• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 20

வரம் 20
நிகழ்காலத்தில், தற்கொலை முயற்சி செய்து உயிர்பிழைத்திருந்த துவாரகாவை வீட்டிற்கு அழைத்து வந்தான் நவநீதன்.

அஞ்சனை அவர்களைப் பார்த்ததும் முறுக்கிக்கொண்டு போக, “முறை தவறி வாழும் போது உறுத்தாத மனசாட்சி ஊருக்கு முன்னால அம்பலமானதும் உறுத்துச்சோ. இந்த முடிவை என்னைக்கோ எடுத்திருந்தா என் குலமாச்சு தப்பிச்சு இருக்கும்.” மனசாட்சியே இல்லாமல் பேசினார் காத்தவராயன்.

“இருபத்தியிரண்டு வருஷமா செஞ்ச தப்பை மறைச்சு வாழுற மனுஷங்களுக்கே மனசாட்சி உறுத்தாத போது, எங்களுக்கு எதுக்கு உறுத்தணும்.” என்றுவிட்டு துவாரகாவை தங்கள் ஓட்டு வீட்டிற்கு அழைத்து வந்தான் நவநீதன். ஒருநாளிலேயே முடிந்தவரை அந்த வீட்டை சரிசெய்திருந்தனர் பரணியும் அவன் அண்ணனும்.

“இன்னைக்கு நீங்க காப்பாத்திட்டீங்க சரி. நாளைக்கு விடியல் வராதா இல்ல ஒவ்வொரு நொடியும் நீங்க என்னைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்க முடியுமா?” நக்கலாகக் கேட்டவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவளுக்கான மாத்திரைகளை பிரித்தபடி, “உனக்கு ஒரு கதை சொல்லணுமே.” என்று ஆரம்பித்தவன் யாரோ ஒருவரின் கதையைச் சொல்வது போல அத்தை மாதங்கியின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

யார் கதை இது என்று அசுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த துவாரகா ஒருகட்டத்தில் அது தன் தாயின் கதை என்பதைக் கண்டுகொண்டு அழத்துவங்கினாள்.

“உன் அம்மா பார்க்காத ஏமாற்றமோ, கஷ்டமோ உனக்கு வரல. பெத்த அப்பாவே துரோகம் பண்ண பிறகும் கூட என்னோட அத்தை தப்பான முடிவுக்குப் போகல. கடவுள் கொடுத்த உயிரை மதிச்சு வாழ்ந்தாங்க. அவங்க பொண்ணு நீயும் அவங்களை மாதிரி இருப்பதை தான் அவங்க விரும்புவாங்க. நீ எந்தத் தப்பும் செய்யலன்னு உனக்கே தெரியும். அப்புறம் எதுக்காக சாகப் பார்க்கிற. வாழ்ந்து காட்டு.” என்றவன் சில கணங்கள் தாமதித்து, “உனக்கு என்னைப் பிடிக்கும் னு எனக்குத் தெரியும் துவாரகா.” என்க, முகத்தை திருப்பினாள் அவள்.

அதைப் பார்த்து சின்னதாய் புன்னகைத்தவன், “நடுவில் நடந்த எல்லாத்தையும் மறந்திடுவோமே. கொஞ்சம் கொஞ்சமா பழகுவோம். நமக்குள்ள கண்டிப்பா பிடித்தம் உண்டாகும்.” என்றான்.

“மறந்திடணுமா, எதை மச்சான் மறக்கச் சொல்றீங்க? எனக்கு நடந்த கல்யாணத்தையா, அவன் கூட நான் வாழ்ந்த வாழ்க்கையையா, அவன் எனக்கு பண்ண கொடூரத்தையா, என்னால் என் அம்மா செத்துப் போனதையா? நானே என் பிள்ளையைக் கொன்னதையா இல்ல ஊர் முழுக்க வேசின்னு சொல்லி காரித்துப்பினதையா? எதை மறக்கச் சொல்றீங்க.” கோபமாகக் கேட்க, அவள் வார்த்தைகள் எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல, அவள் நாடியை அழுத்திப் பிடித்து வாயைத் திறக்க வைத்து அவளுக்கான மாத்திரைகளை போட்டு தண்ணீர் குடிக்க வைத்தான்.

