• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

15. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 15

அன்று காலை தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் ஜெகந்நாதன்.. அவன் குளியலறையில் இருக்க அவர்கள் வீட்டு தொலைப்பேசி ஒலித்தது.. சீதா தான் அந்த அழைப்பை எடுத்து பேசினாள்..

அவள் ஹலோ என்று சொன்னவுடன் அந்த பக்கம் ஒரு குரல் பதட்டமாக "ஹலோ.. ஜெகந்நாதன் சாப் ஹை வஹான் பே?(அங்கே ஜெகந்நாதன் ஐயா இருக்காரா..?) மை உன் சே பாத் கர் சக்தா ஹூன் க்யா?(நான் அவரோட பேச முடியுமா?)" என்று கேட்க

சீதாவும் ஐந்து வருடமாக அங்கு இருந்ததால் சரளமாகவே ஹிந்தியில் பேசப் பழகி இருந்தாள்.. அதனால் அவளும் ஹிந்தியிலேயே பதில் சொன்னாள்..

"அவர் குளிச்சிட்டு இருக்கார்.. வந்தவுடனே பேச சொல்லவா?" என்று அவள் கேட்க

"இல்ல மேடம்.. ஒரு எமர்ஜென்சி.. நான் ***** ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுஷீல்குமார்.. குத்துயிரும் குலையுயிருமா ஒரு பொண்ணு எங்க ஸ்டேஷன் முன்னாடி விழுந்து கெடந்தாங்க மேடம்.. நாங்க அவங்களை பார்த்தப்ப அவங்களுக்கு கான்ஷியஸ் இருந்தது.. விசாரிச்சப்போ அவங்க கஷ்டப்பட்டு ஒரு பேரை மட்டும் தான் சொன்னாங்க.. ஜெகந்நாதன்.. போலீஸ்னு சொன்னாங்க.. அவங்க பேர் கேட்டப்போ பூமான்னு சொன்னாங்க.. ஜெகந்நாதன் சார் ஐபிஎஸ் ஆஃபீசர்ங்கறதுனால டிபார்ட்மென்ட் ஃபைல்ஸ்லருந்து தேடி அவர் நம்பரை கண்டுபிடிச்சோம்.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க சீதாவோ அதைக் கேட்டு இடிந்து போனாள்..

பூமாவின் நிலையை கேட்டவளுக்கோ நிற்கவே முடியவில்லை.. கால்கள் தளர்ந்து போக பக்கத்திலிருந்த சுவற்றில் கீழே விழுந்து விடாமல் இருக்க பிடிமானத்துக்காக கை வைத்து தாங்கிக் கொண்டாள்..

"இப்ப பூமா எங்கே இருக்கா?" நடுங்கும் குரலோடு அவள் கேட்டிருக்க

"ஓ.. உங்களுக்கும் அவங்களை தெரியுமா? அவங்களை ******* ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம் மேடம்.. ஐசியூல தான் இருக்காங்க.. அவங்க வேற எதுவும் பேசல.. அதனால எங்களுக்கு அவங்களை பத்தி வேற எதுவும் டீடெயில்ஸ் தெரியல.. அவங்க உடம்பெல்லாம் காயமா இருந்தது .. தலையிலயும் அடிபட்டு இருக்கு.. அடிபட்டது மட்டும் இல்ல அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க மேடம்.. யாரையுமே கிட்ட நெருங்கவே விட மாட்டேங்கிறாங்க.. அவங்க விழிச்சிருக்கும் போது டாக்டர்ஸால அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கூட பண்ண முடியல" அவர் சொல்ல சொல்ல சீதாவின் இதயமோ படபடவென்று அடித்துக் கொண்டது..

அதே நேரம் ஜெகந்நாதன் குளித்துவிட்டு வந்து விட "யார் சீதா?" என்று தலையை துவட்டி கொண்டே கேட்டான்..

