VIN - 6(1)
குறித்த பிரபல டிவி சேனல் ஒன்றில், வாரஇறுதி நாட்களில் காலை 7மணிக்கு ஒளிபரப்பாகும் “ THE WEEK TALK ” நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. அதில், கடந்த வார செய்தித்தாள்களின் முக்கிய செய்திகள் தொகுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றைப் பற்றியும் இருவரினால் விரிவாக கருத்தாடப்படும்.
தமிழ்நேசன் தேநீர் அருந்தியபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஷோபனா, Teaயிலே மில்க்-பிஸ்கட்டை ஒவ்வொன்றாக நனைத்து வாயினுள் அனுப்பிக் கொண்டிருந்தாள். செய்திகள் காதில் விழுந்தபடி இருந்தாலும், அவளின் கவனம் முழுக்க பிஸ்கட் அதிகமாய் ஊறி, கீழே விழுந்துவிடாமல் பாதுகாப்பதிலேயே இருந்தது.
வேலைக்கு செல்லத்தொடங்கி ஒரு மாத காலம் நிறைவடைந்திருந்தது. ஆதிக்கு வகுப்பெடுக்க சனி ஞாயிறுகளில் யாழினியின் வீட்டுக்கு செல்வாள். இன்றும் போக வேண்டும்.
'' ஷ்ஷ்..." பிரஷர் குக்கர் சத்தம் கொடுக்கவும்,
''அம்மா... என்ன செய்ய? ஓஃப் பண்ணவா..?'' அறையிலிருந்த அம்மாவுக்கு கேட்கும்படி சத்தமிட்டாள்.
வெளியே வந்த அமுதா,
''அடுத்த விசிலடிக்க ஓஃப் பண்ணா சரி. நீ இன்னும் தேத்தண்ணி குடிச்சி முடியலையா..? டக்கென்டு குடிச்சிட்டு வெளிக்கிடன் பிள்ள. 8 மணிக்கு இங்கருந்து போகனுமல்லோ?''
" மாச்சலாக் கிடக்கம்மா..." கைகளை நீட்டி சோம்பல் முறித்தவாறே சொன்னாள் ஷோபா.
அமுதா உடனே கணவரிடம்,
" இங்க பாருங்கப்பா.. இவக்கு கெதியா கட்டிக்கொடுக்கணும், இல்லாட்டி சரிவராது. விடிய எழும்பி வெட்டிமுறிச்ச கணக்குல மாச்சலாம் மாச்சல்.."
அம்மாவின் பேச்சு அபாயகரமான திசையில் செல்லவும், மெதுவாக எழுந்து அப்பாவின் கப்பையும் எடுத்துக்கொண்டு, அந்த இடத்திலிருந்து நைசாக நழுவினாள்.
*****
ஜோனத்தனின் திருமணம் முடிந்து ஒரு மாதகாலம் ஆகியிருந்தது. ஸ்கூல் செல்லத்தொடங்கிய ஆரம்ப நாட்களில், அந்த சேர்ச்சைக் கடக்கும்போது நெஞ்சில் சுருக்கென்று எதுவோ தைப்பதைப் போலிருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அது இல்லாமல் போவதாய் உணர்கிறாள். முற்றாகவே இல்லாமலாகிவிடும் என்பது ஷோபனாவின் நம்பிக்கை.
இன்றும் சேர்ச்சைக் கடக்கையில், ஒரு நானோசெக்கனிற்கும் குறைவான நேரத்தில் ஏதோ ஓர் காட்சி தோன்றிய வேகத்தில் மறைந்துபோனது.
யாழினி, தான் வீட்டில் இல்லை என்பதாக காலையிலேயே சொல்லி இருந்தாள். ஸ்கூட்டியை கேட்டுக்கு சற்றுத்தள்ளி நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஷோபா.
அறைக்கதவை மெதுவாக திறந்து அவள் உள்ளே செல்ல,
''குட் மார்னிங் மிஸ்!'' முகமெல்லாம் சிரிப்பாக சொன்னான் ஆதி.
''வெரி குட் மார்னிங் My Boy!''
வெளியே பைக்வரும் சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்தவாறே தலையைத்தூக்கி ஜன்னலினூடாக எட்டிப்பார்த்த ஆதி, "ஐயோ! மாமா வந்திருக்கேர்.." என்றதும்,
ஷோபாவும் அவன் பின்னால் நின்று
பார்த்தவள், " ஐயோ! இவராடா உங்கட மாமா..." என்றிருந்தாள்.
வந்திருந்தது யாழினியின் ஒரே தம்பி, வருண். அக்கா இல்லை என்ற விஷயம் அவனுக்கு இன்னும் தெரியவில்லை போலும். பைக்கை நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்து யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சற்றுக்கடுமையாக இருந்தது.
