Episode 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Jun 2, 2026
24
35
13
Virudhunagar
வரம் 6
தந்தைக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு தான் கண்ணப்பனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. ஆனால் அதற்குள் பஞ்சாயத்துக்கு வந்து சேரும் படி ஊர்வேலை செய்யும் ஒருவர் வந்து அழைக்க, தலைவிதியை நொந்து கொண்டு அவர் பின்னே சென்றார் கண்ணப்பன்.

காத்தவராயன் விக்கித்துப் போய் தன் அறையிலே அமர்ந்து கொண்டார். அனைத்தும் கை மீறிப்போய்விட்டது. அவ்வளவு தான் இத்தனை வருடங்கள் கட்டிக் காப்பாற்றிய மரியாதை மொத்தமாக பறிபோகப்போகிறது என்பது சிந்தையைக் குலைத்துவிடுவது போல் இருக்க, நிலைகுலைந்து அமர்ந்துவிட்டார்.

கணவருடன் செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் மாமனாருடன் இருக்க வேண்டியது அதை விட அவசியம் என்று புரிந்த காரணத்தால் அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டார் அஞ்சனை.

ஊர்ப் பெரியவர்கள் பலர் கூடியிருக்க பஞ்சாயத்து ஆரம்பம் ஆகியிருந்தது. துவாரகாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவளை அமரவைக்க முயற்சித்தான் நவநீதன். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சை நிறைத்திருந்த பயம் காரணமாக அவன் நிழலை விட்டு அகல மாட்டேன் என அவன் பின்னால் பத்திரமாக மறைந்து கொண்டாள் அவள்.

சர்ப்பங்களின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக கருடனின் நிழலில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தவளை விழுங்கப் போவதே அந்த கருடன் தான் என அவள் அறியாது போனது யார் செய்த வினையோ.

“தம்பி நவநீதா. நீ தான் பஞ்சாயத்துக்கு வந்திருக்க. உன்னோட பிரச்சனை என்னன்னு சொல்லு.” என பொதுவாகக் கேட்டார் நாட்டாமை.

“என் அத்தை பொண்ணு துவாரகா. அவளுக்கு அவ புருஷன் மாயவன் கூட வாழப் பிடிக்கல. அவர்கிட்ட இருந்து சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் பிரிய நினைக்கிறா. அதுக்கான முதல்படியா அவளை அந்த மாயவன் கூட சேர்த்து வைச்ச ஊர் பஞ்சாயத்துகிட்ட பிரிச்சுவிடச் சொல்லி கேட்டு வந்திருக்கோம்.” இரத்தின சுருக்கமாக விஷயத்தைச் சொன்னான்.

“இந்த விஷயத்தில் உன் அப்பா, அம்மா, தாத்தாவுக்கு சம்மதமா?” ஊர் பெரியவர் ஒருவர் கேட்க, “சம்பந்தப்பட்டவ துவாரகா மட்டும் தானே. அவகிட்ட கேட்கிறது தானே சரியா இருக்கும்.” எதிர்கேள்வி கேட்டான் நவநீதன்.

“நீ என்னம்மா சொல்ற?” என்று நாட்டாமை துவாரகாவைப் பார்த்து கேட்க, தன்னிச்சையாக எழுந்த பயத்தில் கை, கால் எல்லாம் நடுநடுங்க சுற்றி நிற்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்து துடித்துப்போனாள் அவள்.

அவளுக்கு நம்பிக்கை மற்றும் தைரியம் அளிக்கும் விதமாக நடுங்கிக்கொண்டிருக்கும் அவள் கரத்தை தன் கரங்களுக்குள் எடுத்துக்கொண்டான் நவநீதன். நெருப்பின் அனலில் இருந்து தப்பித்து பனிமலைக்கு வந்தது போன்ற உணர்வு எழ, நிமிர்ந்து நாட்டாமையைப் பார்த்தவள், “நான் அந்த வீட்டுக்குப் போக மாட்டேன். என்னை போகச் சொல்லாதீங்க.” கையெடுத்துக் கும்பிட்டபடி சொன்னாள்.

