• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 19

ஷாரிகா

Member
Staff member
VIN - 19

அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள் ஷோபனா.

அவள் வேலைக்கு சேர்ந்த இத்தனை வருடங்களில் லீவு போடுவது என்பது அத்தி பூத்தாற் போல் அரிதாக நிகழும் ஒன்று. ஆனால் கடந்த நான்கு நாட்களும் செம்பருத்தி பூத்தாற் போல கதையானது.

கண்டதையும் நினைத்துக் குழம்பி வைத்தியசாலை வரை தன்னைத்தானே இழுத்துக் கொண்டதால், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே ஸ்கூல் பக்கம் செல்லவே இல்லை. மொத்தமாய் விடுமுறை எடுத்தாயிற்று.

நேற்று, நள்ளிரவுக்கு முன்னரே வீடு வந்து சேர்ந்திருந்தனர். உடலில் இரண்டு நாட்களின் பயணக்களைப்பை விட இன்றாவது பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பே அதிகமிருந்தது.

வீட்டு வாசலில் ஹார்ன் சத்தம்... யாழினி வந்து விட்டாள் போல.

கைப்பையை மாட்டிக் கொண்டவள் கணவனிடம் சொல்லலாம் என்று பார்த்தால், அடித்துப்போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்ப மனம் வராமல் மாமியாரிடம் சொல்லிக்கொண்டு யாழினியின் பின்னே ஏறிக் கொண்டாள்.

***************************

வருணும் குமரனும் சூரியன் உச்சிக்கு வந்த பின்னேயே எழுந்தவர்கள், பைக்கை எடுத்துக் கொண்டு காத்தான்குடி வரை சென்றிருந்தனர்.

நன்றாக சுற்றிவிட்டு, பசி எடுக்கவும் உணவகம் ஒன்றிற்கு சென்றனர்.

அதுவரை, தட்டில் இருந்ததைக் காலி செய்வதிலேயே கவனம் வைத்திருந்த குமரன், அப்போதுதான் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

ஏதோ யோசனையில் உணவை அளைந்து கொண்டிருந்தான் வருண்.

"என்னடா இப்ப?"

"என்ன?"

"நானும் நிறைய நாளா கேக்கணும் என்டு தான் நினச்சிட்டே இருந்தன். உங்கட கல்யாணத்தன்டைக்கு ரெண்டு பேருமே ஏதோ மாதிரி நின்டீங்க.. லீவு முடிஞ்சு வேலைக்கு வரேக்க சந்தோஷமா வந்தனி. பிறகு, என்னமோ பிரச்சன என்டு ஓடிட்டாய். திடீரென்டு கோலெடுத்து ட்ரிப்புக்கு கூப்பிடுறாய். போய்ட்டும் வந்தாச்சு. இப்ப ஏன் மூஞ்ச தூக்கி வச்சுக்கொண்டு இருக்கிறாய்? என்னதான்டா உன்ட கத!?"

மூச்சு விடாமல் பேசிய குமரன், சோடா போத்தலை வாயில் சரித்துக் கொஞ்சம் குடித்துவிட்டு, வருணின் பதிலுக்காக காத்திருந்தான்.

" பிரச்சனையெல்லாம் ஒன்டும் இல்லடா குமரா.."

"ஓ..நம்ம ரெண்டு பேருக்கும் வெறும் ஒன்பது மாச பழக்கம் தானே.. எப்படியும் நான் உங்கட ஜஸ்ட் ஃபிரண்ட் லிஸ்டுல தான் இருப்பன். சொல்ல விருப்பம் இல்லயென்டால் விடுங்க."குமரன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்லவும்,

"அடேய்! நீ வேற ஏண்டா...?"என்று அலுத்துக் கொண்ட வருண், எல்லாவற்றையும் மேலோட்டமாய் சொல்லி முடித்தான்.

"ஓ...! அப்ப, ஜோனத்துக்காக பேசப் போய்த்தான் ஷோபனாவையே பாத்திருக்காய்?"