சாதாரணமா கேட்டுக் கொண்டே வந்தவன் சீதாவின் இருளடைந்த முகத்தைப் பார்த்ததும் "சீதாம்மா.. என்னடா.. என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு அழுகை..? என்னடாம்மா.?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து அவள் தலையை வருடி கேட்க அவனிடம் ஃபோனின் ரிஸீவரை தந்தாள் சீதா..

அதை வாங்கி பேசியவன் முகமோ அதிர்ந்து போனது..

"சரி.. நாங்க வந்து பார்க்கிறோம்.." என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தவன் இறுகிய முகத்தோடு அமைதியாய் நின்று இருந்தான்..

சீதாவும் "என்னங்க.. வாங்க போலாம்.. அவளுக்கு ரொம்ப அடிபட்டு இருக்காம்.. தலையில வேற அடிபட்டு இருக்குனு சொல்றாங்க.. எப்படி இருக்கான்னு தெரியல.. வாங்க சீக்கிரம் போலாம்ங்க.."
என்று சொன்னவளை எந்த சலனமும் இல்லாமல் திரும்பிப் பார்த்தவன்

"எதுக்கு சீதா பதட்டப்படுற? இப்ப எதுக்கு நம்ம போய் அங்க பாக்கணும்.. நம்ப யாரும் வேணாம்னு தானே ஓடிப்போனா.. அவ என்னைக்கு அந்த நாதாரியோட ஓடிப் போனாளோ அன்னைக்கே எனக்கும் அவளுக்கும் இருந்த சம்பந்தம் முடிஞ்சு போச்சு.. என்னை பொறுத்த வரைக்கும் அவ யாரோ எவளோ ஒருத்தி.. அவளால நீ எவ்வளவு கஷ்டப்பட்டே.. எங்கெங்கேயோ போய் என்னென்னவோ வேலை பார்த்து.. இன்னும் கூட அன்னிக்கு நீ இருந்த கோலம் என் கண்ணை விட்டு போகல.. இல்லை.. நான் எங்கேயும் வரல.. நான் வரமாட்டேன்.. இது கூட அவளோட ஏதாவது ஒரு நாடகமா இருக்கும்.."

அவன் தீர்க்கமாய் சொல்லிவிட"என்ன பேசறீங்க நீங்க? அவ உங்க பொண்டாட்.."

அவள் முடிக்கவில்லை.. அந்த வார்த்தையை கேட்டதும் அவளை கையை ஓங்கியபடி எரிப்பது போல் முறைத்தான் ஜகந்நாதன்..

"எனக்கு பொண்டாட்டி ஒருத்தி தான்.. அவ பேரு சீதா.. அவ தான் என் வாழ்க்கை.. அவளை தவிர இனி யாரும் என் வாழ்க்கையில அந்த இடத்துக்கு வர முடியாது.. உங்க அப்பாவுக்கு கடைசி நிமிஷத்துல குடுத்த வாக்குக்காக அவளை என் வாழ்க்கையில ஒரு முறை அனுமதிச்சதுக்கே இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி என்னோட இருக்கற நீ மட்டும் தான் என் பொண்டாட்டி.. இதை நல்லா உன் மண்டைக்குள்ள போட்டு வச்சுக்க.. வேற எவளையாவது பொண்டாட்டின்னு சொன்னே அப்படியே அறைஞ்சு தள்ளிருவேன்டி உன்னை.." என்றான் அவன் ஆத்திரம் பொங்க..

அவன் கோவத்தில் அரண்டு போனவள் "சரி.. பொண்டாட்டியா வேணாம்.. யாரோ நமக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு அடிபட்டு ஹாஸ்பிடல்ல கிடக்கிறான்னா போய் பார்க்க மாட்டோமா? ப்ளீஸ்.. கொஞ்சம் என்னோட வாங்க.. அவ என்ன நிலைமையில் இருக்கான்னே தெரியல.. நீங்க வந்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.." என்றாள் கெஞ்சுதலாய்..

