும் மறந்துடுவேன். So.. எதனால அன்ட் எப்ப இருந்து இந்த ஸ்ட்ரெஸ்.. என்டு எனட்ட ஷேர் பண்றீங்களா..?" சிறுபிள்ளையிடம் கேட்பதுபோல் வினவினார்.

முதலில் தயங்கினாலும் பின் ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினாள் ஷோபனா. அவளை இடையிடாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர், அவள் தடுமாறும் நேரங்களில் கவனமாக திசைதிருப்பி தொடர்ந்தும் பேச வைத்தார்.

"இங்கப் பாரும்மா, பாஸ்ட் மெமரிஸ்... இந்த விஷயமா மாசத்துக்கு ஒராலாவது வந்துட்டேதான் இருக்காங்க. எல்லாருக்கும் இருக்கிற பிரச்சினை தான். கல்யாணம் முடிஞ்சதும் மேஜிக் பண்ண மாதிரி உடனேயே அழியிற விஷயமில்ல இது. பட் அழகான புதுப்புது மெமரீஸ் சேர சேரத்தான், மூளையில இடங்காணாமலுக்கு பழசெல்லாம் ஓரத்தில் எங்கேயாவது போய் ஒதுங்கும். காலப்போக்கில் அழிஞ்சும் போயிடும். சரி.. பாரதியார் என்ன சொல்லி இருக்கேர்??"

அவரது திடீர் கேள்வியில் முழித்தவள்,
"என்னது..?" என்றாள் அவரிடமே.

"சென்றதினி மீளாது மூடரே.. சொரி அந்த மூடரேய மட்டும் ஒமிட் பண்ணுவோம். அதாவது.. 'சென்றது இனி மீளாது' என்டு சொல்லி இருக்கேர்."

"எனக்கு மீளவே வேணாம் டொக்டர்." ஷோபனா உடனே பதில் கொடுத்தாள்.

"குட்.. இந்தா இவ்வளவு தெளிவா இருக்கீங்களே..இனிமேலும், பேஸ்புக் அந்த ஐடிய சஜஸ்ட் பண்ணலாம். பெனிக்காகாம ரிமூவ் பண்ணுவீங்க என்டு நம்புறேன்.
ஹ்ம்ம்.. மிஸ்டர் வருண்ட்ட இந்த விஷயங்களெல்லாம் சொன்னீங்களா..?"

ஆம் என்றவள், அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதையும் நேற்றிரவு அவன் பேசியவற்றையும் ரத்தினச் சுருக்கமாய் அவரிடம் சொன்னாள்.

"அட! அவரே உங்களுக்குப் பாதி ட்ரீட்மென்ட் முடிச்சுட்டுத் தானம்மா கூட்டி வந்திருக்கேர். இங்க வர்ற பிள்ளைகள்ட ஹஸ்பண்ட்மாரெல்லாம் இந்த வருண பகவான் மாதிரி இருந்தா, எங்கட யூனிட்டுக்கு டிஷ்யூ பாக்ஸ் செலவே இருக்காது போலயே.." கண்களை சிமிட்டிக் கூறியவரைப் பார்த்து புன்னகை சிந்தினாள் ஷோபா.

" 'கணவன் அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்..
கண்டதையும் யோசிக்காதயம்மா
நல்வாழ்வு வரும்..'
இப்படி சொன்னது யார் தெரியுமா? அவரது அடுத்த கேள்வியில்,

"இது.. மனைவி அமைவதெல்லாம்.. அப்டி ஸ்டார்ட் பண்ற ஒரு பழைய பாட்டுத்தானே?" குழப்பமாய் கேட்டாள் அவரிடம்.

"ஓமோம். கண்ணதாசனோட அந்த பாட்டு வரிகள துளியளவு மாத்திட்டு, மதிவதனி இப்படி சொல்றாங்க."

"ஓ... யாரவங்க? லிரிசிஸ்ட் தானா..?"

"No.. No.. அவங்க இந்த ஹாஸ்பிடல்ல வேர்க் பண்ற கன்சல்டன்ட் சைக்கியாட்ரிஸ்ட்."என்று கூறியவரின் கண்ணாடிக்குப் பின்னிருந்த கண்களில் குறும்புத்தனம் தெரிந்தது.

