• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

23. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 23

கோலாகலமாக நடந்தது தமிழ் நவ்யாவின் திருமண நிகழ்வுகள்.. அன்று காலை மெஹந்தி நிகழ்வு முடிந்திருக்க நவ்யாவின் இரு கைகளிலும் தமிழ் மருதாணி சிவப்பாய் மாறி இருந்தான்.. அவள் கைகளில் மருதாணி நன்கு சிவந்திருக்க சுனிதா சூர்யா அரசி மூவரும் அதை வைத்து அவளை ஓட்டு ஓட்டென்று ஓட்டி விட்டார்கள்..

"நிஜத்திலேயே தமிழ் மாமா ரொம்ப சிவப்பா தான் இருக்காரு.. அந்த சிவப்பு போதாதுன்னு அவர் பெயரை இப்படி செவக்க வச்சிருக்கியேடி.." என்று சூர்யா கேலி பேச "ஏய் போடி.." என்று அழகாய் வெட்கப்பட்டாள் நவ்யா..

ஒவ்வொரு நொடியும் அவளின் வெக்கத்தின் அழகை தள்ளி நின்று ரசித்து கொண்டு இருந்தான் அவளவன்..

சங்கீத் நிகழ்ச்சியில் அரசி சுனிதா சூர்யா மட்டுமின்றி ஏன் குட்டிப் பையன் கார்த்தி கூட குதித்து குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான்.. மூவருமே மாறி மாறி நவ்யாவை விட்டு விலகாமல் வேறு யாரையும் அவளிடம் அவர்கள் இல்லாத நேரத்தில் அண்ட விடாமல் பத்திரமாய் பார்த்துக் கொண்டனர்..

அப்படியே யாராவது வந்து ஏதேனும் வம்பு பேசி அவளை குடைய ஆரம்பித்தால் அதற்கு தகுந்த பதில்களை அவர்களே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என கொடுத்து அனுப்பினர்..

சிந்துவும் ரியாவும் ஒரு மூலையில் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த நிகழ்வுகளில் மகிழ்வுடன் கலந்து கொள்ளவும் முடியாமல் அங்கிருந்து வெளியேறி செல்லவும் முடியாமல் நெருப்பு மேல் நிற்பது போல் நின்று அனல் கக்கும் விழிகளோடு அங்கு நடப்பதை பார்த்து உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பமே இல்லை. ஆனால் ஜெகநாதனும் பூமாவும் அந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அதன் பிறகு அவர்கள் இருவரையும் விட்டு தாங்கள் விலகி சென்று விடுவோம் என்று சொல்ல வேறு வழி இன்றி ஒரு வித வெறுப்போடு அங்கே வந்து நின்று கொண்டு இருந்தார்கள்..

ராதை மனதில்
ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க..

இந்த பாடல் அந்த வரவேற்பறையே அதிரும்படி ஒலித்துக் கொண்டிருக்க சுனிதாவும் அரசியும் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தார்கள்..

நவ்யா ஒரு பக்கம் அமர்ந்து அவர்கள் ஆடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க சட்டென சூர்யாவும் அரசியும் நவ்யாவை கைபிடித்து நடுவில் இழுத்து வந்து தங்களோடு ஆட வைத்தார்கள்..

சிறிது நேரம் சுனிதாவும் அரசியும் மாறி மாறி அவள் கை பிடித்து இழுத்து ஆட வைக்க அடுத்த சில நிமிடங்களில் நவ்யா
தன்னால் அவர்களோடு ஆனந்தமாய் ஆடத் தொடங்கினாள்..

அவளைக் கண்ட சூர்யாவின் கண்கள் கலங்கிப் போயின.. அந்த விடுதிக்கு வந்த நாளாய் சூரியா அவளை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் கண்களில் எப்போதும் ஒரு வித வெறுமையை தவிர வேறு எந்த உணர்வையும் அவள் கண்டதில்லை.. சிரித்தாலும் அந்த சிரிப்பு அவள் கண்களை எட்டியதே இல்லை.. வெறும் உயிர் இல்லாத ஒரு விரக்தி சிரிப்பாய் மட்டுமே அது இருக்கும்.. ஆனால் இன்று அவள் ஆழ் இதயத்தில் இருந்து மலர்ந்து சிரித்த படி ஆடிக்கொண்டிருந்த அந்த காட்சியில் சூர்யா நெகழ்ந்து போனாள். ஒரு நொடி தன் ஆட்டத்தை நிறுத்திவிட்டு அந்த அபூர்வச்சிரிப்பை தன்னை மறந்து ரசித்துப் பார்த்திருந்தாள்..

