• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 7

வரம் 7
“எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு துவாரகா. நீ தயங்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்குத் தான் பிரச்சனையா வந்து முடியும்.” ஊக்கப்படுத்தினார் நாட்டாமை.

“எப்படி சொல்லுவாங்க. எங்க பக்கம் ஏதாவது தப்பு இருந்தா தானே அவங்களால் வாயைத் திறக்க முடியும். வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை கொடுமைப்படுத்தும் அளவுக்கு நாங்க தப்பானவங்க இல்லை.” என்று குரல் கொடுத்துக்கொண்டே கூட்டத்தின் நடுவில் இருந்து சபைக்கு வந்தான் பத்மன், மாயவனின் உடன்பிறந்த சகோதரன். பஞ்சாயத்து நடக்கப் போவதாக தகவல் கேள்விப்பட்ட உடன் தன் ஊரில் இருந்து அடித்து பிடித்து ஓடி வந்திருந்தான்.

மாயவனுக்கு அண்ணனைப் பார்த்த பிறகு தான் பெரிய பலம் கிடைத்தது போல் இருந்தது. துவாரகா இன்னும் நவநீதனை ஒட்டி நின்றாள். பத்மனைப் பார்த்து முறைத்தபடி துவாரகாவை தன் பின்னால் மறைத்து வைத்தான் நவநீதன்.

அதைக் கவனித்து சின்ன சிரிப்புடன் நேரே துவாரகா அருகே வந்த பத்மன், சற்று நேரம் முன்னர் பேசிய மரியாதை வார்த்தைகளை கைவிட்டு, “நீ கடந்த மூணு மாசமா உன் அம்மா வீட்டில் தானே இருந்த. அப்புறம் எப்படி குழந்தை.” என்று நிறுத்த, “தம்பி பார்த்து பேசுங்க.” என்று பலகுரல் வந்தது அவ்விடத்தைச் சுற்றி.

“சும்மா நிறுத்துங்க. ஒரு பொண்ணு நாலு சொட்டுக் கண்ணீர் விட்டதும் அவ பக்கம் தான் நியாயம் இருக்கும் னு நினைக்கிற ஆட்கள் எல்லாம் நீதி சொன்னா விளங்கிடும் இந்த ஊர். உங்க உள்மனசைத் தொட்டு சொல்லுங்க. நான் கேட்ட கேள்வியில் ஏதாவது தப்பு இருக்கான்னு.” என்று கேட்க, சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது.

தன் கரத்திற்குள் இருந்த நவநீதன் கரத்தை பலமாக இறுக்கினாள் துவாரகா. என்ன நடக்கப்போகிறது என்பது ஓரளவுக்கு புரிந்தது அவளுக்கு.

“உங்க எல்லோருக்கும் தெரியும். நாங்க அம்மா இல்லாத பசங்க. என் பொண்டாட்டி பணக்கார வீட்டுப் பொண்ணு. அவ எந்த வேலையும் செய்ய மாட்டா. அதனால் என் தம்பி பொண்டாட்டியான இந்த துவாரகா கொஞ்சம் அதிகம் வேலை செய்ய வேண்டி இருந்தது.

வாழ வந்த பொண்ணுங்களுக்கு நடுவில் வித்தியாசம் பார்த்து இருக்கக் கூடாது தான். எங்களுக்கும் அது புரியாம இல்ல. ஆனா எங்க சூழ்நிலை அப்படி. என் பொண்டாட்டியோட குடும்பத்து ஆட்கள் ஏற்பாடு பண்ணிக்கொடுத்த கம்பெனி தான் எங்க குடும்பத்தோட வருமானத்தின் ஆதாரம். அதுக்காகவாச்சும் அவளைக் கொஞ்சம் பொறுத்து தான் போகணும் னு நாங்க சொன்னோம். அது இவளுக்குப் பிடிக்கல. வந்த முதல் நாளில் இருந்து என் பொண்டாட்டி கூட போட்டிக்கு தான் நின்னா.” என்று நிறுத்த, ஓரகத்தி சுரேகாவை நினைத்துப் பார்த்தாள் துவாரகா.