அவரது பதிலில், ஷோபா உடனேயே மேசையிலிருந்த நேம்பிளேட்டைப் பார்க்க அதில் 'Dr. Madhivadhani MBBS. MD (Psychiatry)' என்றிருந்தது. பார்த்தவள் அவரிடம் பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

"So.. என்ன சொல்ல வர்றனென்டா, சப்போட்டிவ் ஹஸ்பண்ட் தானே.. இனி ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணும்போது தனிய அழுது கஷ்டப்படாம கட்டாயம் வருண்ட்ட விஷயத்த சொல்லணும். அவராக் கேட்கட்டுமே- அப்படியெல்லாம் வெயிட் பண்ண கூடாது. வேற... ஷோபாக்கு புக்ஸ் ரீட் பண்ற பழக்கம் இருக்கா..?" அவளிடம் கேட்டுக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தார் அவர்.

"ம்ம்.." ஆம் என்பதாக தலையாட்டினாள்.

"ஓகே.. குட். அது ஹீலிங் ப்ராசஸ இன்னுமே ஈஸியாக்கும். நீங்க என்ட புக் கலெக்ஷன கொஞ்சம் பாத்துட்டிருங்க. நான் ஒரு சின்ன வேலையா போயிட்டு வர்றேன்." என்றுவிட்டு வெளியேறி இருந்தார்.

ஷோபாவும் எழுந்து சென்று அவரது புக்ஷெல்பை ஆராய்ந்தாள்.

பத்து நிமிடங்கள் கழிந்த நிலையில் உள்ளே வந்தவரின் பின்னால் வருணும் நின்றிருந்தான்.

அவள் திரும்பிப் பார்த்தவுடன் "எப்படி?" என்று வருண் கண்களால் வினவ, இரு கைகளினதும் கட்டை விரல்களை உயர்த்திக் காண்பித்தாள் ஷோபா.

"ஷோபனா... நீங்க டூ வீக்ஸ்க்கு இந்த டேப்லெட் போட்டே ஆகணும். நல்லா தூங்கி எழும்புங்க. நான் சொல்லித் தந்த ப்ரீதிங் எக்சர்சைஸ் எல்லாம் அடிக்கடி செய்யணும். அப்பப்ப கவுன்சிலிங் செஷன் போடுவோம். மிஸ்டர் வருணுக்கு நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல. அவர் ஏற்கனவே தங்கமான ஹஸ்பண்ட்டாம். அப்படித்தானே ஷோபனா..?"

அவர், அவன் முன்னிலையில் அப்படிக் கேட்டதில் அவளுக்கு சின்னதாய் வெட்கம்.

இன்னும் சில இத்யாதி இத்யாதிகளை சொல்லிவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தார்.

************************

மருத்துவமனை விட்டு வெளியேறி பார்க்கிங் வரையிலும் அமைதியாகவே நடந்தனர். காருக்குள்ளும் அமைதியோ அமைதி. அவள், எதுவும் பேசத்தோன்றாமல் ஜன்னல்வழி வேடிக்கை பார்த்து வந்தாளென்றால் வருண் ஏதோ சிந்தனையுடன் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.

ஷோபனாவிடம் பேசிவிட்டு வெளியே வந்த டாக்டர் மதிவதனி, அவனுடனும் சில நிமிடங்கள் பேசி இருந்தார்.

".... அவங்கட பயம், ஸ்ட்ரெஸ் எல்லாமே நீங்க தப்பா நினைச்சிருவீங்களோ என்றது தான். அந்த பயம் தேவையே இல்லாததென்டு அவங்கள ஃபீல் பண்ண வைங்க. விஷயம், சிம்பிளா முடிஞ்சிடும். என்னவுமென்டா அவங்களே சொல்லட்டும்னு இருக்காமலுக்கு இன்டைக்கு என்ன நடந்திச்செண்டு நீங்களே முதல்ல கேளுங்க. சம் டைம்ஸ் பிரச்சனைக்கு சொல்யூஷன் கொடுக்கிறத விட I'm here for youனு உணர்த்துறதுதான் முக்கியம்..."

அவர் சொன்ன எல்லாவற்றையும் மனதினுள் அசைபோட்டுக் கொண்டே வந்தான். வீடும் வந்திருந்தது. வாசலில் ஷங்கரின் கார் நின்றது.

வருண் காரை நிறுத்திவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்து காற்றில் கலைந்திருந்த தலைமுடிகளை தன் நீளவிரல்களைக் கொண்டு சரிப்படுத்தும் அழகைக் கன்னத்துக்கு கைகொடுத்துப் பார்த்திருந்தாள் ஷோபனா.

முடித்ததும், அவள் புறமாய் நிதானமாகத் திரும்பியவன், "பார்த்து முடிச்சிட்டீங்கன்டா உள்ள போகலாமே மேடம். உங்கட அண்ணா தேடப் போறேரே..."

"நீங்க..?"

