Episode 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Jun 2, 2026
24
35
13
Virudhunagar
வரம் 22
நாட்கள் யாருக்கும் நிற்காமல் ஓடி ஒரு வருடம் கடந்திருந்தது. நவநீதன், துவாரகா இருவருக்கும் இடையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அதற்கு முக்கியக் காரணம் நவநீதன் தான். தேவைக்கு அதிகமாக அவளைத் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக, பாதுகாப்பாக, சந்தோஷமாக உணர வைத்தான்.

துவாரகாவின் மனக்காயங்கள் ஆறி தழும்பாகி இருந்தது. பட்ட துன்பங்கள் நினைவு வந்தாலும் அது முன்பைப் போல் வலிக்கவில்லை. காலம் தன்னோடு சேர்த்து நினைவுகளின் அடர்த்தியையும் குறைத்திருந்தது. கூண்டில் இருந்து வெளியே வந்த கிளி போல சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருந்தாள்.

இடைப்பட்ட நாட்களில் அவளுக்கும் மாயவனுக்குமான முறையான விவாகரத்தும் கிடைத்திருந்தது. சொத்து முறைகேடு வழக்கில் மாயவன் இன்னமும் ஜெயிலுக்குள் தான் இருந்தான். பத்மன் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் செய்யால் இருந்தான்.

விவாகரத்துப் பத்திரத்தை கையில் வாங்கிய நொடி துவாரகா கொண்ட உவகைக்கு அளவே கிடையாது. தாயின் மாலையிட்ட புகைப்படத்தின் முன்னால் அந்தப் பத்திரத்தை வைத்து, “நீ எதுக்காக உன்னோட உயிரை விட்டியோ அதுக்கு பலன் கிடைச்சிருக்கு மா. உன் பொண்ணு அந்த அரக்கனோட பிடியில் இருந்து மொத்தமா வெளியே வந்துட்டா.” கண்ணீர் மல்க உதட்டினில் சிரிப்போடு சொன்னாள் துவாரகா. மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று நிம்மதியாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நவநீதன். அவனுடைய யோசனைகள் யாவும் சிறிதளவு கூட பிசிறு இல்லாமல் சரியான முறையில் நடந்தேறிக்கொண்டிருந்ததை நினைக்கையில் அவன் உதடுகளில் சின்ன புன்னகை.

இத்தனை நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும், அவளை தன்னை நோக்கி ஈர்க்கவோ இல்லை தான் அவள் மனதில் இடம் பிடிக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை நவநீதன். ஆனால் இந்த நொடியில் இருந்து அனைத்தையும் செய்ய வேண்டும். அவள் மனதில் முற்றும் முழுதுமாக தான் நிறைய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருந்தான்.

வலுக்கட்டாயமாக உருவாக்கிக்கொண்ட பிடித்தம் வேலைக்கு ஆகாது என்று கண்ணப்பன் சொன்ன வார்த்தைகளை பொய் என நிரூபித்திருந்தான் நவநீதன். அவன் கடமை காதலாக மாறி பல நாட்கள் ஆகி இருந்தது. அப்படிச் சொல்வதை விட அவனே அறியாமல் அவனுடைய அத்தை பெண் துவாரகா மேல் அவனுக்கு இருந்த ஈர்ப்பு ஒரே இடத்தில் அவளோடு வாழ்ந்த இந்த ஒரு வருட காலத்தில் அவனுக்குப் புரிய வந்து வேகமாக வளர்ந்து காதலாக மாறிவிட்டது என்றும் சொல்லலாம்.

காதலை உணரும் வரை மனிதன் எத்தனை ஆட்டம் வேண்டுமானாலும் ஆடலாம். ஆனால் தன்னுடைய உணர்வுகளுக்குப் பெயர் காதல் என்று அவன் புரிந்துகொண்ட நொடியில் இருந்து அந்த காதல் தன் ஆட்டத்தை ஆரம்பித்து, தன்னைக் கொண்டிருக்கும் மனிதனை படாதபாடு படுத்திவிடும். அது தான் நவநீதனுக்குள்ளும் நடந்தது.

துவாரகாவை தனக்கு மட்டுமே சொந்தமானவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற வேகம் நாளும் பொழுதும் அதிகரித்துக்கொண்டே சென்றது நவநீதனுக்குள்.