தாலி என்கிற பெயரில் ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டி சிற்சில மாதங்கள் அவளோடு வாழ்ந்த, இல்லை விதவிதமாக அவளைக் கொடுமைப்படுத்திய கொடூரன் கண் முன் தான் நின்றுகொண்டிருக்கிறான் என்பது புரிந்தாலும், மனதின் பயம் மற்றும் விருப்பமின்மை காரணமாக அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள்.

“நீ தாலி கட்டின பொண்டாட்டி உன்கூட வாழ வரமாட்டேன்னு சொல்றா. இதைப் பத்தி நீ என்னப்பா நினைக்கிற.” என மாயவனைப் பார்த்து கேள்வி எழுப்பினார் நாட்டாமை.

“இப்ப அவ சொன்ன வார்த்தைகளை சொல்லிட்டீங்க சரி. நேத்தில் இருந்து அவ செஞ்ச செயல்களைப் பத்தி எப்ப சொல்லப் போறீங்க.” என்று உரத்த குரலில் கேட்டான் மாயவன்.

கண்களை அழுந்த மூடித்திறந்தான் நவநீதன். என்ன தான் அவனை மிரட்டி வைத்திருந்தாலும், இங்கே வந்து அவன் ஏதாவது கோளாறு செய்ய வாய்ப்பிருக்கிறது என்று கணித்து தான் வைத்திருந்தான். நினைத்தது அப்படியே நடக்கவும், சுற்றி முற்றி யாரையோ தேடியவன் அவன் தேடிய நபர் கிடைத்ததும், பேசும் படி கண்ணைக் காட்டினான்.

“துவாரகாவை எனக்கு சின்னப்பிள்ளையில் இருந்து தெரியும். அதிர்ந்து பேசத் தெரியாத பொண்ணு. அவ வீட்டுப் பெரியவங்க என்ன முடிவெடுக்கிறாங்களோ அது தான் அவளுக்கு வேதவாக்கு. அப்படிப்பட்ட பொண்ணு இன்னைக்கு கட்டின புருஷன் வீட்டுக்கு வாழப்போக மாட்டேன்னு சொல்லுதுன்னா கண்டிப்பா பிரச்சனை அந்த வீட்டில் தான் இருக்கணும்.” என்று ஆரம்பித்து வைத்தான் நவநீதனின் நண்பன் பரணி.

“இது நல்ல கதையா இருக்கே. உங்களுக்கு துவாரகாவை ரொம்ப வருஷமாத் தெரியும் னா என்னையும் பல வருஷமா தெரிஞ்ச பலர் என்னோட ஊரில் இருக்காங்க. அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க நான் எப்படிப்பட்டவன்னு தெரியும்.

செத்துப்போனாங்களே என்னோட அருமை மாமியார், என் பொண்டாட்டியைப் பெத்த மங்கையர்கரசி மாதங்கி. அவங்க என்னோட காலில் வந்து விழுந்து, ‘நான் மலை மாதிரி நம்பி இருந்த என் அப்பாவும், என்னோட அண்ணன் மகனுமே என் பொண்ணைக் கைவிட்டுட்டாங்க. இனி என்னால் யாரையும் நம்ப முடியாது. நீ தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்’ னு கெஞ்சிக் கேட்டாங்க.

நானும் போனாப்போகுதுன்னு அப்பா பெயர் தெரியாதவளா இருந்தாலும் பரவாயில்லைன்னு இவளுக்கு வாழ்க்கை கொடுத்தேன். ஆனா இவளுக்கு என்கூட வாழக் கசக்குது. அப்படி என்ன இவளைக் கொடுமைப்படுத்திட்டேனாம் நான். நாலு பேருக்கு நடுவில் உரத்த குரலில் உண்மையைச் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.” வேண்டுமென்றே குரல் உயர்த்திக் கேட்க, நவநீதனின் கரத்தோடு இணைந்திருந்த துவாரகாவின் கரங்கள் தன் நடுக்கத்தை அதிகரித்தது.