"ம்ம்.."

"அவனுக்கு... அவனுக்கு உங்கட கல்யாண விஷயம் தெரியுமா?"

"யுனில நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ்... ஜோனத்தன் வெடிங்க் பண்ணிட்டு வெளியில போன பிறகுதான் கோல் கதைக்கவே கிடைக்கல. அதிசயமா எப்பவாச்சும் டெக்ஸ்ட் பண்ணுவோம். கல்யாண விஷயத்த சொல்லுவோமென்டு கோல் எடுத்தன். அப்பவும் நோ ஆன்சர்... கடைசில இன்விடேஷன போட்டோ புடிச்சு அனுப்பிவிட்டன். இரண்டு நாள் கழிச்சு கங்கிராட்ஸ் என்டு ரிப்ளை வந்துச்சு.. அவ்வளோம் தான்..."என்றுவிட்டு தோளைக் குலுக்கினான் வருண்.

குமரன், சோடாவில் ஒரு சிப் உள்ளெடுத்து விட்டு,
"சரி, அதெல்லாம் விடு. இப்ப என்ன யோசன..? ஷோபனாவப் பத்தியா?"

'ஆம்' என்பதாக தலையசைத்த வருண், மோவாயை தடவியவாறே,
"இந்த நாலு நாளா எந்த பிரச்சனையும் இல்லடா.. யாழிட்டயும் பார்த்துக்கொள்ள சொல்லித்தான் இருக்கேன். பாப்போம்.."

"எனக்கென்டா... ஷோபனா முகத்துல சந்தோஷம்தான் தெரியுது. ஒன்னும் யோசிக்காதடா மச்சான். எல்லாம் நல்லதாத்தான் நடக்கும்." என்று ஆறுதல் சொன்னவனின் கைப்பேசி சத்தம் எழுப்பவும் எடுத்துப் பார்த்தவன்,

"இங்கபாரு! நாலு மணி ஆகப்போவுதுடா வருண். டக்கென்டு சாப்பிடு. போய் குளிச்சிட்டு வெளிக்கிடத்தான் நேரமிருக்கு." என்று அவசரப்படுத்திவிட்டு மீதமிருந்த சோடாவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

முக்கால் மணி நேரத்தில் நண்பர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர். அறைக்குள் நுழைந்த வருண், ஷோபனாவிடம் சட்டையை அயன் செய்து தரச் சொல்லலாம் என்று பார்த்தால், அவளோ கிச்சனில் ஏதோ முக்கியமான வேலையாக இருக்கிறாளாம்.

அங்கே சமையலறையில்,
'வட்டிலப்பம் செய்கிறேன்' என்று சொல்லி, தன் மாமியார் வைதேகியிடம் ஏதேதோ வித்தை காட்டிக் கொண்டிருந்தாள் ஷோபனா. ஒருவழியாகச் செய்து முடித்தவள், ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினாள்.

"ம்... நல்லாத்தான் இருக்கு"

"ப்ச், அப்ப நல்லா இல்லையா?"

"ஐயோ! நல்...லா இருக்குடிம்மா, ராசாத்தி" அவசரமாகச் சொன்னார்.

அப்போதும் அவரை நம்பாத பார்வை அவளிடம். முகம் சுருங்கிப் போயிருந்தது.

"இப்ப என்ன... நீ செஞ்சது வருணுக்குப் பிடிக்கணும். அவ்ளோதானே?" வைதேகி சிரித்தார்.

"ம்..." மேலிருந்து கீழாக ஸ்லோ மோஷனில் தலையாட்டினாள் ஷோபா.

"சிம்பிள். அவன் ஒரு வாய் சாப்பிடட்டும். 'நல்லா இல்ல'னு சொன்னான்டா, உங்கட அம்மாதான் செஞ்சதுனு சொல்லு. ஆனா இது அவனுக்குப் பிடிக்கும், புள்ள."