அவளை நினைக்கும் போதே, சூர்ப்பனகை என்ற பெயர் தான் நினைவு வந்தது. பெண் குலத்தில் தப்பி பிறந்த அரக்கி கடைசியாக தன்னிடம் பேசிய பேச்செல்லாம் கேட்கும் போது வாந்தி வருவது போல் இருந்தது துவாரகாவிற்கு.

துவாரகாவின் முகத்தில் வந்து போகும் மாற்றங்களை அவதானித்தபடி, “என் பொண்டாட்டியை என்னால் கட்டுப்படுத்த முடியாது. நெயில் பாலிஸ் போட்டுக்கிட்டு, ஹேண்ட் பேக் மாட்டி எப்ப பார் ஊர் சுத்தக் கிளம்பிடுவா. அதைப் பார்த்து பழகினதாலோ என்னவோ என் தம்பி இவளை எங்க வீட்டு வாசலைத் தாண்ட விட்டதில்லை. அதிகமாக அலங்கரிச்சுக்க விட்டது இல்லை. இதிலும் அம்மணிக்கு கோபம்.” வாய் கூசாமல் பொய் சொன்னான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல மாயவன் தன்னை அழகு படுத்திப் பார்த்த கொடூர காட்சிகள் நினைவு வந்து வதைத்தது துவாரகாவை. பெரும் விம்மல் ஒன்று வெடித்தது அவளில் இருந்து.

“அப்பா இல்லாத, ஸ்சாரி அப்பா யாருன்னே தெரியாத பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்துட்டாங்க போல. ஒரு வேலையும் சுத்தம் கிடையாது. எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே தான் இருப்பா. என் தம்பி கோபத்தில் கை நீட்டுவான். நான் அவனைக் கண்டிச்சு தான் வைச்சேன். ஆனா அவன் பொறுமைக்கும் எல்லை உண்டு தானே. அந்த நேரம் தான் மாதங்கி அத்தை செத்துப்போய் துவாரகா இங்க வந்தா.” என்று நிறுத்திய பத்மன், நவநீதன், துவாரகா இருவரையும் ஒரு பார்வை வன்மமாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தான்.

“காத்தவராயன் பேத்தியா இந்த வீட்டுக்கு அவ எப்போதும் செல்ல இளவரசி தானே. இங்கேயே இருந்தா எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைச்சவ, பெரியவங்ககிட்ட என் தம்பியைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனை விட்டுப் பிரிஞ்சு நிரந்தரமா அந்த வீட்டிலேயே டேரா போட நினைச்சிருக்கா. அதுக்கு கண்ணப்பன் சித்தப்பாவும் அஞ்சனை சித்தியும் ஒத்துக்கல.

அப்பதான் புருஷனை விட்டு மொத்தமா பிரிஞ்சு வந்தாலும் நமக்குப் பழைய மரியாதையும், நல்ல வாழ்க்கையும் கிடைக்காதுன்னு துவாரகாவுக்குப் புரிஞ்சிருக்கு. அதுக்கு என்ன பண்ணலாம் னு யோசிச்சவ கண்ணில் தொக்கா தம்பி நவநீதன் மாட்டி இருக்கார்.” என்றுவிட்டு நக்கல் சிரிப்பு சிரித்தான்.

“நம்ம எல்லோருக்கும் தெரியும். நவநீதன் தம்பி கொஞ்சம் மார்டன் தாட்ஸ் உள்ளவர். அதையும் இதையும் சொல்லி அவரைக் கைக்குள்ள போட்டுக்கிட்டா காலத்துக்கும் சொகுசா வாழலாம் னு திட்டம் போட்டு தான் பழகி இருக்கா இந்த துவாரகா. உண்மையில் என்ன செய்யுறோம் னு தெரியாம தம்பி நவநீதன் அவ திட்டத்து படி நடந்துக்கிட்டு இருக்கார்.” என்ற பத்மனைப் பார்த்து கையை முறுக்கினான் நவநீதன்.