சூர்யாவுக்கே இந்த நிலை என்றால் தமிழைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? தன்னவளின் மலர்ச்சி கூடிய அந்த முகத்தை அவன் மனதில் அப்படியே சித்திரப்படமாய் பதித்துக் கொண்டான்.. முதலில் அவள் ஆட வரும்போது சுனிதா அவள் கையைப் பிடித்து ஆட வைக்க முயன்ற போது வேண்டாம் என்று அவள் சிணுங்கிய அழகான சிணுங்கலும்.. அதன் பிறகு அவள் ஆட வைத்த போது தலையை வேறு பக்கமாய் குனிந்த படி ஐயோ என்று அவள் பட்ட வெட்க அவஸ்தையும்.. சிறிது நேரம் தயங்கி தயங்கி ஆடிக்கொண்டிருந்தவள் மெதுவாய் அந்த ஆட்டத்தில் கலந்து தானும் சிறு அடிகளை எடுத்து வைத்து ஆட தொடங்கிய சிறு குதூகலமும் அவர்களோடு கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து வளைவு நெளிவுகளுடன் தன்னை மறந்து அழகாக அவள் ஆடிய நடனமும் அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் திரளும் என ஒவ்வொன்றும் அவனுக்குள் அழியாத சிற்பமாய் செதுக்கப்பட்டு விட அந்த ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்றார் போல் அவன் முக பாவங்களும் பார்வையும் மாறிக்கொண்டே இருந்தன..

விழிகள் இரண்டிலும் ரசனை பிரதிபலித்திருக்க தன்னவளை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாலேயே பருகி உயிருக்குள் நிறைத்து கொண்டிருந்தான் அவளின் அத்தை மகன்..

இப்படி அவன் மயிலவளின் ஆட்டத்தில் மெய் மறந்திருந்த நேரம் அவன் கையை பிடித்து சுனிதா நடுவில் இழுத்து வர அதே நேரம் அரசி நவ்யாவை அவன் புறம் தள்ளி விட்டாள். தன்னவனின் மார்பில் மோதி நின்றாள் பாவை..

நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவளின் விழிகளோ அதற்குள்ளேயே மொத்தமாய் சிறைப் பட்டு போனது..
அதே நேரம் அங்கே ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிந்து வேறு ஒரு பாடல் தொடங்கியது..

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்

காதல் முகம் கண்டுக்கொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுக்கொண்டேன்

என்று பாடல் இசைக்க விழிகள் இரண்டும் ஒன்றில் ஒன்று கலந்து இருக்க அவன் கையணைப்பில் அவள் இருந்தாலும் மேனிகள் ரெண்டும் பட்டும் படாமல் இசைக்கேற்றவாறு ஆடிக்கொண்டும் அடுத்தவரை ஆட்டுவித்துக் கொண்டும் இருந்தன..

சுற்றிச் சுற்றி நடனம் ஆடிக் கொண்டிருந்த போதும் விழிகள் மட்டும் மற்றவரில் உறைந்து இருந்த பார்வையை விலக்கவே இல்லை.. ஒருவர் கண்கள் மற்றவரின் கண்களோடு பொதிந்து கொண்டது போல் அவற்றுக்குள் இருந்த மின் தொடர்பை அறுக்க முடியாமல் மௌனமாய் அடுத்தவருக்கு புரியாத அவர்கள் இருவருக்கும் மட்டுமான பல காதல் ரகசியங்களை கடத்திக் கொண்டிருந்தன..