"ஹ்ம்ம்...இந்த ஐடியா ஓகேதான். அப்ப சரி, குமரன் அண்ணாக்கு நீங்க கொடுங்க. அவருக்கு நான் கொடுக்கிறேன்" என்றுவிட்டு அறைக்குள் விரைந்தாள்.

கண்ணாடியை பார்த்தபடி, அணிந்திருந்த வெளிர் சிவப்பு நிற ஷேர்ட்டின் கையை ஒவ்வொரு மடிப்பாக மேலேற்றிக் கொண்டிருந்தான் வருண். இவள் தட்டைக் கொண்டுவந்து அவன் முன் நீட்ட, அதைக் கையில் வாங்கியவன் ஸ்பூனினால் மளமளவென உள்ளே அனுப்பத்தொடங்கினான்.

"எப்படி இருக்கு?"

"நல்லாருக்கு."

"யெஸ்ஸ்!!" கைமுஷ்டியை மடக்கிக் காற்றில் குத்தினாள்.

"வெறும் ஹெல்பர் நீ... ஏன் குதிக்கிற?அம்மா தானே செஞ்சது?"

"இங்கப்பார்ரா.. நல்ல கத தான் இது. அவங்கட அம்மா செஞ்சாங்கலாமே அம்மா. உங்களுக்குப் புடிக்குமே என்டு நான் தான் செஞ்சன்.."முறைத்துக் கொண்டு செல்லக் கோபத்துடன் உதட்டை சுழித்தாள்.

அவளைப் புருவமுயர்த்தி மெச்சுதலாய்ப் பார்த்தவன், "பிறகென்ன.. புதுசா அன்னபூரணி அவதாரமெல்லாம் எடுத்து கலக்குறீங்களே ஷோபனா.." என்க, இவளுக்கு விளையாடிய முதல் மேட்ச்சிலேயே செஞ்சூரி அடித்த பெருமித உணர்வு.

சாப்பிட்டு முடித்தவன், அவள் கையைப் பற்றிக் கட்டிலுக்குச் சென்று அமரவைத்து, தானும் அவளருகே அமர்ந்து கொண்டான்.

"இங்கப்பாரு ஷோபா, தயவு செஞ்சு தனியாக்கிடந்து யோசிச்சு திரும்பவும் எதையாவது... ப்ச் வேணாம். நல்லதாவே கதைப்பமே...கஷ்டமா இருந்தா என்ன டைம் என்டாலும் எனக்கு ஒரு கோல் பண்ணிடனும்."

அக்கறை ததும்பப் பேசுபவனையே கண்களில் நிறைத்துக் கொண்டவள் பதிலாய் ஒன்றும் மொழியாமல் பார்த்திருந்தாள்.

"ஃப்ரீ டைம்ல யாழிட்ட போ. ஆதிக்கு கிளாஸ் எடு... அடிக்கடி உங்கட சித்தி வீட்டுக்கும் போ. இந்தா, இன்டைக்கு மாதிரி கிச்சன்ல ஏதாவது புதுசா ட்ரை பண்ணு. வேற... MA மாதிரி மேல ஏதாச்சும் படிக்கலாமே?" யோசித்து யோசித்து ஒவ்வொன்றாய் அடுக்கினான்.

"உங்களுக்கு என்ன கட்டினதால தேவையில்லாத கரைச்சல் என?" அவன் கேட்டதற்கு பதிலளிக்காமல் அழும் குரலில் கேட்டவளை, வருண் சுள்ளென்று முறைத்தான்.

"இல்ல.. கல்யாணத்துக்கு ஏன் ஓம் என்டனிங்க எண்டும் தெரியாது. ஒருவேள கட்டின கடமைக்காகத்தான் பாவப்பட்டு இப்..."

"அறையொன்டு தந்தனென்டா கடமைக்கு செய்றனா இல்ல பாவப்பட்டு செய்றனா எல்லாமே தெரியும்." கோபமாய் சொன்ன வருணின் குரலில் அத்தனை கடுமை.