அது கொடுத்த உந்துதலில் பெரிதாக எந்த தகவலும் சொல்லாமல் அழகான புடவை ஒன்றை அவளிடம் கொடுத்து தயாராகி வரச்சொன்னான். இது அடிக்கடி நடப்பது தான். அவள் மறுக்க மறுக்க சில நேரம் திரைப்படம், ஷாப்பிங் என அழைத்துச் செல்வான் நவநீதன். அப்படித்தான் இப்பொழுதும் அழைக்கிறான் போல என்கிற நம்பிக்கையோடு தயாராகி வந்தாள் துவாரகா. அவளை தலை முதல் கால் வரை திருப்தியாக ஒரு பார்வை பார்த்த நவநீதன் சின்ன புன்னகையோடு உரிமையாய் அவள் கரம் பிடித்து அழைத்துச் சென்றான்.

புதிய உடையில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் முன்னே நடக்கும் மகனையும், அவன் பிடிக்கு இழுபட்டுக்கொண்டே பட்டுடுத்தி செல்லும் துவாரகாயும் பார்த்த அஞ்சனைக்கு உள்ளுக்குள் என்னவோ மணிஅடித்தது.

மகன் தவறு செய்திருக்க மாட்டானோ என யோசிக்க ஆரம்பித்த வெகு விரைவிலே அப்படித்தான் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்திருந்தார் அஞ்சனை. தங்களுடன் வாழ்ந்த காலத்திலும் சரி, தனியாக ஒற்றை வீட்டில் ஒன்றாக வாழும் போதும் சரி நவநீதன், துவாரகா இருவரிடத்திலும் பெரிய அந்நியோன்யத்தை அவர் கண்டிருக்கவில்லை. அப்படிப் பார்க்கையில் மகனின் மனமும், தன் வளர்ப்பும் கலங்கப்பட்டு போகவில்லை என்பது புரியத்தான் செய்தது அந்த தாய்க்கு.

ஆனாலும், கோபத்தில் என்னைப் பார்க்காதே என்னிடம் பேசாதே என்று சொன்னதற்காக இப்படி மொத்தமாக விலகிவிட்டானே. என் அருகிலேயே இருந்துகொண்டு என்னைப் பார்த்தும் பேசாமல் என் மகனால் இருக்க முடிகிறதே என்கிற தவிப்போடு, தான் இறங்கிவராமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்.

மகனோ தந்தைக்கு தன்மேல் இருந்த நம்பிக்கை தாய்க்கு இல்லையே என்கிற வருத்தத்தோடு இருந்தான். காத்தவராயன் அடங்கி ஒடுங்கிவிட்டார். அவர் பேரனும் பேத்தியும் செய்து வைத்த காரியத்தை வைத்து ஊரார் அவரை பயங்கரமாக கிண்டல் செய்தாலும், தன் மகளுக்கு தான் செய்த பாவங்கள் பேரனுக்குத் தெரிய வந்துவிட்டது. தன் அருமைப் பேரன், தன் குடும்பத்தின் உயிர்நாடி தன்னை வெறுக்கிறான் என்பதிலேயே நின்றுவிட்டது அவர் மனம். முன்பைப் போல் பெரிய நடமாட்டம் இல்லாமல் அறையோடு தஞ்சம் அடைந்துவிட்டார்.

மிகவும் உரிமையாக துவாரகாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு தன்னைக் கடந்து போன தன் மகன் கண்களால் சொன்ன செய்தி என்ன என்று படபடப்பாக இருந்தது அஞ்சனைக்கு.

வேகமாக கணவனுக்கு அழைத்தவர் தான் கண்ட காட்சியை சொல்ல, “துவாரகாவுக்கு டிவோர்ஸ் கிடைச்சிடுச்சு இல்ல. அவளை முறையா கல்யாணம் பண்ணிக்கப் போறானோ என்னவோ.” வெகு சாதாரணமாகச் சொன்னார் கண்ணப்பன்.

“என்னது கல்யாணமா? என்ன விளையாடுறீங்களா? அது எப்படி நாம இல்லாம கல்யாணம் பண்ணுவான்.” அஞ்சனை கோபம் கொள்ள, “இவளைத் தான் எனக்குப் பிடிச்சிருக்கு. இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு அவன் சொன்னப்ப, என்ன ஏதுன்னு விசாரிச்சு அவன் விருப்பத்துக்கு நாம மதிப்பு கொடுத்திருந்தா இன்னைக்கு அவன் நம்மைக் கூப்பிட்டு இருப்பான். அன்னைக்கு நாம அவனைச் சேர்த்துக்கல. அதனால் இன்னைக்கு அவன் நம்மைக் கூப்பிடல.” இதையுமே இலகுவாக தான் சொன்னார் கண்ணப்பன்.