பாடல் முடிந்ததும் அவள் கையை பிடித்த தமிழ் மோதிர விரலில் ஒரு வைர மோதிரத்தை அணிவித்தவன் குனிந்து அதன் மீது முத்தமிட நாணத்தில் சிலிர்த்து போனாள் பாவை அவள்..

கண்கள் நிறைந்து போனது நவ்யாவுக்கு.. உணர்ச்சி குவியலாய் மாறி போயிருந்தாள் அவள்.. உடலில் ஒவ்வொரு அணுவும் அவன் இட்ட அந்த முத்தத்தில் அவன் காதலின் அளவீட்டை மொத்தமாய் உணர்ந்திருந்தது..

எவ்வளவு அன்பைத்தான் வழங்குவான் இவன்.. இத்தனை அன்பை என்னால் தாள முடியவில்லையே.. இந்தப் பேரன்பை சுமக்க முடியாமல் இப்படியே என் உயிர் உடலை விட்டு நீங்கிவிடும் போலிருக்கிறதே..

அப்படி நடந்தாலும் அவளுக்கு மகிழ்ச்சிதான்.. வாழ்க்கையில் இதை போன்ற ஒரு அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காதோ என்று எண்ணி இருந்தவள் அதை அனுபவித்து விட்டாள் அவனிடம் முழுமையாக.. இந்த நிமிடம் இறந்து போனால் கூட அவளுக்கு கவலை இல்லை.. தான் வாழ்ந்த வாழ்வில் அந்த நொடி எல்லாவற்றையும் பெற்று விட்டதாகவே உணர்ந்தாள் ..

அங்கிருந்த மௌனத்தை கலைத்தாள் சுனிதா..

"மோதிரம் போட்டா மட்டும் போதுமா? கைக்கு எட்டற தூரத்துல பொண்ணு இருக்கா.. தமிழ்.. அதான் நல்லா பாடுவ இல்ல.. ரொமான்டிக்கா ஒரு சாங் பாடுறது.." என்று கலாய்க்கும் விதமாக கூற

அவள் விழிகளின் பாஷையிலேயே ஊறி கிடந்தவன் தன்னை மறந்து பாடலை பாடத் தொடங்கினான்..

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மணமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிாிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

பேச வார்த்தைகள் இல்லை நவ்யாவிடம்.. மொத்தமாய் தன்னவனின் பாடலில் தொலைந்திருந்தாள். உளமாற அனுபவித்து உருகி உருகி அவன் பாடிய பாடலின் வார்த்தைகளில் மொத்தமாய் உணர்ச்சி வசப்பட்டிருந்தவள் அப்படியே அவன் மார்பில் நெற்றி சாய்த்து கரைந்து நிற்க அவள் தலையை மெல்ல வருடியவன் "ஹேய்.. நவி.. அழறியா? ஹேய்.. ஏன்டா..?" என்று அப்போதும் அவள் அழுகையை தாங்க முடியாமல் படபடத்தவனின் அன்பில் திக்குமுக்காடி போனாள் பெண்ணவள்.

ஆனால் இந்த மகிழ்ச்சி எல்லாம் சில மணித்துளிகள் தான்.. அந்த மகிழ்ச்சியான சூழலை பாழாக்கவென்றே அங்கு வந்து சேர்ந்திருந்தான் தமிழழகன்..

நேரே வந்து தமிழ்செல்வனின் முன்னால் நின்றவன் "அண்ணா.. என்ன நடக்குது இங்க..? என்ன பைத்தியக்காரத்தனம் இது.. போயும் போயும் இந்த வி*****ரி தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க கிடைச்சாளா? ஏற்கனவே ஒரு பொம்பள ரௌடியை கல்யாணம் பண்ணிக்க போறீங்களேன்னு வெறுப்புல இருந்தேன்.. இப்ப அவளே பரவாயில்லைன்கிற மாதிரி இன்னொருத்தியை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட இந்த குடும்பத்தை பத்தி கவலை இல்லையா? இவளால இந்த குடும்பம் எவ்வளவு அவமானப்படும்..? இதெல்லாம் உங்க மூளைக்கு உறைக்கவே இல்லையா?"