கண்கள் கலங்க தலையை குனிந்து கொண்டாள் அவள்.

"லூசாடி நீ..? உன்னப் புடிச்சு தான் ஷோபா ஓம் என்டனான். கட்டினப் பிறகு இன்னுமே பிடிச்சிருக்கு. அதெல்லாம் விளங்கலையாடி உனக்கு? உன்ட பாஸ்ட், இந்தப் பாழாப்போன நெகடிவ் தோட்ஸ் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா ஷோபா." சொன்னவன் குரலிலும் முகத்திலும் ஒரு வித இயலாமை வெளிப்பட்டது. இனியும் இப்படியே ஏதாவது எதிர்மறையாய் யோசிப்பவளை என்னதான் செய்வது.

"சரி, அப்ப எழும்புங்க."

"என்ன...?"

"ப்ச், எழும்புங்களேன்"

வருண் எழுந்து நின்றான். இவளும் எழுந்து, அவனை மெள்ள நெருங்கி மெதுவாய் அணைத்துக் கொண்டவள், அவனது நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் அப்படியே நின்றாள். 'அவளைப் பிடித்திருக்கிறதாமே...' மொத்த பாரத்தையும் இறக்கி வைத்த நிம்மதி கொடுத்திருந்தான்.

"ஹ்ம்ம்.. இப்ப சொல்லுங்க, நீங்க போன பிறகு, உங்கட வைஃப் என்ன எல்லாம் செய்யணும்?" அடிபணிதலுக்கு சுகமாய் தயாரானாள் ஷோபனா.

அவளின் இந்த செயலில், வருணின் கோவமெல்லாம் சூடான தோசைக்கல்லில் விழுந்த நீர்த்துளிகளைப் போல் ஆவியாகி மறைய, அவன் இதழ்களில் ஒரு வசீகரப் புன்னகை.

அவனும் அணைத்துக் கொண்டவன்,

"மறக்காம வேளாவேளைக்கு டேப்லட் போடணும்."

"ஹ்ம்ம்."

"மண்டே சைக்கியாட்றிஸ்ட்ட போகணும்"

"ஹ்ம்ம்..."

அவள் காதருகில் மெல்லக் குனிந்து இரகசியம் போல் கிசுகிசுப்பாக,
" இனிமே வெளிக்கிட முந்தித்தான் கட்டிப்பிடிக்க வேணும்."

மெல்லத் தலை நிமிர்த்திப் பார்த்தவள்,
"ஏன்?" என்றாள் புரியாதவளாக.

"ஷேர்ட்ட தேய்ச்சு தேய்ச்சு அயன் பண்ணிட்டு திரும்ப கசக்கவேணாமே என்டு தான்."

உடனே அவனிடமிருந்து விலகியவள், "ஐயோ! அப்பவே சொல்றதுக்கு என்ன? கழட்டி தர்றீங்களா டக்கென்டு அயன் பண்ணித் தாறன்."

"அதுக்கெல்லாம் இப்ப டைம் போதாது. " என்றவன், அவளின் கையைப் பற்றி தன்னருகே இழுத்து, பின் மெல்ல கன்னங்கள் இரண்டையும் ஏந்திக்கொண்டு அவள் விழிகளையே ஆழமாக பார்த்தான். அவன் பார்வையின் வீச்சுத்தாங்காமல் கன்னங்கள் சிவக்க முகம் தாழ்த்திக் கொண்டாள் அவள்.

ஒரு பெருமூச்சோடு கையை விலக்கிக் கொண்டவன், "வேணாம்.."என்றான் என்னவோ போல்.

"என்ன வேணாம்?"