“இப்படியெல்லம் பேசாதீங்க. அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் அவன் பண்ணது தப்பு தான். யார் சொன்னாலும் கல்யாணம் ஆன பொண்ணை அவனோடு சேர்த்து வைச்சு யோசிக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கு. பண்ண தப்புக்கு பெத்தவளா கண்டிச்சா வாழ்க்கையோட முக்கியமான கட்டத்தில் நம்மை ஒதுக்கி வைப்பானா?” ஆக்ரோஷமாகக் கேட்டார்.

“அன்னைக்கும் அவன் வாழ்க்கையோட முக்கியமான கட்டத்தில் தான் அஞ்சனை இருந்தான். அன்னைக்கு நாம யாரும் அவனுக்கு துணையா நிக்கலையே.” என்க, பதில் சொல்ல முடியவில்லை அஞ்சனையால்.

“எல்லாத்தையும் விடு. துவாரகா வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை அதனால் அவளைக் காப்பாத்த தான் நவநீதன் அவளைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான் என்கிற யூகம் உனக்கு இருந்துச்சு தானே. நீ தூக்கி வளர்த்த பொண்ணு துவாரகா. அவ பட்ட கஷ்டங்கள் என்னன்னு தெரிஞ்சுக்கவாச்சும் முயற்சி பண்ணியா? இல்ல உன்னோட பையன் அவளைக் காப்பாத்த பெரிய முயற்சி எடுத்திருக்கான்னு சந்தோஷப்படவாச்சும் செஞ்சியா? அப்ப உன் மனசில் நவநீதன் உயர்வாவும் துவாரகா அவனுக்கு கம்மியாவும் தானே இருந்திருக்காங்க.”

“அப்பா துவாரகாவை நவநீதனுக்கு கட்டிக்கொடுக்க மறுத்தப்ப அவ கையில் இல்லாத விஷயத்துக்காக அவளை மறுக்காதீங்கன்னு சொன்ன அதே நீ, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை வந்தப்ப அப்பா மாதிரி மேம்போக்கா யோசிச்சு துவாரகாவைக் கைவிட்டுட்ட தானே. இதில் எல்லாம் உன்மேல உன் மகனுக்கு வருத்தம். அதனால் தான் கொஞ்சம் தள்ளி நிக்கிறான். மத்தபடி மொத்தமா விலகிப் போக அவனுக்கு மனசு இல்ல. என் பையனாச்சே.” என்க, அமைதியாக தலைகுனிந்தவண்ணம் நின்றிருந்தார் அஞ்சனை.

“கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டு இருக்கான். அவன் பொண்டாட்டி அவனுக்கு முக்கியம் னா என் பொண்டாட்டி எனக்கு முக்கியம். அவகிட்ட சொல்லு, அவ வர முடிவெடுத்தா அவளோட சேர்த்து நானும் வரேன். இல்லன்னா உன் இஷ்டம் னு சொன்னேன்.” என்பதாய் கண்ணப்பன் சொல்ல, அதுதான் அந்த கண்ஜாடைக்கு அர்த்தமா எனத் தன்னோடு நினைத்துக்கொண்ட அஞ்சனை, “சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. அவன் அப்படி என்ன அருமை பெருமையா கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு போய் பார்த்துட்டு வரலாம்.” என்றார்.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலன்னு மெயிண்டைன் பண்ற பார்த்தியா?” சிரிப்போடு அழைப்பைத் துண்டித்தான் கண்ணப்பன்.

நவநீதனும், துவாரகாவும் வந்து நின்ற இடம் அவர்கள் ஊர் கோவில். எந்தக் கோவிலுக்குள் அவர்கள் ஒராண்டுக்கு வரக்கூடாது என தண்டனை கொடுக்கப்பட்டதோ அதே கோவில்.

“எதுக்காக மச்சான் இங்க வந்திருக்கோம்.” சுற்றி முற்றி பார்த்தபடி கேட்டாள்.

