• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 1

வரம் 1
மதுரை மாவட்டம், அழகர் நகரில் இருக்கும் மீனாட்சி தாய், சேய் மகப்பேறு மருத்துவமனை அந்தக் காலை வேளையில் அதற்குண்டான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

கர்ப்பகால பரிசோதனைக்காக வந்திருந்த பெண்கள், மகப்பேற்று வலிக்காக பிரவச அறைக்கு முன்னர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த இளம் தாய்மார்கள், மகவு பிறந்ததை உற்றார் உறவினர்களுக்கு ஆனந்தமாக சொல்லிக்கொண்டிருந்த இளம் தந்தையர், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வந்தவர்கள், சிகிச்சைக்காக வந்திருந்த உடல்நலம் சரியில்லாத குழந்தைகள் என ஆள்நடமாட்டம் அதிகம் இருந்த அந்த மருத்துமனை வளாகத்தின் ஒரு மூலையில் புடவை நுனியில் முகத்தை முக்கால்வாசி மூடிய நிலையில் அமர்ந்திருந்தாள் இளம்பெண்ணொருத்தி.

முகம் முழுக்க பயம் அப்பிக்கிடந்தது. தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ என்கிற நினைப்பில் நொடிக்கு நொடி தனக்குள் குறுகிக்கொண்டிருந்தாள் அந்தப் பேதைப் பெண்.

“போகலாம் துவாரகா.” என்றவண்ணம் அவள் தோளில் ஒரு கரம் பதிய பதறிப்போய் எழுந்தாள் அவள்.

“எதுக்கு இத்தனை பயப்படுற. நாம ஒன்னும் ஊர் உலகத்தில் நடக்காத எதையும் பண்ணல. நம்மைச் சுத்தி இருக்கிறவங்க நம்ம மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிட்டா நாம எதுக்காக தப்பு பண்ணப் போறோம்.” எரிச்சலாகச் சொன்னான் வந்தவன். அந்த எரிச்சல், இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை அவளிடம் பேசி இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

அவனை நேர்பார்வை பார்த்தவள் அவன் வலது கரத்தை எடுத்து தன் வயிற்றின் மீது வைத்தபடி, “சின்னஞ்சிறு உயிர் நவநீ மச்சான். என்னை நம்பி என் வயித்துக்குள்ள வந்திருக்கு. அது உருவான இடத்தையே அதுக்கு சமாதியா மாத்தணுமான்னு வேதனையா இருக்கு.” அழுதுவிடுபவளைப் போல் சொன்னாள்.

குழந்தையுடனான பந்தம் ஆணுக்கு உணர்வு சம்பந்தப்பட்டது, பெண்ணுக்கோ அது உடல், உணர்வு இரண்டும் சம்பந்தப்பட்டது. தன்னிடம் அடைக்கலம் தேடி வரும் உயிரை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றவேண்டும் என்பது தமிழ் மரபு. அந்த மரபில் பிறந்த தமிழ்ப்பெண்ணான துவாரகாவிற்கு தன்னை மட்டுமே நம்பி தன்னுள் வளர்ந்து கொண்டிருக்கும் பிஞ்சு உயிரைக் கொல்ல அத்தனை சுலபத்தில் மனம் ஒப்பவில்லை.

அவள் பேச்சைக் கேட்ட நவநீதன் சில கணங்கள் அவள் வயிற்றையே உற்றுப் பார்த்தான். பின்பு மனதைக் கல்லாக்கிக்கொண்டு, “பிள்ளை உண்டான விஷயம் உன் புருஷனுக்குத் தெரிய வந்தா என்ன ஆகும் னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” என்று பயமுறுத்த, அது துவாரகாவிடம் நன்றாகவே வேலை செய்தது.

“இல்ல மச்சான், அந்த முரடனுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. வர நாலாவது நாள் என்னைத் தேடி நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கார். அதுக்குள்ள எப்படியாவது இதை சரிபண்ணிடனும்.” உதறும் உடம்புடன் சொன்னாள். கணவனைப் பற்றிய பயம் வந்ததும் குழந்தையைக் கொல்லப் போகும் குற்றவுணர்வு தன்னால் பின் சென்றது அவளுக்கு.

