• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 23

ஷாரிகா

Active member
Staff member
VIN - 23

அபிக்கும் அருளுக்கும் மாலை நேர வகுப்பு இருந்ததால், நான்கு மணியளவில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

வீட்டை அடைந்ததும், கபிஷ் காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடிவிட்டான்.

ஆனால் அபித்ரன் இறங்காமல் காரிலேயே அமர்ந்திருந்தவன், "ஷோபி, உன்ட ஹேண்ட் பேகுக்குள்ள என்ட ஃபோன் இருக்கான்டு பாறேன்." என்க,

பேகினுள் கையை விட்டு துழாவியவள், "இல்லையேடா..." என்றாள் திரும்பி.

"ஒருக்கா தா பாப்போம்.." என்று முன் சீட்டில் இருந்தவளிடம் எட்டி கைப்பையை வாங்கியவன்,
அதன் உள்பக்க வெளிப்பக்க என்று எல்லா ஜிப்களையும் திறந்து தானும் ஒருமுறை தேடிப் பார்த்துவிட்டு,

" ஓஹ்!! நான்தான் ஃபோனே கொண்டு வரலையே..." என்று அப்போதுதான் நினைவு வந்தவனாக நெற்றியில்தட்டிக் கூறிவிட்டு அவளிடம் பேகைக் கையளித்தான்.

பின்னர் காரிலிருந்து இறங்கியவன், உள்ளே செல்லும் முன், ஷோபனாவையும் இறங்குமாறு கையால் சைகை செய்ய,
"இல்லடா அபி. நான் நாளைக்கு வாரன்." என்றாள் அவள்.

"உள்ள வர வேணாம். கொஞ்சம் இறங்கன்... ப்ளீஸ்." என்றவனைக் கேள்வியாக நோக்கிய படியே இறங்கினாள்.

அடுத்த நொடியே, அவளருகே வந்த அபித்ரன் ஒற்றைக் கையால் அவளது தோளோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள்...அப்படியே நின்றிருந்தான்.

ஏனோ, ஷோபனாவின் கண்கள் சட்டென்று கலங்கின.

பார்த்துக்கொண்டிருந்த வருணின் இதழ்களில் மென்மையான புன்னகை விரிந்தது. தன்கைப்பேசியை எடுத்தவன், தமக்கை-தம்பியின் அந்த அழகான தருணத்தை ஒரு புகைப்படமாகச் சிறைபிடித்துக் கொண்டான்.

பின்னர் மெதுவாக அவளிடமிருந்து விலகிய அபித்ரன்,
"மன்னிச்சிக்கோ ஷோபிக்கா..." என்றான் குரல் தழுதழுக்க.

அவனை குழப்பமாகப் பார்த்த ஷோபனா , "ஏன்டா மன்னிப்பெல்லாம்?" என்று அவனது சிகையைக் கலைத்துவிட்டு செல்லமாகக் கேட்டாள்.

"எல்லாத்துக்கும்..." என்றுவிட்டு கண்ணுக்கெட்டாத புன்னகையுடன் விடைபெற்றவனை, புரியாத குழப்பத்தோடு பார்த்து நின்றவள்,
பிறகு மெதுவாகக் காரில் ஏறி அமர்ந்தாள்.

"ஒரு டீ குடிச்சிப்போட்டு வீட்ட போவமா?"

வருணின் கேள்விக்கு பதிலாக ஷோபனாவின் தலை சம்மதமாய் அசைந்தது.

ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதையின் அருகே காரை மெதுவாக நிறுத்தினான் வருண்.

ஷோபனா இறங்கி நின்று சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

மாலை சாயத் தொடங்கியிருந்தாலும், பகல் வெயிலின் உக்கிரம் இன்னும் குறையாமல் இருந்ததால், நடைபாதையில் அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இல்லை.

