NTYU - Pre Final

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 30

1779794993799.png


தனிக்காட்டு ராஜாவென பவனி வந்தவனை வசியபடுத்திய நங்கை அவன் தனிமையில் இனிமையை சேர்க்க வந்த மறக்க முடியாத நாள் இன்று..தன் குலதெய்வமான வீரவநங்கை அம்மன் சன்னதியின் முன் கைக்கூப்பியபடி ப்ரணவ், மான்யா மஞ்சள் நிற கூரை சேலை, வேட்டியில் வணங்கி நின்றனர். நெருங்கிய சொந்தங்கள் முன் மாலை மாற்றி தாலி கட்டும் முன் அவள் முகத்தை பார்க்க, அவள் விழிகளில் சிறு பதட்டமும் உறுதியும் கலந்திருந்ததை கண்டு புன்முறுவலுடன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை போட்டு இனி நீ நான் இல்லை ‘நாம்’ மட்டுமே என அவள் உள்ளங்கையை அழுந்த பற்றினான் மானின் ப்ராணநாதன்.

ஒரே மகனின் வாழ்வு பரிபூரணமடைந்ததை கண்டு கலங்கி நின்ற சாராதாவை ஆதரவாய் அணைத்து கொண்டாள் தேன்மொழி. நட்பை தாண்டி தன் க்ளோனிங் என வலம் வரும் நண்பனின் வாழ்வை மலர செய்த குட்டி பிசாசின் தூய்மையான காதலில் பிரமித்து நின்றான் வினு. கோயிலருகே இருந்த மண்டபத்தில் அன்று மணமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட அனைவரும் விருந்தை முடித்து தீரன் தன் குடும்பத்தோடு தோவாளை கிளம்ப மற்றவர் ப்ரணவ் வீட்டிற்கு வந்தனர்.

புகுந்த வீட்டில் விளக்கேற்றி வைத்த மருமகளை கனிவாக பார்த்தபடி சாரதா உதய்யிடம்..

“நல்ல நாள் பார்த்து சாந்தி முகூர்த்தம் வைக்கிறது தான் நம்ம வழக்கம்..நம்ம ஜோசியர்ட்ட கேட்டு அடுத்த வாரம் நாள் குறிச்சிருக்கு..அது வரைக்கும்..” என கூறியவரை இடையிட்டு உதய்..

“புரியுது சம்பந்தி..நாளைக்கே நாங்க ஜோத்பூர் கிளம்புறோம்..வினு..
உங்களுக்கு தீரன் பேமிலி எல்லாருக்கும் நாளை மறுநாள் காலை ல ஏழு மணிக்கு சென்னைக்கு ப்ளைட் புக் பண்ணிருக்கு..அங்கயிருந்து கனெக்டிங் ப்ளைட் ல ஈவினிங் ஜோத்பூர் ரீச் ஆயிடுவீங்க..டிக்கட் டீட்டெய்ல்ஸ் லாம் மாப்பிள்ளைக்கு அனுப்பிட்டேன்..பாத்து அழைச்சிட்டு வாங்க..விவேக், நீங்க எந்த ரீசனும் சொல்லாம இவங்க கூடவே வர்றீங்க..

கண்டிப்பா..மச்சான் புகுந்த வீட்டை பாக்க எனக்கும் ஆசையாயிருக்கு..” என்றான் விவேக். உதய் மான்யாவிடம்..

“கிளம்பலாமா டா..? “ என கேட்க ஓர் நொடி ப்ரணவ் முகம் இஞ்சி தின்ற குரங்காய் மாறியது. கை தேர்ந்த நடிகனாய் சட்டென முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டவனின் உள்ளமோ அந்த ஜோசியன் கைல சிக்கினா..? என குமுறியது.

’தாலி கட்டினதும் பிரிச்சிட்டாய்ங்களா..?நல்ல ஆரம்பம் டா டேய்..’ என முணுமுணுத்த அழகி கூம்பிய முகத்துடன் தன்னவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு செல்பவளிடம் மீண்டும் தன்னை தொலைத்து நின்றான் ப்ரணவ்.