பயத்தில் நடுங்கத் துவங்கிய அவள் கரத்தை எடுத்து தன் புஜத்தைப் பிடித்துக்கொள்ள வைத்த நவநீதன், “பயம் வந்தா ஆதரவுக்காக என்னைப் பிடிச்சுக்கோ. இனி நான் எப்பவும் உனக்காக உன்னோடவே இருப்பேன்.” ஆளுமையோடு சேர்த்து அதிகாரமாய் சொன்னான்.

அவன் மனதில் தீர்க்கமான முடிவு ஒன்று உதித்து விட்டிருந்ததை அறியாத துவாரகா, தான் இருக்கும் ஒளியில்லாத பாழுங்கிணற்றின் இருளில் இருந்து தன்னைக் காப்பாற்ற வந்த ஆகாய சூரியனாக தன் மாமன் மகனைப் பார்த்தாள்.

பயம், குற்றவுணர்வு, தவிப்பு என பலவிதமான உணர்வுக் கலவையுடன் இருந்தவளைத் தன் மீது சாய்த்து ஆறுதல் சொல்வது போல் முதுகைத் தடவிக்கொடுத்த நவநீதன், சில நொடிகள் தாமதித்து கைத்தாங்கலாய் அவளை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றான்.

இருவரையும் முறைத்தவண்ணம் வரவேற்றார் ஒரு இளம் பெண்மருத்துவர். “இங்க பார் நவநீதா, குழந்தையால் அம்மாவோட உயிருக்கு ஆபத்துங்கிற கஷ்டமான சூழ்நிலையில் கூட கருவைக் கலைக்க எனக்கு மனசு வராது. ஆனா கடந்தகாலத்தில் உனக்கு நான் பட்டு இருக்கும் நன்றிக்கடனைத் தீர்க்கிறதுக்காக இன்னைக்கு இப்படியொரு மகாபாதகத்தைப் பண்றேன்.

இன்னையோட உனக்கும் எனக்கும் நடுவில் இருக்கும் எல்லா சம்பந்தமும் முடிஞ்சிடுச்சு. இனிமேல் என் முகத்தில் கூட முழிக்காத.” என்று கடுமையாகச் சாடிவிட்டு கையோடு துவாரகாவை அழைத்துச் சென்றார்.

“மச்சானைத் திட்டாதீங்க டாக்டரம்மா. அவுக பாவம்.” பாவம் போல் சொன்னாள் துவாரகா.

“ஆமா, கல்யாணம் ஆன பொண்ணுன்னு கூடப் பார்க்காம தவறான உறவில் இருந்து, அதனால் உருவான குழந்தையைக் கலைக்க இங்க கூட்டிட்டு வந்திருக்கான் இல்ல. அவன் ரொம்பப் பாவம் தான்.

அவனைச் சொல்லி என்ன பண்றது. உன்னை மாதிரி பொண்ணுங்களைச் சொல்லணும். புருஷன் காட்டுமிராண்டியா இருந்தா அவனை விட்டு விலகி வரணும். அதுக்கு தைரியம் இல்லாம, புருஷனைப் பழிவாங்குறேன்னு வெளியே ஒரு உறவைத் தேடி அலைஞ்சா இப்படித்தான் ஏமாந்து நிற்க வேண்டியது இருக்கும்.

ஆம்பிளை அவன் மேல படும் கறையை வேட்டியை உதறிட்டு கட்டுற மாதிரி மாத்திட்டு போய்கிட்டே இருப்பான். பொண்ணுங்க தான் மானம், மரியாதை, பெத்தவங்க, சொந்தக்காரங்க ஆதரவு, எதிர்காலம் எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கணும். இனியாச்சும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ.” என்றபடி கருகலைப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டார்.