“உனக்கும், மாயவனுக்கும் நடுவில் இருந்த உறவோட கடைசி நூல் கூட முழுசா அறுந்து போச்சு. அதுக்கு நன்றி சொல்றதுக்காகவும், புதுசா ஆரம்பிக்கப் போற உன்னோட வாழ்க்கை இது வரை நீ பார்க்காத சந்தோஷங்கள் எல்லாத்தையும் உனக்கு கொடுக்கணும் னு வேண்டிக்கிறதுக்காகவும் வந்திருக்கோம்.” என்றான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கையில் மாலைகளோடு வந்தனர் ஐஸ்வர்யாவும், பரணியும். நடக்கப் போவது புரிந்ததும் பேயைப் பார்த்தது போல் பதறிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள் துவாரகா.

“இன்னைக்கு நமக்கு கல்யாணம் துவா.” அன்பு நிறைந்த குரலில் சொன்னான் நவநீதன்.

“இல்ல எனக்கு வேண்டாம், இன்னொரு முறை அந்தப் பாழுங்கிணத்துக்குள்ள விழ நான் தயாரா இல்ல.” என்றாள்.

“இருட்டுக்குள்ள பயத்தோட போகும் போது குறுக்க வந்து பயமுறுத்தி தப்பான திசை காட்டின பேயைப் பார்த்து பயந்துட்டு, அடுத்த முறை சரியான வழியைக் காட்டி அந்த வழியில் உன்னோட துணைக்கு வரத் தயாரா இருக்கும் கடவுளைப் புறக்கணிக்கிறது அத்தனை நல்லா இல்ல துவாரகா.” என்றாள் ஐஸ்வர்யா.

“இந்த ஊருக்குள்ள என்னோட மானம், மரியாதை போன வரைக்கும் போதும். இதுக்கு நான் ஒத்துக்கிட்டா இத்தனை நாளா இந்த ஊர் ஜனம் என்னைப் பத்தி நாக்கு மேல பல்லைப் போட்டு பேசின ஒவ்வொரு வார்த்தையும் உண்மைன்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி ஆகிடும். எனக்கு வேண்டாம்.” என்றாள்.

“என்ன வேண்டாம் துவாரகா, இந்தக் கல்யாணம் வேண்டாமா இல்ல நான் வேண்டாமா?” அதி மென்மையான குரலில் கேட்டான் நவநீதன். பதில் சொல்ல முடியவில்லை அவளால்.

“ஊர் பேசுறதுக்கு எல்லாம் வருத்தப்பட்டா வாழ முடியாது டா. உன்னை விட படிப்பு, அனுபவம் இரண்டுமே எனக்கு அதிகம். உன்னை விட மனுஷங்களை நல்லாவே எடைபோடத் தெரிஞ்சவ. அந்த நம்பிக்கையில் சொல்றேன். ஒருமுறை உன் மேல சர்ச்சை வந்துட்டா போதும் அதுக்கு அப்புறம் நீ என்ன செஞ்சாலும் அதை தப்பா தான் பார்க்கும் இந்த சமுதாயம். அதனால் அடுத்தவங்களை திருப்தி படுத்துறதை விட்டுட்டு உனக்கு என்ன வேணும் னு மட்டும் யோசி.” யோசனை சொன்னாள் ஐஸ்வர்யா.

“உங்களைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. உங்க சொந்தக்காரங்க என்னையும், மச்சானையும் பேசாத பேச்சு இல்ல. அப்படி இருக்க நீங்க எப்படி இதையெல்லாம் இவ்வளவு சாதாரணமா எடுத்துக்கிறீங்க?” ஆச்சர்யமாகக் கேட்டாள் துவாரகா.

“என்னை வேற என்ன பண்ணச் சொல்ற? உன் மச்சானையும், உன்னையும் பழிவாங்கட்டா.” என்க, தன்னையும் மீறி சிரித்திருந்தான் நவநீதன்.

அவனை துவாரகா முறைக்க, அவனும் அமைதியானான். “பார்வையாலே அவனைக் கட்டுப்படுத்துறியே இதைத் தாண்டி அவனோட வாழ உனக்கு என்னம்மா தேவைப்படும்.” என்றான் பரணி.