ஆரம்பத்தில் துள்ளினாலும் மாத்திரைகளின் கசப்பு தாங்காமல் தண்ணீரைக் குடித்து விழுங்கினாள் துவாரகா. “எதையெல்லாம் மறக்கணும் னு பட்டியல் போட்ட இல்ல. இப்ப சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ, உனக்கு கஷ்டம் கொடுக்கும் எல்லாத்தையுமே நீ மறக்கணும். அப்ப எதை நினைவு வைச்சுக்கணும் னு கேட்கிறியா, இனி உன்னோட நினைவில் இந்த கிருஷ்ணா மட்டும் இருந்தா போதும்.” என்றவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

“ஒருமுறை உன்னோட ப்ரண்டுகிட்ட என்னை அறிமுகப்படுத்தும் போது கிருஷ்ணான்னு தான் சொன்ன. அப்ப தான் கவனிச்சேன். செல்லப் பேர் வைக்கும் அளவுக்கு என்னை உனக்குப் பிடிச்சிருந்திருக்கு இல்ல. நல்லா தான் இருக்கு. கிருஷ்ணனோட துவாரகா. துவாரகையில் கிருஷ்ணன்.” மாற்றி மாற்றி அவன் சொல்லிப் பார்க்க, “ஐயோ கடவுளே.” என அவன் புஜத்தில் அடித்துவிட்டு எழுந்து சென்றாள் துவாரகா. அவள் சென்ற திசையைப் பார்த்து சிரித்துக்கொண்டவனுக்கு அடுத்து என்ன என்று யோசிப்பதற்கு பல விஷயங்கள் இருந்தது.

பெரிய வீட்டோடு சிறிது காலம் ஆயினும் ஒன்றாகப் புழங்கக்கூடாது என்பது அவன் எண்ணம். அதற்கு அவனிடம் பல காரணங்கள் இருந்தது. முதல் காரணம் காத்தவராயன். அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவர் செய்த கொடுஞ்செயல்களுக்கான நியாயம் கேட்காமல் இருக்க அவனால் முடியாது.

அதே சமயத்தில் அவரிடம் கேட்டு சண்டையிட்டு மனவருத்தம் அடையச்செய்து, காலம் போன காலத்தில் அவர் மகன், மருமகள் முன்னால் குற்றவாளியாக நிற்க வைக்கவும் இத்தனை ஆண்டுகளாய் அவர் மேல் அதிக பாசம் வைத்திருந்த மனம் மறுத்தது.

அடுத்த காரணம் துவாரகா. அவளால் அஞ்சனை மற்றும் கண்ணப்பன் முகங்களைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. தேவையில்லாத குற்றவுணர்வால் உருகுவாள். இந்த வீட்டில் இருந்தால் அவளுக்கு ஓயாத வேலைகள் இருக்கும். அந்த வேலைகள் தேவையில்லாத சிந்தனைகள் வராமல் தடுக்கும் என்று நினைத்தான்.

அடுத்து அவனுக்கு முன்பு இருந்த பெரிய சவால் பொருளாதாரப் பிரச்சனை. தாய் சொல்வது போல் அவனால் மற்றவரிடம் கைகட்டி வேலை செய்ய முடியும் தான். ஆனால் வீம்பிற்கு சென்றுவிட்டு தன் குடும்பத்தைப் பற்றி மற்றவர்கள் பேசிக்கொள்வதற்கு இடம் கொடுக்க மனம் இல்லை அவனுக்கு. அதனால் நேரே தந்தையிடம் சென்றவன் தன் குடும்பத்தின் பல தொழில்களில் ஒன்றான அஞ்சனை அச்சகத்தில் அவனுக்கு வேலை போட்டு கொடுக்கச் சொல்லி கேட்டான்.

“என்னடா கண்ணா இது?” வருத்தமாய் அவர் கேட்க, “எல்லாம் கொஞ்ச காலம் பா. அம்மா முழு மனசா துவாரகாவை ஏத்துக்கிற வரைக்கும் இதுக்கெல்லாம் பழகிக்க தான் வேணும்.” என்றான்.

அஞ்சனை அச்சகத்தில் இருக்கும் சேம்ப்பிள் அழைப்பிதழ்களின் மாடல்கள் சுற்றுவட்டாரத்தில் மிகப்பிரபலம். அவை நவநீதனின் சொந்த கற்பனை என்பதால் காலத்திற்கு ஏற்ப புதுமையாகவும் இருக்கும், அதே சமயம் பெரியவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். எளியவர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவரும் தேடி வந்து பயன்பெறுவார்கள். அரசாங்க டெண்டர் மூலமாக பள்ளி கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களை அச்சடித்துக்கொடுக்கும் பணி அங்கு பிரசித்தி. ஓரளவு நல்ல இலாபத்திலேயே நடந்துகொண்டிருந்தது அச்சகம். அதனால் தான் அதைக் கேட்டான் நவநீதன்.