“அவன் முகத்தைப் பார்த்தா ஏமாந்து போய் அவ கூட நிக்கிறவன் மாதிரியா தெரியுதுண்ணா. துவாரகாவைப் பத்தி எனக்குத் தெரியும். அவகிட்ட எந்த திறமை இருக்கோ இல்லையோ ஒரு திறமை ரொம்ப அதிகம். அதைப் பார்த்து தான் தம்பி நவநீதன் அவபக்கம் தலைகீழா நிக்கிறார்.” என்ற மாயவனை பாய்ந்து அடித்தே விட்டான் நவநீதன்.

சுற்றி இருந்தவர்கள் வந்து இருவரையும் பிரித்துவிட வேண்டியதாகிப் போயிற்று. துவாரகா மாயவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததில் சற்று சத்தமாகவே விசும்ப ஆரம்பித்துவிட்டாள்.

“இரண்டு மருமகள்களுக்கு நடுவில் பாரபட்சம் பார்த்ததையும், கோபத்தில் கை நீட்டினதையும் தப்புன்னு இத்தனை பேர் முன்னால் ஒத்துக்கிட்டவங்க மேல அதிகப்படி தப்பு இருக்கும் னு எனக்குத் தோணல.

இந்தக் கால பொண்ணுங்களுக்கு குடும்பம் னா என்னென்னே தெரியுறது இல்ல. இப்ப இருக்கிற அப்பாமாருங்க எல்லாம் பொண்ணுங்களுக்கு அதிக செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறாங்க. விளைவு அவங்களால் புருஷன் வீட்டில் கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணி போக முடியல. துவாரகாவும் அப்படித் தான். மாதங்கி இவளை எப்படி வளர்த்தான்னு ஊருக்கே தெரியுமே. துவாரகாவோட நிழலைக் கூட வெயில் பார்க்க மாதங்கி அனுமதிச்சதில்லை. அப்படி வளர்த்தா போன இடத்தில் வீட்டு வேலைகளைச் செய்ய கஷ்டமா தான் இருக்கும்.” என்றார் ஒருவர்.

“நவநீதன் தம்பி தப்பு பண்ணி இருப்பாருன்னு எனக்கு தோணல. எந்த ஆம்பிளை தான் தன்னை விட்டு பிரிஞ்சு போக நினைச்ச பொண்டாட்டி பத்தினின்னு சொல்லுவான். மாயவனும் அப்படித்தான், தன் பக்கத்தை உயர்த்திக் காண்பிக்க துவாரகாவை குறை சொல்லுறாருன்னு தோணுது.” என்றார் கண்ணப்பனின் நண்பர்.

“அவசரப்பட வேண்டாம். துவாரகா வயித்தில் இருந்த குழந்தை யாரோடதுன்னு நம்ம நவநீதன் தம்பிகிட்டேயே கேளுங்க. மகாபாரத தர்மனுக்கு அப்புறம் இவர் தான் உண்மை விளம்பின்னு ஊருக்குள்ள சொல்லிக்கிறாங்க. அது உண்மையான்னு நாமளும் தெரிஞ்சுப்போம். நக்கலாகக் சொன்னான் பத்மன்.

“எனக்கென்னவோ நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் தம்பி. நீங்க சந்தேகப்படுற மாதிரி துவாரகா வயித்தில் இருந்த அந்தக் குழந்தை நவநீ தம்பியோடதா இருந்திருந்தா, அவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிற நினைப்பில் இருந்திருந்தா, குழந்தையை அவரே முன்னாடி நின்னு ஏன் கலைக்க நினைக்கணும்.” என்று கேள்வி எழுப்பினார் ஒருவர்.