"சீதா சொன்னா கேளு.. அந்த பூமா சரி கிடையாது.. நம்ம வாழ்க்கை இப்ப தான் அமைதியா போகுது.. இதுல எந்த பிரச்சனையையும் இழுத்து விட வேண்டாம்.. ப்ளீஸ்.." அவன் எவ்வளவோ கெஞ்சியும் சீதா காது கொடுத்து கேட்கவில்லை.. அழுது அரற்றி அடம் பிடித்து ஒருவழியாக அவனையும் அழைத்துக் கொண்டு அந்த மருத்துவமனைக்கு சென்று விட்டாள்..

மருத்துவமனையில் பூமா மருத்துவர்கள் சூழ்ந்து இருக்க கட்டிலில் கோழி குஞ்சாய் கால்களை சுருக்கி கட்டிக் கொண்டு மிரண்டு போன விழிகளுடன் அமர்ந்திருந்தாள்..

அந்த அறைக்குள் சீதா நுழைந்த உடனேவே அவளை பார்த்த மறு நொடி அவளைப் பார்க்கவும் முடியாமல் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு தலையில் அடித்தபடி கதறி அழுதாள்..

"ஐயோ அக்கா.. நீ எங்க வந்த? இந்த பாவியை பார்க்க நீ வந்து இருக்கவே கூடாது.. அய்யோ.. நான் அசிங்கம்.. உனக்கு செஞ்ச துரோகத்துக்கு உயிரோடு இருக்கவே அருகதை இல்லாத ஒரு ஈனப்பிறவி ஆயிட்டேன்.. ம்ம்.. இனிமே நான் உயிரோட இருக்க கூடாது.. இருக்கவே கூடாது.." என்று ஆவேசத்தோடு சுற்றி முற்றி ஏதோ தேட அவள் நோக்கம் புரிந்து சட்டென அங்கிருந்த மருத்துவரும் செவிலிகளும் அவள் கையைப் பிடித்து அவளை கஷ்டப்பட்டு அந்த கட்டிலில் அமர வைத்தனர்..

அவர்கள் சீதாவிடம் "மேடம்.. நீங்க வெளில போங்க.. அவங்க உங்களை பார்த்தா ரொம்ப எமோஷனல் ஆகுறாங்க.. அவங்களையே ஹர்ட் பண்ணிக்குவாங்க.." என்க

அதன் பிறகு சீதா அந்த அறையை விட்டு வெளியேறிவிட வெகுநேரம் பூமாவை அடக்க முயன்று முடியாமல் வேறு வழியின்றி அவளுக்கு மயக்க ஊசியை போட்டுவிட அப்படியே மயங்கி போனாள்.. கனமான இதயத்தோடு அவள் அருகே வந்த சீதா அவள் தலையை மெல்ல வருடி "என்ன ஆச்சு அவளுக்கு?" என்று மருத்துவரை பார்த்து கேட்க

"மேடம் அவங்களை செக்ஷூவலா அப்யூஸ் பண்ணி இருக்காங்க.. அப்யூஸ்னு சொல்றதை விட செக்ஸ் டார்ச்சர் பண்ணி இருக்காங்கன்னு தான் சொல்லணும்.. அங்கிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.. மனசாலயும் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க.. இவங்களோட உடம்புல இருக்கிற காயத்தை எல்லாம் ஆத்துனாலும் மனசால இவங்க அந்த ட்ராமால இருந்து வெளியில வர வெக்கறது ரொம்ப கஷ்டம்.. அதுக்கு அவங்க கூட ஒருத்தர் எப்பவும் அவங்களுக்கு ஆறுதலா துணையா இருக்கணும்.. இல்லைனா எந்த நேரம் வேணா அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிப்பாங்க.. அவ்ளோ பயந்து போய் இருக்காங்க.."