அதை உணர்ந்தவனாய், “விதண்டாவாதம் வேண்டாம் ஐயா. துவாரகாவோட கோரிக்கைக்கு என்ன பதில். சட்டு புட்டுன்னு அதைச் சொல்லச் சொல்லுங்க.” நவநீதன் கேட்க, “பதில் தானே சொல்லிடுவோம். இங்க கூடி இருக்கிற மக்கள் எல்லோரும் இப்ப நான் சொல்லப் போறதை நல்லா காது கொடுத்துக் கேட்டுக்கோங்க.

இவ என்ன என்கூட வாழ மாட்டேன்னு சொல்றது. இவளை மாதிரி ஒரு ஒழுக்கங்கெட்டவ கூட நான் வாழமாட்டேன். இவகிட்ட இருந்து பிரியுறதுக்கு எனக்கு முழு சம்மதம். ஆனா நேத்து இராத்திரி முழுக்க இவ எங்க இருந்தா, யார் கூட இருந்தா, என்ன செஞ்சுக்கிட்டு இருந்தான்னு செத்துப்போன அவ அம்மா மேல சத்தியம் பண்ணி உண்மையைச் சொல்லச் சொல்லுங்க. அப்புறமா நீங்க எங்க கையெழுத்து கேட்டாலும் போட்டுத்தர நான் தயார்.” என்றான் மாயவன்.

நவநீதன் இடது கை விரல்களால் தன் தாடியைத் தடவ, மாயவன் இத்தனை எளிதில் தன்னை விட்டுவிட சம்மதிப்பான் என்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்தில் அந்த நேரம் வரை கொண்டிருந்த பயம் விலக சற்றே தலையுயர்த்தி சுற்றத்தினரைப் பார்த்தாள் துவாரகா.

அவளுக்கு நேற்று நடந்ததைச் சொல்வதற்கு எந்த பயமும் இல்லை. அதனால் தைரியமாக இருந்தாள். ஆனால் ஆபத்பாந்தவனாக அவள் நினைத்துக்கொண்டிருக்கும் நவநீதனால் அவளைச் சுற்றி பின்னப்பட்டிருந்த சிலந்திவலையை அவள் உணராது போனது பரிதாபத்திற்குரிய விஷயமே.

“துவாரகா பொண்ணு இன்னைக்கு காலையில் இருந்து என் வீட்டில் தான் இருந்தா.” மாயவனைப் பார்த்து சொன்னார் நாட்டாமை. அவருக்கு என்னவோ துவாரகா தவறு செய்திருக்க மாட்டாள் என்று அவர் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. கூடவே மாயவன் ஊர் ஜனங்கள் மத்தியில் அவளை அவமானப்படுத்த நினைக்கிறான் என்பதும் புரிய, அதற்கும் இடம் கொடுக்காமல் கூட்டத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.

“இன்னைக்கு காலையில் இருந்து உங்க வீட்டில் இருந்தா சரி. ஆனா அவ அவளோட மாமா வீட்டை விட்டு நேத்து மதியானம் இல்ல வெளியே போய் இருக்கா. ஒரு முழு இராத்திரி எங்க யார்கூட இருந்தான்னு சொல்லச் சொல்லுங்க.” என்றான்.

“தம்பி பார்த்துப் பேசுங்க. நீங்க பேசுறதில் தப்பான அர்த்தம் வருது. துவாரகாவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அந்தப் பொண்ணை மாதிரி ஒரு நல்ல பொண்ணு ஊர் உலகத்தில் எங்க தேடியும் கிடைக்காது. சும்மா வாய் புளிச்சுச்சுன்னு கண்டதையும் பேசாதீங்க.” என்றார் ஒரு பெரியவர்.