வருண் சற்றுத் தள்ளியிருந்த தேநீர் கடைக்கு சென்று, இரு கைகளிலும் டீ கப்புகளோடு திரும்பிவந்தவன்,

ஷோபனாவிடம் ஒன்றை நீட்டியபடி, "செம்ம வெய்யில் என..? உள்ளயே இருந்து குடிப்பம்." என்று அவளை அழைக்க,

இருவரும் காரின் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

டீ நல்ல சூடாக இருக்கவும் உதடுகள் குவித்து ஊதியவள், "பிஸ்கட் வாங்கலையா நீங்க?" என்று அவனிடம் கேள்வி எழுப்ப,

ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் கை நுழைத்தவன், வாங்கியிருந்த பிஸ்கட் பாக்கெட்டை வெளியே எடுத்து அவள் கண்முன்னே ஆட்டிக் காட்டினான்.

அதை வாங்குவதற்கு நீண்ட அவளது கைவிரல்கள் தொட்டடையப் போகும் நேரத்தில்,
"ம்ஹூம்...இப்ப தாரல்ல.." பின்னுக்கு இழுத்துக்கொண்டான் வருண்.

" டீ ஆறப்போகுது. விளையாடமத் தாங்களன்."

"விளையாட்டுதான்...ஒரு சின்ன கேம் வைப்பம். வின் பண்ணினா தாரன்."

"என்ன கேம்?" ஷோபனாவின்
புருவங்கள் முடிச்சிட்டன.

பாக்கெட்டைப் பிரித்தவன், அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து பற்களுக்கு இடையில் வைத்துப் பிடித்துக் காட்டினான்.

"நான் இப்படி வெச்சிருப்பனாம்... நீங்க, பிஸ்கட்ட சரிபாதியா கடிச்சு எடுத்தீங்கன்டா... மிச்சம் எல்லாத்தையும் அப்படியே உங்களுக்குத் தந்துருவனாம்..." உதட்டோரம் பூத்த கள்ளச்சிரிப்போடு சொல்லிவிட்டு புருவத்தை உயர்த்தியவன்,

"எப்டி? எப்டி என்ட கேம்...?இந்த லெவல் கிரியேட்டிவிட்டி எல்லாருக்கும் வராது தெரியுமா...?" பிஸ்கட்டை மென்றபடி தன்னைத்தானே மெச்சிக்கொண்டவனின் முகத்தை, கண்களில் முறைப்பைத் தேக்கி மேலிருந்து கீழ்வரை ஒருமுறை ஏறஇறங்கப் பார்த்தாள் ஷோபனா.

"மிஸ்டர் வருணுக்கு, இந்த... இடம், பொருள், ஏவல் இதெல்லாம் தெரியாதா?"
சுற்றியிருந்த இடத்தைக் கண்களால் காட்டியவள், முறைப்பை மட்டும் குறைக்கவில்லை.

"மிஸஸ் வருணுக்கு, இந்த... பியார், பிரேமா, காதல் இதெல்லாம் தெரியாதா?" அவளைப் போலவே தலையைச் சாய்த்துக் கேட்டவனின் குரலில் அப்பட்டமான குறும்பு.

"ஏன் தெரியாம...? உங்களைவிட நல்லாவே தெரியும்."
அமர்த்தலாகச் சொல்லிவிட்டாலும், ஏதும் தவறாக எடுத்துக் கொண்டானோ என்பது போல் அவனையே பார்த்திருந்தாள்.

அவனோ அலட்டிக்கொள்ளாமல் "அது சரி..." என்று மெதுவாகத் தலையாட்டினான்.

சட்டென்று அவன்பக்கம் சற்றே நெருங்கி, பாக்கெட்டை எட்டி எடுக்க முயன்ற ஷோபனாவின் கையை, வருண் லாவகமாகத் தடுத்தான்.

இன்னும் அவளருகே குனிந்து, பிஸ்கட்டை மீண்டும் பற்களுக்கு இடையில் வைத்து மேலும்கீழுமாக அசைத்து சேட்டை செய்தான்.