"நான் இப்ப உங்களுக்கு ஏதாவது செய்யப்போய், நீங்க அதுக்கு அக்கா, ஆட்டுக்குட்டி என்டு கத்திவிட்டிங்க என்டா நமக்கு ஒரே அசிங்கமாப் போயிரும். அதான், வீரனுக்கு மனசு முழுக்க ஆசையாவே இருந்தாலும், வேணாம் என்டு முடவெடுத்திருக்கான்." பச்சைக்கொடி காட்டுவாளா எனும் நப்பாசையோடு நைசாக ஆழம்பார்த்தான்.

"வாவ்!! ஹவ் ஜென்டில்மேன்லி ஆஃப் யூ.. எனக்கு உங்கள்ட்ட பிடிச்சதே இதுதான்." அவள் பெரிய சிவப்பு கொடியாகக் காட்டினாள். முகத்தில் வெளிப்படையான கிண்டல்.

"ம்க்கூம். ரெம்ம்ம்ப சந்தோஷம். அப்ப பொய்ட்டு வரட்டுங்களா?" பேகை முதுகில் மாட்டியப்படியே கேட்டான். குரலில் ஏமாற்றம் இழையோடியதோ..

"கவனமா பொய்ட்டு வாங்க." அவள் சாதாரணமாக சொன்னாலும், உள்ளுக்குள் சிரிப்பு.

கதவை நோக்கி சில எட்டுக்கள் வைத்தவனை,
"கொஞ்சம் நில்லுங்க." எனும் தேன்குரல் தடைபோட திரும்பியவன்,
"ஓம். சொல்லுங்க."என கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டான்.
'என்னவாக இருக்கும்...'

"நான் உங்கள்ட்ட இத கேட்டதே இல்ல. உங்கட ட்ரெய்னிங் எப்ப முடியும்?"

சப்பென்றானது வருணுக்கு.
"இதக் கேக்கத்தான் நிக்க சொன்னியா?"

"ஓம். வேறென்ன?"

'அதானே பாத்தன். நல்ல வருணுக்கு ஒரு சூடு.'
"எப்படியும், இன்னும் ரெண்டுமூன்டு மாசத்துல முடியும்."அசட்டையாக சொன்னான்.

"இரண்டா? மூன்டா?"

'மூன்று' என்பதாக கைவிரல்களால் காட்டினான்.

"ஓகே.. வெயிட் பண்றேன்."

"ஆஹான்!? என்னத்துக்கு வெயிட் பண்ண போறீங்க?" குறும்பு ததும்பும் குரலில் கேட்டான்.

"இதென்ன.. நான் நார்மலா சொன்னேன்."

"பூசி மெழுகாம என்னனு சொல்லுங்களன் ஷோபா டீச்சர்." என்றவன் அவளை நெருங்கி வரவும் செய்ய,

"போகல்லோ வெளிக்கிட்டனிங்க? சத்தியமா அக்காவ கூப்பிடுவன்." அவள் அவனைச் செல்லமாய் எச்சரிக்கும் போதே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

"இந்தா கூப்பிட முந்தியே ஓடி வந்துட்டா உங்கட கொக்கா. இந்த யாழினி, உனக்கு அக்காவா எனக்கு அக்காவா என்டே தெரியுதில்ல..."என்று சத்தமாய் புலம்பிக்கொண்டே கதவு திறக்க செல்பவனைப் பார்க்க அத்தனை சிரிப்பாய் இருந்தது ஷோபனாவுக்கு.

கதவுக்கு மறுபுறம் நின்றது ஆரா. அவளைப் பார்த்த வருண், "குட்டி யாழினி வந்திருக்காங்க." இன்று ஷோபாவிடம் அறிவிப்புப் போல சொல்லிவிட்டு, ஆராவை கைகளில் தூக்கிக் கொண்டான்.

"ஆராச்செல்லம் எப்ப வந்தனீங்க... வடிவான பட்டர்ஃபிளை ஹேர்பேண்ட் எல்லாம் போட்டு.. மாமாக்கு பாய் சொல்றதுக்கு வந்தீங்களா? " கண்களை விரித்து, அப்படியும் இப்படியுமாக தலையாட்டிச் செல்லம் கொஞ்சுபவளை கண்ணெடுக்காமல் பார்த்தான் வருண். அந்த அழகை ஒருகணமேனும் அள்ளிக்கொள்ளும் ஆசை பொங்கிப்பெருகியது.