“உங்களுக்கு நான் வேண்டாம் மச்சான்.” துவாரகா தயக்கமாகச் சொல்ல, “ஊருக்குள்ள யாருக்கும் உன் மச்சான் வேண்டாமாம். நீயும் வாழ்க்கை கொடுக்கலன்னா சந்நியாயம் வாங்குறதைத் தவிர அவருக்கு வேற வழியே இல்லை.” என்றாள் ஐஸ்வர்யா.

“கூட கூட பேசாதீங்க. நான் என் மச்சான் கூட பேசிக்கிட்டு இருக்கேன்.” ஒருவித கோபத்தில் அவள் சொல்ல, “பாருடா உரிமை உணர்வை. உன் மச்சானை உனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்க தானே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றோம்.” விடாமல் பேசினாள் ஐஸ்வர்யா.

“தெரிஞ்சோ தெரியாமலோ இரண்டு பேர் மேலும் கறை விழுந்திடுச்சு துவாரகா. அதைத் தாண்டி போய் வேற ஒரு வாழ்க்கை வாழ முடியாது. வாழ்ந்தாலும் அதில் நிம்மதி இருக்காது. அதுக்கு நீங்களே சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடலாம். காலப்போக்கில் நடந்த எல்லாத்தையும் இந்த ஊர் மறந்திடும்.” நல்ல நோக்கத்தோடு என்றாலும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தான் பரணி. துவாரகாவின் நெஞ்சம் விம்மியது அந்த வார்த்தைகளில்.

“ஊர் முன்னால் அவ மேல பொய்யான பழியை சுமத்தினதே தப்பு. இந்த அழகில் அந்த பழியைத் தீர்க்கிறதுக்குப் பதில் அதை உண்மையாக்க நினைக்கிறீங்களோ. உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்களைப் பார்த்தா எப்படி டா தெரியுது. சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாம நீங்க ஏதாவது தப்பான முடிவு எடுத்தா அதனால் வரும் பின்விளைவுகளை பொண்ணுங்க அனுபவிக்கணுமா?” என்றபடி வந்தார் அஞ்சனை.

“அத்தை” என்கிற அழுகைக் குரலோடு அவர் மீது சாய்ந்துகொண்டாள் துவாரகா.

“ஆமாடி இன்னைக்கு அத்தைன்னு வந்து அழு. உங்க பையன் என் மேல பொய்யான பழி சுமத்துறாருன்னு அன்னைக்கே சொல்லி இருந்தா அவனுக்கு நாலு போடு போட்டு இந்தளவு வரவிடாம பண்ணி இருப்பேன் இல்ல.” சற்றே கோபமாகக் கேட்டவர், “ஆமா இப்ப எதுக்காக கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்க. என் பையனைக் கட்டிக்க என்ன கசக்குது உனக்கு?” என்க, “என்னத்தை பேசுறீங்க, நான் எப்படி மச்சானைக் கட்டிக்க முடியும்.” பாவம் போல் கேட்டாள்.

“எல்லாரையும் மாதிரி தாலி கட்டி தான் கல்யாணம் பண்ணிக்கணும்.” என்றவர் அவள் தன்னைப் பார்க்கவும், அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு முகத்தைத் தொட்டுக்கொண்டிருந்த சின்ன முடிகளை காதோரம் ஒதுக்கிவிட்டவராக, “உனக்காக பெத்த அப்பா, அம்மா உயிரையே வைச்சிருந்த தாத்தா ஊர் ஜனங்கள் அவன் மேல வைச்சிருந்த நல்ல எண்ணங்கள் னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு நீ தான் வேணும் னு நிக்கிறான்னா அவனைக் கட்டிக்க ஏன் இத்தனை யோசனை.

என் பையன் சுத்த தங்கம் டி. அப்படியானவன் நீ தான் வேணும் னு உறுதியா இருக்கான்னா நீ அவனை விடவுமே உயர்ந்தவளா தான் இருக்கணும். நீ என் வைரம் டி ராசாத்தி. அத்தையை மன்னிச்சிடு. வயசானதால் புத்தி சரியா வேலை செய்யல போல. நான் பெத்தவனையும், வளர்த்தவளையும் சந்தேகப்பட்டுட்டேன்.” கண்ணீர் மல்கப் பேச, துவாரகா அவரை அணைக்க அவளோடு சேர்த்து தானும் அன்னையை அணைத்தான் நவநீதன்.