அவன் அடிக்கும் லூட்டியை உள்ளுக்குள் ரசித்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல், "ஷப்பா...!" என்று போலியாய் அலுத்துக்கொண்டாள்.

பின்னே, சுற்றிலும் ஒருமுறை பார்வையை ஓட்டியவள், பெருமூச்சுடன் தோள்களைக் குலுக்கி, "ஓகே..." என்று முணுமுணுத்துவிட்டு மெதுவாக அவன் முகத்தை நோக்கி நெருங்கினாள்.

இருவருக்கும் இடையிலான இடைவெளி அங்குலங்களாகக் குறைந்துகொண்டிருந்த சமயத்தில்—

வருணின் கைப்பேசி அதிர்வுடன், சத்தமாக இசைத்தது.

பதறி விலகி, நேராக அமர்ந்துகொண்டாள் ஷோபா.
ஒரு கணத்திற்கு முன் இல்லாத வெட்கமும்.. விளக்க முடியாத சங்கடமும், எங்கிருந்தோ ஓடிவந்து அவளை ஆக்கிரமித்துக்கொண்டன.

வருணோ ஏமாற்றமாய் உதட்டைச் சுழித்தவன், வேண்டாவெறுப்பாக கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

'குமரன் Calling...' என்று காட்டியது திரை. சைலன்ட் மோடில் போட்டுவிட்டு ஷோபனாவைப் பார்க்க,

"என்ன!! குமரண்ணா தானே.. எடுத்து என்னெண்டு கேளுங்கவன்.. ஏதும் முக்கியமோ தெரியல்ல" என்றாள் மெதுவாக.

கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை அவளிடம் திணித்துவிட்டு அழைப்பை ஏற்றான்.

"வருண் டேய்...!" அந்தப் பக்கம் குமரனின் குரல் உற்சாகமாக ஒலித்தது.

"என்னடா.. சொல்லு."
'வட போச்சே...' எனும் கடுப்பில் பேசினான் வருண்.

மறுபுறமிருந்தவனுக்கு என்ன புரிந்ததோ, "ஓஹோ...!" என்று கேலிக்குரலில் இழுத்துவிட்டு,

"ஏன் மச்சான், நான் வேணுமெண்டா.. பெயர கரடிவேல் எண்டு மாத்தவாடா?" என்று சீண்டலாய்க் கேட்டான்.

"முதல்ல அத செஞ்சி தொலை."

"ஆஹ்.. சரிங்ங்ண்ணா.. அப்ப ஃபோன வெக்கிரங்ண்ணா... " பவ்விய தொனியில் பதில் சொன்னான் குமரன்.

" என்ன விசராக்காமலுக்கு, என்னத்துக்கு எடுத்தனியென்டு சொல்லடா .." வருணின் குரல் உச்சகட்ட எரிச்சலுடன் வெளிப்பட்டது.

அதற்கு மேலும் நண்பனின் பொறுமையை சோதிக்க வேண்டாமென முடிவு செய்த குமரன், "ஒரு சின்ன டவுட் தாண்டா.. " என்று வேலை விஷயமான தன் சந்தேகத்தைக் கேட்க,

வருணும் பொறுமையாக விளக்கிச் சொல்லிவிட்டு அழைப்பை முடித்தான்.

நண்பர்களின் தொலைபேசி உரையாடலை கேட்டு சிரித்தவாறே டீயை காலி செய்திருந்தாள் ஷோபனா.

போனை வைத்தவன் ஒன்றும் சொல்லாமல் அவளை திரும்பி பார்த்தான். சில கணம் அமைதியாக கடந்தது.

பின்னங்கழுத்தை ஒருமுறை தடவிக்கொண்டவன், அவளருகே சற்று நெருங்கி "Shall we...?" என்று முடிக்காமல் இழுத்தான்.