“நவநீதன் தம்பி சரியான பேராசைக்காரர். அவருக்கு இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா இருக்கிற அத்தை பொண்ணும் வேணும். அப்பா, தாத்தா சொத்தும் வேணும், ஊருக்குள்ள இருக்கிற மரியாதையும் அப்படியே தொடரணும். இது எல்லாத்தையும் எப்படி சரி கட்டுறதுன்னு யோசிச்சவர் அவரோட சுயநலத்துக்காக என்னோட தம்பியை பலிகொடுக்க முடிவு பண்ணிட்டார்.

என் தம்பி மேல மொத்தப் பழியையும் போட்டுட்டா துவாரகாவும் கிடைப்பா, அவளுக்கு சொந்தமான சொத்தும் கிடைக்கும், ஊருக்குள்ள நல்ல பேரும் சேர்ந்து கிடைக்கும் இல்ல.” ஊசி போன்ற வார்த்தைகளால் அங்கிருந்தவர்களின் மனதில் விஷத்தை ஏற்றினான் பத்மன். வந்திருந்த பலரும் நவநீதனுக்கு எதிராக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பத்மன் வந்து ஏதாவது செய்வான் என்கிற யூகம் இருந்தாலும் இவ்வளவு அதிரடியை நவநீதன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், சுற்றி அத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நவநீதனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் துவாரகா. அவள் மனதில் ஒருவித தீர்க்கம் குடிபுகுந்திருந்தது.

அத்தை, மாமா, தாத்தா, கணவன் அவள் குடும்பம், ஊர் மக்களின் வாய் என பலவற்றை நினைத்து அவளுக்குப் பயம் இருந்தாலும், தனக்காக முன் வந்து தவறான பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும் மச்சானுக்காக பரிதாபம் கொண்டது அவள் மனது.

தனக்காக அவன் தங்கள் குடும்பத்து ஆள்களிடம் கெட்ட பெயர் எடுத்துக்கொண்டது போதாது என்று ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியாத படியான பட்டங்களை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா? தன் நலனுக்காக அவன் செய்யும் செயல்களால் அவனுடைய எதிர்காலத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது. தான் இப்படி பட்ட மரமாக நின்றாலும் பரவாயில்லை அவன் அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் ஐஸ்வர்யாவுடன் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் என நினைத்தவள் சபையைப் பார்த்து பேசத்துவங்கினாள்.

“மச்சான் மேல எந்தத் தப்பும் இல்ல. இப்ப வரை அவர் என்னோட நல்லதுக்காக யோசிச்சு தான் ஒன்னு ஒன்னையும் பண்ணிக்கிட்டு இருக்கார். எனக்கு தாலி கட்டின மனுஷனும், அவங்க அண்ணனும் வெளிப்பார்வைக்குத் தெரியுற அளவுக்கு உத்தமனுங்க கிடையாது. உண்மையில் நான் எதுக்காக என் புருஷனை விட்டுப் பிரிய நினைச்சேன்னா.” என்றவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுமாறினாள். எச்சில் விழுங்கி பயம், தயக்கம் எனப் பலவகை உணர்வுகளையும் தனக்குள் விழுங்கிக்கொள்ள பிரம்பபிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தாள்.

“சொல்ல வந்ததை சொல்லி முடிம்மா.” என நாட்டாமை அவளுக்கு ஊக்கம் கொடுக்க, அவள் வாய் திறக்கும் முன்னர், “எனக்கு துவாரகாவை ரொம்பப் பிடிக்கும். ஆனா அது அவளுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சது. ஆரம்பத்தில் அவளை மறக்கத்தான் நினைச்சேன். ஆனா என்னால் முடியல. எப்படியாவது அவளை எனக்கு சொந்தமாக்கிக்கணும் என்கிற எண்ணம் நாளுக்கு நாள் எனக்குள்ள அதிகமாச்சு. அந்த நேரத்தில் தான் புருஷன் சரியில்லன்னு அவ என்கிட்ட வந்து அழுதா.

அவளுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அவளை என்பக்கம் கொண்டு வந்தேன். அப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம் வந்தது.” கண்களை மூடியபடி வேகமாகச் சொன்னான் நவநீதன்.
 
Top Bottom