அவர்கள் சொன்னதைக் கேட்டவள் தன்னருகே அப்போது தான் வந்து நின்றிருந்த ஜெகந்தாதனிடம் "என்னங்க.. அவ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா.. தயவு செஞ்சு உங்க கோவத்தை எல்லாம் தள்ளி வையுங்க.. என்னை பார்த்தாலே தன்னை தானே அழிச்சிக்க நினைக்கிறா.. அவளுக்கு தேவை இப்போ ஒருத்தரோட ஆறுதலும் அரவணைப்பும்.. அதை நீங்க மட்டும் தான் அவளுக்கு கொடுக்க முடியும்.. அவளுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்லைங்க.." என்றாள்..

"நான் அக்காவுக்கும் மாமாவுக்கும் விஷயத்தை சொல்லி இருக்கேன்.. நாளைக்கு அவங்க கிளம்பி வந்துருவாங்க.. அப்புறம் நானோ நீயோ இங்க வர வேண்டிய அவசியம் இருக்காது.. அக்கா பார்த்துக்குவாங்க.. அப்பறம் அவங்களோடவே அவளை கூட்டிட்டு போயிடுவாங்க.."

குரலில் பிசிறு தட்டாமல் ஜெகந்நாதன் தெளிவாய் சொல்லிவிட கேட்டவளோ அதிர்ந்து போய் பார்த்தாள் அவனை..

ஆனால் சிறிது யோசித்தவள் "ம்ம்.. வரட்டும்.. அவங்களை பார்த்து அவ என்ன பண்றான்னு பார்க்கலாம்.. என்னை பார்த்தாலே அவ பைத்தியக்காரி மாதிரி நடந்துக்கறா.. நான் மறுபடியும் அவ முன்னாடி போனா ஏதாவது பண்ணிக்குவாளோன்னு பயமா இருக்கு.. அவங்க வந்து அவ கூட இருக்கிறது தான் நல்லது.. ஆனா அவங்க மட்டும் இல்லாம நீங்களும்.." என்று தொடங்கியவளை தீவிரமாக முறைத்தான் ஜெகந்நாதன்..

அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை அவளால்.. அன்று முழுவதும் மருத்துவமனையில் பூமாவின் அறை வாசலிலேயே பழிக் கிடந்தாள்.. ஜெகந்நாதன் தான் வீட்டிற்கு சென்று நவ்யாவை பார்த்துக்கொண்டார்.. அம்மா எங்கே என்று அவள் கேட்ட கேள்விக்கு ஏதேதோ பதில் சொல்லி சமாதானப்படுத்தினார்..

மறுநாள் காலை குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஜெகந்நாதன் மருத்துவமனைக்கு வர அங்கிருந்த சீதாவோ "நீங்க இங்க இருங்க.. நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்" என்றாள்..

அதே நேரம் பூமா கண் விழிக்க சீதா அவசர அவசரமாக அந்த அறையில் இருந்து வெளியேறி கதவுக்கு பின்னால் மறைந்து கொண்டாள்..

உடனே ஜெகந்நாதன் அவள் பின்னால் வெளியே போக திரும்ப அவரைப் பார்த்த நொடி கட்டிலில் இருந்து வேகமாக இறங்கிய பூமா அவரை நோக்கி ஓடி வர ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை அவளால்..

உடல் முழுவதும் அங்குலம் அங்குலமாக சிதைத்து இருந்தான் அந்த கிராதகன்.. "என்னங்க.." என்று அழைத்துக் கொண்டு கட்டிலில் இருந்து இறங்கியவள் காலைக் கீழே வைக்க முடியாமல் அப்படியே விழுந்து விட திரும்பிப் பார்த்த ஜெகந்நாதன் ஓடி சென்று அவளை தூக்கிய நேரம் அவன் மார்பில் புதைந்து கதறி அழுதாள் பெண் அவள்..