அவளுமே தலையசைத்து "Of course... " என்று தொடங்கியவள், ஒரு நொடி இடைவெளி விட்டு,

" We shall...go..." என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, குறும்பு கொப்பளிக்கும் முகத்துடன் கார்க்கதவைத் திறந்து இறங்கிவிட்டாள்.

மொக்கை வாங்கியதில் சப்பென்றானது வருணுக்கு.

'உர்..' எனும் முகத்துடன் ஓட்டுநர் இருக்கைக்கு வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

ஷோபனா இதழ்கள் மடித்த சிரிப்புடன், அவன் சிறுபிள்ளைத் தனமான கோவத்தை ரசித்தபடி ஏறிக்கொண்டாள்.

கார் புறப்பட்டது.

அடிக்கொரு தரம் கணவனின் முகம் பார்த்தாள். அவன் பார்வை நேராகச் சாலையில் இருந்தது. அந்த 'உர்.. ' இன்னுமே அகலவில்லை.

செல்லும் வழியிலிருந்த பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்திய வருண்,
"ஐயாயிரத்துக்கு அடிங்கண்ணா..." என்க, ஊழியர் எரிபொருள் நிரப்பத் தொடங்கினார்.

பணம் செலுத்துவதற்காக பர்ஸைத் திறந்து பார்த்தவன், சற்றே நெற்றியைச் சுருக்கினான். அப்போதுதான் கார்டை பேக்கில் வைத்தது நினைவுக்கு வந்தது.

"ச்சே..."என்று மெதுவாக முணுமுணுத்தவன், ஒரு கையால் நெற்றியை நீவிவிட்டுக் கொண்டே பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஷோபனாவை ஏறிட்டுப் பார்த்தான்.

ஷோபனாவோ, வேகமாக ஓடிக்கொண்டிருந்த மீட்டரிலே கவனமாக இருந்தவள், வருணின் "ம்க்கூம்.." என்ற தொண்டை செருமலில் கலைந்து அவன்புறமாய் திரும்பினாள்.

ஒரு நொடி தயங்கிவிட்டு, "கார்ட விட்டுட்டு வந்துட்டன். ஒரு ரெண்டாயிரம் இருக்குமா..?" என்று கேட்க,

உடனே அவளது ATM அட்டையை எடுத்து நீட்டினாள்.

வருண் பணத்தை செலுத்த, அடுத்தகணம் ஷோபனாவின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. வழக்கம்போல் வங்கியிலிருந்து வரும் கணக்கு விவரச் செய்திதான்.

இயல்புபோல் அதைத் திறந்து பார்த்தவள், அடுத்த நொடியே புருவங்களைச் சுருக்கினாள்.

மீண்டும் ஒருமுறை திரையைப் பார்த்தாள்.

அதற்கு மேலே சம்பள தினத்தன்று வந்திருந்த குறுஞ்செய்தி இருந்தது. ஆனால், இப்போது கணக்கிலிருந்த பணம் ஐம்பதாயிரத்துக்கும் மேல் குறைந்திருந்தது.

கடந்த சில நாட்களில் அவ்வளவு பெரிய தொகைக்கு எந்தச்செலவும் செய்ததாக அவளுக்கு நினைவில்லையே...


வருண் வண்டியோட்டிக் கொண்டே அவளைக் கவனித்தவன்,
"என்ன, ஐயாயிரம் தானே... போறத்துக்கிடைல தந்துருவன் தாயே! அதுக்கு ஏன் முகத்த இப்படி வெச்சுருக்காய்..?" என்க,

"ப்ச்.. அதில்ல. பேங்க் பலன்ஸ் ஒரு அம்பது குறையுது. அதான் யோசிக்கிறேன்" என்றாள் குழப்பமாக.

"அம்பதாயிரமா?.." என்று மெல்லிய அதிர்ச்சியோடு கேட்டவன்,

"சரி... நீ குழம்பாத. போறவழி தானே. அவடத்த போய் ஒருக்கா விசாரிப்பம்." என்றான்.