'அந்தப்பக்கம் எந்த பாவப்பட்ட ஜீவன் வாங்கிக்கட்டுதோ தெரியல்ல' மனதினுள் நினைத்தவள், "ஏன்டா ஆதி ஐயோ என்டனி, பயமா உனக்கு?" நைசாகக் கேட்டுப்பார்த்தாள்.
"எல்லாம் வாங்கி தருவேர். அப்பாவோட சேத்து என்னையும் கூட்டிப்போவேர். ஆனா, அம்மா எதுக்காச்சும் மாட்டிக்குடுத்தாங்க என்டா சரமாரியா கிழிவிழும். சிலநேரம் அடியும் விழும். அப்ப மட்டும் பயம்"
" ஓ... அப்டியென்டா நல்ல மாமா தான். குழப்படி செஞ்சா நானும் தான் அடிப்பேன்." நல்லாசிரியையாக சொன்னாள்.
"அப்ப நீங்க ஏன் மிஸ் ஐயோ என்டனீங்க, உங்களுக்கும் பயமா?"
''யார் சொன்ன, அப்டியெல்லாம் இல்லையே.." அவள் சொன்னதை நம்பாமல் பார்த்த ஆதியிடம்,
" ஹலோ! என்ன பார்வ, நாங்க படிப்ப..."
ஹாலில் வருண் அக்காவை அழைக்கும் சத்தம் கேட்டது.
" மா..மா.., இங்க ரூமுக்க வாங்களேன்." ரூமிலிருந்து கத்தினான் ஆதி.
அப்போது தான் ஷோபனாவுக்கு யாழினி இல்லாததே நினைவுக்குவந்தது. ஆதிக்கும் கால் ஏலாது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்வோமா ' என்றுகூட யோசனை வந்தது. ' கடவுளே! காப்பாத்து என்ன ' மானசீகமாய் வேண்டிக்கொண்டு நின்றாள்.
"அம்மா எங்கடா..?" எனக்கேட்டவாறே நுழைந்த வருண், அங்கு நின்றிருந்த ஷோபனாவைக் கண்டுவிட்டு லேசாய் ஒற்றைப் புருவமுயர்த்தினான்.
" அம்மா ஹாஸ்பிடல்கு மாமா. அது ஷோபா மிஸ். இங்கிலிஷ் க்ளாஸ் எடுக்க வாரவங்க." மாமாவின் கேள்வி,பார்வை இரண்டுக்கும் பதில் கொடுத்தான் மருமகன்.
"ஹாய்! ஷோபா மிஸ்.. எப்டி இருக்கீங்க?"
நலம் விசாரித்தான் வருண்.
"நல்லாருக்கன்.. " சுருதி குறைந்திருந்தாலும் தெளிவாய் கேட்டது ஷோபனாவின் குரல்.
"பிறகு, கிளாஸ் எப்டி போகுது? என்ன சொல்றான் ஆதி? "
"என்..ன மிஸ், மாமா நல்லா தானே கதைக்கிறேர். அப்ப ஏன் கண்டுட்டு பயம் என்டனீங்க?" ஷோபாவிடமிருந்து பதில்வர தாமதமானதில், ஒரே போடாய்ப்போட்டான் ஆதி.
'அடேய் ஆதிப்பயலே, இப்டி கோர்த்துவிட்டியேடா..'
உடனே, வருணைப் பார்த்து "ம்ஹும்.." இல்லையில்லை என்பதாக தலையை அசைத்துவிட்டு,
''அது வந்து..." என்று அடுத்தது வராமல் திணறிக்கொண்டிருந்தாள் ஷோபா.
" ஆதி... க்ளாஸ்லயும் இப்படிதான் கூடக்கூட கேள்வி கேட்டு கரைச்சல்படுத்துறனி போல" ஆதியிடம் அதட்டும் குரலில் கேட்ட வருண்,
" ஆகலும் சேட்டவிட்டா... பயப்படாம, எனட்ட சொல்லுங்க டீச்சர்." என சொல்லவும், சரி என்பதாக தலையைத் தலையை ஆட்டிவைத்தாள் ஷோபனா.
" நல்ல பிள்ளையா இருக்கனும் ஆதி. இந்தா, இது உனக்குத்தான் ." என்று அவனிடம் ஒரு ஜூஸ் போத்தலைக் குடுத்துவிட்டு, பொதுவாக ஒரு தலையசைப்புடன் வெளியேறிவிட்டான்.
அவன் போன பின்புதான் 'யப்பா.. டேய்...' என்று ஆசுவாசமாக உணர்ந்தாள் ஷோபனா. ஆதியிடம் எதுவும் நடக்காதது போலவே பாவித்து, கற்பிக்கவும் தொடங்கினாள்.
*****