பயத்தில் வெளுத்த முகத்துடன் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்த துவாரகாவிற்கு மருத்துவர் சொன்ன பாதி வார்த்தைகள் தான் காதில் விழுந்தது. முழுமையாகக் கேட்டிருந்தால் வரப்போகும் பல கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் விதி வலியதாயிற்றே.

அந்த அறைக்கு வெளியே தன்னால் மிகச் சுலபமாக கண்டுபிடிக்கும் வகையில் மறைந்து நின்று தன்னைப் புகைப்படம் எடுக்கும் மனிதரைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான் நவநீத கிருஷ்ணன். அவ்வளவு நேரம் அவன் காத்திருந்ததும் அதற்காகத் தான்.

தன் திட்டம் யாவும் மிகச்சரியாக நடப்பதைக் கண்டு முழுதாக சந்தோஷப்பட முடியவில்லை அவனால். இனி தான் பெரும்பெரும் புயல்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பது புரிந்தது. முதல் புயலே துவாரகாவாகத் தான் இருப்பாள் என்பதையும் அவன் அறிவான்.

சில மணி நேரங்களில் துவாரகாவின் வயிற்றில் இருந்த கருவைக் கொன்று அவளை வெளியே அனுப்பி வைத்தார் மருத்துவர். ஒருநாள் அவளை மருத்துவமனையில் வைத்து கண்காணித்துவிட்டு அடுத்த நாள் காலை அழைத்துச் செல்லுமாறு சொல்ல, சரியென்று தலையாட்டிக்கொண்டான் நவநீதன்.

“என்னை மன்னிச்சிடு டா கண்ணா. உனக்கு உருவம் கிடைக்கும் முன்னாடி உன்னைக் கொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு. பிறக்காத உனக்காகப் பார்த்தா, ஏற்கனவே பிறந்து வளர்ந்து இத்தனை வருஷமா பெருசா எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத உன்னோட அம்மாவுக்கு அவ சாகுற வரைக்கும் சந்தோஷம் பெயரளவில் கூட கிடைக்காது.

உன்னைக் கடவுளுக்கு தத்து கொடுத்ததா நினைச்சு தான் நான் என் மனசை கொஞ்சமாச்சும் ஆறுதல் படுத்தி இருக்கேன். இந்த உலகத்தில் பிறக்கணும், சந்தோஷமா வாழனும், எல்லோரும் உன்னைப் பார்த்து பொறாமைப்படும் அளவு பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கணும் னு உனக்குள்ள ஏராளமான ஆசைகள் இருந்திருக்கலாம். அது எல்லாம் என்னோட சுயநலத்தால் அழிக்கப்பட்டுடுச்சு.

நிறைவேறாத ஆசைகளினால் உண்டான கோபம், ஆற்றாமைன்னு எதுவா இருந்தாலும் அதை என்மேல் மட்டும் காட்டுடா. உன் அம்மா பாவம். என்னைக்காச்சும் ஒருநாள் உனக்கு என்னை மன்னிக்க தோணினா எனக்கு மகனா மறுபடியும் உன் அம்மா வயித்தில் உருவாகு.” என உருவம் இல்லாத உயிரிடம் மனதார மன்னிப்பு வேண்டினான் நவநீதன்.

இரவு உணவை துவாரகாவிற்கு நவநீதன் ஊட்டிவிட்டுக் கொண்டிருக்க, “அம்மா என் மேல் கோபப்படுமா மச்சான்.” விசும்பலோடு பேச்சை ஆரம்பித்தாள்.

அடுத்த வாய் உணவை எடுத்தவன் கைகள் ஒருகணம் நின்றது. மாதங்கி அத்தை என தனக்குள் சொல்லிக்கொண்டவன் முன்பை விட அதிக அளவு உணவை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.

வாய் நிறைய உணவை வைத்திருந்தாலும், “இன்னைக்கு நான் பண்ணதை அன்னைக்கு என் அம்மா பண்ணி இருந்தா அவங்க நல்லா இருந்திருப்பாங்க தானே. ஏன் மச்சான் அம்மா அப்படிப் பண்ணல. அவங்க அவங்களோட சொந்த சந்தோஷத்தை விட என்னைத் தான் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா அவங்களுக்குப் பிறந்த நான் ஒரு முரடனுக்குப் பயந்து தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்கேன்.” விம்மலுடன் சொன்னாள்.