"ம்ம்..." என்று தலையசைத்தாள் ஷோபனா.

****************

பேங்க் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் இருந்த அதிகாரியிடம் ஷோபனா விபரத்தை விளக்கினாள்.

ஷோபனாவின் அடையாள அட்டையையும் கணக்கு இலக்கத்தையும் வாங்கிக் கொண்டவர், கணினியில் அவளது கணக்கு விபரங்களைத் திறந்து பார்த்தார்.

சில நிமிடங்கள் அமைதியாகத் திரையை ஆராய்ந்தவர்,

"ரெகார்ட்ஸ் படி, உங்கட அக்கவுண்ட்லருந்து ஐம்பதாயிரம், ATM மூலமா வித்ராவல் ஆகியிருக்கு மேடம்." என்றார் நிமிர்ந்து பார்த்து.

"இல்லையே... நான் அவ்வளவு காசு எடுக்கலையே..."ஷோபனாவின் புருவங்கள் சுருங்கின.

" சிஸ்டம்ல அப்படித்தான் காட்டுது மேடம். நீங்க இல்லாட்டி, உங்கட கார்டை வேற யாராவது யூஸ் பண்ணியிருக்க சாத்தியம் இருக்கா?"

ஷோபனா குழப்பத்துடன் வருணைப் பார்த்தாள்.

"எந்த டேட் என்டொருக்கா பாத்து சொல்றீங்களா?" வருண் கேட்க,

பரிவர்த்தனை விவரங்களைத் திறந்து ஆராய்ந்தவர், சரியான திகதியையும் நேரத்தையும் கூறினார். பணம் எடுக்கப்பட்ட ATM லொகேஷனையும் சொன்னார்.

அவர் சொன்ன திகதியையும் நேரத்தையும் கேட்டு 'எப்போது, தான் அன்று, அந்த நேரத்தில் எங்கிருந்தோம்..' என யோசித்தவளுக்குள் பெரும் அதிர்வு.

ஏதோ சிந்தனையோடு அமைதியாக நின்றவளைப் பார்த்த அதிகாரி,
"மேடம், ஏதாவது இஷ்யூஸ் என்டா நீங்க கம்ப்ளைண்ட் ரெய்ஸ் பண்ணலாம்" என்றதும்,

ஷோபனா அவசரமாகத் தலையசைத்தாள்.

"இல்லல்ல சேர். அதெல்லாம் தேவையில்ல. இப்ப.. நீங்க டேட் சொல்லவும்தான், அண்டைக்கு நான் காசு எடுத்ததே எனக்கு ஞாபகத்துக்கு வருது."என்றவள் அவரைப்பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தாள்.

"உங்கட டைம வேஸ்ட் பண்ணிட்டேன். ரொம்ப சொரி சேர்."

"பரவாயில்ல மேடம்."
என்றார் ஒரு விசித்திரமான பார்வையுடன்.

வருணிடம் திரும்பியவள், "வாங்களன் நாம போவம்."என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறு அன்று வெளியேற,

வருணோ, அந்த அதிகாரிக்கும் குறையாத ஆச்சரிய பாவனையை முகத்தில் காட்டியவாறு ஷோபனாவைப் பின்தொடர்ந்தான் .

"ஹேய்...! உண்மையாவே நீயா எடுத்தனீ?"வெளியே வந்ததுமே கேட்டான் வருண்.

"ஓம்..."என்றவள் ஒரு கணம் தயங்கி,
"அது... ஒரு டீச்சர் அவசரமென்டு கேக்க எடுத்து குடுத்தனான். பிறகு..மறந்தே போய்ட்டேன்."