மரகதம் மற்றும் கமலா இருவரும் தம் மக்களை மட்டும் அனுப்பி வைக்க தன் புது மனைவியை பிரிந்த இரு தினங்கள் ஏதோ ஈராயிரம் ஆண்டுகளாய் அவளை பார்க்காதது போல் தோன்ற அவளை காண பேராவலோடு கிளம்பினான் ப்ரணவ்.

இராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் மற்றும் நீல நகரம்(Blue City) என பரவலாக அழைக்கபடும் ஜோத்பூரில் உள்ள ரண்பங்கா அரண்மனையில் ப்ரணவ் மற்றும் மான்யாவின் வரவேற்பு பிரமாண்டமாக நடைபெறுவதையொட்டி உதய்சிங் தன் சொந்த பந்தங்கள் ஒருவரையும் விடாது அழைத்திருந்தார்.

அன்று மாலை ஜோத்பூர் விமான நிலையத்தில் மாப்பிள்ளை வீட்டினரை அன்போடு வரவேற்று ரண்பங்கா அரண்மனையை அடைந்தார் உதய். தங்கள் வீட்டு மணமகனை காணும் ஆர்வத்தில் வயதில் மூத்த, இளைய ராஜஸ்தானி பெண்கள் பத்மினியுடன் ஆரத்தியுடன் வாசலில் காத்திருந்தனர்.

சில்வர் நிற பார்ச்சுனர் காரிலிருந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்றவர்கள் மாப்பிள்ளைக்கு ஆர்த்தி எடுத்தனர்..உதய்சிங்கின் அம்மா வழி சொந்தத்தில் வயதான மூதாட்டி ஒருவர் ப்ரணவின் கன்னம் வழித்து தம் மொழியில்..

“மாரோ துல்ஹோ கன்னயா சே சுந்தர் லாஹே ஹை..( நம் மாப்பிள்ளை கண்ணனை விட அழகாயிருக்கார்..)” என்றார். உதய் தமிழில் மொழி பெயர்க்க ப்ரணவின் முகமோ அந்தி வானமாய் சிவந்தது. உதயிடம் தேன்மொழி..

“அண்ணி எங்க இருக்காங்க மாமா..?

நைட் சங்கீத்க்கு ரெடியாயிட்டிருக்கா தேனு..வாங்க போகலாம்..” என பத்மினி பெண்களை அழைத்துக்கொண்டு மான்யா அறைக்கு சென்றார். வினு , தீரன் மற்றும் ப்ரணவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்கள் பயணபெட்டிகளை வைத்துவிட்டு அரண்மனையில் நடந்து கொண்டிருக்கும் வரவேற்புக்கான மேடையை சுற்றி பார்த்தனர். தன்னவள் எங்காவது தென்படுவாளா என பார்வையால் அலசியவனை வினு மற்றும் தீரன் கேலி செய்ய விட்டால் போதுமென தன் அறைக்கு விரைந்தான் ப்ரணவ்.

அன்று மாலை ஆண்கள் அனைவரும் மென்மையான கண்ணை உறுத்தாத நிறங்களில் காட்டன் சில்க் குர்த்தா தலையில் ராத்தோட் ராஜ மரபு படி தலைப்பாகை அணிந்து தயாராக பெண்கள் அனைவரும் ராஜஸ்தான் பாணியில் இலகுவான பட்டு புடவைகளை இடபக்க முந்தானையணிந்து தலையை சுற்றி முந்தானை போட்டபடி தயாராகினர்.

தம் இணையை புது அவதாரத்தில் பார்த்த தோவாளை காளைகளுக்கு உடலில் புது இரத்தம் பாய்ந்தது போல ஜிவ்வென்றிருக்க..க்ரீம் நிற ஷெர்வானி மெரூன் நிற தலைப்பாகை, கழுத்தில் முத்துமாலைகளுடன் இளவரசனை போல தயாராகி வந்த விழா நாயகனின் அழகில் அனைவரும் மயங்கி நின்றனர்.