“அமைதியா சாப்பிட்டு தூங்குறியா?” என நவநீதன் குரலுயர்த்த, தன்னைப் போல் அமைதியானவள் அதன்பிறகு ஒரு வார்த்தை பேசவில்லை. துவாரகாவைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருந்தவனால் இந்த நேரத்தில் ஆறுதலை விட அதட்டல் தான் அவளிடம் அதிகம் வேலை செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு ஏற்ப செயல்பட்டான். எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் விளைவாக ஆழ்ந்த உறக்கத்திற்குள் துவாரகா நுழைய அதற்காகவே காத்திருந்தது போல் நண்பனுக்கு அழைத்து வீட்டு நிலவரத்தை விசாரித்தான் நவநீதன்.

“உன் அப்பா கண்ணப்பன் இரண்டு முறை எனக்குப் போன் பண்ணிட்டார். எதுவுமே தெரியாதுன்னு சாதிச்சுட்டேன். ஆனா மனுஷன் நம்பவே இல்லை. என்னை சந்தேகமா பார்த்துட்டு போனார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் துவாரகாவோட புருஷன் மாயவன் வந்து சேர்ந்தான். அவனுக்கும் விஷயம் போய் இருக்கும் போல.” என்று நிறுத்த, மாயவன் என்கிற பெயரைக் கேட்டதும் கை முஷ்டிகள் தன்னால் இறுகியது நவநீதனுக்கு.

சரியான சூழ்நிலை அமையும் போது, வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்கள் பார்த்து பரிதாபப்படும் அளவிற்கு அவனை மாற்றிவிடும் அளவு கொடூர கோபத்தில் இருந்தான்.

“நீ கொஞ்சம் சீக்கிரம் வரப்பாரு நவநீதா. தப்பு பண்ணனும் னு முடிவு பண்ணவன் ஊரில் இருந்து தள்ளியாவது போய் இருக்கலாம். ஆனா ரொம்ப தைரியமா உள்ளூருக்குள்ள இருக்கிற ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்க.

எவன் பார்த்து சொன்னானோ நீ அங்க தான் இருக்கன்னு வீட்டில் எல்லோருக்கும் தெரிய வந்திடுச்சு. நேரே அங்க வந்துட்டா அது அந்தப் பொண்ணுக்கு ரொம்ப அசிங்கமாயிடும்.” உண்மையான அக்கறையோடு சொன்னான் நண்பன் பரணி.

“தாத்தா அதுக்கு விட மாட்டார். ஒருவேளை அவரைத் தாண்டி யார் இங்க வந்தாலும், அவங்களை நான் பார்த்துக்கிறேன்.” தைரியமாகச் சொன்ன நவநீதன் அழைப்பைத் துண்டிக்கப் போக,

“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத நவநீ. உனக்கு அந்தப் பொண்ணை இவ்வளவு பிடிச்சிருந்தா அவளுக்கு கல்யாணம் ஆகும் முன்னாடியே உனக்குப் பேசி முடிச்சிருக்கலாமே. இப்படி இன்னொருத்தன் பொண்டாட்டியா இருக்கும் போது தேவை தானா?” தயக்கமாய் கேட்டான்.

கசப்பாக சிரித்த நவநீதன், “எனக்கு இப்ப தான் அவளை என்கூட வைச்சுக்கணும் னு தோணுது. என்ன செய்யுறது.” இலகுவாகக் கேட்டவன், “இனி என்னைக்கும் அவ எனக்கு மட்டும் தான். என்னைத் தாண்டி யாராலும் அவளை எதுவும் பண்ண முடியாது.” என நண்பனோடு சேர்த்து தனக்கும் சொல்லிக்கொண்டான். அவன் குரலில் அப்படி ஒரு தீர்க்கம் இருந்தது.
 
Top Bottom