"யார் டீச்சர்?" நம்பாத பார்வையோடு அவளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

"இதென்ன விசாரணை மாதிரி கேக்குறீங்க...? பெயர் சொல்லக்கூடாது எண்டு தானே அப்டி சொல்றேன். அதுக்குப் பிறகும் திருப்பித் திருப்பிக் கேட்டா எப்டி...?"
சொல்லிக்கொண்டே நடந்தவள்,

"மறந்துட்டன் எண்டா நம்பனும்."
என்று லேசான எரிச்சலோடு முடித்தாள்.

வருண் அவளை ஒரு பார்வை பார்த்தவன், அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட பேசாமல் காரினுள்ளே ஏறிக்கொண்டு, கதவை வழக்கத்தைவிட சற்றுக் கடினமாகச் சாற்றியிருந்தான்.

**************
 
Last edited:

ஷாரிகா

Active member
Staff member
இருவரும் வீட்டை அடைந்தவேளை, ஷோபனாவின் சித்தி, அம்மம்மா, கபிஷ் எல்லோருமே அங்கேதான் இருந்தனர்.

அவர்களைக் கண்டதுமே "அபியுமா வந்துருக்கான்?" என்று கேட்டுக்கொண்டே தான் உள்நுழைந்தாள்.

"இல்லடி... நாங்க வந்து கணநேரம். அவன கிளாஸ முடிச்சிட்டு வர சொன்னான். ஆள இன்னும் காணல்ல..." என்றார் வசந்தி.

வருண் நேராக அறைக்குள் சென்றுவிட, இவள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

இருட்டத்தொடங்கிவிட அவர்கள் மூவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

அறைக்குள் வந்தவளை சிறிதும் கண்டுகொள்ளாதவன் போல, முகத்தைத் தூக்கி வைத்தபடி கண்ணாடி முன்னே நின்று தயாராகிக் கொண்டிருந்தான் வருண்.

"ம்க்கும்..."

ஷோபனாவின் தொண்டைச் செருமலுக்குக்கூட எந்த எதிர்வினையும் இல்லை.

அவனருகே சென்றவள், சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"இப்ப என்ன...? அந்த டீச்சர்ட பெயரை சொல்லல்ல எண்டு கோவமா?"



"அதெல்லாம் இல்ல."
கையை மெதுவாக விடுவித்துக் கொண்டான்.

"சாப்பிட்டு போறீங்களா? இப்பவே வெச்சுத் தரவா?"

"வேணாம்."

"அப்ப.. பார்சல் கட்டித் தரவா?"

"வேணாம்."

இடுப்பில் இருபக்கமும் கைகளை ஊன்றியபடி, உதட்டை ஒரு பக்கமாய் சுளித்து முறைத்துப் பார்த்தாள் ஷோபனா.

அவனோ சளைக்காமல் பதில் பார்வை பார்த்துவிட்டு அந்தப்பக்கமாய் நகரவும், உடனே அவன் முன்னே சென்று மறித்து நின்றவள்,

"ஒண்டுமே வேணாமா...?"
என்று கேட்டுவிட்டு புருவங்களை ஏற்றி இறக்கினாள்.

"ஒண்டும் வேணாம்."
அழுத்தம் திருத்தமாக வந்தது பதில்.

"ஓஹோ...!"
என்று கேலிக்குரலில் இழுத்தவள், அடுத்த நொடியே அவன் கழுத்துக்குப் பின்னால் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவனில் வாகாய் சாய்ந்து நின்றாள்.

"ஷோபா..! லேட்டாகுது எனக்கு..."
இஷ்டமில்லாதது போலச் சொன்னாலும், அவளை விலக்கிக்கொள்ளும் முயற்சியெல்லாம் இல்லை.

"இன்டைக்கான ஸ்டெப் சொல்லித்தரல்லயே நீங்க...?"குறும்பு வழியும் குரலில் நினைவூட்டினாள்.