வருணுக்கு அடுத்தபடியாக அவளிடம் லயித்திருந்த குழந்தையும் கைகள் நீட்டி தாவியது.

ஆராவை வாங்கிக் கொண்டவள், வருணைத் தாண்டிக்கொண்டு, தானே முதலில் வெளியே சென்றாள்.

ஷோபனாவின் பின்னேயே வந்த வருண், ஹால் சோபாவில் அமர்ந்திருந்த வைதேகியிடம் சென்றவன், அவரது கன்னத்தில் பட்டென்று ஓர் முத்தம் வைத்துவிட்டு, "பொய்ட்டு வாரனம்மா.." என்க,

'இதென்ன.. என்டைக்கும் இல்லாத திருநாளா புதுக்கூத்துக் காட்டுறான்..' மனதில் நினைத்துக் கொண்டவர்,

"போயிட்டு வாங்க தம்பி. ராவையில போகேக்க பாத்து மெதுவா போகனும்."என்றார் அக்கறையாக.

அடுத்து ஆராவிடம் வந்தவன், அவளுக்கும் கன்னத்தில் முத்தம் வைத்து, "பாய் ஆராக்குட்டி." என்க, குழந்தையும் "பாய் மாமா.." என்றது கொஞ்சல் குரலில்.

"என்னது... மாமிக்கும் வேணுமா?" என்று அவன் கேட்டதை, ஷோபனா கிரகித்து முடிப்பதற்குள், ஒற்றைக் கையால் அவள் கன்னம்பற்றி ஆழமாய் இதழ் புதைத்து விலகியவன், ஓர் துள்ளலுடன் வெளியேறி இருந்தான்.

ஷோபனா கன்னங்கள் செக்கச் செவேலென சிவந்து வர அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றாள். முகத்தில் அதிர்ச்சி, திகைப்பு, வெட்கம், பூரிப்பு எல்லாம் கலந்துகட்டிய ஓர் பாவனை.

'ஐயோ! என்ன வேல பாத்துட்டுப் போறான் பாவி. இப்ப நான், மாமிய எந்த முகத்த வச்சுக்கொண்டு நிமிந்து பாப்பன்.'

வெளியே காரின் ஹார்ன் சத்தம் கேட்டது.

"அஹ்ம்.. அம்மாடி ஷோபனா, நீ போனாத்தான் காரும் போகும்"என்று வைதேகியின் குரல் கேட்கவும், அவர் பக்கமாய் திரும்பி அசடுவழிந்தவள், வாசலுக்கு சென்றாள்.

யாழினியும் முற்றத்தில் தான் நின்றிருந்தாள்.

கார்க் கண்ணாடியைக் கீழே இறக்கிய குமரன், தலையை வெளியே நீட்டி,
"ஷோபனா, போய்ட்டு வாரன். பாய்மா ." என்க,

"பாய் அண்ணா" என்றாள் தலையசைப்புடன்.

ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனோ கொடுப்புக்குள் அடக்கிய புன்னகையுடன்,
"ஷோபனா, போய்ட்டு வாரன். பாய்மா." என்றான் குமரனைப் போலவே.

ஷோபனா, கீழுதட்டை மேல் வரிசை பற்களுக்கு கொடுத்தவள், தலையசைப்புடன் கணவனுக்கு விடை கொடுத்தாள்.

***************

மணிநேரம் கழித்து, ஷோபனாவை அழைத்துச் செல்ல தமிழ் நேசன் வந்திருந்தார். நேரே அவளின் சித்திவீட்டுக்கு சென்றனர் இருவரும்.