எதுவும் பேசவில்லை அவள்.. அவனுடன் இருந்தவரை அவனோடு தர்க்கம் செய்தே காலத்தை கழித்தவள் அவள்.. ஆனால் இப்போது அவனோடு பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை அவளிடம்.. வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்திருக்கிறாள் என்று புரிந்தது ஜெகநாதனுக்கும்..

அவள் நிலை கண்டு அவன் மனதும் இப்போது ரணம் கொண்டது.. ஒரு காலத்தில் தன் மனைவியாய் இருந்தவள் தானே.. தன் குழந்தைக்கு தாயாயிற்றே..

"தேவையாடி உனக்கு இதெல்லாம்?" என்று பல்லை கடித்துக் கொண்டு ஜெகந்நாதன் கேட்க இன்னும் சத்தமாய் கதறி அழுதாளே தவிர அப்போதும் எதுவும் சொல்லவில்லை..

அப்படியே அவன் கையில் மயங்கி இருந்தாள் பூமா..

அப்படியே அவளை கட்டிலில் கிடத்தினான் ஜெகநாதன்.. அவளைப் பார்க்கும்போது அவள் தனக்கும் சீதாவுக்கும் செய்த துரோகத்தினால் ஏற்பட்ட கோபம் ஆத்திரம் வெறுப்பு என்று அவளை கொன்றுவிடும் அளவுக்கு உணர்வுகள் அவனை ஆட்டி படைத்தாலும் இன்னொரு பக்கம் அவள் நிலை கண்டு பரிதாபம் வேதனை வலி என இருதலைக்கொள்ளி எறும்பாய் அவன் மனதை ஊசலாட வைத்திருந்தது அவள் நிலைமை.. செய்வதறியாமல் பரிதவித்து போனான் அவன்..

அவளின் இந்த நிலைமைக்கு அவளே தான் காரணம் என்றாலும் ஒரு காலத்தில் தன் உயிரோடு கலந்தவள் ஆயிற்றே.. அவளை எப்படி அப்படியே விட்டு வர முடியும்..? இனி சீதா தான் தன் வாழ்க்கை என்று ஜெகந்நாதன் திடமாக இருந்தாலும் அதற்காக ஒரு மனிதாபமான அடிப்படையில் கூட பூமாவுக்கு ஆதரவாக இருக்க முடியாத அளவுக்கு அவன் ஒன்னும் கொடூரமானவன் இல்லையே..

அவள் தலையை மெல்ல வருடிவிட்டவன் "எப்படி போய் இருக்க வேண்டிய வாழ்க்கை.. இப்படி ஆக்கி வச்சிருக்கிறியேடி பைத்தியக்காரி.." என்ற தழுதழுத்த குரலில் கேட்டுக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து நின்றாள் சீதா..

அப்போது அங்கே இருந்த செவிலியர் "சார் ஒரு விஷயம்.." என்று சொல்ல புருவம் சுருக்கி என்னவென்று நிமிர்ந்து பார்த்தான் அவன்..

"இவங்களுக்கு ஒரு குழந்தை இருந்து இருக்கு போல.. நடுவில நேத்து மதியம் எல்லாம் தூக்கத்துல ரியா ரியான்னு சொல்லி அனத்திக்கிட்டே இருந்தாங்க.."

அதைக் கேட்டு இருவரும் பதறிப் போனார்கள் "என்ன குழந்தையா? " என்று இருவரும் ஒரே குரலில் அதிர்ந்து கேட்க

"ஆமா சார்.. நடுவுல நடுவுல அந்த ராட்சசன் என் குழந்தையை கொன்னுடுவான்.. ரியாவை கொன்னுடுவான்.. அவளை காப்பாத்துங்க.. அவளை காப்பாத்துங்கன்னு ரொம்ப கத்திக்கிட்டே இருந்தாங்க.." என்று அந்த செவிலி சொன்னதை கேட்டு இருவரும் ஸ்தம்பித்து போனார்கள்..

நீர் உறையும்..
 
Top Bottom