"நீ முதல்ல போ. எனக்கொரு கோல் கதைக்க வேண்டியிருக்கு. முடிச்சுட்டு வர்றன்."

சரியென்று இறங்கி நடந்தவள், மீண்டும் திரும்பி அவன் புறமாக வரவும், 'என்ன' எனும் கேள்வியோடு அவளைப் பார்த்தான்.

சில நொடிகள் அமைதியாக, அவனைப் பார்த்து நின்றவள் பின்,
"தேங்க் யூ.." என்று ஆத்மார்த்தமாய் நன்றி நவின்றாள்.

நெஞ்சில் கைவைத்து தலையை சற்று முன்னாக குனிந்து, "Anything for.." என்று ஒரு வேகத்தில் ஆரம்பித்தவன், பின் நிறுத்தி நிதானமாக "Anything for my wife..." என்றிருந்தான்.

அவளிடத்தில் விரிந்த புன்முறுவல்.
அத்துடன் நிற்காமல் அவளது கன்னங்கள் மெதுமெதுவாய் செம்மை பூசிக்கொண்டன. அதைப் பார்த்ததும் வருணுக்கு காலையில் பார்த்த வானின் நிறம்மாறுதல் நினைவுக்கு வந்தது. அந்த முகத்தில் இன்னும் கொஞ்ச நேரம் லயித்திருக்கத் தோன்றியது...

ஆனால் அதற்கிடையில், அவன் போனில் அழைப்பு வரவும் ஷோபனா எடுத்துப் பேசும்படி தலையசைத்துவிட்டு நகர்ந்திருந்தாள்.

(Hall) விறாந்தையில்...
ஷங்கர், அவன் மனைவி மாலினி, அமுதா, நேசன் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். இவள்போய் அண்ணனருகில் அமர்ந்தவள், அவன் மடியிலிருந்த அகல்யா குட்டியை தன்மடிக்கு இடமாற்றி இருந்தாள். சிறிது நேரத்தில் வருணும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

மதியம் சாப்பிட்ட பின்னர், பெண்கள் மூவரும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க, மற்றவர்கள் தத்தம் அறைகளுக்குச் சென்றனர்.

அகல்யாவும் தன் பிஞ்சு விரல்களை நீட்டி உதவ முன்வந்தாள். அம்மம்மா, அம்மா, மாமி மூவருமே வேண்டாம் என்றுவிட கோபத்தில் தன் அப்பாவிடம் போக வந்தவள், ஷோபனாவின் ரூம் கதவு திறந்திருப்பது கண்டு எட்டிப்பார்த்தாள். சற்று முன்னர் அவளுக்கு, மாமா என அறிமுகப்படுத்தப்பட்டவன் லேப்டாப்பில் பெட்டி பெட்டியாய் ஏதோ வரைவது தெரிந்தது.

உடனே போய் அவன் கையைத் தட்டி, லேப்டாப்பை சுட்டிக்காட்டி "மாமா.. எனக்கும்..." என்றது குழந்தை.

அவளைத் தூக்கி கட்டிலில் அமர்த்தியவன், கையில் பென்சிலும் கொப்பியும் கொடுத்தான். வாங்கிக் கொண்டவள், மாமா சொல்வதைத்தான் வரைவாளாம். அதுவும் ஒன்றை வரைந்து முடித்தபின் கட்டிலிலிருந்து இறங்கி வந்து அவனிடம் காட்டி "வெர்றி குட்.." வாங்கிய பின்னால்தான் அடுத்தது வரைவாளாம்.

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கடும் சிரமப்பட்டு கட்டிலில் நிகழும் ஏற்ற இறக்கத்தைப் பார்த்த வருணுக்கு பாவமாக இருந்தாலும் சிரிப்பாயும் இருந்தது. தரையில் இருக்கவும் மாட்டேன் என்கிறாளே...

ஷோபனா வந்தவள் உதட்டில் உறைந்த சிரிப்புடன் மாமா-மருமகள் சம்பாஷனையை அறைக்குள்ளே போகாது, மறைந்து நின்று கவனிக்கத் தொடங்கினாள்.

தன்வேலையில் கவனம் சிதறினாலும் அதுவரை பொறுமையாக அவளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவனுக்கு ஒரு கட்டத்தில் இயலாமல் போகவே,

"மாமாக்கு இவ்ளோ சாமானும் தானே தெரியும்.. ஆனா நாங்க ஆல்ரெடி நிறைய கீறிட்டமே. சோ, அகல்யா குட்டி போய் ரெஸ்ட் எடுக்குறீங்களா..?" நைசாகக் கேட்டுப் பார்த்தான்.