“நான் சரியாத் தான் பேசுறேன். நீங்க தான் ப்ளாஸ்டிக் பூவுக்கும், நிஜப் பூவுக்கும் வித்தியாசம் தெரியாம பேசுறீங்க.” மாயவன் சொல்ல, “நேத்து துவாரகாவையும், நவநீ தம்பியையும் நான் ஹாஸ்பிடலில் பார்த்தேன்.” என்றார் ஒரு பெண்மணி.

“சூப்பர் மா. நான் கேட்காமலே எனக்காக சாட்சி சொல்ல முன்வந்ததுக்கு ரொம்ப நன்றி. எந்த ஹாஸ்பிடலில் வைச்சு பார்த்தீங்க. அதோட இவங்க எந்த டாக்டரைப் பார்க்க போனாங்கன்னு சேர்த்து சொல்லுங்க.” என்றான் மாயவன்.

“அழகர் நகரில் இருக்கும் மீனாட்சி தாய், சேய் மருத்துமனையில் டாக்டர் மஹதியைப் பார்க்க போய் இருந்தாங்க.” தான் பார்த்ததை சொன்னார் அந்தப் பெண்.

“கேட்டீங்களா? தாய் சேய் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்கிற டாக்டர் மஹதிகிட்ட இவளுக்கு என்ன வேலை. அதுவும் கட்டின புருஷன் நான் இல்லாம, அவளோட மாமன் மகனோட போக என்ன அவசியம் வந்திருக்கு.” என்று கேட்க கூட்டத்திற்குள் சின்னதாய் சலசலப்பு.

“பதில் சொல்லச் சொல்லுங்க நாட்டாமை ஐயா.” வேண்டுமென்றே மாயவன் கேட்க, “இதென்ன கேள்வி. துவாரகாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்திருக்கும். நவநீ தம்பி அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கும். ஒன்னா வளர்ந்த பிள்ளைக்காக இது கூட நவநீ தம்பி செய்ய மாட்டாரா?” என்றார் வயதான பாட்டி ஒருவர்.

“ஐயோ பாட்டி, நீங்க ரொம்ப நல்லவங்களை இருக்கீங்க. அதனால் தான் எல்லாத்தையும் நல்ல வழியில் பார்க்கிறீங்க. உலகம் ரொம்ப மாறிப்போச்சு. இப்படியெல்லாம் இருக்காதீங்க. இல்லன்னா தலையில் மிளகாய் அரைச்சிடுவாங்க. எனக்கு செஞ்ச மாதிரி.

இதோ நிக்கிறாளே என் அருமைப் பொண்டாட்டி அவ உடம்பு சரியில்லாததால் ஹாஸ்பிடல் போகல. ஹாஸ்பிடல் போய் நல்லா இருந்த உடம்பைக் கெடுத்துக்கிட்டு வந்திருக்கா.

என்ன புரியலையா? வீட்டுப் பெரியவங்க யார்கிட்டேயும் சத்தம் கொடுக்காம இவங்க இரண்டு பேருமா கிளம்பி போய், காதும் காதும் வைச்ச மாதிரி என் அருமைப் பொண்டாட்டியோட வயித்தில் வளர்ந்த கருவைக் கொன்னு இருக்காங்க.” என்று அனைத்தையும் மாயவன் போட்டு உடைக்க, கூட்டத்தில் இப்போது சத்தமாய் சலசலப்பு.

நிலைமை கை மீறிப் போய் விட்டதை உணர்ந்து சற்றே வருந்தினார் நாட்டாமை. இனி நடக்க இருப்பதை தன்னால் மட்டும் இல்லை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கண்களை அழுந்த மூடித்திறந்து நிதானத்திற்கு வந்தவர் துவாரகா பக்கம் பார்வையைத் திருப்பினார்.