தன் காட்டுசிறுக்கியை கள்வனின் கண்கள் ஓயாமல் தேட மண்டபத்தின் மூலையில் பன்னீர் ரோஜா நிற லெஹங்கா வெளிர் ஆரஞ்சு நிற தாவணி அணிந்து மெதுவாக இசைக்கேற்ப அசைந்தாடிக்கொண்டிருப்பவளை கண்டு தன்னை மறந்து நின்றான்.

ஏதோ உந்துதலில் தன் மணாளனை கண்டு கொண்ட கள்ளியோ தன் முகத்தை தாவணியில் மறைத்தபடி கீழே அமர்ந்துவிட்டாள். தன்னவனின் அசரடிக்கும் அழகில் அமிழ்ந்து போனவளுக்கு பேச்சு கூட வர மறுத்தது.

திருமணம் முடிந்து இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளவில்லை..தங்களுக்கான தனிமைக்கு ஏங்கி கிடந்தனர். அன்றைய மாலை பொழுதை ரம்மியமாக்க பின்னனியில் பாடல்கள் ஒலிக்க வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆடி பாடி மகிழ்ந்தனர்..கிருஷிகா அங்கு கிடைத்த புது தோழமைகளுடன் ஓடி விளையாட மகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடி ஓரமாக அமர்ந்திருந்தான் தீரன். செந்தா மற்றும் நிலா மான்யாவோடு கைகளில் மெஹந்தி போட்டு கொண்டிருக்க வினு துணை மாப்பிள்ளையாய் ப்ரணவ் அருகே நின்றான்.

'வாலிபங்கள் ஓடும்..வயதாக கூடும்' எனும் பாடல் வரிகளுக்கேற்ப வயது முதிர்ந்த பெண்மணிகள் இன்றும் தம் கணவன்மாரை பார்த்து பார்த்து கவனிப்பதும் விழிகளில் நேசத்தை கடத்தி தங்கள் துணைவரை அரவணைப்பதை பார்த்து செந்தாவின் மனம் முதல் முறையாக தீரனுக்காக யோசித்தது. முதல் சந்திப்பிலேயே அவளின் உயிரை உலுக்கியவனை சாமார்த்தியமாக மறைத்து தனித்து வாழ்வதே சாஸ்வதம் என இன்றைய ட்ரென்டிங் பென்குயினாக தனி வழியில் நடந்தவளை திசை திருப்பி இணை பிரியா பந்தத்தில் இருவரையும் இணைத்துக்கொண்ட அன்பனிடம் அளவிடமுடியாத ஆசையும் தன் மகளையும் தன்னையும் கண் பார்வைக்குள் வைத்து காக்கும் காவல்காரனை காதலால் கைது செய்தால் என்ன என தோன்றியது அவளுக்கு.

வந்திருந்த விருந்தினர்களை இசை மழையில் நனைய விட்ட டிஜேவிடம் வந்த ப்ரணவ் மைக்கை வாங்கி..

“ஹாய் லேடிஸ் & ஜென்டில்மென்..எங்க ரிசப்ஷன்க்கு வந்து எங்களை வாழ்த்தும் உங்க அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..நான் கொஞ்சம் பேசனும்..புரியாதவங்களுக்கு மாமா பேமிலி புரிய வைப்பாங்க..நான் பிறந்து வளர்ந்தது லாம் ஒரு சின்ன கிராமம்..சின்ன வயசுல அப்பாவை இழந்த என்னையும் என் தங்கையையும் ஒத்தை ஆளா பல எதிர்ப்புக்கு மத்தியில படிக்க வச்சு கௌரவமா எங்களை வளர்த்து ஆளாக்குன அம்மாக்கு அவங்க வழியிலேயே வாழ்ந்து காட்டி சாராதா பசங்க வீண் போகல னு அவங்கள தலை நிமிர்ந்து நடக்க வைக்கனும், பல பேர் பொண்ணு குடுக்க ரெடியாயிருந்தும் ஒரு பைசா வரதட்சணை வாங்க மாட்டேன் னு பிடிவாதம் பிடிச்சு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்ட என் மாமா எனக்கு ஒரு அண்ணன் மாதிரி..இது வரைக்கும் மாப்பிள்ளை னு பந்தா காட்டாம எங்களை கவனிச்சுக்குற ஆண் தேவதை..” என விவேக்கை அணைத்து விலகி பின்.