“நீ போடா அந்தப்பக்கம், இத்தனை நாளா உன் கண்ணுக்குத் தெரியாத அம்மா இன்னைக்கு மட்டும் எப்படி தெரிஞ்சாளாம்.” என்க, “இறக்கை இல்லாத தேவதை மாதிரி தெரியுறாங்க என் அம்மா.” என்றவன் அவருக்கு சுற்றிப் போட, அதுவரை இருந்த விளையாட்டு குணங்கள் மாறி மகனின் கரங்களைப் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டவர், “நான் மக்கா இருந்துட்டேன் டா. என் பசங்களோட நிம்மதி சந்தோஷத்தை விடயாரோ நாலு பேர் பேச்சை முக்கியமான நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடு.” என்க,

“போனது எல்லாம் போட்டும்மா. உங்க மருமக என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறா அவளுக்கு நல்ல புத்தி சொல்லி கட்டிக்கச் சொல்லுங்க.” என்க, “உன் கையால் தாலி கட்டிக்காம இங்க இருந்து அவ போயிடுவாளோ.” என்று முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவர் துவாரகா பக்கம் வர, “அத்தை” தயக்கமாக அழைத்தாள் அவள்.

“கல்யாணத்தை நினைச்சு ஏன் பயம். உன் மச்சானும் அந்த மாயவன் பய மாதிரி மாறிடுவான்னு நினைக்கிறியா?” என்க, “என்னத்தை பேச்சு இது. பாலும் விஷமும் ஒன்னாகிடுமா?” வேமாகச் சொன்னவள் தான் அவர்கள் பேச்சிற்கு ஒத்துப்போவது புரியவும் சோகமாக முகத்தை சுருக்கினாள்.

“என் இராஜாத்தி உன்னோட அம்மா ஸ்தானத்தில் இருந்து கேட்கிறேன். நவநீதனைக் கல்யாணம் பண்ணிக்கோ டா.” என்ற அஞ்சனையின் உருவத்தில் நிஜமாகவே மாதங்கி தான் தெரிந்தார் துவாரகாவின் கண்களுக்கு. தாயின் சொல்லைத் தட்ட முடியாமல் அவள் தலை தன்னால் சம்மதமாக ஆடியது.

“எப்படியோ சாதிச்சுட்ட.” என்றபடி மனைவியின் அருகே வந்து நின்றார் கண்ணப்பன்.

பெருமாள் சந்நதியில் அவர் கண்பார்வையில் வந்து நின்றனர் அனைவரும். நவநீதன் முகத்தல் சந்தோஷம் தாண்டவமாட துவாரகாவின் முகத்தில் பயமும், குழப்பமும் தவிப்பும் தான் அதிகமாகத் தெரிந்தது.

“நான் செய்யப்போறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல. சரியா இருந்தா என்னோட சேர்த்து எல்லோருக்கும் சந்தோஷத்தை மட்டும் கொடுங்க. ஒருவேளை தப்பா இருந்தா எனக்கு மட்டும் தண்டனையைக் கொடுங்க.” என துவாரகா வேண்டிக்கொண்டிருந்த வேளையில் அவள் கழுத்தை மாலையால் நிறைத்திருந்தான் நவநீதன்.

ஐஸ்வர்யாவிடம் இருந்து தானும் மாலையை வாங்கிய துவாரகா சற்றே தயங்கி நிற்க, அம்மா என சிணுங்கினான் நவநீதன். “வளர்ந்த பிள்ளையை ஏங்க வைக்காத டி.” என அஞ்சனை அவள் கரத்தில் இடிக்க, தன்னால் துவாரகாவின் கரம் நீண்டு வந்து அவன் கழுத்தில் மாலையைப்போட்டது.

நிறைந்த மனதோடு கண்ணப்பன் தாலியை எடுத்துக்கொடுக்க, அதைத் தன் கைகளில் வாங்கிய நவநீதன் துவாரகாவைப் பார்க்க அஞ்சனையின் மற்றுமொரு இடியில் அவன் கண்களை நேராகப் பார்த்தாள் துவாரகா. கண் மூடி நான் இருக்கிறேன் என்னும் விதமாக நவநீதன் ஜாடை செய்ய துவாரகாவிடத்தில் நிம்மதிப் பெருமூச்சு. முழுமனதோடு தாலி கட்டி அவளைத் தன் சரிபாதியாக ஏற்றிருந்தான் நவநீதன்.
 

Author: துவாரகா
Article Title: Episode 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்