அனைவருக்கும் அன்பு வணக்கம்!
போனவருடம் நவம்பரில் ஆரம்பித்த விவாத மேடை இது. தவிர்க்க முடியாத காரணங்களினால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இழுத்துவிட்டது. இனி இப்படி நடக்காது என்கிற நம்பிக்கையோடு மீண்டும் வந்திருக்கிறேன்.
முதலில் எங்களுடைய புது முயற்சிக்கு அமோக ஆதரவினைத் தந்து, மிக ஆழமாகவும் தெளிவாகவும் சிந்திக்கும் வகையிலும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.
இன்றைய நவீன சூழலில், இளம் பெண்களின் பார்வையில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை என்பது ஒரே நேர்கோட்டில் ஊசலாடுவதில்லை. மாறாக, அது தனித்துவத்தின் வெளிப்பாடாகவும், அதே சமயம் சவால்கள் நிறைந்த சமநிலைப் போராட்டமாகவும் மாறிவருகிறது.
இன்றைய தலைமுறைப் பெண்கள் தங்களின் கல்வி, சுயசார்பு மற்றும் லட்சியங்களில் உறுதியாக இருக்கிறார்கள்.
துணையைத் தன் உரிமையாளராகப் பார்ப்பதை விட, தன் லட்சியங்களுக்குத் தோள் கொடுக்கும் ஒரு தோழனாகவே எதிர்பார்க்கிறார்கள்.
தனிப்பட்ட விருப்பங்களுக்கும், தொழில்முறை இலக்குகளுக்கும் மதிப்பளிக்கும் போது, திருமணம் என்பது சுமையாக அல்லாமல் மனநிறைவைத் தரும் பாதுகாப்பான ஒரு தளமாக மாறுகிறது.
மறுபுறம் சமூகத்தின் மறைமுகமான எதிர்பார்ப்புகளும் பழைய மரபுகளும் சில பெண்களுக்கு உளவியல் அழுத்தங்களையும், தடையையும் ஏற்படுத்துகின்றன.
அலுவலக வேலைகள் மற்றும் பொருளாதாரச் சுமை ஒருபுறம் இருக்க, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் பிரதான பொறுப்பும் பெண்ணின் மீது மட்டுமே சுமத்தப்படும்போது, அது இரட்டைச் சுமையாகி அங்கு தனித்துவம் நசுக்கப்படுகிறது.
இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற குடும்ப மற்றும் சமூக வரம்புகளுக்குள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கனவுகள் சுருக்கப்பட்டு, அவள் தன் அடையாளத்தை இழக்கும் அபாயம் இன்றும் நிலவுகிறது.
குடும்ப அமைதி மற்றும் உறவுத் தொடர்ச்சிக்காகப் பெண்கள் தங்களின் சுய விருப்பங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, திருமணம் ஒரு சுமையாக மாறுகிறது.
இன்றைய இளம்பெண்கள் திருமணத்தை முற்றிலுமாக நிராகரிக்கவும் இல்லை; கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மாறாகச் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத கூட்டு வாழ்க்கை என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகும் தன்னுடைய கனவுகள், விருப்பங்கள், தொழில், நட்பு, தனிப்பட்ட முடிவுகள் என தனது தனித்துவத்தைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள முடிகிறதா என்பதில்தான் அந்தத் திருமணத்தின் அழகு இருக்கிறது.
நீ என் வாழ்க்கையில் வந்துவிட்டாய். இனி உனக்கென்று தனி வாழ்க்கை இல்லை என்று சொல்லும் உறவு நிச்சயம் சுமையாக மாறும்.
ஆனால், நாம் இருவரும் இணைந்து வாழ்வோம். உன் கனவுகளுக்கும் எனது கனவுகளுக்கும் சமமான இடம் இருக்கும் என்று சொல்லும் உறவு நிச்சயம் சுகமானதாக மாறும்.
திருமணத்தில் விட்டுக்கொடுத்தல் தேவைதான். அந்த விட்டுக்கொடுத்தல் ஒருவரால் மட்டும் தொடர்ந்து செய்யப்படும்போது அது தியாகமாக அல்லாமல் அழுத்தமாக மாறிவிடுகிறது.
அதேபோல், சுதந்திரம் தேவைதான். ஆனால், அந்தச் சுதந்திரம் ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் மதிக்காத நிலைக்குச் செல்லும்போது உறவில் விரிசல் ஏற்படுகிறது.
எனவே, இன்றைய இளம் பெண்கள் திருமணத்தையே நிராகரிக்கிறார்கள் என்று கூற முடியாது. ஆனால், அவர்கள் திருமணத்தில் தங்களுடைய தனித்துவம், சுதந்திரம், கனவுகள் மற்றும் குரல் ஆகியவற்றை இழக்க விரும்பவில்லை என்பதே உண்மை.
அதேபோல், குடும்ப வாழ்க்கை என்பது பெண் மட்டும் சுமக்க வேண்டிய பொறுப்பு அல்ல. அது கணவன்–மனைவி இருவரும் இணைந்து உருவாக்க வேண்டிய ஒரு வாழ்க்கை.
அன்பு இருக்கும் இடத்தில் அதிகாரம் குறைய வேண்டும்.
புரிதல் இருக்கும் இடத்தில் அழுத்தம் குறைய வேண்டும்.
மரியாதை இருக்கும் இடத்தில் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
சமத்துவம் இருக்கும் இடத்தில் குடும்ப வாழ்க்கை மனநிறைவாக மாறும்.
திருமணம் சுமையா, சுகமான உறவா என்கிற கேள்விக்கான பதில் திருமணத்தில் இல்லை.
நமக்கான துணை எப்படி அமைகிறது என்பதில் இருக்கிறது. நம் துணையை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் இருக்கிறது.
தனித்துவத்தை அழிக்காமல் துணையாக இருப்பதும், சுதந்திரத்தைப் பறிக்காமல் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதும், ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பதைவிட புரிந்துகொள்வதும் நடந்தால் திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அல்ல;
அவளுடைய கனவுகளோடு இணைந்து எழுதப்படும் இன்னொரு அழகான அத்தியாயம்.
அந்த வகையில் தம் கருத்துகளை நேர்த்தியாகவும், நிதானமாகவும், கொடுக்கப்பட்ட விவாத வட்டத்துக்குள் நின்றும் பதிவிட்டவர்கள் என்கிற அடிப்படையில்
- காமாட்சி நரேந்திரன்
- Ananthi.C
- Akalya
ஆகிய மூவரையும் பாராட்டி, ஒவ்வொருவருக்கும் பரிசாக இந்திய ரூபாய் 500 பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்படுகிறது. (விரைவில் நமது புத்தகங்களை வாங்குவதற்கான ஒரு தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் . அப்போது இந்தப் பணத்திற்குப் பெறுமதியான, உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை நீங்களே தெரிவுசெய்து வாங்கிக்கொள்ளலாம்.)
மீண்டுமொரு விவாத மேடையோடு சந்திக்கும் வரையில்,
நட்புடன் நிதனிபிரபு