மகனுக்காக தான் அனைத்தும் என்னும் போது அவன் கேட்டதைக் கொடுக்க மாட்டாரா சந்தோஷமாக ஒப்புக்கொண்டார் கண்ணப்பன். இன்று முதல் அச்சகம் மூலம் வரும் பணம் மொத்தமும் உனக்கு தான் என்று கண்ணப்பன் சொல்லி இருக்க, கடைக்கான வாடகையை தவறாமல் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி தன் வீராப்பை காட்டினான் நவநீதன்.

ஒருகட்டத்திற்கு மேல் தகப்பன்களாகிப் போனவர்களுக்கு பிள்ளைகளின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையின் மீது அலாதி பெருமை வந்து சேரும். அந்த வகையில் கண்ணப்பனுக்கும் மகனின் இந்தக் கோணம் ஆரம்பத்தில் வருத்தத்தை கொடுத்தாலும் இறுதியில் மனநிறைவைக் கொடுத்தது.

பேச்சுவார்த்தை முடிந்தது என்னும் நோக்கில் நவநீதன் அங்கிருந்து செல்லப்பார்க்க, “தாத்தாகிட்ட ஏதோ சொன்னியாம் அம்மா சொன்னாங்க. அப்ப இருந்து அவர் ஒருமாதிரி பித்துபிடிச்ச மாதிரி இருக்கார். என்னடா விஷயம்?” மகன் பாதையை மறித்துக் கேட்டார் மனிதர்.

“அது எனக்கும், தாத்தாவுக்கும் நடுவில் உள்ளது. அதில் தலையிடாதீங்கப்பா.” ஒருவித கோபத்தோடு சொன்னான்.

“அப்பாகிட்ட இருந்து நிறைய மறைக்கிற டா.” வருத்தமாய் கண்ணப்பன் சொல்ல, “எல்லா விஷயமும் எல்லோருக்கும் தெரிஞ்சாகணும் என்கிற அவசியம் இல்லப்பா. சில விஷயங்கள் இரகசியமா தான் இருக்கணும்.” என்றான்.

“மாயவனுக்கும் துவாரகாவுக்கும் இப்ப விவாகரத்துக்கு அப்ளை பண்ணாலும் அது விசாரணைக்கு வர ஆறு மாசம் ஆகும். முடிவுக்கு வந்து சட்டப்படி அவங்க பிரிய ஒரு வருஷமாச்சும் ஆகும். அதுவரைக்கும் நீ கல்யாணம் பண்ணிக்காமலா அவளோட இருக்கப் போற.” கண்ணப்பன் கேட்க,

“எங்க கல்யாணம் நம்ம ஊர்க்கோவிலில் குலதெய்வம் பெருமாள் ஆசிர்வாதத்தோட தான் நடக்கணும் என்பது என்னோட ஆசை. பெருமாளுக்கும் அது தான் ஆசை போல. அதனால் தான் எங்களை ஒரு வருஷத்துக்கு அவரைப் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்.” ஒரு வருடத்திற்குப் பிறகு தான் தங்கள் திருமணம் என்பதை மறைமுகமாக சொன்னான்.

“உன் அம்மா ரொம்ப பாவம் டா. நேத்து வரை அவளைப் பார்த்து பொறாமைப்பட்டவங்க கூட இன்னைக்கு அவ முகத்துக்கு நேரே கேலி பேசுறாங்கன்னு ரொம்ப வருத்தப்படுறா. சமாதானம் சொல்லி முடியல என்னால்.” வருத்தமாய் சொல்ல, “அத்தைக்கு தாத்தா பண்ண பாவத்துக்கு அவரோட வாரிசுகளா நாம இதைக் கூட அனுபவிக்கலன்னா எப்படி?” என்று மனதோடு நினைத்துக்கொண்டவன், “நான் காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டேன் அப்பா. இந்தக் காலகட்டத்தில் தான் நல்ல மனசோட நம்மளோட பழகுறவங்க யாரு, நேரப்போக்குக்காக பழகுறவங்க யாருன்னு நம்மால் புரிஞ்சுக்க முடியும். இப்ப கேலி பேசுற கூட்டம் நாளைக்கு நாம இன்னும் பல படிகள் முன்னேறும் போது தன்னால் நம்மகிட்ட சொந்தம் பாராட்ட வருவாங்க. அன்னைக்கு அவங்களை வீட்டுக்குள்ள சேர்த்துக்க வேண்டாம் னு அம்மாவுக்கு புத்தி சொல்லுங்க.” என்றவன்,

“நீங்க துவாரகாவோட நகைகளை வாங்க அந்த மாயவன் வீட்டுக்கு எப்ப போகப்போறீங்க?” என்க, நாளைக்கு தான் போகணும். அப்பாவைக் கூப்பிட்டேன், அவர் வரமாட்டேன்னு சொல்லிட்டார். அதனால் வேறு சிலரை கூட்டிட்டு போகப் போறேன்.” என்றார்.