“அதற்குள் ஊர் பெரியவர் ஒருவர் மாயவன் தம்பி சொல்றது உண்மையா துவாரகா?” எனக் கேள்வி எழுப்ப ஆம் என்று தலையாட்டினாள் அவள். பலத்த நிசப்தம் நிலவியது அவ்விடத்தில்.

அதைக் கலைக்கும் வண்ணம், “கட்டினவனுக்குத் தெரியாம யாரோ ஒருத்தனைக் கூட்டிட்டு போய் வயித்தில் இருந்த குழந்தையைக் கலைச்சுட்டு வந்திருக்கான்னா அவளை ஒழுக்கம் கெட்டவன்னு சொல்லாம பத்தினினான்னா சொல்ல முடியும்.” சத்தமாய் சொன்னான் மாயவன்.

எந்த நிம்மதிக்காக தன்னை விட்டுச் செல்ல நினைக்கிறாளோ அந்த நிம்மதி சாகும் வரை அவளுக்குக் கிடைக்கக்கூடாது. வாழ்நாள் முழுக்க நடத்தை கெட்டவள் என்கிற பட்டத்தோடு சாக வேண்டும் எனத் தீர்மானமாக நினைத்து அதற்கேற்ப காய் நகர்த்தினான்.

“உன் புருஷனுக்கு என்ன பதில் சொல்லப் போற துவாரகா?” என்கிற கேள்வியை நாட்டாமை முன்வைக்க, “அவர் என் புருஷனா இருக்கிறதில் எனக்கு விருப்பம் இல்ல. அவரோட வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டில் தாத்தா, மாமா, அத்தைன்னு மூணு பேர்கிட்டேயும் எவ்வளவோ பேசிப்பார்த்தேன். யாரும் அதைப் பெருசா எடுத்துக்கல. அந்த நேரம் தான் நான் கர்ப்பமாக இருக்கிறது தெரிய வந்தது.

இது தெரிஞ்சா அவரை விட்டு வருவதற்கு என் வீட்டுப் பெரியவங்களும் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க வீட்டுப் பெரியவங்களும் ஒத்துக்க மாட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம சாகப் பார்த்தேன். நவநீ மச்சான் தான் என்னைக் காப்பாத்தி என்ன பண்ணலாம் னு யோசனை சொன்னார். எனக்கும் அது சரின்னு தோணுச்சு. அதனால் ஒத்துக்கிட்டு செஞ்சேன்.” என்றாள்.

“கருவில் இருக்கும் குழந்தையைக் கொன்னாச்சும் உன் புருஷனை விட்டு பிரிஞ்சே ஆகனும் னு நினைக்கிற அளவுக்கு உன் புகுந்த வீட்டில் என்ன நடந்தது. உன் புருஷன் உன்னை நல்லா பார்த்துக்கலையா?” நாட்டாமை இப்போதும் அவளைக் காப்பாற்றும் வண்ணமே கேள்வியெழுப்ப மாயவனுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

அவன் செய்து வைத்திருக்கும் வேலையைப் பற்றி சபையில் அவள் சொல்லமாட்டாள் என்று உள்ளுக்குள் நிறையவே நம்பிக்கை இருந்தாலும், ஒருவேளை சொல்லிவிட்டால் ஊர் முழுவதுமாகச் சேர்ந்து காரித்துப்புமே என்று பயத்தோடு பார்க்க, துவாரகாவோ தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து அழத்துவங்கினாள்.
 

Author: துவாரகா
Article Title: Episode 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
தூ....கருமம்....இவன் எல்லாம் என்ன மனுஷன்😬😬😬😬😬இல்ல மனுஷன் தானா😡😡😡😡😡

எம்மா மாதங்கி என்ன வேலை பார்த்து வெச்சி இருக்கீங்க????

ஐயோ இந்த புள்ளை பயந்தே ஏதும் சொல்லாது போலவே.....