"ம்ஹ்ஹூம்..No." மாட்டேன் என்பதாக தலையால் அரைவட்டமடித்தவள், "மாமா.. பெரிய்ய்ய டோக் ட்ரோ பண்ணுவமா..?" என கைகளைப் பெரிதாக விரித்துக் கேட்டாள்.

பார்வை லேப்டாப்பில் பதிந்திருக்க, "ஓமோம், பிள்ளைக்குப் பிடிச்சதெல்லாம் கீறுங்க..." என பதிலளித்தான் வருண்.

"அய்யோ எனக்குப் பெரிய டோக் பிடிக்காதே.."அழகாய் உதடு பிதுக்கினாள்.

"அப்ப என்னம்மா பிடிக்கும்..?"

"குட்டி டோக் தான் பிடிக்கும். அத ட்ரோ பண்ணுவமா?.."

வருண் ஏதோ தோன்ற அறைவாசலைத் திரும்பி பார்த்தவன்,ஷோபனாவைக் கண்டதும் உடனே,

" அம்மா தாயே! முக்கியமான வேலையொன்டு முடிக்கக் கிடக்கு. உன்ட மருமகள்ட்ட இருந்து என்னக் காப்பாத்தம்மா ப்ளீஸ்.." என கெஞ்சலாய்க் கேட்டவனைப் பார்த்து, வாய்பொத்தி சிரித்தாள் ஷோபா.

தான் கேட்டதற்கு இன்னும் பதில் வராததில் மெத்தை மேல் ஏறிநின்று "மாமா.." எனச் சத்தமாக அழைத்த அகல்யாவை, கைகளில் அள்ளிக்கொண்ட ஷோபா. "அகல் குட்டிய, அப்பம்மா ஐஸ்கிரீம் சாப்பிட வரட்டாம்."என்று அவளது காதுக்குள் கூற, துள்ளிக் குதித்து வெளியே ஓடினாள் குழந்தை.

ஷோபா டேப்லட் போடும் வரை காத்திருந்துவிட்டு அவளை அழைத்தான் வருண்.

அவன் அருகில் வந்து நின்று கேள்வியாக பார்த்தாள்.

"நாம நைட் ஏழு மணிக்கு ட்ரிப் போப்பறம். உங்கட அம்மாகிட்ட இப்பவே போய் சொல்லி வை."

"என்ன..?" புரியாமல் கேட்டாள் அவள்.

"என்ன, என்ன?"

"இப்ப நான் நல்லா தானே இருக்கன். அதெல்லாம் ஒன்டுமே தேவையில்ல. நான் நாளைக்கு ஸ்கூலும் போகணும். ஏழு மணிக்கு, நீங்க கண்டிக்கு கிளம்பினீங்கன்டா சரி. எனக்காக லீவு போட்டதெல்லாம் போதும்."

"சரி. நான் உனக்காக லீவு போட்டன் தானே . நீயும் எனக்காக ரெண்டு நாள் லீவு போடன்." கெஞ்சல் தொனியில் கேட்டவனிடம் மறுக்கத் தோன்றாமல், "சரி. எங்க போறது? யார் யாரெல்லாம் போற?"

"யாழியாக்களும் நாங்களும் தான். ஷங்கர் மச்சான்ட்டயும் கேட்டன். கஷ்டமென்டேர். எங்கட அம்மா உன்ன பாக்கவர வெளிக்கிட்டவங்க. நாமளே அவங்களப் போய் பாத்துட்டு, அங்கருந்து அப்படியே போனமென்டால் சரி."

"ஹ்ம்ம் ஓகே... அப்ப, அபியயும் கூட்டிப் போவோமா?"அவள் கேட்க, உடனே சரி என்பதாக தலையசைத்தான்.

"அம்மம்மாக்கும் காய்ச்சலாம். அவன்ட்ட இப்ப சொல்லாம, கொஞ்சம் ஏர்லியா வெளிக்கிட்டு, அங்க போய்ட்டு அபிக்கு சர்ப்ரைஸ் பண்ணுவோமா?" பெரிதாக்கிய கண்களோடு தலையை ஆட்டிக் கேட்டாள்.

"அதுக்கென்ன, சர்ப்ரைஸ் பண்ணுவமே..." என்று அவளைப் போலவே தலையசைத்துக் கூறவும் அவன் தோற்பட்டையில் மெல்ல ஒரு அடி போட்டாள் அவன் மனைவி.