அவனுக்கு கண்மண் தெரியாமல் கோபம் இருந்தது.. வாய்க்கு வந்ததை பேசினான்.. தன் அண்ணனிடம் பேசுகிறோம் என்ற நினைப்பு கூட இல்லாமல் அவன் பேசியிருந்த பேச்சில் உடைந்து நொறுங்கிப் போனாள் நவ்யா..

ஆனால் அடுத்த நொடி "வாயை மூடு அழகா..!!" என்று கர்ஜித்தபடி அவனை நோக்கி தமிழ் கையை ஓங்கி இருக்க அவன் கன்னத்தில் இடியாய் இறங்கி இருந்தது ஒரு அறை.. அடித்தது தமிழ் அல்ல.. அவனுடைய அன்னை தெய்வானை தான்..

அவனை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு ரௌத்திரம் பொங்க நின்றிருந்தவரை நம்ப முடியாமல் பார்த்தான் அழகன்.‌.

"என்னம்மா..? என்னை அடிக்கிறீங்க?" என்று அவன் கேட்டு முடிக்கும் முன் இன்னொரு அறை விழுந்தது அடுத்த கன்னத்தில்..

"அம்மா..!!" என்று அவன் ஆரம்பிக்கும் முன்னரே

"இங்க பாரு.. அவ இந்த வீட்டு பொண்ணு.. என் தம்பி மக.. அவளைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை தப்பா வந்துச்சு.. தொலைச்சிடுவேன் ராஸ்கல்.." என்றாள்.

அதற்குள் அழகனுக்கு ஒத்து ஊதுவது போல் ரியா பேசத் தொடங்கினாள்..

"அத்தான் கேட்கிறதுல என்ன தப்பு அத்தை.. அவர் சொல்றது உண்மைதானே? அவர் ஒன்னும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலையே.. இவ ஒரு கேடுகெட்ட.." என்று அவள் முடிக்கும் முன் அவள் கன்னத்திலும் அறை விழுந்தது.. ஆனால் இந்த முறை அடித்தது தெய்வானை அல்ல பூமா..

"உன்னை இங்க எதுவும் பேசக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? இப்ப எதுக்குடி வாயைத் தொறந்த? அவளும் என் பொண்ணு தான்.. அவளை பத்தி தப்பா பேசினே உன்னை கொன்னே போடுவேன்.." என்றாள்..

"ஓஹ்.. இந்த வீட்ல இருக்கற எல்லாரும் இந்த மகாராணிக்கு சப்போர்ட்டா? அப்படியே பெரிய சுத்தமானவ இவ.. 18 வயசுக்குள்ள எந்த சாக்கடைலயோ விழுந்து என்னென்ன வேலையோ பண்ணிட்டு வந்து இருக்கா.. நல்லா அழகா இருக்கோம்கற திமிர்ல காசு சம்பாதிக்கிறதுக்காக இந்த மாதிரி ஒரு கேவலமான வேலையை பண்றவளை இந்த வீட்டு மருமகளா ஒரு நாளும் வர விடமாட்டேன்.."

அதை கேட்டு தலை குனிந்து நின்று இருந்தாளா நவ்யா.. ஆனால் அவள் உள்ளே நெருப்புக் கொழுந்து ஒன்று கனன்றுக் கொண்டு இருந்தது.. கைகள் இரண்டையும் இறுக்க மூடி இருந்தவளின் மூச்சுக்காற்று கோபத்தில் அனலாய் வெளிவந்து கொண்டிருந்தது..

அவள் தன் கோபத்தை எல்லாம் அடக்கி வைத்து தமிழுக்காக பல்லை கடித்தபடி நின்று இருக்க அவன் முன்னே வந்து நின்றாள் சூர்யா..

முதல் முதலாக அவனைப் பற்றி சுனிதாவும் அரசியும் மருத்துவமனையில் சொன்னபோது அவனைப் பார்த்து விட மாட்டோமா என்று ஏக்கம் கொண்டவள் தான்.. இப்போது எரிப்பது போல் கனல் பார்வை வீசிக் கொண்டிருந்தாள் அவனை நோக்கி..

நீர் உறையும்..
 
Top Bottom