“தென் இவன்..” என வினுவை காட்டி..

“எனக்கு இருக்குற ஒரே ஒரு நண்பன்..அவன் உடைஞ்சு நின்னப்பவும் எங்களுக்காக தன்னையே எரிச்சுக்கிட்டவன்..அவன் நல்ல மனசுக்கு இப்ப தங்கமா அவன் ஆசபட்ட தேவதையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாயிருக்கான்..இப்படி எங்க தலையெழுத்தை தலைகீழா எழுத ஒரு அழகான மினி காட்சில்லா வந்தான் பாருங்க..” என்றதும் செந்தா முறைக்க பதிலுக்கு ப்ரணவ்..

“அவனை பத்தி சொன்னா அவனுடைய காட்டேரிக்கிட்ட வாங்கி கட்டிக்கனும்..சோ இது வரைக்கும் என் வாழ்க்கைல வந்தவங்க ள பத்தி சொல்லிட்டேன்..ஆனா நான் யாரு னு எனக்கே உணர வச்சது உங்க வீட்டு பொண்ணு தான்..அரச குடும்பத்துல பிறந்த திமிர், ஆணவம் எதுவுமில்லாம அவ அப்பா போல எப்பவுமே சொந்த கால்ல ல நிக்கனும் ன்ற வைராக்கியத்தோட நான் விலகி போனாலும் ஆசபட்டதை அடைஞ்சே தீருவேன் னு வம்படியா நின்னு என் கைய பிடிச்ச என் மான்குட்டி..நான் அவள பேசாத பேச்சில்லை..இவளுக்கு முன்னாடி காதல் ன்ற பேர் ல ரெண்டு தடவை குறிப்பா என் நிறத்தை சுட்டிக்காட்டி என்னை நிராகிரிச்சுட்டு போனவங்க கொடுத்த ரணம் என் மனசு முழுக்க இருந்தது..இதெல்லாம் தெரிஞ்சும் எதையும் பெருசா எடுத்துக்காம என்னை மட்டுமே காதலிக்கறவளுக்கு ரொம்ப பிடிச்ச என்னை தவிர வேற என்ன பெருசா கொடுக்கறது..?” என சற்று நிறுத்தி கை விரிக்க தன் காதல் வேடனின் கைகளுக்குள் துள்ளிக்கொண்டு வந்து தஞ்சமடைந்தது மான்குட்டி. அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்ட பின் விலகி கைவளைவுக்குள் வைத்தபடி..

“ஒரு காலத்துல எதிரும் புதிருமா இருந்த நாங்க இப்ப ஒரே குடும்பமா ஒற்றுமையா இருக்க காரணம் ஒருத்தன்..தேவதூதனா எங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒளியேத்தி வச்சவன்..அவனை நாங்க எல்லாருமே ரொம்ப மிஸ் பண்றோம்..” என சில நொடிகள் மௌனித்து பின்..

“ஓகே..லாங்கா பேசி போரடிக்க வச்சுட்டேன் போல..கமான் லெட்ஸ் மூவ் ஆன் அன்ட் தாங்க் யூ ஒன்ஸ் அகெய்ன் ..” என ப்ரணவ் கூறி முடித்ததும் உள்ளுக்குள் கட்டுபாடின்றி உடைந்து கொண்டிருந்தான் விழிதீரன். வினு நிலாவிடம் கண் காட்டும் முன் அவனை நெருங்கிய செந்தாழினி அவன் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.

செந்தாவின் தீவிரமான முகத்தில் மகிழ்ந்து அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி கிருஷிகாவை தங்களுடன் வைத்துக்கொண்டான் வினு.
ei25VPO52320.jpg ei0LGGL52477.jpg file_00000000d52471fd807476d2319ade90.png

அடுத்த பதிவில் முடிவுறும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - Pre Final
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: ஷமீம்