அவளின் சித்தப்பா மதியழகன் சொந்தமாக பெரிய சுப்பர் மார்கெட் ஒன்று வைத்திருக்கிறார். வழமையாக இரவு பதினொரு மணி தாண்டிய பின்னரே வீடு வருபவரின் கார் அந்த நேரத்தில், அங்கே நிற்பதை கண்டு வியந்து கொண்டே உள்ளே சென்றனர்.

ஹோலில் ஏதோ தீவிரமான பேச்சுவார்த்தை நிகழ்ந்து கொண்டிருந்தது.

இவர்களைக் கண்டுவிட்ட வசந்தா, "வாங்க. வாம்மா ஷோபா." என்றார் வரவேற்பாக.

"என்ன சித்தி ஏதும் பிரச்சனையா?"

"அது, கடையிலிருந்து காசு களவு பொய்ட்டாம் பிள்ள."

"என்ன! எவ்ளோ? நிறையவா?"

"இருவதாயிரமாம்..."

"சிசிடிவி எல்லாம் ஒழுங்காக செக் பண்ணினதா சித்தப்பா?"

நேசனிடம் பேசிக் கொண்டிருந்தவர், "அதெல்லாம் நல்லா பிளான் பண்ணித்தான் வேல பார்த்திருக்கான். அந்த ஃபூட்டேஜ் மட்டும் மிஸ்ஸாகுது பிள்ள." என்றார் சலிப்பாய் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே .

"அப்படியா!? இவ்வளவு பிளான் பண்ணி பண்றவங்க ஏன் இருவதாயிரத்த மட்டும் எடுக்கணும்." புருவங்கள் முடிச்சிட குழப்பமாய்க் கேட்டாள் ஷோபனா.

தயாளதேவியும், "அதாண்டி பிள்ள எனக்கும் சந்தேகம். காச எடுக்கிற கள்ளன் என்ன எண்ணி பாத்தா எடுப்பான்? அள்ளிக் கொண்டல்லா போவான்...?" என்றார் ஆதங்கமாய்.

" இது யாரோ நல்லா தெரிஞ்சாள் பக்காவா பிளான் பண்ணி தங்கட தேவைக்கு வேண்டியத மட்டும் எடுத்த மாதிரிக் கிடக்கு..." கீழ்த்தாடையைத் தடவிக் கொண்டே யோசனையாக சொன்னார் நேசன்.

மதியழகனும் ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு,
" அதெல்லாம் சரி தான். ஆனா கடையில வேலை செய்ற எல்லாமே நம்பிக்கையான ஆட்கள். சும்மா சந்தேகப்பட்டு சங்கடம் வந்துறக்க்கூடாது என்டுதான் யோசிக்கிறன்." விசுவாசமானவர்களை நோகடிக்க பயந்தார் அவர்.

"அது சரி. கேஸ் ஏதும் கொடுப்பமா?"நேசன் கேட்டதும்,

"இல்லையில்ல. இதுக்காக அலைய ஏலாது. பாப்போம்... கள்ளன், கடையில தான் இருக்கானா என்டு முதல்ல பாத்துட்டு பிறகு யோசிப்போம்." என்ற மதியழகன், மீண்டும் கடைக்கே புறப்பட்டு சென்றிருந்தார்.

"அபி, கபிஷ்லாம் எங்க சித்தி?"

"கபிஷ் ஹோம் வொர்க் செஞ்சிட்டு இருந்தானே.. அவர் அபி, ஆள் பின்னேரத்திலருந்தே சரியில்ல. சரியான தலவலியாம். கிளாஸ் பொயிட்டு வந்தவன் இழுத்துப் போத்திட்டுப் படுக்கிறான்."

"அபி, நாலஞ்சு நாளா ஒரு மாதிரியா ஏலாமத்தான் கிடக்குறான். நாளைக்கு விடிய பாத்துட்டு மருந்தெடுக்க கூட்டிப் போ..."
வசந்தாவிடம் சொன்னார் தயாளதேவி.


அம்மம்மாவோடும் சித்தியுடனும் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ஷோபா.
 
Last edited:
Top Bottom