"ஸ்டெப் தானே..?இரு..." ஆரம்பித்தவன்,

"ஹஸ்பண்ட் அக்கறையா ஒரு கேள்வி கேட்டா அழகா பதில் சொல்லனும். அத விட்டுட்டு எரிஞ்சி விழக்கூடாது.." என்று பாடமெடுக்க,

நல்ல பிள்ளையாய்க் கேட்டுக்கொண்டவள், " இனிமேல் எரிஞ்செல்லாம் விழமாட்டன். சரிதானே..?" என்று கேட்க,

அவனும் "சரி..." என்று இறங்கி வந்தவன்,

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால என்ன வேணும் , என்ன வேணும் எண்டு கேட்டு கரச்சல்படுத்திட்டு இருந்தியே..?" என்றான் முகத்தில் அலட்சிய பாவனையுடன்.

" அப்டியா கேட்டேன்?? சரி. அதுக்கு?"

"எனக்கு பிஸ்கட் வேணும்." என்றான் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

"உங்களுக்கு இல்லாததா...?"
என்று உடனே சொல்லிவிட்டாலும், அடுத்த நொடியே அழையா விருந்தாளியாய் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

மனைவியின் சிவந்த முகத்தையும், விழிகளில் மின்னிய நாணத்தையும் ரசனையோடு பார்த்திருந்தவன், மெல்ல அவளருகே குனிந்தான்.

அவள் விலகவில்லை. அந்த அமைதியான சம்மதமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

மெல்ல அவள் இதழ்களைத் தனதாக்கிக் கொண்டான். இதுவரை பேசியிராத மொழியொன்றில் இருவரும் உரையாடத்தொடங்கினர். ஓரளவு நீண்ட உரையாடல் தான்.

சில கணங்கள் கழித்து மெதுவாக விலகி, அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் வருண்.

ஷோபனா தலைகுனிந்தபடியே இருந்தாள். நிமிரவே இல்லை.
விரல்களால் தன் இதழ்களைத் தொட்டுப் பார்த்தவள், உடலெங்கும் ஒரு இனிய சிலிர்ப்பு பரவுவதை உணர்ந்தாள்.

"எப்படி மெடம்.. நான் போன பிறகுதான், தலைய நிமித்துவிங்களோ?" வருண் மெல்லக் குரல் கொடுக்க, நிமிர்ந்து அவன் முகம் நோக்கி மலர்ந்து புன்னகைத்தாள்.

அவள் முகத்தில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கிவிட்டவனிடத்திலும், அதன் பிரதிபலிப்பாய் ஓர் நிறைவான புன்னகை.

"ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்றீங்களா? உடுப்ப மாத்திட்டு ஓடிவாறன்."

அவன் சரி என்று தலையசைக்க, அவசரமாய் குளியலறைக்குள் ஓடினாள் ஷோபனா.

பத்து-பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

ஷோபனா பாத்ரூமிலிருந்து வெளியே வரவும், வருண் முகம் முழுவதும் பதட்டம் கலந்த கலக்கத்தோடு அவசரமாய் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.

"ஏன் பேயறைஞ்ச மாதிரி வாறீங்க?" ஷோபனா கேட்கும் போதே, வெளியே அமுதாவின் கலக்கமான குரல் அழுகையோடு கலந்து கேட்பது போலிருந்தது.

"அப்பாக்கு என்ன?" என்று அவள் கதவை நோக்கி ஒரு ஓட்டத்தில் நகர்ந்தாள்.

அவன் அப்போதும் வாய் திறக்கவில்லை.

ஷோபனா அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

வருண் அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.

அவனால் எப்படி சொல்ல முடியும்!!?

'உன் உயிருக்குயிரான தம்பி இப்போது உயிரோடில்லையாம்' என்பதை அவனால் எப்படி சொல்ல முடியும்!!?

ஷோபனா இந்த செய்தியை எப்படித் தாங்குவாள். நினைக்கும் போதே வருணுக்கு நெஞ்சுக்கூடு சில்லிட்டது. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்...


 
Top Bottom