“சரி போன இடத்தில் அவனோ அவன் அண்ணனோ ஏடாகூடமா ஏதும் பேசினா நடந்துக்கிட்டா எனக்கு ஒரு போன் பண்ணுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்ற நவநீதன் தந்தையிடம் இருந்து கொஞ்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு, தேவையான பண்டபாத்திரங்கள் அத்தியாவசியமான மளிகைச் சாமான்களோடு ஓட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

தாயின் நினைவில் அவர் கையால் நட்டுவைத்து தான் கண்ணும் கருத்துமாக வளர்த்த வேப்ப மரத்தின்அடியில் அமர்ந்திருந்தாள் துவாரகா. வெயிலுக்கு இதமாக இருந்தது அதன் நிழல். தாயின் மடியில் சாய்ந்திருப்பது போன்ற இதத்தை அது கொடுக்க, அப்படியே மெதுவாக கண்ணயர்ந்து இருந்தாள்.

கொண்டு வந்த பொருட்களை எல்லாம் வைத்த நவநீதன் அவளைத் தேடி அவள் எங்கே இருப்பாள் என்பதை யூகித்தவனாக சரியாக அங்கே வந்து சேர்ந்தான். இந்த வீட்டில் அவள் எங்கே இருப்பாள், எப்போது என்ன செய்துகொண்டிருப்பாள், அவளுக்குப் பிடித்தமான வண்ணம், உணவு, எதற்காக அழுவாள், எதற்காக கோபம் கொள்வாள் என அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. எப்படி இத்தனை தெரிந்து வைத்திருக்கிறோம் என முந்தைய தினம் யோசிக்கும் போது தான் அவள் தன்னைக் கவனித்தது போல் தானும் அவளைக் கவனித்து இருக்கிறோம். ஆனால் தாத்தாவின் போதனையில் தன் மனதைத் தானே உணராமல் போய் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டான்.

ஆதி முதல் காத்தவராயன் ஒருவர் தான் அந்த வீட்டில் பிரச்சனை என்பதைப் புரிந்து கொண்ட போது அவனுக்கு சற்றே வருத்தமாக இருந்தது. அவர் மீது கோபம் இருந்தாலும் அதைத் தாண்டிய அன்பும் இருந்ததே. அனைத்தும் சரியாக வேண்டும் என்கிற நினைப்போடு துவாரகாவின் அருகே வந்து அமர்ந்தான். தாய் வந்தது போல் நினைத்தாளோ என்னவோ தன்னால் தன் தலையை அவன் மடியில் வைத்த துவாரகா அவன் இடையைச் சுற்றி தன் கைகளைக்கோர்த்துகொள்ளவும் செய்தாள்.

சிரித்தபடி அவள் தலையைக் கோதிக்கொடுத்தான் நவநீதன். அவள் தொடுகை அவனிடம் அன்பை மட்டும் தான் உண்டாக்கியது. அந்த அன்பை தன் கண்களில் தேக்கி அவளையே அக்கறையோடு பார்த்துக்கொண்டிருக்க, தன் வீட்டில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார் அஞ்சனை.

அவருக்கு அவர் மகனின் ஒவ்வொரு அசைவும் தெரியும். அதில் அவர் மீது அவருக்கு அதீத நம்பிக்கை. அதனால் தான் அவர் நினைத்திடாத ஒரு காரியத்தை மகன் செய்துவைத்துவிட்டான் என்று சொன்னதில் கடுங்கோபம் வந்தது. இப்போது இந்தக் காட்சியைப் பார்க்கையில் தான் தவறாக யோசித்துவிட்டோமோ கணவன் நம்புவது போல் மகன் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறானோ என்று பார்த்தார்.

முதலில் கண்விழித்தது துவாரகா தான். நவநீதனோடு தான் இருக்கும் நிலையை உணர்ந்து பட்டென விலகிக்கொண்டவள் எழுந்து ஓட, அவள் கொலுசு சத்தம் கேட்டு கண்விழித்த நவநீதனோ துள்ளும் அவள் பாதங்களை மென்மையான புன்னகையோடு ரசித்தான்.
 
Top Bottom