**********************

குறுக்கு வீதியொன்றிலிருந்து தொடங்கும் ஒழுங்கை முடிவில் அமைந்திருந்த டியூஷன் சென்டரில் தரம் 11 மாணவர்களுக்கு கணிதப்பாட- மாதிரிப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவன் ஒருவனிடம், நான்கு மணிக்கு அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கச் சொல்லிவிட்டு அவசர வேலையாக வெளியில் எங்கோ சென்றிருந்தார் டியூஷன் ஆசிரியர்.

அபித்ரன் வாட்ச்சில் நேரம் பார்த்தான். நான்கு மணியாவதற்கு இன்னும் சில நிமிடங்களே மீதமிருந்தன.

இப்போது சரியாக நான்கு மணி.

ஒருவன் எழுந்து அனைவரின் விடைத்தாள்களையும் சேகரிக்கத் தொடங்கினான். ஒவ்வொருவராக வகுப்பிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

அபி முந்தியடித்துக்கொண்டு வெளியில் போய் நின்றான். அருகில் வந்து நின்ற அருள் "அஹ்ம்ம்.." என்று தொண்டையை செருமிக்கொள்ள அபி அவனை முறைத்தான்.

"இப்ப.. ஹீரோயின் மேடம் பிரண்ட்ஸோட கெக்கப்பெக்கே என்டு கேவலமா இளிச்சுக்கொண்டு தான் வருவாங்க. ஆனா, நம்மட ஹீரோ சேரப் பாத்தோனே அடக்கமாகி அன்ன நடைக்கு மாறிருவாங்க. அப்பிடியே வந்து அப்பாட பைக்ல ஏறின பிறகு, நிமிந்து பாத்து 'பொயிட்டு வர்றேங்க' என்டு தலையசைப்பாங்க. ஹீரோ சேரும் பதிலுக்கு மண்டைய மண்டைய ஆட்டுவார். இந்த சீன் தானே இப்ப ஓடப்போவுது...? எல்லாம் பாத்தாச்சி பாத்தாச்சி..." நீட்டி முழக்கிவிட்டு சலிப்பாய் அலுத்துக் கொண்டான் அருள்.

"உன்ன யாரு நிக்க சொன்ன? மூடிட்டு நடையக்கட்டு." சூடாய் சொன்னான் அபித்ரன்.

"உண்மையா போயிருவன்டா அபி..."

"போடா.. டேய்.."

அருள் முறுக்கிக்கொண்டு உண்மையில் கிளம்பியே விட்டான். சீரியஸான சண்டையெல்லாம் இல்லை. அடிக்கடி நிகழும் சிரிப்பு சண்டை தான்..

மதுஷ்ணவி தோழிகளுடன் அளவளாவிக் கொண்டே வெளியில் வருவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து அருள் சொன்ன அத்தனையுமே நிகழ்ந்தது.

அவள் அப்பாவுடன் சென்றதும் அபியும் சைக்கிளை எடுக்கப் போனான். வெளியில் யாருமே இல்லை. ஆனால் வேறு நான்கு சைக்கிள்களும் நின்றிருந்தன. ஜீன்ஸ் பாக்கெட்டினுள் கையை விட்டுப் பார்த்தான், திறப்பைக் காணவில்லை. பேக்கினுள்ளும் இல்லை.

வந்த வழியே திரும்பவும் நடந்து தேடிப் பார்த்தான். கிளாஸ்ரூம் வாயிலில் கிடந்தது சைக்கிள் திறப்பு. குனிந்து எடுத்தவனுக்கு ஏதோ பேச்சுக்குரல்கள் கேட்டன. மெல்ல வகுப்பறையினுள் எட்டிப்பார்த்தான்.

மூவர் மேசை மேலே அமர்ந்திருக்க மாதவன் நின்றிருந்தான். வாயில் பேனை போன்ற எதையோ வைத்திருந்தான் சரண். அதிலிருந்து சுருள் சுருளாய் புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

மனோஜும் அதைப்போலவே ஒன்றை கையில் வைத்திருந்தான். முன்னிருந்த மேசையில் தாளில் வெள்ளையாக ஏதோ இருந்தது.

"டேய் மாதவா.. எடன்டா நீயும்.."என ஊக்கப்படுத்தினான் ஆன்டனி.

"ஹேய்! அபி, வா. வா." அபியைக் கண்டதும் குஷியாக அழைத்தான் சரண்.

"சிகரெட்ட விட சட்டப்படி சாமான் இது. சேர் வர்றதுக்குள்ள போகணும். கெதிய வாடா.." இது, மனோ.

அபித்ரன் முதலில் போகவேண்டாமனத் தான் நினைத்தான். ஆனால், அதற்குள் கால்கள் அவனை மாதவனுக்கருகில் அழைத்துச் சென்றிருந்தன.
 
Last edited:
Top Bottom